வேல் வடிவில் அருளும் சிவபெருமான்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்லர். வேறு என்று எண்ணியதால்தான் எண்ணிலடங்கா வரம் பெற்றும் சம்ஹாரத்திற்கு உள்ளானான், சூரபத்மன்.சிவனும் முருகனும் ஒன்று என்பதைச் சொல்லும் முகமாகத்தான் முருகன் திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ‘ஹரஹர’ என்கின்ற சிவ நாமத்தை ஜபித்தபடி செல்கின்றனர்.

சிவன்மலை என்ற பெயர்கொண்ட திருத்தலத்தில் சிவபெருமான்தான் அருள் செய்கிறார் என்பதும், முருகனின் பெயரால் அமைந்த கந்தபுராணமானது முருகப்பெருமானுடன் சிவபெருமானுடைய சிறப்புக்களையும் பெரும்பாலும் சொல்லியிருக்கிறது என்பதும், அதே கந்தபுராணத்தில் சிவபெருமானே முருகனும் தானும் வேறு அல்ல; என்பதை, ‘‘ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்று நம் போல் பிரிவிலன்’’ என்று குறிப்பிடுகிறார் என்பதும் சிவனும் முருகனும் ஒன்றுதான் என்பதற்கான சான்றுகளாகும்.

அதன்படி கொங்குநாட்டில் சில தலங்களில் முருகப்பெருமானின் வேலாயுமே சிவபெருமானாக வணங்கப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் சிவபெருமானை லிங்க வடிவிலோ அல்லது விக்ரகமாகவோ வழிபடுவதுதான் வழக்கம். ஆனால், கொங்கு நாட்டில் இருபத்தோரு சிவாலயங்களில் மட்டும் சிவபெருமானுடைய ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களையும் குறிக்கும் வகையில் ஐந்து வேலாயுதங்களை சிவபெருமானாகப் பாவித்து வழிபடும் பழக்கம் இருந்துவருகின்றது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆடு, மாடுகளை மேய்க்கும் கந்தாயப்பன் என்ற பெரியவர் இறைவனும் இறைவியும் ஏகாந்தமாக இருப்பதை ஒரு பகுதியில் கண்டதாகவும் பின்பு, அங்கு அதன் நினைவாக ஐந்து வேலாயுதங்களை நிறுவி கோயில் அமைத்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. அத்தலம் கோவை அரசூருக்குப் பக்கத்திலுள்ள சூரமடையில் அமைந்துள்ளது. பின்னர், அந்த கந்தாயப்பன் என்பவரும் சில அடியார்களும் கொங்கு நாட்டில் இருபத்தோரு ஊர்களில் பரமசிவன் திருப்பெயரால் திருக்கோயில்களை அமைத்துள்ளனர். அந்தத் திருக்கோயில்கள் அனைத்தும் ‘வேல்கோட்டம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

அந்த ஊர்கள் என்னென்ன?

1. சூரமடை (அரசூர்- அவினாசி சாலையில் அமைந்துள்ளது)

2. பூரண்டாம்பாளையம் (செஞ்சேரி பிரிவிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது)

3. கவுண்டம்பாளையம் (திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது)

4. உப்பிலிப்பாளையம் (திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையிலுள்ள அருள்புரத்திற்கு அருகில் அமைந்துள்ளது)

5. நஞ்சே கவுண்டன்புதூர் (கோவை சின்னவேடம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது)

6. காசிக்கவுண்டன்புதூர் (சூலூருக்குத் தெற்கில் அமைந்துள்ளது)

7. காங்கேயம்பாளையம் (சூலூருக்குக் கிழக்கில் அமைந்துள்ளது)

8. சிவியார் பாளையம் (காங்கயத்திலிருந்து சிவன்மலை செல்லும் வழியில் அமைந்துள்ளது)

9. கண்ணம்பாளையம் (கோவையிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது)

10. பள்ளக்காட்டுப் புதூர் (திருப்பூரிலிருந்து காங்கயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது)

11. பூரண்டாம்பாளையம் (கோவை - அவினாசி சாலையிலுள்ள அரசூருக்கு அருகில்)

12. பச்சாபாளையம் (அரசூரிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது)

13. காளப்பட்டி (சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது)

14. வெள்ளானைப்பட்டி ( சரவணம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது)

15. பல்லவராயன் பாளையம் (திருப்பூர் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது)

16. பரமன் ஊற்று (திருப்பூர் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ளது)

17. கல்பிளந்தான் கரை (நெகமம் அருகில் அமைந்துள்ளது)

18. நவநாரி குமாரபாளையம் (பல்லடம் - உடுமலை சாலையில் அமைந்துள்ளது)

19. கருமாரம்பாளையம் (திருப்பூர்- பெருந்துறை சாலையில் அமைந்துள்ளது)

20. வேலம்பாளையம் (பல்லடத்திற்கு மேற்கே அமைந்துள்ளது)

21. சுண்டக்காம்பாளையம் (அவினாசி - மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது)

ஆழ்ந்து அகன்று நுண்ணியதாய் ஞானத்தின் குறியீடாக விளங்கும் வேலாயுதங்களே இத்தலங்களில் கருவறைக்குள் இருந்து சிவபெருமானாக அருள்பாலிக்கின்றன. இந்தச் சிவாலயங்களில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்னவென்றால் இங்கு வழங்கப்படும் திருநீற்றுப் பிரசாதம்தான்.அந்தப் பிரசாதம் வேறெதுவுமல்ல; இந்தத் திருக்கோவில் மடப்பள்ளியின் அடுப்புச் சாம்பல்தான். இந்த மடப்பள்ளிச் சாம்பல் நல்ல மருத்துவ ஆற்றல் உடையதாகக் காணப்படுகிறது.

இப்பகுதிவாழ் மக்களுக்கு ஏதேனும் பாம்பு தீண்டினாலோ அல்லது வேறு விதமான விஷக் கடிகள் ஏற்பட்டாலோ இந்த பரமசிவன் ஆலயத்திற்கு வந்து இங்கு வழங்கப்படும் மடப்பள்ளி சாம்பலையும் அபிஷேகத் தீர்த்தத்தையும் உட்கொண்டு உடல் நலம் பெறுகின்றனர். மருத்துவமனைக்கு செல்வோரும்கூட இந்தத் திருநீற்றை எடுத்துக் கொள்கின்றனர். இது குறித்து இங்கு வழிபாடு செய்யும் பூசாரியாரைக் கேட்டபோது, ‘‘பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகள் இத்தலத்து விபூதியால் குணமடையும்.

மேலும், விஷக்கடிகளால் ஏற்பட்ட ஆறாத புண்களும் ஆறும். 40 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு தீண்டி புண் ஆறாமல் கால் எலும்பு தெரியும் வகையில் ஒருவர் அண்மையில் வந்தார். பரமனின் திருநீற்றை வழங்கினோம். பதினைந்தே நாட்களில் பூரணகுணம் பெற்று யாருடைய துணையுமின்றி தானாகவே நடந்து வந்தார். இது அண்மையில் நடந்த அற்புதம்.

தற்காலத்தில் பாம்பு கடித்தால் மருத்துவ மனைக்குச் செல்கிறார்கள். அப்படிச் செல்வோர்கள் இந்தத் திருநீற்றையும் சேர்த்து ஒரு மருந்தாக எடுத்துக்கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டார்.

இத்தலங்களில் வழிபாடு செய்யும் அர்ச்சகர்கள் கோயிலைத் தோற்றுவித்த கந்தாயப்பன் உள்ளிட்ட அடியார்களின் வழித்தோன்றல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். முத்தமிழ்க் கடவுள் முருகனையும் முக்கட் பரமனையும் ஒன்று என்பதைக் காட்டும் இந்த இருபத்தோரு தலங்களில் ஒன்றையேனும் வழிபட்டு மாறிலா மகிழ்ச்சி கொள்வோம்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Related Stories: