அசைந்தாடிய பெருமான்

திருவாரூர்

1 முசுகுந்த சக்ரவர்த்தியால் தேவேந்திரனிடமிருந்து பெற்று வரப்பட்ட ஏழு லிங்கத்தினுள் இதுவும் ஒன்றாகும். அதனாலேயே சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையான தலம் இதுவேயாகும். வீதி விடங்கர் எனும் பெயரில் இங்கு அருள்கிறார்.

2 திருக்கோயிலின் தீர்த்தமான கமலாலயம் மிகப் பிரமாண்டமானது. குளத்தின் நடுவே நாகநாதர் ஆலயம் உள்ளது. திருவாரூர் தலத்தில் பிறக்க முக்தி என்பது ஞானியர் வாக்கு.

3 பங்குனி உத்திரத்தன்று இந்த தல ஈசன் பக்தர்களுக்காக ஆடும் நடனம், ‘பக்தர் காட்சி’ என அழைக்கப்படுகிறது.

4 பூஜையின் போது தியாகராஜர் சந்நதியில் பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுகிறது.

5 அசைந்தாடிய பெருமான், அடிக்காயிரம் பொன்னளிப்பவர், இருந்தாடழகர், திருவந்திக்காப்பழகர் என பல பெயர்களில் தியாகராஜர் வணங்கப்படுகிறார்.

6 இந்த தியாகராஜருக்கு முசுகுந்த சக்ரவர்த்தி செய்த முசுகுந்தார்ச்சனை, முகுந்தனான திருமால் செய்த முகுந்தார்ச்சனை போன்ற சிறப்பு அர்ச்சனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

7 தினமும் இரவில் தியாகராஜருக்கு நெய்யில் பொரித்த முறுக்கு நிவேதிக்கப்படுகிறது.

8 கேட்ட வரங்களையெல்லாம் தரும் தியாகராஜரால், ஒரே ஒரு வரம் மட்டும் தரமுடியாதாம். அது, மறுபிறவி! ஏனெனில் தன்னை வணங்கும் அடியாருக்கு முக்தியளித்து விடுபவராம் இந்த தியாகராஜர்.

9 ஈசன் இந்த தலத்தில் ஆடிய நடனம் அஜபா நடனம் என அழைக்கப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டர்தொகை எனும் நூல் இங்குதான் இயற்றப்பட்டது. இதுவே பெரிய புராணம் எனும் அற்புதமான நாயன்மார்கள் சரிதநூல் உருவாவதற்கு காரணமும் ஆகும்.

10 இந்தத் தல இறைவி கமலாம்பிகை தனி சந்நதியில் தவக்கோலத்தில் நான்கு கரங்களுடன், தாமரை, பாசம், அக்கமாலை ஏந்தி கால் மேல் கால் போட்டு யோகாசனை நிலையில் அருள்கிறாள்.

11 ஐம்பத்தோரு எழுத்துகள் பொறிக்கப்பட்ட திருவாசியுடன் கூடிய அட்சரபீடம் தனிச் சிறப்பு கொண்டது.

12 தன் தோழியின் இடுப்பில் அமர்ந்திருக்கும் முருகனுடைய இடது கை சுண்டு விரலைப் பிடித்தபடி காட்சிதரும் நீலோத்பல அம்பிகை பிராகாரத்தில் அழகுற காட்சியளிக்கிறார்.

13 இந்த தல நவகிரகங்கள் ஒரே வரிசையில் நின்று அருள்கின்றன.

14 சுந்தரருக்கும் பறவை நாச்சியாருக்கும் திருமணம் நடந்த தலம்.

15 சங்கீத மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள், தியாகையர் மூவரும் பிறந்த தலம் திருவாரூர்.

Related Stories: