கந்தனின் அறுபது திருக்கோலங்கள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

தமிழகத்திலுள்ள முருகப்பெருமான் ஆலயங்களிலேயே பேரழகுடைய ஆலயம் தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்தில் உள்ள கந்தகோட்டமேயாகும். இராஜராஜேச்சரம் சோழர் காலத்தியது என்றாலும் அதன் விமானத்தின் அருகிலேயே செவ்வப்ப நாயக்கர் காலத்தில் எடுக்கப்பெற்றது இவ்வாலயமாகும். இதனை அதிரவீசி ஆச்சாரி என்பவர் வீரைய நாயக்கர் மேற்பார்வையில் ரௌத்திரி வருடம் கட்டுவித்தார்.

அவ்வாண்டானது கி.பி. 1560-ஐக் குறிப்பதாகும். கருவறை இடைநாழி அர்த்த மண்டபம், முகமண்டபம் ஆகியவற்றுடன் திகழும் இவ்வாலயம் உபபீடம், சௌந்தர்ய அதிஷ்ட்டானம், பித்தி பிரஸ்தரம், மூன்று தளங்களையுடைய விமானம், சதுரகிரீவம், சதுரசிகரம், கலசம் ஆகிய அங்கங்களுடன் கற்றளியாக எடுக்கப் பெற்றுள்ளது. கோயில் முழுவதும் மிக நுண்ணிய கலை வேலைப்பாடுகளைப் பெற்று ஒரு பொற்கொல்லர் செய்த அழகிய ஆபரணம்போல் தோற்றமளிக்கின்றது.

முகமண்டபம் ஒரு தேர் போன்று சக்கரங்களுடன் திகழ்கின்றது. இதன் இருபுறமும் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. குதிரையைக் கட்டியுள்ள கயிறுகூட கல்லில் தத்ரூபமாக வடிக்கப்பெற்றுள்ளது. தென்புறமும் வடபுறமும் அமைந்த படிக்கட்டுக்களை யானைகள் பக்கவாட்டில் அலங்கரிக்கின்றன. அந்த போர் யானைகளோ வீரர்களைத் தன் துதிக்கையால் பிடித்துச் சுழற்றுகின்றது. மண்டபத்து மேற்கூரை சட்டக் கோர்வைகளுடன் கொடுங்கை அலங்காரம் பெற்றுத் திகழ்கின்றது. அவற்றைப் பார்க்கும்போது அவை கருங்கல்லால் ஆனவை என்ற உணர்வு நமக்கு ஏற்படாது. மரத்தாலும் தகடுகளாலும் உருவாக்கப்பெற்ற மண்டபமாகவே தோன்றும்.

விமானத்தை ஐந்து கோஷ்டங்கள் அலங்கரித்து நிற்கின்றன. அவற்றில் கணபதி, மூன்று வகையான முருகன், துர்க்கை ஆகிய திருமேனிகள் அலங்கரித்து நிற்கின்றன. கருப்பு வண்ணக் கல்லில் உலோகத்தில் வடிக்கப்பெற்றது போன்று இத்திருவுருவங்கள் அமைந்துள்ளன.கருவறை வாயிலை இரண்டு துவாரபாலகர் சிற்பங்கள் அலங்கரித்து நிற்கின்றன. அவையும் உலோகத் திருவடிகள் போன்றே வழுவழுப்பான கருப்பு வண்ணக் கல்லில் வடிக்கப்பெற்றவையாகும். முன்கரங்களில் வாளும் கேடயமும் ஏந்திய நிலையில் ஒரு பின்கரம் சுட்டுவிரல் காட்ட ஒரு கரம் விஸ்மய முத்திரை காட்டுகின்றது. ஒரு காலைத் தரையில் ஊன்றி ஒரு காலை சிம்மத்தின் முதுகின்மீது இரு துவாரபாலகர்களும் வைத்துள்ளனர். இவர்கள் முறையே சக்திதேவர், வஜ்ரதேவர் என்பதைக் காட்ட மகுடத்தில் முறையே சக்தியும் வஜ்ரமும் உள்ளன.

சக்தி தேவரும் வஜ்ர தேவரும் வாயிற் காவலர்களாக விளங்க, கருவறையில் முருகப் பெருமான் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில்மீது அமர்ந்தவராகக் காணப்பெறுகின்றார். அவர் திருக்கரங்களில் சக்தி, வஜ்ரம், தண்டம், வாள், கேடயம், வில், அம்பு, பாசம், அங்குசம், சேவல், சூலம் ஆகியவை உள்ளன. ஒரு கரம் அபயம் காட்ட ஒரு கரம் வரத முத்திரை காட்டுகின்றது. திருவுருவத்தின் பின்புறம் திருவாசி உள்ளது. மயில் தன் அலகால் பாம்பினைக் கௌவியுள்ளது. பெருமானுக்கு ஒருபுறம் வள்ளியும், மறுபுறம் தேவயானையும் நின்ற கோலத்தில் மலர்களை ஏந்தியுள்ளனர். திரிபங்க நிலையில் அவர்கள் நிற்பதோ பேரழகுக் காட்சியாகும்.

முன் மண்டபத்துத் தூண்களில் மிக அழகிய கொடிக்கருக்கு வேலைப்பாடுகள் காணப்பெறுகின்றன. ஒரு தூணில் காளிங்க நர்த்தனன் ஆகிய கண்ணன் நடராசர் திருவடிவம் போன்றே ஆடற்கோலம் காட்டி நிற்கின்றார். வெளிப்புறம் சுவர்களில் பாகவதக் கதையின் சில காட்சிகளும், பிற புராணக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. உரலில் கட்டப்பெற்ற கண்ணன் மரங்களை இடித்துச் சாய்ப்பது, வெண்ணெய் திருடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒருபுறம் வள்ளி தினைப்புனம் காப்பது, அங்கு கிழவராக முருகப்பெருமான் வருவது, யானை துரத்த வள்ளி கிழவரைக் கட்டிப் பிடிப்பது போன்ற வள்ளி திருமணம் குறித்த காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாகத் திகழ்கின்றன. ஒருபுறம் மார்க்கண்டேயன் மலர் பறித்துச் செல்லுதல், அவனை இயமன் பாசக்கயிற்றுடன் விரட்டுவது, சிவலிங்கத்தை அவன் தழுவுவது, கடைசியில் காலனை சிவன் காலால் உருட்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பேரழகு உடைய இவ்வாலயத்து பிரஸ் தரம் முழுதும் அழகிய கர்ணகூடுகளால் அணி செய்யப்பெற்றுள்ளன. இவ்வாறாகத் திகழும் கூடுகளின் மத்தியில் ஒரு அடி உயரமே உடைய முருகனின் திருக்கோலச் சிற்பங்கள் உள்ளன. இங்கு முருகப் பெருமானின் ஐம்பத்து இரண்டு வடிவங்கள் அவ்வாறு உள்ளன. இது வேறு எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.

இரு கரங்களுடன் நின்ற, அமர்ந்த கோல குழந்தை முருகன், நான்கு கரங்களுடன் நின்ற கோலக்காட்சிகள், வில்லேந்திய முருகன், ஆண்டிக்கோல முருகன், மயில் மீது கால் வைத்த நிலையில் நிற்கும் முருகன், யானைமீது அமர்ந்த கோல முருகன், சேவற்கோழி வாகனமாகவுள்ள முருகன், சிம்மத்தின்மீது அமர்ந்த முருகன், நரவாகனத்தில் அமர்ந்த முருகன், இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பதினாறு ஆகிய கரங்களுடன் திகழ்பவர். காட்டுப் பன்றியை வாகனமாக உடையவர். கூத்தாடுகின்ற முருகப்பெருமான் எனப் பல்வேறு கோலங்களில் ஐம்பத்திரண்டு வகையான திருவடிவங்களை இங்கு நாம் காணலாம். இக்கோயில் முழுவதும் இவ்வாறு திகழும் திருவடிவங்களை நாம் நோக்கும்போது அவை அறுபதுக்கும் மேற்பட்டே திகழ்கின்றன.

இவ்வாலயம் எடுக்கப்பெறுவதற்கு முன்பு தஞ்சை பெரியகோயிலுக்கு வந்த அருணகிரியார் உள்ளே கந்த கோட்டம் இல்லாததால் வெளியில் உள்ள இராஜராஜன் வாயில் எனும் கோபுரத்தில் இடம்பெற்றுள்ள முருகனின் கோலக் காட்சியைக் கண்டு, “தஞ்சை இராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே” எனப் பாடிச் சென்றுள்ளார். அக்காட்சி வள்ளி திருமணத்தை விவரிப்பதாகும். அது சோழர்காலச் சிற்பம். அதனைக் கண்ட அதிரவீசி ஆச்சாரி, தான் படைத்த புதிய முருகன் ஆலயத்துச் சுவரில் வள்ளி திருமணக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து அற்புதமான படைப்பை விட்டுச் சென்றுள்ளார்.கந்தவேளின் பல்வேறு கோலக் காட்சிகளைக் கண்டு தரிசிக்க விரும்புபவர்கள் தஞ்சை பெரிய கோயிலின் கந்தகோட்டத்துக்கு வாருங்கள்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: