இந்த வார விசேஷங்கள்

இதமான வாழ்வருளும் ரத சப்தமி பூஜை 28.1.2023 - சனி

நம்முடைய வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதில் சப்தமி என்கிற திதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அது இந்த மாதத்தில் 28-ஆம் தேதி வருகின்றது. அந்த நாளுக்கு என்ன ஏற்றம்? அந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி அந்த நாளில் இந்த காரியத்தை செய்தால் நமக்கு என்ன நன்மை ஏற்படும்? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்த தொகுப்பு.

நவகிரகங்களில் சூரியன்தான் தலைமை கிரகம் என்று சொல்லுவார்கள். சூரிய வழிபாடு தொன்மையான வழிபாடு. அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் அருள் மீது ஓதப்படும் மந்திரம் ஆகும். சூரிய வழிபாடு ஆதிகால வழிபாடாகத் தோன்றியது. பழமையான வேதமான ரிக்வேதத்தில், சூரிய தேவன் மனைவியுடன் தேரில் அமர்ந்திருந்ததாக குறிப்புகள் உள்ளது. மற்ற எல்லா கிரகங்களுக்கும் ஒளி கொடுக்கக்கூடியது சூரியன். அது நட்சத்திரம்தான் என்றாலும், நம்முடைய இந்து ஜோதிட மரபில் அதனை ஒரு கிரகமாகவே கருதுகிறார்கள்.

சூரியன் இல்லாவிட்டால் இந்த பூமிக்கு ஒளி இல்லை. உயிர் இல்லை. வாழ்க்கை இல்லை. உயிர்களுக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் சூரிய ஒளியே முக்கியம். அந்த சூரியனுடைய ஜெயந்தி நாள்தான் 28-ஆம் தேதி வருகின்ற ரதசப்தமி. அன்றைக்கு விடியற்காலை 5.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள் நாம் நீராட வேண்டும். அப்படி நீராடுவதற்கு முன் எருக்க இலைகள் - இதனை வடமொழியில் `அர்க்க பத்ரம்’ என்று சொல்லுவார்கள். அந்த இலைகளில் ஏழு இலைகள் எடுத்து தலையில் வைத்துக்கொண்டு - பெண்களாக இருந்தால் கொஞ்சம் மஞ்சளை அந்த இலை மேல் வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால் மங்களகரமான அட்சதையை வைத்துக்கொள்ளவேண்டும்.

தலையில் ஏழு இலைகளை வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கி நின்று சூரியனை தியானம் செய்து, ஆற்றிலோ குளத்திலோ அல்லது கிணற்றடியிலோ அல்லது வேறு வழி இல்லாவிட்டால் நம்முடைய குளியல் அறையிலோ ஏழு முறை முங்கிக் குளிக்க வேண்டும். அல்லது ஏழு முறை தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.ஒவ்வொரு முறை குளத்தில் மூழ்கும் போதும் அல்லது தலையில் தண்ணீரை ஊற்றும் போதும், ``ஓம் சூர்யாய நமஹ’’ அல்லது தமிழில் ``ஓம் சூரிய தேவா போற்றி’’ என்று சொல்லி நீராட வேண்டும். இதன் மூலமாக நாம் செய்த வினைகளும், தெரியாமல் செய்த பாவங்களும் தீரும். நம்முடைய குடும்பத்தில் தடைப்பட்ட மங்களகரமான காரியங்கள் நிறைவேறும்.

மகாபாரதத்தில், பீஷ்மர் கடைசி காலத்தில் அம்பு படுக்கையில் 58 நாள்கள் துன்பத்தில் தவித்தபொழுது, வேதவியாசர் அவருடைய உடலின் மீது இந்த ஏழு எருக்கம் இலைகளை அட்சதைகளையும், சப்தமி நாளன்று போட்டு சூரியனை பிரார்த்திக்க சொல்ல, பீஷ்மரின் துன்பத்தை சூரிய பகவான் நீக்கினார் என்பது வரலாறு. அதுமட்டுமின்றி இதற்கு அடுத்த நாள் பீஷ்மரை நினைத்து ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் தர்ப்பணம் செய்தால் பித்ரு சாபங்கள் நீங்கும். நோய் நொடிகள் அகலும்.

 

கிரகதோஷங்கள் விலகும். காலையில் நீராடியவுடன் வீட்டின் வெளியிலோ அல்லது முற்றத்திலோ ஒரு தேர் போல கோலம் போட்டு நடுவில் அகல் விளக்கு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பால் பழமோ அல்லது சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த சர்க்கரைப் பொங்கலோ வைத்து படைக்க வேண்டும். குத்து விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, சூரியனை நோக்கி கை குவித்து இந்த பாடலை பாடுங்கள்.

 

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்

கனை இருள் அகன்றது காலையம் பொழுதாய்

மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

இதற்குப் பிறகு கையில் கொஞ்சம் புஷ்பங்களை வைத்துக்கொண்டு, இந்த தமிழ் மந்திரங்களைச் சொல்லுங்கள்

ஓம் சூரியநாராயண பரப்பிரம்மமே போற்றி

ஓம் சுந்தர திருவுடைய சுடர் ஒளியே போற்றி

ஓம் ஆவியைக் காக்கும் அரும் பொருளே போற்றி

ஓம் அனைத்து உயிரை அரவணைக்கும் அன்னையே போற்றி

ஓம் பாவங்கள் தீர்த்து நலம் தருபவரே போற்றி

ஓம் பல்லுயிர்க்கும் நல் உயிராய்

பரந்தவனே போற்றி

ஓம் தீபமாய் வழிகாட்டும் திரு மறையே போற்றி

ஓம் செழுஞ்சுடரே இருளகற்றும் தெய்வமே போற்றி போற்றி

இதற்கு பிறகு தீப ஆரத்தி காண்பித்து நிவேதனம் செய்த பிறகு, மறுபடியும் கொஞ்சம் நீரையும் புஷ்பத்தையும் எடுத்து இரண்டு கை களிலும் வைத்துக்கொண்டு இந்த பாடலைப் பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

நவகோள்களின் நாயகனே

நல் இதயம் கொண்டவனே

பாவ வினைகள் தீர்ந்திடவே

பதமலரைப் பணிந்தோமே  

ரத சப்தமி நன்னாளில்

ரவி உன்னைப் போற்றுகிறோம்

குலம் செழிக்க அருள்வாயே

குறை தீர்க்க வருவாயே

‘‘ஓம் சூர்யாய நமஹ'' என்று ஏழு முறை சொல்லி பூஜையை முடிக்கவும்.

சுகங்களை அள்ளித்தரும் சூரிய ஜெயந்தி 28.1.2023 - சனி

தை அமாவாசையிலிருந்து ஏழாவது நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றிலிருந்தே சூரியன் தன் வெப்பக்கதிர்களை சிறிது சிறிதாய் கூட்டுகிறான். தெற்குப் பாதையில் (தட்சிணாயண) பயணிக்கும் சூரியன், வடக்கு வழியில் (உத்தராயண) திசை திரும்பிப்பயணிக்க ஆரம்பிக்கும் நாளும் ‘‘ரத சப்தமி” எனக் கொண்டாடப்படுகிறது. சூரிய பகவான், ஒரு சப்தமி திதி அன்றுதான் காஷ்யப்பருக்கும் அதிதிக்கும் மகனாக அவதரித்தார். சப்தமி திதி அன்று செய்யப்படும் வழிபாடுகள் அனைத்தும் ஆத்மகாரகனாகிய சூரிய பகவானுக்கு உகந்தவை. ரத சப்தமிக்கு அடுத்த நாள் பீஷ்மாஸ்டமி. பீஷ்மர் முக்தி அடைந்த இந்த நாளில் நீர் நிலைகளுக்குச் சென்று புனித நீராடி தரிசனம் செய்வது நல்லது. அந்த நாளில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

சியாமளா நவராத்திரி முடிவு 30.1.2023 - திங்கள்

வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள், கொண்டாடப்படுகின்றன. அதில் சியாமளா நவராத்திரியும் ஒன்று. ராஜமாதங்கி தேவியை பிரத்தியேக தேவதையாக வழிபடுகின்ற விழா இந்த விழா. வடக்கே காளிதேவியையும் வழிபடுகின்றனர். தைமாத வளர்பிறை பிரதமையில் ஆரம்பித்த விழா, இன்றைய தினம் நிறைவேறுகிறது. அம்பாளை கலசத்தில் ஆவாகனம் செய்து ஒன்பது நாட்களும் வழிபட்டவர்கள், இன்றைய தினத்தில் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அதனால், பற்பல நன்மைகளை அடையலாம்.

சகல நன்மை தரும் தை கிருத்திகை 30.1.2023 - திங்கள்

 

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை, ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை.

இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள் ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் கூறுவர். கார்த்திகை விரதம் இருப்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு ஏதும் உண்ணாமல் உபவாசம் இருக்க வேண்டும். உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். இதனால் சகல நன்மைகளும் அடையலாம்.

கண்ணப்ப நாயனார் குருபூஜை 1.2.2023 - புதன்

சைவ சமயத்தில் வன் தொண்டர்கள் என்று சில தொண்டர்களைக் குறிப்பிடுவார்கள். ஒருவர் கல்லால் அடித்தார். ஒருவர் வில்லால் அடித்தார். ஒருவர் காலால் உதைத்தார் என்று சிறப்பாகச் சொல்வதுண்டு.

கல்லால் அடித்தவர் சாக்கியநாயனார்.

வில்லால் அடித்தவன் விஜயன்.

காலால் உதைத்தவர் கண்ணப்பன்.

‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என பட்டினத்தாரும் கண்ணப்பரைக் குறிப்பிடுகின்றனர். வேடர் குலத்தில் பிறந்த திண்ணன், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். ஒருமுறை வேட்டையாடச் சென்றபோது, காளத்திமலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். சிவன் மீது அன்பு பெருகியது. அவரைத் தன் குணத்திற்கும் வசதிக்கும் ஏற்ப வணங்க ஆரம்பித்தார். தினசரி வாயில் நீர்சுமந்து வந்து அபிஷேகம் செய்தார். மலர்களாலும், இலைகளாலும் அர்ச்சனை செய்து, வேட்டையாடிய பன்றி இறைச்சியைப் படைத்தும் வந்தார். இதைக் கண்டு ஆகம விதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவகோசரியார் மனம் வருந்தினார். இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த ஒரு நாடகம் நடத்தினார் ஈசன். திண்ணனார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான்.

 

கண்ணில் குருதி வடிவதைக் கண்டு திண்ணனார் பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். ஆயினும் பலன் இல்லை. தன் கண்ணை பறித்து லிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். லிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்றது. ஆனால், இடக்கண்ணில் குருதி வழியத் தொடங்கியது, “இது என்ன சோதனை?” என்று நினைத்த திண்ணனார், தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டார். தன்னுடைய காலால், இறைவன் கண் உள்ள இடத்தை அடையாளப் படுத்திக் கொண்டு, தன் கண்ணை பறித்து, இறைவனுக்கு வைக்கத் துணிந்தார். இறைவன் “நில் கண்ணப்ப..” என்று சொன்னார். அவருடைய வைராக்கியத்தையும், தியாகத்தையும் கண்டு சிவபெருமான் காட்சி தந்தார்.கண்ணப்ப நாயனாரின் குருபூஜை தை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. அந்த தினம் இன்று.

அரிவாட்டாய நாயனார் குருபூஜை 2.2.2023 - வியாழன்

அரிவாட்டாய நாயனார் கணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். கணமங்கலம் தற்போது தண்டலைச்சேரி என்றழைக்கப்படுகிறது. இது திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இவருடைய இயற்பெயர் தாயனார் என்பதாகும். இவரும் இவர் மனைவியும் சிவபெருமானிடம் மாறாத சிவபக்தியில் திளைத்தவர்கள். அரிவாட்டாய நாயனார் தினசரி செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் வைத்து கணமங்கலத்தில் கோயில்கொண்டிருந்த நீள்நெறி நாதருக்கு அமுது செய்விப்பார்.

செல்வந்தரான அவருடைய பெருமையை உலகுக்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், அவருடைய செல்வத்தை நீக்கி வறுமையை உண்டாக்கினார். கூலிக்கு வேலை செய்தாலும், நெல்வயலில் கிடைத்த நெல்லைக்கொண்டு இறைவனுக்கு திருவமுது ஆக்கினார். ஒரு நாள் அவர் தன் வயலில் விளைந்த செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு மண்கலயத்தில் சுமந்து சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கச் செல்லுகின்றபோது கீழே விழுந்து கலயம் உடைந்து, எல்லா உணவுகளும் சிந்தியதைக் கண்டு மனம் நொந்தார். “இனி சிவபெருமானுக்கு எப்படி அமுது செய்விப்பது? இன்றைய பூஜை வீணாயிற்றே? இனி உயிரோடு இருந்து என்ன பலன்?” என்று தம்மை மாய்த்துக்கொள்ள முயன்றார்.

 

அப்பொழுது சிவபெருமான் அவர் முன் தோன்றி தடுத்தாட்கொண்டு, அவருக்கு நற்பதம் அளித்தார். தன் கழுத்தை அரிவாள் பூட்டி அறுக்க முயன்ற காரணத்தால், அரிவாட்டாய நாயனார் என்ற திருநாமத்தைப் பெற்றார். அவருடைய குருபூஜை நாள் தை மாதம் திருவாதிரை. அந்த நாள் இன்று.

ஸ்ரீரங்கம் பூபதித்தேர் 3.2.2023 - வெள்ளி

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டுவந்த பிரசித்திப்பெற்ற திருவிழா தைத்தேர் விழா. ராமர் அவதரித்த புனர்பூச நட்சத்திரத்தில் பூபதித்திருநாள் என்ற பெயரில் நடைபெறும். இது தனி விழா. கொடியேற்றத்துடன் தொடங்கும். அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணி அளவில் கொடியேற்ற மண்டபம் வந்தடைவார்.பின்னர் கொடிப்பட்டம் புறப்பட்டு காலை கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழா  11 நாட்கள் நடைபெறும்.

நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைவார். பின்னர், உபயநாச்சியார்களுடன் மாலை திருச்சிவிகையில் புறப்பட்டு கோயில் வளாகத்திலேயே வலம் வந்து சந்தனு மண்டபம் வந்தடைவார். அங்கிருந்து இரவு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் இரவு கண்ணாடி அறை சென்றடைவார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நம்பெருமாள், நான்காம் திருநாளன்று கருட வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். பின், ஒருநாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருள்வார். அடுத்த நாள் மாலை குதிரைவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார் நம்பெருமாள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்வார். தேர் நான்கு உத்தரவீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடையும். பின்னர், சப்தாவரணம் நடைபெற்று விழா நிறைவுநாளில் நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். அற்புதமான விழா, இந்த பூபதித் தேர்விழா.

எம்பார் திருநட்சத்திரம் 3.2.2023 - வெள்ளி

ராமானுஜருடைய சீடர்கள் இருவருக்கு, ராமானுஜருடைய பெயரே சூட்டப்பட்டது. ஒருவர் ராமானுஜருடைய சிறிய தாயின் மகனான கோவிந்த பட்டர். இன்னொருவர் வடக்கே இருந்து சாஸ்திர தர்க்கத்திற்காக வந்தவர். ராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்டு அவருடைய சீடரானவர். அவருக்கு அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்று பெயர். கோவிந்தபட்டருக்கு எம்பெருமானார் என்கின்ற பெயர் சூட்டப்பட்டவுடன் அது பெயர்க் குழப்பத்தைத் தரும் என்பதால் தன்னுடைய பெயரை எம்பார் என்று சுருக்கிக்கொண்டார். ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் மழலை மங்கலம் என்ற ஊரில், தை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கமல நயனப்பட்டருக்கும் ஸ்ரீதேவி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இந்த ஊர் இப்பொழுது மதுரமங்கலம் என்று வழங்கப்படுகிறது. இவர் சிறிது காலம் சைவ சமயத்தில் இருந்து, பின் வைணவ சமயத்துக்குத் திரும்பினார். ராமானுஜரின் திருவடி நிழல் (பதச் சாயை) என்று போற்றப்படுபவர்.

சீரியகுணம் கொண்டவர். இவரை வைணவ உலகம் சிறு மாமனிதர் என்று போற்றும். காட்சிக்கு எளியவராக இருந்தாலும், ஞானத்தில் மாமனிதர் என்பதால் `சிறுமாமனிதர்’ என்ற பட்டம் இவருக்கு உண்டு. ஒவ்வொரு உயிரையும் தன் உயிர்போல் நேசிக்கும் உத்தம குணம் இவருக்கு உண்டு. அதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சியைச் சொல்லலாம். இவர் ஒரு நாள் வேலிக்கு அருகே புரண்டு கொண்டிருந்த பாம்பின் வாயில் ஏதோ

செய்தார். பிறகு குளித்துவிட்டு வந்தார். இந்தக் கட்சியைக் கண்ட எம்பெருமானார், இதைப் பற்றி விசாரிக்க, பாம்பின் வாயில் முள் சிக்கி அவஸ்தைபட்டுக் கொண்டிருந்ததையும் அதை தாம் நீக்கியதையும் கூறினார். இதைக் கேட்ட எம்பெருமானார், இவரின் ஜீவகாருண்யத்தை எண்ணிப் பூரித்தார். இந்த மகானின் ஜென்ம நட்சத்திரத்தை வைணவர்கள் தங்கள் இல்லங்களிலும், பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் சிறப்பாகக்

கொண்டாடுவார்கள்.

தொகுப்பு : விஷ்ணுபிரியா

Related Stories: