கும்பத்தில் சனி..! குவிப்பாரா நன்மைகளை இனி..?!

பகவத் கைங்கர்ய, ஜோதிட ஸாகர சக்கரவர்த்தி A.M.ராஜகோபாலன்

ஆனி 12 (27-06-2023) சனி வக்கிர கதி ஆரம்பம்

புரட்டாசி 21 (08-10-2023) ராகு, மீன ராசிக்கும், கேது, கன்னி ராசிக்கும் மாறுதல்

ஐப்பசி 06 (23-10-2023) சனி வக்கிர கதி நிவர்த்தி

சனிப் பெயர்ச்சி  29-3-2023

ஜோதிடக் கலையின் 'வாக்கிய' கணித முறைப்படி சென்ற சுமார் 2½ ஆண்டுகளாக மகர ராசியில் சஞ்சரித்த சனி பகவான், பங்குனி 15ம் தேதி (29-3-2023) புதன்கிழமையன்று அவரது மற்றொரு ஆட்சி வீடான கும்பராசிக்கு மாறுகிறார். நவக்கிரகங்களில், ராகு, கேது ஆகிய இரு சாயா (நிழல்)  கிரகங்களைத் தவிர, மற்ற கிரகங்கள் அனைத்தும் சதா சூரியனை வலம் வந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றிலும், சந்திரன் மட்டும் பூமியை வலம்வந்து கொண்டு, பூமியுடன் சூரியனையும்  சுற்றிக்  கொண்டேயிருக்கிறது.

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால்தான் இரவு - பகல் நிகழ்கின்றன. பருவங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன.  சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதைகளில் வலம் வரும் கிரகங்களில், சந்திரனே அதிக வேகம் உடையவர்! குறைந்த வேகத்தி்ல் சுற்றுபவர் சனி!! அதனால்தான் சனிக்கு 'மந்தன்' என்ற பெயரும் உண்டு. காசி திருத்தலத்தில், பரம பவித்திரமான கங்கைநதியின் 'கேதார்காட்' எனும் ஸ்நான கட்டத்தில் சிவபெருமானை மனத்திலிருத்தி, தவம்செய்து, அதன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராகி,  'ஈஸ்வர' பட்டமும் பெற்றுத் திகழ்பவர் சனீஸ்வரன்!

ஜனன காலத்தில்....!

ஒவ்வொருவரின் ஜனனகால ஜாதகத்திலும் மனிதப் பிறவியின் மிக முக்கிய அம்சங்களான ஆயுள், ஆேராக்கியம், ஜீவனம் (career) மரணம் ஆகிய நான்கிற்கும் காரகத்துவம் வாய்ந்தவர் சனி.  துலாம், இவரது உச்ச வீடு. மேஷம் நீச்ச வீடு. மகரமும், கும்பமும் ஆட்சி ராசிகளாகும். துலாம் ராசியில் சஞ்சரிக்கும்போது அளவற்ற சுப பலத்தைப் பெறுகிறார். ஜனன கால ஜாதகத்தில் சனி சுபபலம் பெற்றிருந்தால், நீண்ட ஆயுளும், நல்ல உடல் ஆரோக்கியமும், செல்வாக்கு மிகுந்த உயர் பதவியும் கிட்டும்.  ராசியில் சனி இருப்பின், நினைத்ததை சாதிக்கும் திறன், பிடிவாதம், முன்கோபம், உறுதியான, அஞ்சாநெஞ்சம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள்.

பகைக் கிரகங்களுடனும், நீச்ச கிரகங்களுடனும்..!

ஜாதகத்தில் சனி பலம் குறைந்திருந்தாலும்,  பகைக் கிரகங்களுடன் சேர்ந்து, நீச்ச ராசியில் இருந்தாலும் வறுமை, பிணி, வீண்பழி, அவமரியாதை, ஸ்திரத்தன்மையின்மை, சதா அலைந்து கொண்டேயிருக்கும் உத்தியோகம் அல்லது தொழில் அமைதல், எத்தனை கடுமையாக உழைத்தாலும் திருப்தி அடையாத எஜமானர், அற்ப ஆயுள் ஆகிய அனுபவங்கள் ஏற்படும்.

களத்திர ஸ்தானத்தில், சனி, செவ்வாய், ராகு சேர்ந்திருப்பின்,  சதா சண்டை போடும் கணவர் - மனைவி அமைவர்.  வாழ்வின் தரம் உயர்ந்ததா அல்லது தாழ்ந்ததா என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு, ஜீவன ஸ்தானத்திற்கு ஏற்படும் சனியின் ஆதிக்கத்தைப் பொறுத்தே அமையும். சில கிரக சேர்க்கை அமைந்திருப்பின், இயற்கைக்கு மாறான மரணம் சம்பவிக்கும்.

கொடுப்பதில் மிகவும் தாராள மனமுடையவர் சனி. அதேபோன்று, முற்பிறப்புத் தவறுகளுக்கு மறுபிறவியில் மிகக் கடுமையான தண்டனையைக் கொடுப்பதும் இவரே! ஜாதகத்தில், லக்கினத்திலிருந்து 5ம் இடமாகிய பூர்வபுண்ணிய ஸ்தானத்தை லக்கினமாக வைத்து, சனிபகவானின் சுபபலம் - தோஷம் ஆகியவற்றைக் கணித்துப் பார்த்தால், சனி பகவானால் ஏற்படவிருக்கும் நன்மை - தீமைகளைத் துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.

கோள்சாரத்தில்..!

ஒருவருடைய ஜென்ம ராசி மற்றும் ஜென்ம ராசியிலிருந்து 4, 8, 12ம் இடங்களில் குருபகவான் வரும்போது தசா, புக்திகளின் அடிப்படையில் சிரமங்களை ஏற்படுத்துவார். அவற்றின் முறையே 'ஜென்மச்சனி', 'அர்த்தாஷ்டகச் சனி', 'அஷ்டமச் சனி', 'விரயச் சனி' எனக் கூறுகின்றன மிகப் பழைமையான ஜோதிட நூல்கள். இக்கால கட்டங்களில் குடும்பத்திலும், தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றிலும், உடல்நலனிலும் பாதிப்பு ஏற்படும்.

ஜென்மராசியிலிருந்து 3, 6, 11ம் இடங்களுக்கு வரும்போது, அளவற்ற நன்மைகளைச் செய்வார், சனி! குருபகவானுடன் சேர்ந்திருந்தாலும், அவரால் பார்க்கப்பட்டாலும் சனி தோஷம் குறைகிறது. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, நவ-திருப்பதி ஆகியவை சனிதோஷப் பரிகாரத் தலங்களாகும். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயிலிலோ அல்லது வீட்டின் பூஜையறையிலோ மாலையில் மண் அகல் விளக்கொன்றில், எள் எண்ணெய் தீபம் ஏற்றிவருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

கிருத யுகத்தில், அேஹாபில ஷேத்திரத்தில் இரணியகசிபுவை வதம் செய்த பிறகும் சீற்றம் தணியாமல் நரசிம்மன், பாரத தேசம் எங்கும் சுற்றி வந்தார். அப்போது, அவரை தரிசிப்பதற்கு ஆவல்கொண்ட சனீஸ்வரர், பாரதம் முழுவதும் தேடி, அலைந்து, இறுதியில் குஜராத் மாநிலத்தின் நர்மதை நதிக்கரையில் கண்டார். 'ரட்சோபுவன' ஸ்தோத்திரத்தினால் நரசிம்மரை ஆராதித்து மகிழ்ந்தார். 'ஸ்தோத்திர ரத்தினம்' எனப் பெரியோர்களால் போற்றப்படும் இந்த அரிய ஸ்தோத்திரத்தை ஜனன கால ஜாதகத்தில் சனி நீச்சம் அடைந்திருப்பது, ஜென்மச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, அஷ்டமச்சனி ஏழரைச் சனி தோஷமுள்ளவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி, லட்சுமி நரசிம்மரை பூஜித்துவந்தால், அந்தத் தோஷங்கள் அனைத்தும் அடியோடு நீங்குவது ஏராளமானோர் அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும்.

மருத்துவ ஜோதிடத்தில், (Medical Astrology) சனியைப்பற்றி விவரமாகக் கூறப்பட்டுள்ளது. ஆயுளை நீடிப்பவர் என்றும், விதி முடிந்தபின் ஆயுளை முடிப்பவர் எனவும் உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் ஆற்றலையும், வெற்றியையும் தருபவர் எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. ஜாதகத்தில் குருவுடன் சேர்ந்திருந்தாலும், அவரால் பார்க்கப்பட்டாலும், குருவின் ஆட்சிவீடுகளான தனுசு மற்றும் மீனத்தில் அமர்ந்திருந்தாலும், அவரால் ஏற்படும் தோஷம் குறைந்துவிடுகிறது என 'பிருகத் ஸம்ஹிதை' எனும் நூல் கூறுகிறது.

சுக்கிரன், புதன் ஆகிய இருவரும் சனிக்கு நட்புக் கிரகங்களாவர்.  சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் பகைக் கிரகங்களாகும். அரசியல் துறையிலும் சனிக்குத் தொடர்பும், அதிகாரமும் உண்டு. அரசியலில் வெற்றிபெற ஜாதகத்தில் சனியும் சுபபலம் பெற்றிருக்க வேண்டும். சாம, பேத, தான, தண்டம் ஆகிய நான்கு யுக்திகளில் 'பேத' யுக்தியை அளிப்பவர் சனி. கட்சிகளுக்குள் ஒற்றுமையைக் குலைப்பது,  அரசியல் தொண்டர்கள் முதல் மேல்மட்டத் தலைவர்களிடையே கருத்துவேற்றுமையை உண்டாக்கி,  அவர்களுக்குள் பகைமையை வளர்க்கும் சாமார்த்தியத்தை அளிப்பதில் சனிக்கு நிகரான சக்தி கிடையாது.

ஆதலால், அரசியலில் வெற்றிபெற ஜாதகத்தில் சனியின் நிலையைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதற்கேற்ற பரிகாரம் செய்வது அரசியலில் வெற்றிபெற வழிவகுக்கும். 'நேர்மைக்கும், அரசியலில் வெற்றிக்கும் உள்ள இடைவெளி அதிகம்...' என்பது சாணக்கியரின் வாக்கு! அரசியல் சாதுர்யத்திற்கு, ஜாதகத்தில் சனி சுபபலம் பெற்றிருக்க வேண்டும்.

சனிக்கிழமைகளில் உபவாசம் இருப்பதும், திருக்கோயில் ஒன்றி்ல் சனி மாலையில்  எள்எண்ணெய் தீபம் ஏற்றிவருவதும், சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு எள் கலந்த சாதம் (எள்ளோரை) கொடுப்பதும், பசுமாட்டிற்கு உணவளிப்பதும், சனி தோஷத்திற்கு ஏற்ற பரிகாரங்களாகும். இக்கலிகாலத்தில், சனிபகவான் எழுந்தருளி, கருணைபாலிக்கும் பரிகாரத் தலங்களில் திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக்காடு (அக்னீஸ்வரம்) மிகவும் பிரசித்திபெற்றவை. ஆபரணக் கற்களில் கருநீலம் (dark Sapphire) சனி பகவானுக்கு உகந்த கல்லாகும். தங்க நகைகளில் கருநீலக் கற்கள் பதித்த ஆபரணம் அணிவது நல்ல பலனைத் தரும்; ஆயுளை வளர்க்கும்.

சனி பகவானைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்!

'சனி' என்றாலே, அவர் கொடியவர், இரக்கமற்றவர், கெடுபலன்களை மட்டுமே அளிப்பவர் என்ற முற்றிலும் தவறான கருத்துகள் காலங்காலமாக, மக்களிடையே நிலவிவருகின்றது. இத்தகைய கருத்துகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது! நற்பலன்களானாலும், கெடுபலனேயானாலும், உறுதியுடன் அந்தப் பலனைத் தருவதால், இத்தகைய எண்ணங்கள் மக்களிடையே உருவாகியுள்ளன. இவை முற்றிலும் தவறானவை!!

இதுபோன்றே, கோள்சாரத்தில் ஏழரைச் சனிக் காலம் வரும்போது, பலர் அதன் விளைவுகளைக் கற்பனை செய்துெகாண்டு நடுங்குகின்றனர். நமது முற்பிறவிச் செயல்களின் அடிப்படையில் தான் சனி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும் பலன்களை வழங்குகின்றனர். தங்கள் இச்சையாக எதையும் செய்வதில்லை; செய்யவும் முடியாது!! மேலும், ஒரு சில தசாபுக்திகள் கோள்சார நிலைகள் தவிர, பெரும்பாலான அனைத்துச் சனி தோஷங்களுக்கும் ஏற்ற, எளிமையான ஆனால், சக்திவாய்ந்த பரிகாரங்கள் உள்ளன.

சனிக்கிழமைகளில்,  எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுவது மிகக் கடுமையான சனி தோஷத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். சனிக்கிழமைகளில் பருப்பு, நெய், கறுப்பு எள் சேர்த்த சாத உருண்டை, காகத்திற்கு வைப்பது மிகக் கடுமையான பித்ருதோஷத்தையும் போக்கும் வல்லமை கொண்டது. சனிபகவானின் அதிதேவதை யம தர்மராஜர். வாகனம், காகம். பக்தியுடன் தினமும் பூஜிப்பவர்களுக்கு நல்வாழ்வினை வாரி வழங்கும் வள்ளல் இவர். இவரைக் கண்டு யாரும் அஞ்சவேண்டியதில்லை என 'பாஸ்கர ஸம்ஹிதை' எனும் மிக,மிகப் பழைமையான நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'வாழ்க்கையில் நேர்மை, ஒழுக்கம், நமக்குக் கிடைத்ததே போதும் என்ற மனப்பான்மை, ஏழை - எளியோர் மற்றும் வாயில்லா பிராணிகளிடம் கருணை, பிற பெண்களைத் தாயாகவும் உடன் பிறந்த சகோதரிகளாகவும் பார்க்கும் உத்தமகுணமாகிய நற்பண்புகள்  கொண்டவர்களுக்கு சனி பகவானின் பூரண கருணையும், நீண்ட ஆயுளும், நோயில்லா உடல்நலனும், நல்ல உத்தியோகம், குறையாத செல்வம் அமையும்...!' எனக் கூறுகிறது பாஸ்கர ஸம்ஹிதையின் 21வது ஸ்லோகம். இத்தகைய தெய்வீகப் பெருமையும், தன்னிகரற்ற வீரியமும் கொண்ட சனி பகவான்மீது, அவதார புருஷரான வியாஸர், சக்திவாய்ந்த ஸ்லோகம் ஒன்றை அருளியுள்ளார்.

அந்த ஈடிணையற்ற பரிகார ஸ்லோகம் இதுதான்:

'நீலாஞ்சன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்டஸம்பூதம்

தம் நமாமி ஸனைச்சரம்' (வியாஸர்)

ஏழரைச் சனி, ஜென்மச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டகச் சனி, சனிதசை ஆகியவற்றினால் பாதிக்கப்படும் அன்பர்கள், தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் இந்த அரிய ஸ்லோகத்தைச் சொல்லி, அவரைப் பூஜித்து வந்தால், எவ்விதப் பிரச்னையும் இன்றி அக்காலகட்டத்தைக் கடந்துவிடலாம் - மிகச் சுலபமாக! வேண்டியது பக்தியும், நம்பிக்கையும் மட்டுமே!! இனி, அவரவர் ராசிக்கு வரும் 2½ வருடங்களில் சனி பகவானின் கும்ப ராசி சஞ்சாரத்தினால் ஏற்படவுள்ள பலா-பலன்களை ஆராய்ந்து பார்ப்போம்.  

இந்த சஞ்சாரத்தின்போது அவருக்கு ஏற்படக்கூடிய வக்கிர, அதிச்சாரகதி மாறுதல்களையும் அவ்வப்போது அவருடன் இணையும் இதர கிரகங்களினால் ஏற்படும் மாறுதல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, துல்லியமாகக் கணித்து, எழுதப்பட்டுள்ள பலன்கள் இவை. பரிகாரங்களும், மிகப் புராதன நூல்களிலிருந்து எடுத்து, 'தினகரன்' வாசக அன்பர்களின் நலனுக்காக இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் தோஷத்தைப் போக்கி, நற்பலன்களை அளிப்பவையாகும். மேஷம், கன்னி, துலாம், தனுசு, மகரம் ஆகிய 5 ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்தச் சனி மாறுதல் அளவற்ற நன்மைகளை அளிக்கும். கடகம், மீனம், விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு, பரிகாரம் அவசியம்.

மற்ற ராசியினருக்கு அளவோடு பிரச்னைகள் ஏற்பட்டு, படிப்படியாக சரியாகும். பக்திக்கும், பரிகாரத்திற்கும் கட்டுப்பட்டவர்தான் சனி, 'கொடுப்பதிலும், வள்ளல்தான் அவர்...' -எனக் கூறுகிறது, 'பிருஹத் ஸம்ஹிதை'. அத்தகைய பெருமையும், கருணையுள்ளங்கொண்ட, 'தினகரன்' (சூரியன்) புத்திரரான, சனி பகவான்,  “தினகரன்” வாசக அன்பர்களுக்கு, அனைத்து நலன்களையும் அளித்தருளப் பிரார்த்திக்கின்றோம்!

Related Stories: