கல்வியும் வாஸ்து வழிகளும்..!

ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும் மிகப்பெரிய ஆசை, தன் பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்கி, நல்ல பேரும் புகழும் பெற்று வாழ வேண்டும் என்பதுதான். அந்த வகையில் பெற்றோரான உங்களின் கனவு நிறைவேற அடித்தளமாக இருப்பது அவர்களின் கல்வியறிவு. அவர்களின் கல்வித்திறன் மேம்பட குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்க்கவே பெற்றோர் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நல்ல கல்வி, அதற்கு தேவையான அனைத்து வசதிகள், புத்தகங்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் அனைத்தும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் என்னதான் கல்வி குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்தினாலும், பிள்ளைகள் படிப்பில் விருப்பம் ஏற்பட்டு அதில் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர்களின் கனவு நிறைவேறும்.

பிள்ளைகள் படிப்பில் விருப்பமில்லாமல் இருந்தால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான். இந்த பயம் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழும் என்பதில் அச்சமில்லை. அந்த பயத்தைப் போக்கவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை எந்நேரமும் படி படி என்று கடிந்து கொள்வார்கள். அதுமட்டுமில்லாமல், பள்ளிக்கூடம் முடிந்து, டியூஷன் அதன் பிறகு மீண்டும் படிப்பு என்று அவர்களை என்றுமே ஒரு டென்ஷனில் வைத்திருக்கிறார்கள்.

படிப்பைத் தவிர எந்த வித கேளிக்கைகளுக்கும் இடம் இல்லை என்று தடை விதிப்பதினால் அவர்களின் எண்ணம் நிறைவேறும் என்று எண்ணிடக் கூடாது. இதற்கான தீர்வு இதுவல்ல என்று பெற்றோர்கள் புரிந்து கொள்வது அவசியம். பிள்ளைகளை படிப்பில் ஆர்வம் காட்ட வைக்க பெற்றோர்கள் என்னதான் செய்ய  வேண்டும்... அதற்கான தீர்வு தான் என்ன? என்று பெற்றோர்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அது அவர்களை படிபடி என்று சொல்வதை தவிர்த்து, அவர்களின் மனதினை படிப்பை பற்றி சிந்திக்க வைப்பதுதான்.

அதற்கு சில வாஸ்து குறிப்புகள் உதவுவதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பொதுவாகவே நாம் வீடு கட்டும் போதோ அல்லது நிலத்தினை வாங்கும் போதோ, வியாபாரம் செய்ய தான் வாஸ்துக்களை பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.  அது போன்று தான் பிள்ளைகளின் படிப்பிலும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து குறிப்பினால் பிள்ளையை எப்படி படிக்க வைக்க முடியும்? என்ற சந்தேகம் ஏற்படும். இதற்கு நீங்கள் அதிகம் மெனக்கெடல் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. முறையான வாஸ்து வழிகளை பின்பற்றி பிள்ளையின் அறை மற்றும் அவர்களின் பழக்கத்தை மாற்றினாலே போதும்.

படிக்காமல் போவதற்கான காரணம் என்று பார்த்தால் படிப்பில் அவர்கள் கவனம் செலுத்தாமல் வேறு விஷயங்கள் பற்றி சிந்திப்பது. இது குழந்தையின் படிப்பில் மிகப்பெரிய தடையினை ஏற்படுத்தும். மற்றொரு முக்கிய காரணம் படித்ததை குழந்தைகள் சீக்கிரம் மறந்துவிடுவது. முக்கியமாக பரீட்சை அறையில் கேள்வித்தாளை பார்த்து ஏற்படும் படபடப்பு காரணமாக அவர்களின் மூளை செயலற்று போனது போலாகிவிடும். இதனால் படித்ததை அனைத்தும் மறந்துவிடுவார்கள். குழந்தை களின் இந்த குறைபாடுகளை போக்க, வாஸ்து குறிப்புகள் மற்றும் சாஸ்திரங்கள் மிக எளிய தீர்வுகளை அளிக்கின்றன.

*படிக்கும் அறை வடக்கு அல்லது மேற்கு பக்கம் நோக்கி இருக்க வேண்டும்.

*படிக்கும் போது கிழக்கு அல்லது வடக்கு புறம் பார்த்து அமர்ந்து படிக்க வேண்டும்.

*அறையில் நீலம் அல்லது பச்சை நிறங்களை பெயின்ட் அடிப்பது.

*குழந்தையின் கழிவு அறை கதவு வட கிழக்கு திசையை நோக்கியதாக இருக்க வேண்டும்.

*பிள்ளையின் அறையிலுள்ள கண்ணாடிகள் இரவில் மறைக்கப்படுதல் அவசியம்.

*படிக்கும் மேஜை சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. திறந்த வெளியாக இருக்குமாறு அமைத்து அதன் முன்னதாக குழந்தைக்கு பிடித்தமான விஷயம் மற்றும் அவர்களின் ஆர்வத்தினை தூண்டக்

கூடிய பொருட்களை வைக்க வேண்டும்.

*பிள்ளை அமர்ந்து படிக்கும் இடத்திற்கு உடனடி பின்னணியில் கதவு இருத்தல் கூடாது.

*தன்னம்பிக்கை ஆர்வத்தை தூண்டக்கூடிய படங்கள், வாக்கியங்கள் கொண்ட போஸ்டர்களை அவர்களின் அறையில் ஆங்காங்கே ஒட்டி வைக்கலாம்.

*மேஜை சுத்தமாக இருக்க வேண்டும்.

*புத்தகங்களை மேஜை முழுக்க குவித்து வைத்திருக்கக்கூடாது.

*கண்ணை உறுத்தாத வெளிச்சம் தரும் விளக்குகளை அறையில் அமைக்க வேண்டும்.

*பிள்ளைகளின் எந்தவொரு பொருளையும் அவர்கள் அனுமதி இல்லாமல் தொட வேண்டாம்.

*அவர்களின் புத்தகங்களை அடுக்குவது போன்ற விஷயங்களையும் கூட பிள்ளைகளின் அனுமதி பெற்ற பின் செய்வது சிறந்தது.

*படிப்பை விருத்தியடைய செய்யும் மந்திரங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

*கழுகின் சிலையை தென்மேற்கு திசையில், உங்களது வீட்டில் வைப்பது குழந்தைகளின் வளர்ச்சிக்கும், கல்வியில் கவனத்தை அதிகரிக்கவும் உதவும்.

தொகுப்பு: பிரியா மோகன்

Related Stories: