கம்பனையும் ராமனையும் பாடிய கண்ணதாசன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் நம்பிய பேருக்கு ஏது பயம்?

கண்ணனிடத்திலே அதிக ஈடுபாடு கொண்ட கவியரசு கண்ணதாசன், கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனக்கு கம்பன் மீது எப்படி ஆர்வம் வந்தது என்பதை தன்னுடைய சுயசரிதமான வனவாசத்தில் அவர் விவரித்து இருக்கிறார். அவர் கம்பராமாயணம் படிக்கத் தொடங்கியதன் நோக்கம், கம்பனை விமர்சிக்கவும், கம்பராமாயணத்தை எதிர்த்து மேடைகளில் பேசவும்தான் என்று அவரே சொல்லிவிட்டு, கம்பனை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து கம்பனில் மூழ்கிய நான், அவனுக்கு அடிமையாகிப் போனேன். என் கவிதைகளுக்கும், திரைப்படப் பாடல்களுக்கும் துணை நிற்பது அவனுடைய பல கவிதைவரிகளும், சொற்களும்தான் என்பதை;

‘‘கம்பன் மகனாக நான் மாற வேண்டும்;

கன்னித்தமிழாலே உனைப் பாட வேண்டும்”

என்று சுவைபடப் பாடுகிறார்.

கம்பன் கவிதைகள் சாகாத கவிதைகள். அது காலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கவிஞருக்கு.

காலமழை ஆழியிலும் காற்றுவெளி ஊழியிலும்

சாகாது கம்பனவன் பாட்டு-அது

தலைமுறைக்கு எழுதிவைத்த சீட்டு

கம்பன் விழாக்களில் கலந்துகொள்வது என்பது கவியரசருக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகின்ற அனுபவம். காரைக்குடியில் ஆரம்பித்து புதுச்சேரி கம்பன் கழகம் வரை, பல கம்பன் கழகங்களில் அவருடைய கவியரங்கங்கள் தனித்துவமாக விளங்கும். கம்பன் தனக்குத் தமிழ் பிச்சை இட்டவன் என்பதை நன்றி மறக்காமல் பல கவிதைகளில் அவர் சொல்லியிருக்கிறார். எப்படியோ கம்பனுக்கும் எனக்கும் தொடர்புண்டு.

செப்புவதெல்லாம் கம்பன்

செந்தமிழாய் வருவதனால்;

அக்காலம் அப்பிறப்பில்

அழகு வெண்ணெய் நல்லூரில்

கம்பனது வீட்டில்

கணக்கெழுதி வாழ்ந்தேனோ?

நம்புகிறேன்; அப்படித்தான்...

திரைப்படப் பாடல்களில் உவமைகளை அவர் சொல்லுகின்ற பொழுது எப்படியும் கம்பன் சொற்கள் வந்து கலக்காமல் இருக்காது. “வசந்த மாளிகை” என்றொரு படம். அதில் ஒரு பாடல் காட்சி, சரணங்கள் எழுதும் போது கம்பன் பாடல் வந்து நிற்கிறது.

வந்து எனைக்கரம் பற்றிய வைகல்வாய்

இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்

சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்

இந்த கம்பனின் வார்த்தையை ஒரு காதலன் தன் காதலிடம் உறுதி மொழி தருவதைப் போல பாடுகிறார் கண்ணதாசன்.

உன்னை அல்லால் ஒரு பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

``லட்சுமி கல்யாணம்” என்று திரைப்படம். அதிலே தனக்கு என்ன மாதிரியான கணவன் கிடைக்க வேண்டும் என்பதைக் குறித்து திருமணத்திற்காக காத்திருக்கும் ஒரு பெண் பாடுவது போல ஒரு பாடல் காட்சி. கண்ணனைப் போல ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்றுகூட பல்லவியை அமைத்திருக்கலாம். ஆனால் “ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்” என்று வாழ்ந்த ராமனைத்தான் பாடுகிறார். இப்படித்தானே ஒவ்வொரு பெண்ணின் விருப்பமும் இருக்கும். ராமன் என்றால் ஒரு ராமனா? இது வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லாத பெருமை.  ஒவ்வொரு பெருமைக்கும் குணத்துக்கும் ஒவ்வொரு ராமனாகக் காட்சிப்படுத்துகிறாள்.

ராமன் எத்தனை ராமனடி - அவன்

நல்லவர் வணங்கும் தேவனடி

கல்யாணக் கோலம் கொண்ட

கல்யாணராமன்

காதலுக்குத் தெய்வம் அந்த சீதாராமன்

அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்

அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்

தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்

வீரம் என்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்

வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன்

வம்சத்திற்கொருவன் ரகு ராமன்

மதங்களை இணைப்பவன் சிவ ராமன்

மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்

முடிவில் ஆதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

நம்பிய பேருக்கு ஏது பயம்

ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்

ராமனின் கைகளின் நான் அபயம்

ராமாயணம் முழுதுமே இந்தப் பாடலில் சுவையாகவும் சுருக்கமாகவும் சொல்லி விடுகிறார்.

“ராம நாமம்தான் தாரக நாமம்” என்பதையும், அந்த ராமனை நெஞ்சில் கொண்டவர்களுக்கு அச்சம் என்பதே வருவதில்லை (ராமஜெயம் ஸ்ரீராமஜெயம்நம்பிய பேருக்கு ஏது பயம்) என்பதையும், ராமாயணம் என்பது அபயப்பிரதான சாஸ்திரம் அதாவது சரணாகதி சாஸ்திரம் (ராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ராமனின் கைகளின் நான் அபயம்) என்பதையும், சிறிய சொற்களிலே, பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கிய அருமை கவிஞருக்கே உரியது. ராமருடைய பெயர்களையும் குணங்களையும் இணைத்து மொத்தப் பாடலில் ராமருடைய பெருமையை கொட்டித் தீர்த்துவிடுகிறார்.

இது “கோ குணவான்?” என்ற கேள்விக்கு, பதினாறு குணங்களையும் நிரம்பியவன் ராமன் என்று சொல்லப்பட்ட தத்துவ விஷயத்தை மிக எளிமையான ஒரு திரைப்படப் பாடலிலே கொடுத்த பாங்கு, கண்ணதாசனின் திரைப்பட பாடலின் ஒரு மணிமகுடம்.கம்பன் அவை அடக்கத்திலே ஒரு பாடலிலே மிக அழகாகச் சொல்லுவார்.

அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்

தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?

இறையும் ஞானம் இலாத என் புன் கவி.

முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

“தரை’’ என்ற சொல் எதுகை நோக்கித் ‘தறை’ என மருவி நின்றது.

ஒரு தெரு அங்கே சிறு பிள்ளைகள் சிறு குச்சிகளால் கோடுகள் போட்டு, “இதுதான் வீடு, இதுதான் சமையலறை, இதுதான் பூஜை அறை,” என்று கிறுக்கி விளையாடுகிறார்கள். இவற்றை ஒரு சிற்பி பார்க்கிறார். அந்த சிற்பி அந்த குழந்தைகளின் கற்பனை திறனைக் கண்டு மகிழ்வாரே தவிர, கோபம் கொள்ள மாட்டார். அதுபோல, நான் இந்த ராமாயணத்தில் அற்பமான பாடல்களைப் பாடி இருக்கிறேன். அந்த குழந்தைகள் ஆசையினால் கோடு கிழிப்பதைப் போல இந்த ராமாயணத்தை நான் பாடுகின்றேன். நூல் அறிவு பெற்ற சான்றோர்கள் அந்தக் குழந்தை போல என்னையும் கருதிக் கோபம் கொள்ள மாட்டார்கள் என்பதுதான் இந்த பாட்டின் கருத்து.

‘‘ஆசையினால் பாடுகின்றேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள், இதில் உள்ள தவறுகளை பெரிது படுத்தாதீர்கள்” என்பது போல அவை அடக்கப் பாடலைப் பாடிய கம்பனின் உவமை கவிஞரின் மனதில் பதிந்திருக்கிறது. ``மகாகவி காளிதாஸ்’’ என்கின்ற ஒரு பாடலின் தொடக்கத்தில் இந்த உவமையைப் பயன்படுத்துகிறார்.

  ``குழந்தையின் கோடுகள் ஓவியமா? - இந்தக் குருடன் வரைவதும் ஒரு காவியமா?

நிகழ்ந்ததை உரைப்பேன் புலவர்களே - குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்

கலைமகள் எனக்கொரு ஆணையிட்டாள் - சில காவியப் பொருள்களைத் தூதுவிட்டாள்

தூதுவிட்டாள் அலையெனும் கற்பனை ஓடவிட்டாள் - அதை ஆயிரம் உவமையில் பாடவிட்டாள் பாடவிட்டாள்...’’

ராமாயணத்தில் சீதைக்குப் பெருமையா? ராமனுக்கு பெருமையா? என்று சொன்னால் சீதைக்குத்தான் வைணவ உரையாசிரியர்கள்கூட பெருமையைச் சொல்லுகின்றார்கள். அது ராமனின் கதை அல்ல, சீதையின் கதை என்றே வால்மீகி, “சீதாயாம் சரிதம் மகது” என்று சொல்லுகின்றார். இதை அப்படியே ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களிலே சொல்லுகின்றார்கள்

தளிர்நிறத்தாள் குறையில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற

கிளிமொழியாள் காரணமாக் கிளர்அரக்கன் நகர்எரித்த

களிமலர்த் துழாய்அலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து

அளிமிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.

“ராமாயணம் ராமனின் பெருமையைக் கூறவில்லை; சிறையிறந்தவள் ஏற்றத்தை கூறுகின்றது” இதைக் கருத்தில் கொண்ட கவியரசர், ஒரு பெண்ணின் குணத்தையோ, அறிவையோ, அழகையோ பாடலில் சொல்ல வேண்டும் என்று நினைத்தால், முதலில் சீதையைத்தான் உவமையாக பாடல் வரிகளில் சொல்லுவார். இதை நூற்றுக்கணக்கான திரைப்பட பாடல்களில் கவிஞர் கையாண்டு இருக்கிறார். அதுவும் வால்மீகி சீதையைவிட, கம்பன் கண்ட சீதையிடம்தான் அவருக்கு ஈடுபாடு அதிகம்.

1. கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா

2. ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

3. அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்

4. வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு அருமையான காட்சி.கைகேயி வரத்தால் ராமன் காட்டுக்குப் புறப்பட்டுவிட்டான். தம்பி இலக்குவனால் இதைப் பொறுக்க முடியவில்லை. மிகப்பெரிய கோபம் கொள்கிறான் தன்னுடைய அண்ணனுக்கு எப்படியாவது மணிமகுடத்தைப் பெற்று தர வேண்டும் என்று நினைத்து, வில்லும் கையுமாக எழுகிறான்.

கேட்டான் இளையோன்; கிளர் ஞாலம் வரத்தினாலே

மீட்டாள்; அளித்தாள் வனம் தம் முனை, வெம்மை முற்றித் தீட்டாத வேல் கண் சிறுதாய்’ என யாவராலும்

மூட்டாத காலக் கடைத்தீயென மூண்டு எழுந்தான்.

‘‘யார் தடுக்கிறார்கள் பார்க்கிறேன் ஒரு கை. தசரதன் எதிர்த்தால் தசரதனையும் நான் வெல்லுவேன் என்றெல்லாம் கோபத்தோடு பேசுகின்றான்.

விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும்

எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி,

மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும்,

பெண் நாட்டம் ஒட்டேன், இனிப் பேர்

உலகத்துள்’ என்னா.

‘‘நேற்று வரை பட்டாபிஷேகம் என்று சொல்லிவிட்டு, இன்று இல்லை என்று சொல்வதுகூட பரவாயில்லை. ஆனால், காட்டுக்குப் போ என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று தன்னுடைய கோபத்துக்கு நியாயமான காரணங்களை அவன் எடுத்துரைக்கிறான். போருக்கு தன்னுடைய அண்ணனின் அனுமதியைக் கேட்கிறார். அப்பொழுது ராமன், தம்பிக்கு சமாதானம் சொல்வதாக கம்பராமாயணத்தில் ஒரு பாடல் இருக்கிறது.

‘நதியின் பிழை அன்று

நறும் புனல் இன்மை; அற்றே,

பதியின் பிழை அன்று;

பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழை அன்று;

மகன் பிழை அன்று; மைந்த!

விதியின் பிழை; நீ இதற்கு

என்னை வெகுண்டது?’

 - என்றான்.

இந்தப் பாட்டை அப்படியே மனதில் வைத்துக் கொள்ளுகின்றார் கவிஞர். ``தியாகம்’’ என்ற படத்தில் ஒரு சந்தர்ப்பம் வருகிறது. குற்றமே செய்யாத ஒருவன் சந்தர்ப்பங்களால் குற்றவாளி ஆக்கப்பட்டு இருக்கிறான். அவன்தான் நிரபராதி என்று கூறிக்கொள்வதற்கு, மனசாட்சியைத் தவிர எந்தச் சாட்சிகளும் இல்லை. இப்பொழுது யாரைக் குறை கூறுவது? கொண்டு வந்து நிறுத்திய விதியைத் தானே நோக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை கவியரசர் அந்தக் கம்பராமாயணப் பாடலுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.

நல்லவர்களுக்கு இரண்டு சாட்சிகள்தான் உண்டு. ஒன்று மனசாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி என்று சொல்லிவிட்டு, பாடலின் ஒரு சரணத்திலே கம்பராமாயணப் பாடலை எளிமையான திரைப்படப் பாடலாக மாற்றுகின்றார்.

நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

நதி செய்த குற்றம் இல்லை

விதி செய்த குற்றம் அன்றி

வேறு யாரம்மா?

பறவைகளே பதில் சொல்லுங்கள்

மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்

மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்

கவியரசர் கம்பனின் சொல்லாட்சிகளிலும் சொந்தங்களிலும் மனம் பறி கொடுத்தவர். கம்பனின் வார்த்தை ஜாலங்களின் அழகு அவருக்குப் பிடித்தமானது. அதே வார்த்தை ஜாலத்தை வேறு விதமாக தம்முடைய திரைப்படப் பாடலில் அற்புதமாக கையாண்டு இருக்கிறார். அதற்கு இரண்டு பாடல்களை நாம் சொல்ல முடியும்.

  `இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;

இனி. இந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்

துயர் வண்ணம் உறுவது

உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில்.

மழை வண்ணத்து அண்ணலே! உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன்;

கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’

இதிலே வண்ணம் என்கின்ற சொல் திரும்பத் திரும்ப வரும். மிக அற்புதமான சந்தப் பாடல் இது. ஆனால், இங்கே இன்னொன்றையும் நாம் சொல்லி ஆக வேண்டும். இந்த வண்ணம் என்கின்ற வார்த்தை ஜாலத்தை கம்பன் எங்கே இருந்து எடுத்தான் என்றால் திருமங்கையாழ்வாரிடத்திலிருந்து எடுத்திருக்கிறான். திருமங்கை ஆழ்வார் தன்னுடைய திருநெடுந்தாண்டகம் பாசுரத்திலே வண்ணம் என்கிற வார்த்தையை அற்புதமாக கையாளுவார்.

மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ

மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட

எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே

இருவராய் வந்தார் என் முன்னே நின்றார்

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்

கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே

அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி!

அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே

கம்பனுக்கு வண்ணக் கவிதையைக்

கொடுத்தது ஆழ்வார்.

 கண்ணதாசனுக்கு வண்ணக் கவிதையைக் கொடுத்தது கம்பன். இந்த வண்ண அழகை எண்ண அழகாக்கி எழுதிய பாடல்தான் இது.

``பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

கண் வண்ணம் அங்கே கண்டேன்

கைவண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’’

எத்தனை வண்ணம் பாருங்கள். அதைப்போலவே இன்னொரு கட்டம். ராமனின் வடிவழகு ராமன் மிதிலை வீதிகளிலே சென்று கொண்டிருக்கும் பொழுது, அவன் அழகைப் பார்த்து அத்தனை பேரும் மையல் கொள்ளுகின்றனர்.

அவனுடைய தோள் அழகை வர்ணிக்கிறாள் ஒருத்தி. இன்னொருத்தி அவனுடையகை அழகை வர்ணிக்கிறாள். இன்னொருத்தி அவருடைய கண் அழகை வர்ணிக்கிறாள்.

தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழல் கமலம் அன்ன

தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ் கொண்ட சமயத்து அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்

பதினைந்து விதமான பதார்த்தங்கள் ஒரு விருந்திலே செய்யப்பட்டு இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். அதிலே முதலிலே ஒரு பதார்த்தம் பரிமாறப்படுகிறது. அந்தப் பதார்த்தம் சுவையாக இருப்பதால் அதை திரும்பத் திரும்ப சுவைக்கச் சொல்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுகிறார் ஒருவர். வேறு 14 பதார்த்தங்களின் சுவை அவருக்குத் தெரியவில்லை. காரைக்குடி பக்கம் இப்படி விருந்து வைப்பதுண்டு.

எதை அதிகமாகச் சாப்பிடுகிறார்களோ அது அவருக்கு விருப்பமானது என்று நினைத்துக் கொண்டு அதனைத் திரும்பத் திரும்பப் பரிமாறுவார்கள். இன்னொருவர் வேறு ஒரு பதார்த்தத்தை, அதன் சுவையில் ஆழங்கால் பட்டு, அதை தவிர வேறொன்றும் சாப்பிடவில்லை. இப்பொழுது வெளியே வந்து இவர்கள் பேசிக் கொள்ளுகின்றார்கள். “நான் இந்த பதார்த்தத்தை சாப்பிட்டேன் அற்புதமாக இருந்தது”. இன்னொருவர் சொல்லுகிறார்.

“ஆஹா… நீ சாப்பிட்ட பதார்த்தத்தை நான் சாப்பிடவில்லையே... நான் வேறு பதார்த்தத்தைச் சாப்பிட்டேன். அது அற்புதமாக இருந்தது”.

லாவண்யம், சௌந்தர்யம் இரண்டு சொற்கள் உண்டு.

தனித்தனி அழகு (அவயவ சோபை) சௌந்தர்யம்.

மொத்த அழகு (சமுதாய சோபை) லாவண்யம்.

தனித்தனி பதார்த்தத்தின் சுவையைச் சொன்னார்களே தவிர, யாருமே அத்தனை பதார்த்தங்களையும் ருசித்துப் பார்த்து, முழு உணவின் சுவையைச் சொல்லவில்லை.  அதைப்போலவே ராமனின் தோள் அழகைக் கண்டவர்கள் அதையே பார்த்தார்கள் கையழகைக் கண்டவர்கள் அதையே பார்த்தார்கள் அவனுடைய முழு உருவத்தையும் யாருமே பார்க்கவில்லை என்கிறான் கம்பன். இதைத்தான் கம்பன், “தோள் கண்டார் தோளே கண்டார்” என்று பாடுகிறான். இங்கே கம்பன் வரியை அப்படியே பல்லவியாக்கி ஒரு பாடல் எழுதுகின்றார்.

தோள் கண்டேன் தோளே கண்டேன்

தோளில் இரு கிளிகள் கண்டேன்

வாள் கண்டேன் வாளே கண்டேன்

வட்டமிடும் விழிகள் கண்டேன்

ராமாயணத்தில் இன்னொரு கட்டம் சூர்ப்

பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம் பெறுகிறது.

 சூர்ப்பணகை தன்னுடைய அண்ணன் ராவணனிடம் ஓடி வந்து சீதையின் அழகைச் சொல்லி, ‘‘அந்தச் சீதையை அல்லவா நீ மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உன் பக்கத்தில் வைத்திருக்க வேண்டும்’’ என்று அவனுக்கு காமத் ‘‘தீ” யை மூட்டுகிறாள். சிவபெருமான் தன்னுடைய உடம்பில் ஒரு பெண்ணை வைத்தான். தாமரையில் இருந்த பெண்ணை திருமால் தன்னுடைய மார்பிலே வைத்துக்கொண்டான். படைக்கும் தொழில் செய்யும் நான்முகன் ஒரு பெண்ணை நாவில் வைத்துக்கொண்டான். மேகத்தில் பிறந்த அழகிய இடையை உடைய சீதையை நீ அல்லவா உனக்கு ராணியாக வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லுகின்ற ஒரு பாடல்.

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை

ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்

மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையாளை

மாகத்தோள் வீர பெற்றால் எங்ஙனம் வைத்து வாழ்தி!

இதை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஒரு பொருள் வரும். நுட்பமாகப் பார்த்தால் அந்த கடைசி வரியில் ஒரு சூட்சுமத்தை கம்பன் வைத்திருப்பான்.  ‘‘சீதையை உன்னால் அடைய முடியாது; அடைந்தாலும் உன்னால் வாழ முடியாது’’ என்ற எதிர்மறைப் பொருளும் (எங்ஙனம் வைத்து வாழ்தி?) அதிலே எதிரொலிக்கும். இந்தப் பாடலின் கருத்தை அப்படியே எடுத்து ஒரு சரணத்திலே வைக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில்

வைத்தான் அந்த

பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை

வைத்தான்

பாற் கடலில் மாதவனோ பக்கத்தில்

வைத்தான் - ராஜா

பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சினில் வைத்தான்.

இப்படி கவியரசு கண்ணதாசன் ராமன் மீதும், ராமாயணத்தின் மீதும், சீதையின் மீதும், கொண்ட பக்தியையும் ஈடுபாட்டையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பாரதிநாதன்

Related Stories: