இப்படிச் சொன்னால் இருவருக்கும் நல்லது

ஒருவர் ஜாதகம் பார்க்கப் போனார். அப்பொழுது மற்றொரு நண்பர் அவரிடம் சொன்னார். ‘‘இதோ பாருங்கள், நீங்கள் ஏதோ கஷ்ட காலத்தில் ஜாதகம் பார்க்கப் போகிறீர்கள். அவர் உங்களுக்குச் சாதகமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள். பாதகமாகச் சொன்னால் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள். பிறகு அதையே நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்” அவர் சொன்னது ஒரு விதத்தில் சரி. பலர் ஜாதகம் பார்த்த பிறகு இன்னும் குழம்பிப் போய் விடுகிறார்கள். “நமக்கு

விடிவுகாலமே இல்லையோ” என்று நினைக்கிறார்கள். இதில் ஒரே ஒரு சின்ன திருத்தம்.

ஜாதகம் பார்க்கப் போகிற உங்களுக்கு, பதில் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும், சாதாரணமாக ஏற்றுக் கொள்ளுங்கள். பதட்டப்பட வேண்டாம்.

உதாரணமாக, ஒருவருக்கு ஒரு வேலை கிடைக்கக்கூடிய காலம், தசா புத்திகள், கோள்சாரம் நன்றாக இருக்கிறது என்று சொன்னால், அவர் சற்று தீவிரமாக முயற்சி செய்தால் வேலை கிடைத்துவிடும் என்று பொருள்தானே தவிர, வீட்டில் வந்து வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்துவிட்டு செல்ல மாட்டார்கள்.

மிகமிக அதிர்ஷ்டமான சில நேரங்களில் நாம் எதிர்பாராமல் இப்படி நடப் பதுண்டு. ஆனால், அது விதிவிலக்கு. விதி அல்ல. அதேபோலவே ஒருவர் வியாபாரத்தை விருத்தி செய்ய இருக்கிறார். ஜாதகம் பார்க்கப் போகிறார்.

‘‘நேரம் சரியில்லை, கொஞ்சம் நிதானம் தேவை” என்று சொன்னால், மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அர்த்தம்தானே தவிர, இருக்கின்ற வியாபாரத்தை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று அர்த்தம் அல்ல. காரணம், அந்த நேரத்தில் தான் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து சில யோசனைகளை நமக்குச் சொல்லுவார். அப்பொழுது யோசித்துப் பார்க்க வேண்டும். “இத்தனை நாள் இல்லாமல் இவர் வந்து நமக்கு யோசனை சொல்லுகின்றாரே, என்ன காரணம்?” என்று யோசித்து, சற்று நிதானமாக விசாரித்தால், அவர் நம்மை எதிலாவது  ஒரு இக்கட்டில் இழுத்து விடக் கூடியவர் என்பது தெரியும்.

இந்த அளவுக்கு ஜாதக பலாபலன்களை நாம் எடுத்துக்கொண்டு நிதானமாக வாழ்ந்தால், ஜாதகம் நமக்கு நல்லபடியாக உதவும். இந்த மனப் பான்மை இல்லாவிட்டால், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுவதாக இருந்தால், நீங்கள் ஜாதகம் பார்ப்பதைவிட பார்க்காமல் இருப்பதுகூட ஒரு வகையில் நல்லது. இதை எதற்குச் சொல்லுகிறேன் என்று சொன்னால், சில பேர் அந்தப் பலன்களை 100% அப்படியே நம்பி செயல்பட ஆரம்பித்துவிடுகின்றார்கள். இவைகள் எல்லாம் ஒரு எச்சரிக்கை அல்லது வழிகாட்டுதல் (guidance) என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, 100% அப்படியே நடந்துவிடும் என்று நினைத்து குழப்பிக்கொண்டு செயல்படக் கூடாது.

இன்னும் சில பேர் சில விபரீதமான முடிவுகளுக்கும் போய்விடுகிறார்கள் என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம். வாழ்க்கைக்கு நல்ல முறையில் வழிகாட்டும் கலையை நாம் இழந்து விடக்கூடாது. அதே நேரத்தில், அந்த கலையை தவறாகப் புரிந்து கொண்டு நம் வாழ்க்கையையும் இழந்து விடக்கூடாது.

சமீபத்தில் என்னிடம் ஒரு ஜாதகம் வந்தது. திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

அவர்கள் சேருவார்களா? மாட்டார்களா? என்ன செய்ய வேண்டும்? நான் ஜாதக ஆலோசனை மட்டும் சொல்லவில்லை. கொஞ்சம் உளவியலையும் கலந்தே சொன்னேன்.

இதில் என்ன உளவியல் என்று நீங்கள் கேட்கலாம். ஜாதகத்தில் மட்டுமல்ல மருத்துவத்திலும் உளவியல் அவசியம். காரணம், சந்திரன்தான் மனதை இயக்குகின்றது. சந்திரன் மனதுக்குக் காரகன். விதிகெட்டால் மதிகெடும் என்பது உண்மைதான். ஆனால், சில நேரங்களில் மதியை சரி செய்தால் விதியும் நேராகும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கே உளவியல் என்பதும் ஜாதகத்தின் அங்கம்தான். அது சந்திரன் சம்பந்தப்பட்டது. விதியை வெல்வதற்கான சில வழிகள் சூட்சுமமாக உண்டு. நான் அவர்களிடம் சொன்னேன்; ‘‘அவர்கள் இருவரும் இணைவதற்கான சில சாத்திய கூறுகளும் ஜாதகத்தில் உள்ளது என்பதால் நீங்கள் முயற்சி செய்யுங்கள். பேசுங்கள். காலம் விசித்திரமானது. சில தவறான கண்ணோட்டங்களை காலம் மாற்றும்” என்று சொன்னேன்.  அப்பொழுது அவர்கள் சொன்னார்கள்; ‘‘இதுவரை பார்த்த ஜோதிடர்கள்

சேருவதற்கு வழியே இல்லை என்று சொன்னார்களே?”அப்போது நான் சொன்னேன்; ‘‘ஒரு நோயாளி பிழைக்கவே மாட்டார் என்று எந்த டாக்டரும் சொல்வது கிடையாது. அது அவருக்கு தெரிந்திருந்தாலும்கூட.

பத்து சதவீதம் பிழைப்பதற்கான வழி இருந்தாலும்கூட நல்ல மருத்துவம் செய்து பிழைக்க வைக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு பத்து சதவீத வாய்ப்புகள் இந்த ஜாதகத்தில் உள்ளது என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன்.  நாம் முழு மனதோடு இந்த பத்து சதவீத வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, நிதானமாக, சமாதானத்தில் ஈடுபடும் பொழுது, மீதி இருக்கக்கூடிய 90% எதிர்மறைகளும் மாறி இந்த 10 சதவீதத்தில் சேர்ந்து கொண்டு உங்களுக்கு வெற்றியைத் தரலாம்.”

‘‘வெற்றி தருமா?”‘‘தந்துவிடும். நம்புங்கள். நம்பிக்கை சந்திர சக்தியை தூண்டும். தெளிவு பிறக்கும்.”

மரணத்தின் எல்லை வரை சென்ற பல நோயாளிகள் கடுமையாகப் போராடி பிழைத்து வந்த கதை நமக்குத் தெரியும். ஜோதிடத்தில் வெற்றி கரமாக வாழக்கூடிய வாய்ப்புகள் எங்கேயாவது புதைந்திருந்தாலும், அதை பிடித்துக் கொண்டு மேலே வர வேண்டும் அதைத்தான் ஜோதிட சாஸ்திரம் சொல்ல வேண்டும். அந்த முயற்சி சில நேரங்களில் பலிக்காமல் போகலாம். மனித வாழ்க்கை முழுக்க நிச்சயமில்லாத ஒன்றுதான் (full of uncertainity). பலிக்காவிட்டால் அது இறைவன் திருவுள்ளம் என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும். மருத்துவர் முயற்சி பலிக்காவிட்டால் யாரும் மருத்துவரைக் குறை கூறுவது கிடையாது.

அப்படியானால் நாம் அதைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்து கொள்கிறோம் என்று பொருள். அதேதான் ஜோதிட சாஸ்திரத்திலும். நல்ல விஷயங்களைச்  சொல்லுகிறார்களா? உற்சாகமாக செயல்பட்டு அதை வெற்றிகரமாக மாற்ற முயலுங்கள். அது உங்கள் கையில் இருக்கிறது. கொஞ்சம் தீமையான விஷயங்களைச்  சொல்லுகின்றார்களா? அதை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டு, அதை வெற்றி கொள்ளவோ, சமாளிக்கவோ, கடந்து விடவோ பாருங்கள் ஜோதிடத்தின் அடிப்படையை ஓரளவாவது நீங்கள் புரிந்து கொண்டு அதனுடைய எல்லையைத் (limitations) தெரிந்துகொண்டால்தான் அதைச் சரியாக உங்களால் பயன்படுத்த முடியும்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: