குதிரையில் மட்டும் பவனி வரும் குமரன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

‘‘சேயோன் மேய மைவரை உலகமும்’’ என்பது தொல்காப்பியர் வாக்கு. உலகெங்கும் பரந்து விரிந்து நிற்கும் சைவ சமயத்தின் முழு முதற்பொருளாகிய சிவபெருமானின் சேய் ஆதலால், திருமுருகப் பெருமானுக்கு சேயோன் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த வகையில் சிவ வழிபாடும் முருக வழிபாடும் தொன்று தொட்டு இருந்து வருவன என்பதை அறிய முடிகிறது. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியதால் சிவனும் முருகனும் வேறில்லை என்பதை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்த தலம் மருங்கூர். இருத்திருத்தலம் நாகர்கோயிலில் இருந்து சுமார் 10.கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த தல முருகனுக்கு ‘சிவமுருகன்’ என்று பெயர். புராதனமாக விளங்கும் இந்த திருத்தலத்திற்கென்று தலபுராணம் உள்ளது.

மகரிஷிகளில் ஒருவரான கௌதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரன் அவளிடம் முறை கேடாக நடந்து கொண்டான். இதை அறிந்த கௌதம முனிவர் வெகுண்டு, அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரனின் உடல் முழுவதும் கண்ணாகும் படி சபித்துவிட்டார்.முனிவரின் சாபத்தினால் பல துன்பங்களுக்கு ஆளான இந்திரன், சாப விமோசனம் பெற மருங்கூருக்கு அருகில் உள்ள சுசீந்திரம் தலத்திற்கு வந்து கடும் தவமிருந்து விமோசனம் பெற வேண்டினான். அவனுக்கு சிவபெருமான் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். அப்போது, பாவம் செய்த இந்திரனைச் சுமந்து வந்ததால், அவனது வாகனமான `உச்சை சிரவஸூ’ என்னும் குதிரையும் பாவம் செய்ததாகக் கருதியதால் அதுவும் சிவபெருமானிடம் பாவ விமோசனம் கேட்டது.

அப்போது சிவபெருமான் அக்குதிரையிடம், மருங்கூர் சுப்பிரமணியர் கோயிலைச் சுட்டிக் காட்டி அங்கு சென்று வழிபட்டால் முருகன் அருளால் உனக்கு பாவவிமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி இங்கு வந்த உச்சை சிரவஸூ, ஒரு குன்றின் மீது அமர்ந்து முருகனை வேண்டி தவமிருந்தது. முருகப் பெருமான் அதற்கு காட்சி தந்து பாவ விமோசனம் கொடுத்தருளினார். பிற்காலத்தில் இக்குன்றின் மீது சுப்பிரமணியருக்கு அழகானதொரு கோயில் எழுப்பப்பட்டது. உச்சை சிரவஸீ குதிரை வழிபட்ட தலம் என்பதால் ‘இக்கோயில் குதிரை வழிபட்ட தலம்’ என்ற சிறப்புப் பெற்றது.

அதனால் இத்தல முருகனுக்கு நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மயில் வாகனத்துக்குப் பதிலாக ‘குதிரை வாகனத்தில்’ மட்டும் பவனி வருகிறார். இத்திருக்கோயிலில் உள்ள கருவறையில் முருகன் மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். முருகனின் அற்புத சிலா வடிவம், திருவாசி மற்றும் மயிலுடன் ஒரே கல்லில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பாகும். அவருடன் வள்ளி தெய்வானையும் எழிற் கோலத்தில் காட்சி தருகின்றனர். இங்கொரு விசேஷம் அம்பிகையருடன் முருகனைத் தரிசிக்க முடியாது.

ஏதேனும் ஒரு பக்கமாக நின்று கொண்டு அம்பிகையையும், சுவாமியையும் தனித் தனியே தான் தரிசிக்க முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு சிறப்பு அம்சம், ஐப்பசி மாதத்தில் சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் காலையில் சிவப்பு நிற வஸ்திரம் அணிந்து நடராஜப் பெருமானாகவும், மதியத்தில் வெள்ளை நிற வஸ்திரம் அணிந்து பிரம்மாவாகவும், மாலையில் பச்சை நிற வஸ்திரம் அணிந்து விஷ்ணு சொரூபமாகவும் முருகப் பெருமான் காட்சியளிக்கும் அற்புதக் கோலத்தைக் காணக் கண் ஆயிரம் வேண்டும்.

பாவம் செய்த இந்திரனை, சுமந்ததால் பாவவிமோசனம் கேட்டு தன்னை வழிபட்ட உச்சை சிரஸூக்கு சிவபெருமானே பாவ விமோசனம் கொடுத்தருளியிருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல், மருங்கூர் முருகனை வழிபடும் படி அதை அனுப்பி வைத்தார். தன் அம்சமான முருகனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக சிவபெருமான் இவ்வாறு செய்ததாகச் சொல்வர்.எனவே, இத்திருக்கோயிலில் சிவபெருமானுடைய சிவாகமப்படியே அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்றொரு சிறப்பு அம்சம். ‘‘சோறூட்டும் வைபவ’’மாகும். பிறந்த குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்டும் வைபவம் இங்கு அதிகளவில் நடக்கிறது.

இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தெல்லாம் ஏராளமானோர் வந்து இச்சடங்கை நிகழ்த்தி வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் சுப்பிரமணியருக்கு புளி சாதம், வெண் சாதம், சர்க்கரைப் பொங்கல், உப்பு, புளி, மிளகாய் சேர்ந்த துவையல் என அறுசுவைகளும் சேர்ந்த உணவை சுவாமிக்குப் படைக்கின்றனர். அதையே குழந்தைக்கு ஊட்டி மகிழ்கின்றனர். விசேஷ நாட்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில் சிறு குன்றின் மீது அழகுற அமைக்கப்பட்டுள்ளது. ஆலய முகப்பு வாசலின் மேல் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சியளிக்கிறார்.

மருங்கு என்றால் நெருக்கம் என்று பொருள். தன்னை வணங்கும் பக்தர்களுக்கு மருங்கில் அதாவது நெருங்கி வந்து அருள்புரிபவர் என்பதால் ``மருங்கூர் முருகன்’’ என்றும் பெயர் பெற்றுள்ளார். இத்தலத்திற்கு ‘‘வாசிபுரம்’’ என்று மற்றொரு பெயரும் உண்டு. ‘வாசி’ என்பது இந்திரனின் வாகனமான குதிரை உச்சை சிரவஸூவைக் குறிப்பதாகும்.  இங்குள்ள ஒரே பிராகாரத்தில் கன்னி விநாயகர், சண்முகர், குலசேகரவிநாயகர், பீட வடிவில் காவல் தெய்வம் பூதத்தான் மற்றும் காசிலிங்கம் அனைவரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். இத்திருக்கோயில் எதிரில் முருக தீர்த்தம் என்ற தீர்த்தம் உள்ளது. உற்சவரான சண்முகர், கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் போது, ஒரே ஒரு நாள் மட்டும் புறப்படுவார் மற்ற நாட்களில் இவரை சந்நதிக்குள் மட்டுமே கண்டு தரிசிக்க முடியும்.

இத்திருக்கோயிலில் தைப்பூசம் திருவிழா பத்து நாட்கள், கந்த சஷ்டி திருவிழா பத்து நாட்கள், சித்திரையில் திருக்கல்யாணம் ஐந்து நாட்கள் என விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை மற்றும் பண்டிகை நாட்கள், தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில், மதியம் 12 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் காலை 6-10, மாலை 5-8 மணி வரை திறந்திருக்கும்.

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 13.கி.மீ., தொலைவில் மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. மருங்கூர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது. இத்திருக்கோயில் குன்றின் மீது அழகுற அமைந்திருப்பதால் படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்!

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

Related Stories: