கர்நாடகாவில் களை கட்டும் ஒற்றுமை யாத்திரை ராகுலுடன் சோனியா உற்சாக நடை பயணம்: நாளை பிரியங்காவும் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ராகுல் மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடை பயணத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பங்கேற்று உற்சாகமாக நடந்தார். இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை குமரியில் கடந்த மாதம் 7ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திதொடங்கினார். தமிழகம், கேரளாவில் பயணத்தை முடித்து விட்டு தற்போது கர்நாடகாவில் நடை பயணம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் 21 நாட்களில் 521 கிமீ அவர் நடந்து சென்று மக்களை சந்திக்க உள்ளார். இந்த பாத யாத்திரையில் பங்கேற்க, சில தினங்களுக்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மைசூருவுக்கு வந்தார்.இந்நிலையில், 2 நாட்கள் ஓய்வுக்கு பின் நேற்று காலை பாண்டவபுரா தாலுகா, பெள்ளாலே கிராமத்தில் இருந்து ராகுல் பாதயாத்திரை தொடங்கினார். அம்ருத்ஹள்ளி கிராமத்துக்குள் அவர் சென்றபோது, சோனியாவும் அங்கு வந்து சேர்ந்தார். ராகுலுடன் 12 நிமிடங்கள் உற்சாகமாக நடந்த சோனியா, பிறகு காரில் சென்றார். சிறிது நேரம் சென்ற பின், காரில் இருந்து இறங்கி மீண்டும் நடந்தார். சாலையோர கடைக்கு சென்று காபி குடித்தார். சோனியா 9 கிமீ தூரம் நடந்தார். சமீபத்தில்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதால், அவரை நடக்க வேண்டாம் என ராகுல் கூறினார்.  சோனியா, ராகுலுடன் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர்  சித்தராமையா உள்ளிட்டோரும். ஆயிரக்கணக்கான தொண்டர்களும் நடந்தனர். நாளை பயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்று நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.*பாதயாத்திரையின் போது சோனியா அணிந்திருந்த ஷூவின் லேஸ் அவிழ்ந்தது. இதனால், அவர் நடக்க சிரமப்பட்டார். இதை கவனித்த ராகுல், கீழே குனிந்து ஷூ லேசை கட்டி விட்டார். பாதயாத்திரையில் தாய்க்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதில் ராகுல் மிகவும் கவனமாக இருந்தார். தாய் – மகன் இடையிலான இந்த பாசம், சமூக வலைதளங்களில் வைரலானது….

The post கர்நாடகாவில் களை கட்டும் ஒற்றுமை யாத்திரை ராகுலுடன் சோனியா உற்சாக நடை பயணம்: நாளை பிரியங்காவும் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: