×

அபிசரவணனுக்கு புதுப்பட்டம்!

நடிகர்களையும் பட்டப் பெயர்களையும்  பிரித்துப் பார்க்க முடியாது. பட்டப் பெயர் நடிகர்கள் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பவர் அபி சரவணன். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான  அபி சரவணன் தொடர்ந்து ‘டூரிங் டாக்கீஸ்’, ‘பட்டதாரி’ படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம்,  நெடுவாசல் மீத்தேன் போராட் டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து  சமூக நிகழ்வுகளிலும்  இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘மாயநதி’ படத்தில் அபி சரவணனின் யதார்த்த நடிப்பு மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது. கடந்த வாரம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய அபி சரவணனுக்கு வாழ்த்துகளும் விருதுகளும் குவிந்தன.
ஒரு தனியார் நிறுவனம் இவருக்கு ‘சோஷியல் ஸ்டார்’ விருது கொடுத்து கெளரவித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கரங்களால் பெற்றுக்கொண்டார்.

இதே நேரத்தில் இவருடைய நடிப்பைப் பாராட்டி தனியார் ரேடியோ நிறுவனம் ‘மதுரை சிட்டிசன் 2020’ என்ற விருது வழங்கியுள்ளது. விருது வாங்கிய அபி சரவணனை இயக்குநர் மனோபாலா நேரில்  வாழ்த்தியுள்ளார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘சாயம்’ உட்பட ஐந்து படங்களில் நடித்து வரும் அபிசரவணன், ‘‘விருதுகளை மனதில் வைத்து வேலை செய்வதில்லை. என்னுடைய இயக்குநர்கள் என்ன சொன்னார்களோ அதையே கேமராவுக்கு முன்பு பண்ணுகிறேன்.

இதற்கு முன்பு மலேஷியா அமைப்புகளிடமிருந்து ‘மண்ணின் மைந்தன்’, ‘யுத் ஐகான் ஆஃப் தி இயர் 2017’, அப்துல்கலாம் மன்றம் சார்பாக ‘தங்க மகன்’ விருது என்று ஏராளமான விருதுகள் வாங்கியுள்ளேன். விருதுகளும் பாராட்டும் என்னை பொறுப்புள்ள நடிகனாக மாற்றியுள்ளது. அதை தக்க வைக்குமளவுக்கு என்னுடைய அடுத்தடுத்த படங்கள் இருக்கும்.

‘எட்டும் வரை’ படம் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்தும், ‘சாயம்’ படம்  மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்தும் உருவாகியுள்ளன. ‘கொம்பு வச்ச சிங்கம்டா’  படத்தில் சசிகுமார் சாருடன் படம் முழுக்க வரும் கேரக்டர் பண்ணியிருக்கிறேன். அடுத்து பிரபல இயக்குநரின் உதவியாளர்  இயக்கும் படத்தில் போலீஸ் வேடம் பண்ணுகிறேன். இதில் சிக்ஸ் பேக் உடற்கட்டில் தோன்றவுள்ளேன்’’ என்றார்.

Tags : Abhisaravan ,
× RELATED அஜித் படம் ரீ-ரிலீஸ்