அறிந்த தலம் அறியாத தகவல்கள்

சீர்காழி, (சீகாழி)

பன்னிரண்டு பெயர்கள்

இத்திருத்தலத்திற்குப் பன்னிரண்டு திருப் பெயர்கள் உண்டு. தோணியம்புரம், பிரம்மபுரம், சீகாழி, வெங்குரு, புகலி, சிரபுரம், சண்பை, கொச்சை, வேணுபுரம், கழு மலம், புறவம், பூந்தராய் என்பவையே அவை. இப்பெயர்கள் வந்ததற்கான காரணங்களையும், தல புராணம் விவரிக்கிறது.

திருஞான சம்பந்தர் பாடிய 12 திருப்பெயர்கள்

திருஞான சம்பந்தர் திருஅவதாரம் செய்த ஞானபூமி இது. இங்கே அவதரித்த திருஞான சம்பந்தர், இத்தலத்திற்கான 12 பெயர்களையும் ஒரே பாடலில் பாடியிருக்கிறார்.

பூமகனூர் புத்தேளுக்கு இறைவன் ஊர்

குறைவிலாப் புகலி பூமேல்

மாமகளூர் வெங்குரு நல் தோணிபுரம்

பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்

சேமம் மிகு சிரபுரம் சீர்ப் புறவ நிறை

புகழ்ச் சண்பை காழி கொச்சை

காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர்

கழுமலம் நாம் கருதும் ஊரே

தீர்த்தங்கள் 12

பிரம்மதீர்த்தம், சூலதீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காளிதீர்த்தம், ராகுதீர்த்தம், வைணவ தீர்த்தம், ஆழிதீர்த்தம், சங்கதீர்த்தம், சுக்கிரதீர்த்தம், பராசரதீர்த்தம், அகத்தியதீர்த்தம், கௌதம தீர்த்தம் எனும் பெயர்கள் கொண்டவை அவை.

12 தீர்த்தங்களின் அமைவிடங்கள்

* பிரம்மதீர்த்தம்

இது திருநிலை அம்மன் சன்னிதானத்தில் உள்ளது. பிரம்மதேவரால் உண்டாக்கப்பட்டது. இதன் தென்கரையில்தான், திருஞான சம்பந்தருக்கு அம்பிகை, ஞானப்பால் ஊட்டினார்.

 

* சூலதீர்த்தம்

கோவிலுக்கு வடமேற்குத் திசையில் உள்ளது. சிவபெருமானின் சூலாயுதத்தால் உண்டானது. கான்ய குப்ஜ மன்னரின் சாபத்தைத் தீர்த்த தீர்த்தம். இப்போது ‘அரியப்பிள்ளைக் குளம்’ என்று அழைக்கப் படுகிறது.

* ஆனந்ததீர்த்தம்

ஆலயத்திற்கு மேற்கே அமைந்துள்ளது இது. சிவபெருமானின் திருக்கண்களின் ஆனந்த நீர்ப்பெருக்கால் உண்டானது. தற்போது ‘முதலியார் குளம்’ என அழைக்கப்படுகிறது.

* காளிதீர்த்தம்

கோயிலுக்கு மேற்கே அருகிலேயே உள்ளது. காளியால் உண்டாக்கப்பட்ட இத்தீர்த்தம், தற்போது ‘கரிக்குளம்’ என அழைக்கப்படுகிறது.

* ராகுதீர்த்தம்

கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது. ராகு தன் பெயரால் தீர்த்தம் உண்டாக்கி நீராடி, சிவபெருமானை வழிபட்டுத் துயர் தீர்ந்த இடம். இதைக் ‘கோடி தீர்த்தம்’ என்றும் கூறுவர். கலிங்க மன்னர் சிங்கேதனன் என்பவர் இதில் மூழ்கி, தன் குருத் துரோக பாவங்கள் நீங்கப்பெற்றார்.

* வைணவதீர்த்தம்

கோயிலுக்கு வட மேற்கில் உள்ளது. மகா விஷ்ணுவால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் இது.

* ஆழிதீர்த்தம்

இது ராகு தீர்த்தத்தின் வடக்கே உள்ள மாரியம்மன் சந்நதிக்கு எதிரில் உள்ளது. மகாவிஷ்ணுவால் உண்டாக்கப்பட்டது.

* சங்கதீர்த்தம்

சூரபத்மனுக்காக, சிவபெருமான் மூங்கிலாய் முளைத்தபோது உண்டாக்கிய தீர்த்தம்.

* சுக்கிரதீர்த்தம்

கோயிலுக்குத் தெற்கில், நீதிமன்றத்திற்கு வடக்கில் உள்ளது. சுக்கிராச்சாரியாரால் உண்டாக்கப்பட்டது.

* பராசரதீர்த்தம்

இது கோயிலுக்குள் பிரமேசர் ஆலயத்தில், வடக்குப் பிராகாரத்தில் உள்ளது. பராசர முனிவரால் உண்டாக்கப்பட்டது. தெய்வ மூர்த்தங்களுக்கு எல்லாம் அபிஷேகம் செய்யப் படும் தீர்த்தம் இதுவே. `பராசர கூபம்’ என்றும் அழைக்கிறார்கள்.  

* அகத்தியதீர்த்தம்

கோவிலுக்குக் கிழக்கில் உள்ளது.

* கௌதமதீர்த்தம்

இது அகத்திய தீர்த்தத்தின் அருகில் உள்ளது.

காணாமல்போன தீர்த்தங்கள்

இந்திரனின் நந்தவனத்திற்காக விநாயகரால் வருவிக்கப்பட்ட கழுமல நதி, சிபி சக்கரவர்த்தியின் தாகம் தீர்ப்பதற்காக, புறாவாக வந்த அக்கினி பகவான் கொண்டுவந்த, புறா நதி, அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், 18 புராணங்கள் உருவாக்கிய தீர்த்தங்கள் எனப் பல தீர்த்தங்கள் உண்டு. ஆனால், அத்தீர்த்தங்கள் எல்லாம் காணாமல் போய் விட்டன.

லிங்காடவி

இந்த ஊரைச்சுற்றிகின்னரர் (இசை வல்லுனர்), சித்தர்கள், தேவர்கள், நாகர்கள் எனப்பலரும் சிவ லிங்கங்களை அமைத்து வழிபட்டதால், ‘லிங்காடவி’ எனும் பெயரும் இந்த ஊருக்கு உண்டு.

திருஞான சம்பந்தருக்கு முருக அஷ்டோத்திரம்

இங்குள்ள திருஞான சம்பந்தருக்கு, முருகப்பெருமானுக்கு உண்டான அஷ்டோத்திரம் சொல்லியே, அர்ச்சனை செய்கிறார்கள்.

திருஞான சம்பந்தருக்கு முருக அஷ்டோத்திரம் ஏன்?

திருஞான சம்பந்தருக்கு, முருக அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதைப் பார்த்தோம் அல்லவா? இதை அருணகிரிநாதர் மேலும் உறுதிப்படுத்துகிறார். முருகன் வேறு; ஞானசம்பந்தர் வேறு அல்ல; இருவரும் ஒருவரே என அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். அவற்றில் ஒருசில;

மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர

மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்

வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே

(அலைகடல்-திருப்புகழ்)

கருத்து: சீர்காழியில், திருஞானசம்பந்தராக வந்த முருகப்பெருமானே - எனப் பாடிய பாடல் இது.  

       

முத்தமிழாகரனே புகழ்

தெய்வீகப்பர மாகுரு வேயென விருதூத

திய்யாரக்கழு வேறிட நீறிடு

கையா அற்புதனே பிரமாபுர

செய் காழிப்பதி வாழ் முருகா சுரர் பெருமாளே

(ஒய்யாரச்சிலை-திருப்புகழ்)

கருத்து: முத்தமிழாகரன், தெய்வீக பரமன், குரு என்றெல்லாம் விருதுகள் ஊத; சமணர்கள் கழுவேறும்படியாக திருநீறு இடும் கையா! அற்புதனே!  என்றெல்லாம் திருஞானசம்பந்தரின் செயல்களை முருகப்பெருமான் செய்ததாகச்சொல்லி, இருவரும் ஒன்றே எனும் திருப்புகழ் இது.

சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து

சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்  

தீரத்திரு நீறு புரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று

தீமைப்பிணி தீர வுவந்த குருநாதா

(ஊனத்தசை-திருப்புகழ்)

கருத்து: மதுரையில், ஞானத்தமிழ்ப் பாடல்கள் பாடி, சமணர்கள் கழுவில் ஏறும்படியாக, பாண்டிய மன்னரின் உடல் கூனல் நீங்கத் திருநீறு தந்த குருநாதர் முருகப்பெருமான் எனும் பாடல் இது.

வெட்கா மற்பாய் சுற்றூமர்ச்சேர்

விக்கானத்தைத் தரி மாறன்

வெப்பா றப்பா டிக்கா ழிக்கே புக்காய்

(கட்காம-திருப்புகழ்)

கருத்து: பாண்டிய மன்னரின் வெப்பு நோய் தணியும் படியாக `மந்திரமாவது நீறு’ எனும் திருப்பதிகம் பாடி, சீகாழியில் புக்கிருந்தாய் - எனத் திருஞான சம்பந்தரின் செயல்களை, முருகப்பெருமான் செய்ததாகச்சொல்லி, இருவரும் ஒருவரே எனும் பாடலிது.

கள சமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு

கருணை கொள் பாண்டி நாடு பெற வேத

கவி தரு காந்த பால கழுமல பூந்தராய

கவுணியர் வேந்த தேவர் பெருமாளே   

(தினமணி-திருப்புகழ்)

கருத்து: முன் சொன்ன அதே தகவல்களை மறுபடியும் கூட்டிச் சொல்லி, முருகனும் திருஞானசம்பந்தரும், ஒருவரே என அழுத்தமாகச் சொல்லும் பாடல் இது.

ஆதிரையும்  ஆளுடைப்பிள்ளையும்

அம்பிகையின் ஞானப் பால் உண்ட, ஆளுடைப்பிள்ளையார் என்று அழைக்கப்பட்ட, திருஞான சம்பந்தர் அவதரித்தது திருவாதிரையில். அவர் ஞானப் பால் உண்டது, திருவாதிரையில். அவர் முக்தி அடைந்ததும், திருவாதிரையில்.

திருமுலைப்பால் உற்சவம்

அம்பிகை திருஞானசம்பந்தருக்கு ‘ஞானப்பால்’  ஊட்டிய நிகழ்ச்சி, இங்கே சீகாழியில் ‘திருமுலைப்பால் உற்சவம்’ என்ற வைபவமாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பார்கள். ஒவ்வொருவர் கையிலும் சிறு பாத்திரங்களில் பால் இருக்கும். வசதி படைத்தவர்கள் வெள்ளிப்பாத்திரங்களில் பால் கொணர்ந்திருப்பார்கள். உற்சவ மூர்த்திகளான தோணியப்பர் - பெரிய நாயகி இருவரும், இருபெரும் சப்பரங்களில் வெளியில் வருவார்கள். அதே சமயம் திருஞான சம்பந்தரும், அவருக்கான ஒரு சிறிய அழகான பல்லக்கில் வெளியே வருவார்.

அப்போது, அன்னை பெரிய நாயகியை திருஞான சம்பந்தரின் பல்லக்கு அருகில் கொண்டு வருவார்கள். அன்னையின் மடிமீது வெள்ளிக்கிண்ணத்தில் இருக்கும் பாலை எடுத்து, அர்ச்சகர் திருஞானசம்பந்தருக்கு ஊட்டுவதாகப் பாவனை செய்வார். அதே நேரத்தில், கூடியிருக்கும் ஆயிரக் கணக்கான அடியார்களும் தங்கள் கைகளில் உள்ள பால் சொம்புகளைத் தலைக்கு மேல் தூக்கியவாறே ‘அரன்’ நாமம் சொல்லி நைவேத்தியம் செய்வார்கள்.

அதன் பின்,அந்தப் பாலைத் தாமும் உண்டு அடுத்தவர்க்கும் கொடுப்பார்கள். இந்த வைபவத்தை நேரில் தரிசித்த அமெரிக்கப் பத்திரிகையாளர் வியந்து சொன்னது, ‘‘என்ன அருமையான அனுபவம்! அழுத்தமான நம்பிக்கை! பக்தி, நம்பிக்கையை வளர்க்கிறது உள்ளத்தில். அந்த நம்பிக்கை, பக்திக்கு ஊன்றுகோலாய் இருந்து உதவுகிறது’’ என்றார்.

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Related Stories: