ஜோதிட சாஸ்திரத்தை எப்படி எடுத்துக்கொள்வது?

எந்த ஒரு விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டால்தான் அந்த விஷயத்தை நாம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்துகொள்ள முடியும். நாம் அந்த விஷயத்தில் கரைகண்டவராக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால், அடிப்படையில் சில விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும்.  உதாரணமாக, ஒரு கடையில் பொருள் வாங்குகின்றோம் என்று சொன்னால், நாம் பொருளைத் தயாரிப்பவர்களாகவும், விற்பவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அந்தப் பொருளின் செயல்பாட்டையும் தரத்தையும் ஓரளவாவது நாம் தெரிந்து கொண்டால்தான், சரியான பொருள்களை, சரியான இடத்தில், சரியான விலையில் வாங்க முடியும்.

சாத்திரங்களைக் குறித்த விஷயங்களும் அப்படித்தான். ஒரு திருமணம் நடக்கிறது. அந்தத் திருமணத்தில் பல சடங்குகள் செய்யப்படுகின்றன. மந்திரங்கள் ஓதப்படுகின்றன. நாம் மந்திரங்களையோ சடங்குகளையோ முழுமையாக கரைத்து குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இந்தச் சடங்குகள் ஏன் நடத்தப்படுகின்றன? இந்த மந்திரத்தில் என்ன இருக்கிறது? என்பதை ஓரளவுக்குத் தெரிந்துகொண்டால், அதனுடைய பயன்பாட்டை நாம் தெரிந்துகொண்டு, முழு மனதோடு ஈடுபட்டுச் செய்ய முடியும். அதனால் நமக்கு நற்பலன்கள் விளையும்.

ஜோதிட சாஸ்திரமும் அப்படித்தான்.

வாஸ்து சாஸ்திரமும் அப்படித்தான்.

மருத்துவச் சாஸ்திரமும் அப்படித்தான்.

மற்ற சாஸ்திரங்களும் அப்படித்தான்.

இப்படி இந்த சாஸ்திர அடிப்படையை நாம் புரிந்துகொள்ளாவிட்டால், பல நேரத்தில் தவறான முடிவுக்கு வந்து விடுவோம். அதன் அடிப்படையில்தான், சென்ற இதழில் ஆயுளைப் பற்றி (மிக முக்கியமான, சில அசாதாரணமான நேரங்கள் தவிர) அதிகம் கேட்காதீர்கள் என்று சொல்லி இருந்தேன். ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்லுகின்றேன். 46 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது இது.  ஒரு உறவினர் வீட்டில் ஒரு நண்பர் ஜோதிடம் பார்க்க வந்திருந்தார்.

அப்பொழுதெல்லாம் வீட்டிற்கு வந்து ஜோதிடம் பார்ப்பார்கள். காலையில் வந்துவிட்டால், வீட்டில் உள்ள அத்தனை பேரின் ஜாதகங்களையும் ஒன்றுக்கு பின் ஒன்றாகக் காட்டுவார்கள். ஜோதிடருக்கு அங்கேயே காபி, டிபன் சாப்பாடு நடக்கும். சமயத்தில் ஜோதிடர் வந்ததைத் தெரிந்துகொண்டு பக்கத்து வீடு, எதிர்வீட்டுக்காரர்கள்கூட வந்து காட்டுவார்கள். எல்லாம் முடித்த பிறகு போகும்போது அவரவர்கள் சக்திக்கேற்ற தட்சணையைத் தருவார்கள்.

இப்படித்தான் அந்த ஜோதிடர் வந்தார். முதலில் ஒன்று இரண்டு ஜாதங்களை பார்த்தார். கடைசியில் அவர்களுடைய சிறிய பையனின் ஜாதகத்தைப் பார்த்தார். பார்த்துவிட்டு ஆயுள் கண்டம் இருக்கிறது, ஆயுள் தோஷம் இருக்கிறது என்று பெரிய குண்டை தூக்கிப்போட்டார்.  சுற்றிலும் இருக்கக்கூடிய பெண்மணிகள் பேயறைந்தது போல் ஆகிவிட்டனர். ஏன் அப்படி சொல்கிறார்? என்பதை யாரும் கேட்கவில்லை. அவர் சொன்னதில் ஒன்று இரண்டு நடந்து இருப்பதினால் இதுவும் நடக்கும் என்பது மனத்தளவில் அவர்களுக்கு உறுதியாகிவிட்டது. ஜோதிடர் காசு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். பையனின் அப்பாவுக்கு இது தெரியாது.

ஆனால், அம்மாவும் சகோதரிகளும் மிகவும் நொந்து போய்விட்டனர். பல நாட்கள் நடைபிணமாக மாறி கஷ்டப்பட்டனர். அந்த குடும்பத்தின் சந்தோஷமே போய்விட்டது. இதைத் தெரிந்துகொண்ட பெரியவர் ஒருவர் அந்த அம்மாவுக்கு, அப்பொழுது சொன்ன ஆறுதல் என்னுடைய நினைவில் இன்றும் இருக்கிறது.

‘‘இப்பொழுது மெனக்கிட்டு பையனின் ஆயுளைத் தெரிந்துகொள்வதில் என்ன உங்களுக்கு வந்தது? சரி. ஒன்று நடக்கும் என்று சொன்னால், நீங்களும் நானும் மாற்றிவிட முடியுமா என்ன? எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதானே.

அதை நினைத்து ஏன் துக்கப்பட வேண்டும்? சரி.. சரி. கோயிலுக்குப் போய் ஒரு விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வாருங்கள். ஒரு தோஷமும் வராது என்று சொல்லி அனுப்பிவைத்தார்.  ஒரு தோஷமும் வரவில்லை. அந்தப் பையன் சகல வசதிகளோடு இன்றைக்கும் சௌக்கியமாக இருக்கிறார். அதற்கு பிறகுதான் இந்த ஜோதிடத்தில் என்னதான் இருக்கிறது என்பதை நானே கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதில் பலிப்பதற்கான சதவீதம் எத்தனை சதவீதம்? பலிக்காமல் இருப்பதற்கான சதவீதம் எத்தனை சதவீதம் என்பதையும் ஓரளவு கவனிக்க முடிந்தது.

என்னுடைய இன்னொரு நண்பர் ஒருவர். சிறந்த ஜோதிடர் என்பதைவிட நல்ல ஜோதிடர். அவர் கோயம்புத்தூரில் வாசியோகம் பயின்ற மகரிஷியிடம் பயிற்சி பெற்றவர். ஜோதிட சிந்தாமணியில் அவருடைய கட்டுரைகள் வரும். அவர் ஜோதிடம் சொல்வதைப் பற்றி ஒரு குறிப்பு கொடுப்பார். ‘‘இதோ பாருங்கள். கணக்கு பலமாக இருந்தால் மட்டும் ஜோதிடம் பலித்து விடாது. சொல்பவன் வாக்கும் பலமாக இருக்க வேண்டும். அந்த வாக்கும் எல்லா நேரத்திலும் பலமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. எனவேதான் நான் சில தீமையான விஷயங்கள் நடப்பதாக மனதில்படுகின்றபொழுது, அதை பக்குவமாக, ‘‘இப்படிகண்டங்கள் இருக்கிறது, காலம் கொஞ்சம் சரியாக இல்லை.

வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மருந்து மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுங்கள். இந்தக் காலம் போகட்டும். அதற்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும். பொறுமையும், நம்பிக்கையும் அவசியம் என்று ஆறுதலாகச் சொல்வேன்.  என்னதான் உண்மை என்று நம் மனத்துக்கு பட்டாலும், அந்தத் தீமை நடந்தே தீரும் என்று உறுதியாக சொல்லக்கூடாது. உறுதியாகச் சொல்லாவிட்டால் அவர் சரியான ஜோதிடர் இல்லை என்று சொன்னாலும்கூட, நம்முடைய வாக்கு ஜெயிப்பது இங்கே முக்கியமல்ல.

ஜோதிடம் பார்க்க வந்தவனுடைய வாழ்க்கை ஜெயிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த ஜோதிடம். சாஸ்திரத்தில் ஏதாவது ஒருமுறை இருந்தால் அதை எடுத்துச் சொல்லி அவரை வெற்றிகரமாக மாற்றுவதற்கு உதவுங்கள்” என்பார். நம் சிற்றறிவைவிட, பிரபஞ்சம் பெரியது. அதன் நுட்பத்தில் சிறு துளி தெரிந்து கொண்டுதான் நாம் சொல்கிறோம். செயல்படுத்துகிறோம். பிரபஞ்சம் எல்லா நேரத்திலும் உண்மையை உள்ளபடி உரைத்துவிடாது.

படைக்கப்பட்ட கிரகங்களைவிட படைத்த இறைவன் பெரியவன். விதியைத் தெரிந்துகொண்டாலும் மதியை நம்புங்கள். ஆரோக்கியமான எண்ணங்களுடனும், நல்ல சிந்தனைகளுடனும், செயல் படுங்கள். பல நேரங்களில் விதி உங்களிடம் தோற்பதில் சந்தோஷமடையும். இந்த அடிப்படையையெல்லாம் ஜோதிடம் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: