விட்டலனுக்கு ஒரு புண்டலீகன் ராமனுக்கு ஒரு மண்டலீகன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மண்டலீகனின் மண்டலம் அது. கவின் மிகு சோலைகளுக்கும், அதில் கொஞ்சி விளையாடும் கிள்ளைகளுக்கும் அங்கு பஞ்சமே இல்லை. வறுமை என்பதே அங்கு இல்லை. மாதம் மும்மாரி பெய்து, இயற்கை அன்னை எங்கும் பச்சைப் பாயை விரித்திருந்தாள். துன்பம் என்றால் என்ன என்று அறியாமல், மக்கள் இன்பகரமாக வாழ்ந்துவந்தார்கள். மண்டலீக மன்னன் மக்களைத் தன் மகன்களைப்போல் காத்து வந்தான். ஆனபோதிலும், தேசத்து அரசிக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.

ஆம். பிறந்தது முதல் யாகம், பூஜை, ஆச்சாரம் என்று வாழ்ந்துவந்தவள் அவள். ஆனால், மண்டலீகபுரத்தில் எல்லாம் தலைகீழாக இருந்தது. மண்டலீகன் எந்த பூஜையும் செய்வதில்லை. நெற்றியில் திருநீறோ கோபி சந்தனமோ இட்டதில்லை. பூஜை செய்து அவள் பார்த்ததில்லை. ஆலயம் சென்று அவள் கண்டதில்லை. பஜனை செய்ததில்லை. யாராவது செய்தால், அதில் கலந்துகொண்டதும் இல்லை. ஆகவே தன் கணவன், மண்டலீகனுக்கு இறை நம்பிக்கை இல்லையோ என்று அவள் பயந்தாள்.

அதை ஒரு முறை, அவள், வாய் விட்டு அவனிடம் கேட்கவும் செய்தாள். அவனிடமிருந்து நகைப்புதான் பதிலாக வந்தது. சுலட்சனை மகாராணி பதில் சொல்லுமாறு வற்புறுத்த, அவன் வாயை திறந்து, ‘‘சகீ! என்னை பொறுத்தவரையில் மக்கள்தான் மாதவன். மக்கள் சேவையே மாதவன்சேவை! அதை மீறி ஒரு தர்மமும் இல்லை என்பது என் நம்பிக்கை. எனக்கும் சேர்த்துதான் நீ பூஜை செய்கிறாய் இல்லையா? அதுவே போதும்” என்று ஏதோ சொல்லி மழுப்பிவிட்டான்.

அன்று முதல் மகாராணி சுலட்சனை, அவனைத் தொந்தரவு செய்வதில்லை. மாறாக அவனுக்கும் சேர்த்து இவள் சங்கல்பித்துக்கொண்டு, தெய்வ காரியங்களைச் செய்துவந்தாள். தன் கணவனும் பக்திமானாகி தன்னோடு தெய்வகாரியங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அவள் இறைவனிடம் வேண்டாத நாளில்லை. ஒரு நாள் இரவு, மன்னவன் அருகில் மகாராணி உறங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மன்னன் உறக்கத்தில் ஏதோ பிதற்ற ஆரம்பித்தான். அவன் குரல் கேட்டு விழித்தாள் மகாராணி. ‘‘ஆஹா என் ராமா! தாசரதி! ஜானகி ரமணா! ஒரு வழியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டாயா? ராமா... ராமா.. ராமா... ராமா..!” என்று உறக்கத்தில் தாரக நாம ஜெபம் செய்ய ஆரம்பித்தான்.

கனவில் தன் கணவன், ராம பட்டாபிஷேகம் கண்டுகளிக்கிறான் என்று அவள் உணர்ந்தாள். ‘‘ஒருவழியாக பட்டாபிஷேகம் செய்துகொண்டாயா” என்று அவன் புலம்பியதில் இருந்து பல நாட்களாக அவன் ராமன் கதையை மனதால் கண்டுகளித்திருக்கிறான் என்று உணர்ந்தாள். கனவில், ராமன் கதையைத் தன் கணவர் காண்கிறார் என்றால், நினைவிலும் அவர் ராமனையே எண்ணி இருக்கிறார் என்பது அவளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கியது. கனவிலும் நினைவிலும் ராமனை நினைக்கும் தனது கோமானை பக்தி இல்லாதவர் என்று நினைத்ததே பரம பாவமாக, மகாராணி கருதினாள். உடன் தனது பாவத்திற்கு பிராயச்சித்தமாக மன்னவன் பாதம் தொட்டு பணிந்தாள்.

மறுநாள் விடிந்ததும் மகாராணி பரம சந்தோஷத்துடன் உதித்தாள். தனது பல நாள் வேண்டுதல் இன்று நிறைவேறியது என்று உள்ளம் மகிழ்ந்தாள். மன்னன் ராம பக்தன் ஆனான் என்பது அவளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல இருந்தது. மறுநாள், மன்னன் எழுவதற்கு முன்பே எழுந்த மகாராணி, யாகம், தான, தர்மம், பூஜை, பஜனை என தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தாள். இதைக் கண்டு அதிசயித்த மன்னன், காரணத்தை வினவினான்.

இரவில் நடந்ததைச் சொன்னாள். உடன் மன்னன் இடி கண்ட சர்ப்பம் போல துடிக்க ஆரம்பித்தான். ‘‘ராமா! உன் அருளால் அன்று வனத்தில் ஒரு மாமுனிவரை கண்டேன்! அவர் உனது தாரக நாமத்தை உபதேசித்து, உன்னை என் இதயம் என்னும் கோவிலில் பூட்டி, எப்போதும் பூஜை, ஆராதனை, அலங்காரம், பஜனை என்று மனதால் உன்னை போற்றித் துதிக்க வேண்டும் என்று உபதேசித்தார். ஆலயம் செல்வது, பூஜை செய்வது போன்றவை தேவை இல்லையா? என்று நான் அவரைக் கேட்டேன். அந்த மகான் அதற்கு, எனக்கு அருள் புரிந்தபடியே, ‘‘நாதன் ராமன் உன் உள்ளே இருக்க, புறத்தில் நட்டு வைத்த கல்லினால் என்ன பயன்.

உள்ளத்தில் கோவில்கொண்ட உத்தமனை, உள்ளத்தால் பூஜி என்று உபதேசித்தார். அன்று முதல் இன்றுவரை உள்ளத்தில் இருக்கும் பொக்கிஷமான உன்னை யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்தேன். ஆனால் இன்று உள்ளத்தில் இருந்த  உன்னை வெளியில், அனுப்பிவிட்டேனே..! ராமா..! உன் நாமத்தை வெளிவிட்டதோடு நீயும் சென்றுவிட்டாயா ராமா... ராமா.. ராமா.. ராமா... ரா.. மா” என்று இதயத்தில் கை வைத்த படி, பூமியில் சரிந்தான் அரசன்.

நொடியில் நடந்துவிட்ட விபரீதத்தை, கண்டு அரசி சுதாரிப்பதற்குள், அவள் மடியில் படுத்தபடி, மன்னன் துடிக்க ஆரம்பித்தான். ஹீனமாக அவன் உதடுகள், ‘‘ராமா! என்னை விட்டு வெளியே போய்விட்டாயா! ராமா ராமா” என்று பிதற்ற ஆரம்பித்தான். ‘‘பரம்பொருள் ராமன் நம்மை விட்டு பிரிந்தால் நம்மால் இயங்க முடியாது. அவனன்றி ஓர் அணுவும் அசையாது மன்னவா! நீங்கள் இயங்குவதே அவன் உள்ளிருந்து இயங்குகிறான் என்பதற்கு ஆதாரம்” என்று மகாராணி சுதாரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆனால் அவளது துர்திசை, அதற்குள் காலம் கடந்து பல நேரம் ஆனது. மன்னன் இதயத்தில் இருத்து ஒரு ஜோதி கிளம்பி நேராக பூஜை அறையில் இருந்த, ராமன் விக்ரகத்தின் காலடியில் சென்று கலந்தது. சிலையாக இருந்த ராமனோ ஏதும் தெரியாதது போல மந்தஹாசம் செய்தபடி இருந்தான்.  

உள்ளமே கோவில் ஊன் உடம்பே ஆலயம் என்று, மகான்கள் சொன்னது எவ்வளவு நிஜம் பாருங்கள். புறத்தில் மகாராணி செய்த பூஜையை விட அகத்தில் அரசன் செய்த பூஜையால், யோகிகளும் அறியாத ராமன் கழலை எளிதாக அவன் அடைந்தான் இல்லையா? சிவமானஸ பூஜா ஸ்தோத்திரத்தில், ஆதிசங்கரர் பின் வருமாறு சொல்கிறார். ‘‘எனது ஆத்மாவே ஈசன். சரீரமே கோவில். உலகில் நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் ஈசனுக்குச் செய்யும் ஆராதனை. நான் செய்யும் நித்திரை தியானம்.

காலால் நடப்பது எல்லாம் அவனுக்கு செய்யும் பிரதட்சிணம். நான் பேசுவது எல்லாம் அவனது ஸ்தோத்திரம். நான் செய்வது எல்லாம் அவனது ஆராதனை”உள்ளத்தில் இறைவன் இருப்பதை அறிந்து, அவனை நித்தம் மனதால் வணங்கினால், நாம் செய்யும் அனைத்தும் அவனது ஆராதனையாகி மணம் கமழும். இந்த அற்புத உபதேசத்தைத்தான் ரமண மஹரிஷி, திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகளுக்கு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈசனுக்கு மனதால் கோவில் கட்டிய பூசலாரும், இதே நெறியில் நின்றுதான் இறைவன் அடி அடைந்தார். விட்டலனுக்கு ஒரு புண்டலீகன் என்றால் வில் ஏந்திய கோமகன் இராமனுக்கு ஒரு மண்டலீகன். மண்டலீகன் வழியில் இருந்து, நாமும் ஆத்மா ராமனை ஆன்மாவில் வைத்து பூஜித்து நற்கதி அடைவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related Stories: