மனைவி சொல் கேட்ட மாண்பர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலகில் “தனக்கு வேண்டும் வேண்டும்” என்று சேர்த்துக்கொண்டே செல்லும் செல்வந்தர்களைப் பிற நாடுகள் போற்றியபோது, நம் பாரதத் திருநாடுதான் “தனக்கு வேண்டாம்” என்று விலக்கித் தியாகம் செய்த குணச்சீலர் களையும் போற்றியது. போற்றுகிறது. தியாகிகளையும் கொள்கையினால் உயர்ந்த தியாக மனப்பான்மை என்பது மனிதனுக்கு மட்டுமின்றி. அந்த மகேசனுக்குக் கூட மதிப்பை அதிகரித்துத் தந்துள்ளது. பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட விஷத்தை அனைவரும் விலக்கி ஒதுக்கினர். ஆனால், சிவபெருமானோ அந்த விஷத்தை உண்ணாமலும் உமிழாமலும் தன் திருக்கழுத்தில் அடக்கி உலகைக் காத்தருளினார். இப்படி பிறரால் விலக்கப்பட்ட ஒன்றை உலக நன்மையின்பொருட்டு தானே ஏற்று ஒப்பற்ற தியாகத்தைச் செய்ததனால் அவருக்கு “தியாகராஜா” என்ற திருப்பெயர் தோன்றியது.

சிவபெருமானின் திருமேனியில் திகழும் திருநீலகண்டம் அவரின் தியாகத்தின் திருஅடையாளங்களுள் ஒன்றாகும். இறைவனின் இத்தகைய தியாகத்தை போன்றே தியாக வாழ்வு வாழ்ந்துள்ளனர். இதனை எடுத்துக் காட்டவே.“திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்” என்று தொடங்கி, “திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்” என்று திருநீலகண்டத்தின் பெயராலேயே நிறைவடைகிறது நாயன்மார்களின் நாமத்தையும், தலவரலாற்றையும் சொல்லும் திருத்தொண்டர்த்தொகை.

அறுபத்து மூவருள் முதல் நாயனாராகத் திகழும் திருநீலகண்டர், தரிசிக்க முக்தி தரும் தில்லையில் (சிதம்பரம்) குயவர் குலத்தில் பிறந்தார். இவரின் காலம் கி.பி.660 லிருந்து கி.பி. 840-க்குள் இருக்கலாம் என்பது மா.இராசமாணிக்கனாரின் கருத்து. திருநீலகண்டம் என்னும் திருநாமத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டமையால், நாயனாருக்கு இயற்பெயர் மறைந்து, “ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” என்ற அப்பரடிகளின் அமுத வாக்கிற்கிணங்க, “திருநீலகண்டர்” என்ற பெயரே நிலைத்தது.

உலகில் பல உலோகங்கள் இருக்கின்றன. அவற்றைக்கொண்டு பல பாத்திரங்களும் செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கெல்லாம் கிடைக்காத “திரு” என்ற அடைமொழி மண்ணால் செய்யப்படும் திருவோட்டுக்கே கிடைத்துள்ளது. தன் குலத்தொழில் மட்பாண்டம் செய்யும் தொழிலாதலால் இறைதேடும் அடியார்களுக்கு இரைதேட, திருவோடுகள் செய்து கொடுத்தும் இன்னும் தொண்டுகள் செய்தும்வந்த பல திருநீலகண்டர், தம் இளமைக் காலத்தில் சிற்றின்பத்தில் மனம் செலுத்தி எளியராக விளங்கினார்.

இச்செயலானது அருந்ததியைப்போல் கற்பில் சிறந்த இவரின் மனைவிக்கு தெரிந்தது. உடனே, தனக்குத் தீங்கிழைத்த திருநீலகண்டரை வன்சொற்கள் பேசியோ, வழக்கு மன்றத்தில் வழக்கிட்டோ பிரச்னைக்கான தீர்ப்பை எதிர்நோக்காமல் பிரச்னைக்கான தீர்வை எதிர்நோக்கி, கணவனார் உச்சரிக்கும் திருநீலகண்டத்தின் பெயராலேயே எச்சரிப்பதைப்போல, தீண்டுவீராகில் எம்மைத் திருநீலகண்டம் என்று ஆணையிட்டார்.

இதில் `என்னை தீண்டாதீர்கள் என்று கூறாமல் `எம்மை’ என்று பன்மையில் கூறியது பெண்கள் எவரின் மேலும் காமநோக்கம் செல்லாமல் செய்ய” என்பது சிவக்கவிமணி.சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் கருத்தாகும்.மனைவியார் `எம்மை’ என்று கூறியமையால் மற்ற பெண்களையும் மனத்தினால்கூடத் தொடமாட்டேன் என்று சத்தியம் செய்தார் திருநீலகண்டர். இதில் மனத்தினாலும் தீண்டாமையே மாபெரும் செய்கையாகும்.

மனத்தில் எழும் எண்ணங்களே சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படுகின்றன. செயலை விடவும் மனதில் எழும் எண்ணங்களுக்கே வலிமை அதிகம். கல்லாலும் மண்ணாலும் மன்னன் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு செல்லாமல், பூசலார் தன் மனத்தால் கட்டிய கோயிலின் கும்பாபிஷேகதிற்கே சென்றார் சிவபெருமான் என்பதும், கயிலை மலையில் மாதர் மேல்மனம் வைத்ததாலேயே ஆலாலசுந்தரர் மண்ணுலகம் வந்தார் என்பதும் மனத்தின் வலிமையைக் காட்டும் வரலாறுகளாகும்.

ஆகவே, மனத்தினால் தொடுவது என்பது உடலால் தொடுவதைவிட தீங்கானது. அதன்பொருட்டு `தன் மனத்தினாலும் தீண்டேன்’ என்று சபதம் செய்தார் திருநீலகண்டர். அன்றுமுதல் திருநீலகண்டரும் அவரின் மனைவியாரும் ஒருவரையொருவர் மனத்தினால்கூடத் தொடாமலும், இதை மற்றவர் அறியாமலும் வாழ்ந்துவந்தனர். எனினும் ஈசன் அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டுகளை நேசமுடன் செய்துவந்தனர். தமக்கு முதுமை வந்து தளர்ந்து சாய்ந்தாலும் அடியார்களுக்குச் செய்யும் திருப்பணிகளிலிருந்து சாயாமல் நின்றனர்.

இளமை துறந்து வாழ்ந்த இவர்களின் அருமையை உலகறியச் செய்ய எண்ணிய ஆண்டவன், ஓர் அடியவராகவந்து தன் திருவோட்டை திருநீலகண்டரிடம் கொடுத்து பாதுகாக்கும்படி சொல்லிவிட்டுப் பின், பலகாலம் கழித்துவந்து திருவோட்டைக் கேட்டார். அப்போது, தான் காத்துவந்த திருவோடு திருவருளால் மறைந்துவிட, “வேறு திருவோடு தருகிறேன்” என்று சொன்னார் திருநீலகண்டர். உடனே அவரைக் `கள்வர்’ என்று கூறி குற்றம் சாட்டிய சிவனடியார். “திருவோட்டைக் களவாடவில்லையெனில் உன் மகனைப் பற்றிக் கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்” என்றார்.

தனக்கு “மகன் இல்லை” என்று திருநீலகண்டர் சொன்னதும் “உன் மனைவியைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்” என்று சொன்னார் சிவனடியார். அதற்குத் திருநீலகண்டர்,” எங்களுக்குள் ஒரு சபதம். அதனால் என் மனைவியுடன் சத்தியம் செய்ய இயலவில்லை. நான் மட்டும் மூழ்கிச் சத்தியம் செய்து தருகிறேன் என்றார். உடனே சினம் கொண்ட சிவனடியார், தில்லைவாழ் அந்தணர்கள் திகழ்கிற வழக்கு மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர்களும் அவ்வண்ணமே மனைவியைப் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்து தரச் சொன்னார்கள்.

இருவரும் ஒரு குச்சியைப் பற்றிக்கொண்டு தில்லை திருப்புலீச்சரத்தின் முன்புள்ள திருக் குளத்தில் மூழ்கினர். அப்போது “குச்சியை விடுத்து மனைவியைக் கையில் பற்றிக்கொண்டு மூழ்கும்” என்றார் சிவனடியார். வேறுவழியின்றி தம் பழஞ்செய்கையையும் அதனால் செய்த சபதத்தையும் சொல்லி மூழ்கினர். அவ்வாறு மூழ்கி எழும்போது இருவரும் இளமை பெற்றனர். இறைவன் இணையடிகளிலேயே இருக்கும் பேறு பெற்றனர்.

அவர்கள் மூழ்கிய குளம் இன்னும் “இளமையாக்கினார் குளம் என்ற திருப்பெயருடன் தில்லையில் திகழ்கிறது. எந்த குலத்தில் பிறந்திருந்தாலும் இறைவனுக்கும் இறையடியார்களுக்கும் தொண்டு செய்யலாம் என்றும் சாதிப்பதற்கு சாதி தடையல்ல என்றும் சாதிக்கிறது இந்த வரலாறு. தவறு செய்யாத மனிதன் இருக்க முடியாது. அதைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனாக இருக்க முடியாது. அவ்வகையில், திருநீலகண்டர் இளமையில் தவறு செய்திருந்தாலும், அதை திருத்திக்கொண்டு கொள்கைவழி வாழ்ந்தமையே அவரை அறுபத்து மூவரில் ஒருவராக ஆற்றுப்படுத்தியது.

தவறுக்கு பிராயச்சித்தம் மற்றும் தண்டனைக்கான கால அளவு என்ற ஒன்று உண்டு. ஆனால், இவ்வரலாற்றில் திருநீலகண்டர், தான்செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடாமல் தண்டனையாக இளமையைத் துறந்து வாழ்ந்தார். அதுவும் இத்தனை ஆண்டுகள் என்ற எந்தவொரு கால வரையறையும் இன்றி வாழ்க்கை முழுவதும் மாதரை மனத்தாலும் தீண்டாமல் வாழ்ந்தார். இந்தச் செயற்கரும் செய்கை கருதியே எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார், தன்னால் திருநீலகண்டரைப்போல இளமையைத் துறக்க முடியாது என்று வியந்து, “மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்” என்று போற்றுகிறார்.

காரணம், காமம் மிகக் கொடியது.“விடம், உண்டாரைத்தான் கொல்லும். ஆனால், காமம் கண்டாரையை கொல்லும்” என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இத்தகு காமத்தை கடப்பதற்கு ஆண்டவன் பூசையும், அடியார்பூசையும் உடைய கொள்கையினால் உயர்ந்த அடியார்களால் மட்டுமே இயலும். மற்ற தேவர்களாலும்கூட இயலாது. இந்திரன், சந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மற்றும் சில முனிவர்களின் வரலாறுகள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். அவ்வகையில் திருநீலகண்டர் திருத்தொண்டின் நெறிநின்றார். அதனாலேயே காமம் கடந்தார் என்பது புலப்படுகிறது.

இப்படி திருநீலகண்டரைத் திருத்தியதுடன், அவரைப் போன்றே அவரின் மனைவியாரும் இளமை துறந்து வாழ்ந்தார். அந்தச் சிறப்பு கருதியே சிவபெருமான் தன் மனைவி யுடன் எழுந்தருளி இருவருக்கும் இளமை நல்கினார் இந்த வரலாற்றின்மூலம் ``ஆசையை விடுத்து கொள்கை வாழ்வு வாழ்ந்தால் பேரின்பம் பெறலாம்’’ என்ற கருத்தைப் பெறமுடிகிறது.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

Related Stories: