* சூரியன் வணங்கி வழிபட்ட, சென்னை செங்குன்றத்திற்கு அருகில் உள்ள ஞாயிறு கோயிலில் அருளும் புஷ்பரதேஸ்வரரை தரிசித்தால் சூரியகிரக தோஷங்கள் பகலவனைக் கண்ட பனி போல் விலகுகிறது.
* திருவையாறு-கும்பகோணம் பாதையில் திருவையாற்றிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது திங்களூர். இத்தல சந்திரபகவானை வணங்கினால் சந்திரகிரக தோஷங்கள் நீங்கி அவர் வாழ்வில் தண்ணொளி வீசுகிறது.
* மதுரையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள குருவித்துறையில் குரு பகவானையும் சித்திரரதவல்ல பெருமாளையும் வழிபட்டால் குரு கிரக தோஷங்கள் நீங்கி குதூகல வாழ்வு கிட்டும்.* கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரத்தில் அருளும் த்ரிபங்க நிலையில் உள்ள துர்க்காம்பியை உளமாற வழிபட்டால் ராகு கிரக தோஷங்கள் நீங்கிவிடும்.* 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய மதுரை சொக்கநாதப் பெருமாளை தரிசித்தால் புத கிரக தோஷங்கள் விலகியோடி பொன்னான வாழ்வு கிட்டும்.* சென்னை ரத்னமங்கலத்தில் உள்ள லட்சுமி குபேரனை வெள்ளிக்கிழமைகளில் வணங்கி வர தரித்திர தோஷம் தொலைந்து வளமான வாழ்வு கிட்டுகிறது.* திருமங்கலக்குடியில் அருளும் மங்களாம்பிகை மாங்கல்ய தோஷங்களை நீக்குவதில் நிகரற்றவளாக பக்தர்களால் போற்றப்படுகிறாள்.* சென்னை மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் தனி சந்நதி கொண்டிருக்கும் சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் பில்லி சூன்ய தோஷங்கள் விலகியோடுகின்றன.* ஸ்ரீரங்கத்தில் அருளாட்சி புரியும் ரங்கநாதப் பெருமானை வணங்கினால் சுக்கிர கிரக தோஷங்கள் தொலைந்து மகிழ்ச்சியான வாழ்வு கிட்டும்.* காஞ்சிபுரத்தில் அருளும் சித்ரகுப்த சுவாமியை மனமுருக வேண்டினால் கேது கிரக தோஷங்கள் மறையும்.* காரைக்குடி&மயிலாடுதுறை பாதையில் திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருக்கொள்ளிக்காட்டில் அருளாட்சி புரியும் சனிபகவானை வணங்க சனி கிரக தோஷங்கள் சட்டென மறைந்தோடும்.* சென்னை அரக்கோணத்திற்கருகே தெற்கு நோக்கி தனிக்கோயில் கொண்டுள்ள வாராஹியை வணங்க, செவ்வாய் கிரக தோஷங்கள் தொலைந்தோடும்.