இந்த வார விசேஷங்கள்

தாராதேவி ஜெயந்தி 25.3.2023 - சனி

காளி, தாரா, ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, பைரவி, ஸ்ரீ சின்னமஸ்தா,ஸ்ரீ தூமாவதி, ஸ்ரீ பகளாமுகி, ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ கமலாத்மிகா என்ற பத்து தேவியர்கள் தசமகா வித்யா தேவியர் என்று அழைக்கப்படுகின்றனர். அதில் இரண்டாவது தேவி தாரா தேவி. தாரா தேவி, தாய்மையின் வடிவமாகப் போற்றப்படுகிறாள். பாற்கடலை தேவர்கள் கடைந்த பொழுது, வந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்க வேண்டிய நேரத்தில், அதைத் தொண்டையிலேயே தடுத்து நிறுத்திய தேவி தாரா தேவி. இந்த தாராதேவியை வணங்கினால், ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படுகின்ற தோஷங்கள் நீங்கிவிடும். வாக்கு வல்லமை, அளவற்ற செல்வம் தந்து, ஞானமும், முக்தியும் கிட்டச் செய்யும். உலக இச்சையைக் கத்தரிக்கும். உபாசனை, ஏவல் சக்திகளை ஒடுக்கி ஞானம் அளிக்கும்.

சக்தி சதுர்த்தி 25.3.2023 - சனி

பங்குனி மாதத்தின் வளர்பிறையில் வரும் சதுர்த்தி தினத்தை, சக்தி சதுர்த்தி என்பார்கள். இந்த சதுர்த்தி, சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரமும், சூரியனுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும் கூடிய நாளில் வருவது விசேஷம். இந்த நாளில், ஆலயங்களில் உள்ள விநாயகருக்குச் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். இதேபோல், பிள்ளையாருக்கு வீட்டில் இருந்தபடியே பூஜைகள் செய்யலாம். இந்த விரதம் இருப்பவர்களுக்குப் பகை, கடன், நோய் முதலியவைகள் விலகி, நல்ல நட்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். காலையில் எழுந்து நீராடி, விநாயகருக்கு விளக்கு ஏற்றி, அறுகம்புல் மற்றும் வாசனை மலர்கள் வைத்து பூஜிக்க வேண்டும். மாலை வரை உபவாசம் இருந்து, மாலை வேளையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு, அதன் பிறகு உணவு உண்ண வேண்டும். சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும்.

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்

கடி கணபதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!

என்ற பாடலை பாராயணம் செய்யுங்கள்.

ஸ்ரீலட்சுமி பஞ்சமி 26.3.2023 - ஞாயிறு

பங்குனி அமவாசைக்குப் பிறகு வளர்பிறையில் ஐந்தாவது திதியான பஞ்சமியில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலமாக, தொழில்வளம் பெருகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் வறுமை நீங்கும். திருமகளின் இன்னருள் சிறக்கும். இது வெளிப்படையான பலன்கள். குடும்பத்தில் குதூகலமும் ஒற்றுமையும் ஓங்குவதும், சுபநிகழ்ச்சிகள் நடப்பதும், வீடு, வாகனம் முதலிய பொருள் சேர்க்கை ஏற்படுவதும், இந்த லட்சுமி விரதத்தால் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் என்று சாத்திர நூல்கள் பேசுகின்றன.

ஒருவருக்கு திருமகள் அருள் இருக்கின்ற பொழுது அவருக்கு செல்வமும் பதவியும் பட்டமும் தானே கூடும். அந்தத் திருமகள் அருள் கிடைக்காத பொழுது, அவர் இருளில் தள்ளப்படுவார். மனதில் குழப்பமான எண்ணங்களே நிலவும். எதிலும் தெளிவில்லாமல் இருப்பார். தொட்ட காரியங்கள் துலங்காது. எனவே திருமகளை வணங்குவது மிக முக்கியம். அதனால்தான் வியாபாரத் தலங்களில் லட்சுமி படம், லட்சுமி எந்திரங்களும் வைத்திருக்கிறார்கள். நிலைவாசலில் மஞ்சள், குங்குமம் வைத்து திருமகளை வரவேற்பதற்காக ஒரு விளக்கு ஏற்றி வைப்பதை முறையாகக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திருமகளை விரதமிருந்து துதிப்பதுதான் இந்த லட்சுமி பஞ்சமியின் நோக்கம். பூஜை அன்று காலையில் எழுந்து, வீட்டைத் தூய்மைசெய்து, வீட்டில் உள்ள அனைவரும் நீராடிவிட்டு, பூஜை அறையில் ஒரு பலகை வைத்து, அதிலே கோலம் போட்டு, கலசத்தை ஆவாகனம் செய்ய வேண்டும். அந்த கலசத்தில் திருமகளுக்கான லட்சுமி மந்திரங்களைச் சொல்லி ஆவாகனம் செய்ய வேண்டும்.

“ஓம் ஸ்ரீமகாலட்சுமி ச வித்மஹே

விஷ்ணுபத்ந்யை ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி, ப்ரசோதயாத்”

என்ற காயத்திரி மந்திரத்தைத் தவறில்லாமல் உச்சரித்து, ‘‘இந்த கலசத்தில், மஹாலட்சுமி தாயே வந்து அமர வேண்டும். எங்கள் எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு திருப்தி அடைய வேண்டும்’’ என்று மனதார பிரார்த்தனைச் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

திருமருகல் ஸ்ரீ ஆமோதளநாயகி சமேத இரத்தினகிரீஸ்வரர் கோயில் குடமுழுக்கு 27.3.2023 - திங்கள் (காலை 9.30)

மாணிக்க வண்ணர், வண்டுவார் குழலி என்ற திருநாமத்தோடு தரிசனம் தரும் தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 80-வது சிவத்தலம் திருமருகல். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் கிராமத்தில் அமைந்துள்ளது. பாம்பு கடித்து இறந்த வணிகனை சம்பந்தர் ‘‘சடையாய் எனுமால்’’ பதிகம் பாடி உயிர்த்தெழச் செய்த தலம். திருமணம் தடை நீங்க பரிகார பூஜை இங்கு செய்யப்படுகிறது.

இத்திருக்கோயிலின் மகா குடமுழுக்கு விழா 27.3.2023 திங்கட்கிழமை காலை 9:45க்கு நடைபெறுகிறது. மாலை திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ ஆமோதளநாயகி சமேத ரத்தினகிரீஸ்வரர் சுவாமி வீதி உலா, தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறும்.

சிவனேச நாயனார் குருபூஜை  27.3.2023 - திங்கள்

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிவனேச நாயனாரும் ஒருவர். காளர் மரபில் அவதரித்தவர். அறுவையார் குலத்தில் (சாலியர்) பிறந்த இவர் சிவனடியார்கள் மீது நேசம் மிக்கவர் என்பதால் இவருக்கு சிவநேசர் என்கின்ற திருநாமம். நெசவுத் தொழிலை செய்து வந்தார். அதில் கிடைத்த பணத்தை சிவனடியார்களுக்குச் செலவிட்டு வந்தார். அதுமட்டுமில்லை. தானே அவர்களுக்குத் தேவையான ஆடைகளையும் நெய்து கொடுத்தார். தாம் செய்கின்ற தொழிலின் மூலமாகவே தம்முடைய இறை பக்தியையும் இறையடியார்கள் நேசத்தையும் காட்டமுடியும் என்பதை உறுதியோடு கடைப்பிடித்தவர் சிவநேச நாயனார். இந்த உறுதியால் சிவனருள் பெற்று சிவ ஜோதியில் கலந்தார் அவருடைய குரு பூஜை, பங்குனிமாதம் ரோகிணியில். அதாவது இன்று.

கமல சப்தமி 28.3.2023 - செவ்வாய்

திதிகளில் ஏழாவது திதி புனிதமானது. சப்தமி என்று பெயர். சூரிய வழிபாட்டிற்கு சிறப்பானது. பங்குனியில் வளர்பிறை சப்தமி திதி கமலா சப்தமி என்று வழங்கப் படுகிறது. கமலா சப்தமி என்று மஹாலட்சுமி வழிபாட்டிற்கும் உரியதாகிறது. இந்த நாளில் சூரிய பகவானையும், மகாலட்சுமியையும் வணங்கினால், சந்தான விருத்தி உண்டாகும். குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் அவசியம் இந்த நாளில் விரதம் இருக்க வேண்டும். கண் நோய்கள் தீரும். கண்கள் ஒளிபெறும்.

ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி

ஸர்வ துர்க்க ஹரே தேவி

மஹாலக்ஷ்மி நமோஸ்துதே’

- என்ற மந்திரத்தைச் சொல்லி மகாலட்சுமியை வணங்கவும்.

அசோகாஷ்டமி 29.3.2023 - புதன்

சோகம் என்றால் வருத்தம். அசோகம் என்றால் வருத்தம் நீங்குதல் (மகிழ்ச்சி). சோகத்தை நீக்கி மகிழ்ச்சியைத் தரும் அஷ்டமி என்பதால் அசோகாஷ்டமி என்று பெயர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசிக்கொள்கிறார்கள். சீதா தேவி மருதாணி மரங்களுக்கு வரமளித்த நன்னாளே அசோகாஷ்டமி நாளாகும்.

சீதையைக் கவர்ந்து இலங்கையிலே கொண்டுபோய், ஒரு மலர்ச் சோலையிலே சிறை வைத்தான். அந்த மலர்சோலையிலே சீதையின் உள்ளம் ராமனைப் பிரிந்த வருத்தத்தால் அனலாய்ச்சுட்டது. சீதையின் சோகத்தைப் போக்குவதற்காக, இலைகளையும் மலர்களையும், சீதையின் மேல் சொரிந்து, அவளைச் சாந்தப் படுத்த முயன்றது அவள் அமர்ந்திருந்த மரம்.

சீதையின் தாபத்தையும் சோகத்தையும் தணித்த அந்த மரம் அசோகமரம். (சோகத்தைத் தணித்த மரம்) அந்த மரம் எப்படியாவது ராமன் வந்து சீதையை மீட்டுச் செல்ல வேண்டும் என்று பகவானைப் பிரார்த்தனை செய்தது. அந்தப் பிரார்த்தனை விரைவில் நிறைவேறியது.சீதை அசோகவனத்தில் சிறையிலிருந்து விடுபட்டபோது, அந்த மரங்கள் பிரியாவிடை கொடுத்தன. அப்பொழுது சீதை, அசோக மரங்களை நோக்கி, “என்ன வரம் வேண்டும்?” என கேட்டார்.

“அம்மா, பதிவிரதையான தங்களுக்கு வந்த இந்த துன்பம் வேறு எந்த பெண்மணிக்கும் வரக்கூடாது.’’ எனக்கேட்க, சீதாதேவியும் ``மருதாணிமரங்களான (அசோக மரங்களுக்கு மருதாணி மரம் என்று ஒரு பெயர் உண்டு) உங்களை யார் ஜலம் (தண்ணீர்) விட்டு வளர்க்கிறார்களோ, பூஜிக்கிறார்களோ, இலையை கைகளில் பூசிகொள்கிறார்களோ, இலைகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு எந்த துன்பமும் நேராது என்று வரமளித்தாள்.  பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதிக்கு துன்பத்தை போக்கி இன்பத்தை தரும் சக்தி உள்ளது. அன்று சுத்தமான இடங்களில் மருதாணி மரங்களைப் பயிர் செய்விக்கலாம். தண்ணீர் ஊற்றலாம். மூன்றுமுறை வலம் வரலாம்.

கணநாத நாயனார் குரு பூஜை 29.3.2023 - புதன்

அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் கணநாத நாயனார். அந்தணர் குலத்தில் பிறந்தவர். இவர் சீர்காழியில் ஆளுடைப் பிள்ளையார் அவதரித்த திருஞான சம்பந்தரிடம் எல்லையற்ற அன்பு கொண்டவர். சிவனடியார்களிடம் உருகிஉருகி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து தருவார். எப்போதும் வாயில் சிவநாமம் ஜெபித்துக் கொண்டு சிவ சிந்தனையோடு இருப்பார். சீர்காழி தோணியப்பரிடம் அகலாத அன்பு கொண்டவர். இந்த அன்பின் காரணமாக நல்லதோர் சிவ வாழ்வு வாழ்ந்து சிவஜோதியில் கலந்தார். அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் திருவாதிரை நாள், இன்று.

முனையடுவார் நாயனார் குருபூஜை 31.3.2023 - வெள்ளி

முனையடுவார் நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாளக் குலத்தில் தோன்றியவர். ‘‘அறை கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிவபெருமான் திருவடியில் பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். ‘‘போர் முனையில் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும்பேறாம்.’’

 

என்ற சிந்தை உடையவர். வாய்மை உடையவர்; போர்செய்து பொருள் ஈட்டி சிவனடியார்களுக்குச் செல்வமும் உணவும் தந்து உபசரிப்பவர். முனையடுவார் நாயனார் நெடுங்காலம் சிவனடியார்களுக்கான தொண்டு புரிந்திருந்து உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது உறையும் பெருவாழ்வு பெற்றார். முனையடுவார் நாயனார் குருபூஜை நாள் பங்குனி பூசம்.

Related Stories: