19ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்: பெப்சி அறிவிப்பு

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் ஜூன் 19ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என பெப்சி அறிவித்துள்ளது. இது குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்ட அறிக்கை: ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையொட்டி சின்னத்திரை படப்பிடிப்புகள், ப்ரீ புரொடக்‌ஷன், போஸ்ட் புரொடக்‌ஷன் என அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க பெப்சி முடிவு செய்துள்ளது. திரைப்படத் துறை மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஏதாவது ஒருவகையில் நிவாரணம் வழங்கும்படி மத்திய அரசுக்கும் தொடர்ந்து 3 மாதமாக கோரிக்கை வைத்து வருகிறோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாநில அரசு 3 முறை நிவாரணம் அளித்துள்ள நிலையில், மத்திய அரசு எந்தவித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. தயவுசெய்து திரைப்படத் துறைக்கு நிவாரணம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு செல்வமணி கூறியுள்ளார்.

Related Stories: