பொது இடத்தில் ஆபாச உடை சர்ச்சை சம்யுக்தாவுக்கு ஸ்ரத்தா ஆதரவு

பொது இடத்தில் ஆபாச உடை அணிந்து வந்ததாக சம்யுக்தா ஹெக்டே மீது புகார் கூறப்பட்டது. அவருக்கு ஆதரவாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார். கோமாளி, பப்பி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சம்யுக்தா ஹெக்டே. கன்னட நடிகையான இவர், இரு தினங்களுக்கு முன் பெங்களூரில் உள்ள பார்க்கில் நடன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் அரைகுறை ஆடையில் இருந்ததாக கூறி, சில பெண்களும் அங்கிருந்தவர்களும் அவரை கடிந்துகொண்டனர். பதிலுக்கு அவர்களுடன் சம்யுக்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டு இருந்தார். 
 
இது குறித்து விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறும்போது, ‘நான் ஒரு வக்கீல். இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை. இது எந்த மாதிரியான சமூகம் என தெரியவில்லை. ஒரு ஆண், சட்டையில்லாமல் சுற்றலாம். பெண், ஸ்போர்ட்ஸ் உடையில் இருந்தால் தவறா? இப்படி செய்வதே வெட்ககரமானது. இதற்காக சம்யுக்தாவை போலீஸ் ஸ்டேஷன் வரை அழைத்து சென்றதும், அவரை தரக்குறைவாக விமர்சித்து இருப்பதும் சகிக்க முடியாதது. இதையெல்லாம் மீறி சம்யுக்தா தைரியமாக இந்த சம்பவத்தை கையாண்டுள்ளார். எங்களுக்காக (பெண்களுக்காக) போராடியதற்கு நன்றி சம்யுக்தா’ என்றார்.

Related Stories: