வேதங்கள் காட்டும் ஆதிகவி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

1. ஈஷான : சர்வ வித்யானாம்

2. யோ ப்ரஹ்ம்மானம் விததாதி பூர்வம் யோவை வேதாம்ச்ச ப்ரஹிணோதி தஸ்மை

3. தஸ்மை வேதான் புராணானி தத்வான் அக்ர ஜன்மனே

4. அஷ்டா தஷானா மேதாஸாம் வித்யானாம் பின்னவர்த்மனாம்

5. ஆதிகர்த்தா கவி : ஸாக்ஷாத் ஷூலபானிரிதி ஷ்ருதி : (வேதம்)

மேலேயுள்ள இந்த வரிகளை வேதங்கள் ஓதும்போது கேட்டிருப்போம். மேலும், இந்த வரிகள் அனைத்தும் ஒரு பொருளையே குறிக்கின்றன. உண்மைப் பொருளே பரம்பொருள். எங்கும் நிறைந்ததும், விவரிக்க முடியாததும், மறையின் முடிவாகவும், மகா யோகிகளால் உணரப்பட்டதுமானதும் ஆகும். அனைத்தையும் கடந்து எந்தவிதப் பேதமும் இன்றி தனியே விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஓரறிவிலிருந்து ஆறறிவு வரையிலும் வெளியே காணப்படாத, உள்ளுக்குள் உணர்ந்த பின்பு காணப்படக்கூடிய பொருளிலும் உள்ளது. ஆதி கர்த்தாவாகவும், ஜாக்ரத் (விழிப்பு நிலை), சொப்பனம் (கனவு நிலை), ஸூஷீப்தி (கனவுகள் அற்ற தூக்கநிலை) என்ற மூன்று நிலையையும் கடந்தும் உள்ளது. தமோ, ரஜோ, ஸத்வமாகிய முக்குணங்களையும் கடந்து ஆதி அந்தமில்லாது அதிஸத்வமாகி நிற்கும் பரம் பொருளையே மேற்கண்ட வரிகள் குறிப்பிடுகின்றன.

இந்த ஐந்து வரிகளில் கடைசி வரியில் ஆதிகவி ஸாக்ஷாத் என்று திரிசூலத்தை தரித்தவனான சிவனையே வணங்குகின்றது. யஸ்ய நிஷ்வாஸிதம் வேதா: என்றும் கூறுகிறது. ஆதியந்தமில்லாத பரமேஸ்வரனின் மூச்சுக் காற்றுதான் வேதம். அனைத்து நிலைகளையும் சாதனைகளையும் கடந்து. அந்தச் சாதனைகளை உருவாக்கி நடத்துபவனும் அவனே. அவனின் நமச்சிவாய என்ற பெயரைத்தான் வேதம் தன் மத்தியில் கொண்டுள்ளது. இந்த இடத்தில் யஜூர் வேதத்தில் காணப்படும் ருத்ர பிரச்னம் வேதத்தின் நடுநாயகமாக விளங்குகிறது. அந்த ருத்ரத்தின் நடுவில் ‘நமச்சிவாய’ என்ற நாமத்தை தன்னுள் தானாக வைத்துள்ளது.  

வேத வாக்கியங்கள் யாவும் மகாஞானிகளின் தவத்தினால் கண்டெடுக்கப்பட்ட மாவாக்கியங்களாகும். முதல் வாக்கியத்திற்கு மீண்டும் வருவோம். ‘ஈஷான! சர்வ வித்யானாம்’... இதில் ஈஷானம் என்பது ஐந்து முகங்களைக் ஈசனுடைய பெயர்களில் ஒன்றாகும். அதாவது, ஸத்யோஜாதம், அகோரம், ஈஷானன், தத்புருடம், வாமதேவம் என்பதில் ஒன்றாகும்.

 

ஈஷானம் மிகப் பெரிய ஞானநிலையை குறிப்பது. இந்த வாக்கியத்தின்படி அனைத்து வித்யைகளுக்கும் அதிபதியென்றும், அவனிடத்திலேயே அனைத்தும் உள்ளன என்றும் கூறுகின்றது. ஈஷான முகமானது லிங்கத்திலிருந்து வானத்தைப் பார்த்தபடி இருக்கின்றது. இதிலிருந்து நமக்குப் புலப்படுவது அனைத்தும் அவனுடைய ஆளுமைக்குட்பட்டது என்பதுதான்.

யோ ப்ரம் ஹாணம் விததாதி பூர்வம், யோவை வேதாம்

ச்ச ப்ரஹி ணோதி தஸ்மை

எந்தப் பரம்பொருளானது உருவமற்றதோ... விவரிக்க முடியாததோ... அந்த பரம்பொருளே அனைத்துமாகி நிற்கின்றது. அந்தப் பொருளானது தன்னை ஒவ்வொரு குணங்களுக்கேற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் உபாசிக்கும் முறையிலே தன்னை பரப்பிக் கொண்டிருக்கிறது. அத்தனை வித்யையும் ஒரே பரம்பொருளிடம் கொண்டு சேர்க்கும்படியாகவும் இருக்கிறது. தன்னை ஒவ்வொரு குணங்களுக்கும் பிரித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், கடைசியில் காண்பதென்னவோ ஒரே காட்சியைத்தான்.

அதாவது, பிரம்மமே. அனைத்துக்கும் அப்பாற்பட்ட பொருள் தன்னையே வேதமாகவும் மாற்றிக் கொண்டுள்ளது. தன்னுடைய உண்மை நிலையை அதன் முடிவான வேதாந்தத்தில் வைத்தது. அதனால்தான், வேதத்தைக் குறித்துச் செய்யப்படும், ஒவ்வொரு செயலும் அதனைச் சென்று அடையக்கூடிய விஷயங்களாகவே உள்ளது.  

ஒவ்வொரு பொருளிலும் ஆதிசிவன் அமர்ந்திருப்பதை மறந்து போன, தன் நிஜ உருவத்தை தன்னுள்ளேயே தரிசிக்கச் செய்யும் முறையைத்தான் இந்த மறையின் முடிவு கற்றுக் கொடுக்கிறது. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் ஞானம்தான்நம்முள்ளும் நிறைந்திருக்கிறது. அதனாலேயே, மற்ற உயிரை துன்புறுத்துவது என்பது தன்னைத்தானே தண்டித்துக் கொள்வதற்குச் சமமாகும்.  ‘‘தஸ்மை வேதான் புராணானி தத்வான் அக்ரஜன்மனே!’’ வேதம்தான் தன்னை புராண, இதிகாசங்களாக தன்னை ஆக்கிக் கொண்டது. அந்தப் புராணங்களில் கதைகள் வைத்து, கதைக்கு நடுவே தத்துவங்கள் சொல்லி, உபாசகனை பக்தி மார்க்கமாகவும், கர்ம, ஞான மார்க்கமாகவும் கொண்டு சேர்க்கிறது. இந்தத் தத்துவங்களின் வழியாக தன்னை உணர வைத்து ஆனந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. அவன் ஜீவன் முக்தனாகவும், மஹா யோகியாகவும், ஞானியாகவும் தன்னைக் கடந்து ஆதி அந்தமில்லாது நிற்கிறான்.

இந்த ஐந்து முகங்களையும் துதிக்கும் பொருட்டு கிருஷ்ண யஜூர் வேதத்தில், தைத்திரிய உபநிடதத்தின் பத்தாம் பகுதியில் அவனின் துதி இடம் பெற்றுள்ளது. ஈசனே அனைத்திலும் இருக்கிறான். அவனே அனைத்தையும் நடத்துகிறான். அவனிடமிருந்தே அனைத்தும் உதயமாகின்றன. அவனே முடிவும் ஆகிறான். அதனால் ஒரு உபாசகன், தன் உபாசனையை பெரிதும் என்றும், மற்ற உபாசனையும், உபாயமும் சிறிதுமென தாழ்த்திப் பேச எந்தவொரு அதிகாரமும் இல்லை. அந்த மாபெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தையும் அதில் வாழும் உயிர்களின் உள்ளும் இருந்து ஆட்டுவிக்கிறது. அனைவருக்குள்ளும் இருக்கும். இந்த ஆத்மாவானது அவருக்கு ஏற்ற உபாசனை முறையால் தன்னை வந்து அடையச் செய்கிறது.

நாம ஜெபம் வழியாக துளசிதாசர், ஹனுமான், பிரகலாதனை இட்டுச் சென்றதுபோல ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரி, ஊத்துக்காடு வேங்கடகவி முதலியவர்களை சங்கீதம் மூலமாக இட்டுச் சென்றதுபோல. மௌனத்தின் முலம் ஆத்மாவை கண்டு கொண்ட சதாசிவ பிரம்மேந்திராள் போல ஒவ்வொரு ஜீவனையும் தன்னிடத்தே சேர்த்துக் கொள்கிறது. இவர்களின் உபாஸனை முறை வேறே தவிர அவர்கள் சென்ற இடம்  ஒன்றே.

‘அந்தர்முகி’ என்று பரதேவதையான லலிதா காமாட்சிக்கு ஓர் பெயர் உண்டு. இதற்குப் பொருள். அம்பிகையானவள் தன் பார்வையை உள்ளே இருக்கும் பரம புருஷனையே எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது. அத்தனை உபாசனை முறையையும் கடந்து சென்று (அந்தர்முகமாகவும்) - உள்முகமாகவும், (பஹிர்முகமாகவும்) - வெளிமுகமாவும், எல்லா

முமாகவும் இருந்து பார்க்கும் நிலையே சிவம் எனப்படும் நிலை.

சங்கீத உபாசனை முறையைக் கூறும்போது, சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீதியாகராஜ சுவாமிகளை சொல்லாமல் இருக்க முடியாது. சிவனே சங்கீதத்திற்கும் நாதன் எனக்கூறும் வகையாக ஒரு கீர்த்தனையை பாடியிருக்கிறார். தனக்கு சங்கீத ஞானத்தை அருளுமாறு வேண்டுகிறார். அந்த கீர்த்தனை ‘நாத தனும் அனிஷம்’ என்பது.

பல்லவியில்,  சங்கீத நாதத்திற்குத் தலைவனான சங்கரனுக்கு என் மனதையும். உடலையும் அளித்து வணங்குகிறேன் என்கிறார். அனுபல்லவியில், நான்கு வேதங்களில் சிறந்ததாக விளங்கும் சாமவேதத்தின் சாரமாக விளங்கும் மிகவும் உத்தமமான சங்கரனை வணங்குகிறேன் என்கிறார். சாமவேதம் சங்கீத முறையில் அமைந்த வேதம் என்பது

குறிப்பிடத்தக்கது.

சரணத்தில் - எவரானவர் சத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களை கொண்டிருக்கிறாரோ, அந்த ஐந்து முகங்களிலிருந்தும் மிகப் பெரிய கலையான (ச,ரி,க,ம,ப,த,னி) என்று ஏழு ஸ்வரங்களை பிறப்பித்திருக்கிறாரோ அவரை வணங்குகிறேன். யாரொருவர் காலனை வதம் செய்தாரோ. சுத்தமான இதயத்தைக் கொண்ட தியாகராஜனைக் காக்கின்றாறோ. அவரை வணங்குகிறேன். அவரிடம் சங்கீத ஞானத்தை வேண்டுகிறேன் என்று தியாகராஜ சுவாமிகள் பாடுகிறார்.அவர் பாடியதற்குப் பலனாக நாரதரானவர், சிவன் பார்வதி அம்மைக்கு உரைத்த சங்கீத ரகசியங்களை தியாகராஜ சுவாமிக்கும் உபதேசிக்கிறார்.

தொகுப்பு: ஹரீஷ் ராம்குமார்

Related Stories: