கலைகளெல்லாம் அள்ளித் தருபவளே! வேதத்தின் உள் நின்று ஒளிர்பவளே!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது

4-10-2022: சரஸ்வதி பூஜை  5-10-2022: விஜய தசமி

கலையாவும் தந்தருளும் கலைமாமணியான கலைமகளின் அருள் நிலை குறித்து ஆயிரமாயிரம் செய்திகள் உண்டு. அதில், முத்தான முப்பது செய்திகளை இத்தொகுப்பில் உங்கள் முன் படைக்கின்றோம்.

1. மூன்று தேவியரும் ஒன்றா?

நவராத்திரியில் அலைமகள், கலைமகள், மலைமகள் என மூவருக்கும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. தனித்தனியாக பிரித்து மூன்று மூன்று நாட்களாகக்  கொண்டாடப்பட்டாலும், தேவியர்கள் ஒருவருக்குள் ஒருவராக இருந்து, கல்வி செல்வம் வீரம் என மூன்றையும் அளிக்கின்றனர். துர்க்கை தசமகா வித்தைகளில் அமர்ந்து சகல கலைகளையும் ஒருவருக்குத் தருகிறாள். அதைப்போலவே திருமகளான மகாலட்சுமி வித்யா லட்சுமி எனும் சரஸ்வதி ரூபமாக ஒருவருக்கு கல்வி நலனைத் தருகின்றாள்.

2. கல்வியா, செல்வமா, வீரமா?

மலை அசையாதது. வீரமும் அசையாது. மலைமகள் பார்வதி அசைவற்ற வீரத்தைத் தருகிறாள். செல்வம் திருமகளுக்கு உரியது. அசைவுடன் கூடியது. சென்று கொண்டே இருப்பதால்தான் அதற்கு செல்வம் என்று பெயர். ஆனால், கல்வி நிலையாக இருப்பதால் அசைவற்றதாகவும் நிலை நின்றதாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் கல்வி  ஒருவருக்கு ஒருவர் நீரோட்டம் போல கற்பிக்கப்படுவதால் சென்றுகொண்டே இருக்கிறது.

கல்வி இல்லாவிட்டால் வீரம் இருந்தும் பயன்படாது. புத்தி இல்லாத பலம் பிரயோஜனம் இல்லாதது. அதைப்போலவே, பயன்படுத்தத் தெரியாதவனிடம் செல்வம் இருந்தால் அது அவனை அழித்துவிடும். எனவே கல்விதான் பிரதானமானது என்பதால் முப்பெரும் தேவியர்களும் வித்தை எனப்படும் கல்வியை அளிப்பதில் முன்நிற்கின்றனர். அதில், கல்விக்கே ஒரு வடிவம் என்பதால், கலைமகள் வடிவமாக நம்முடைய முன்னோர்கள் வைத்தனர்.

3. கலைமகளுக்கு என்ன சிறப்பு?

கலைமகள் என்றால் என்ன பொருள்? கலைமகள் = கலை + மகள். படைப்பே (Creativity) ஒரு கலைதானே. அதனால் படைக்கும் கடவுளான நான்முகனின் நாவில் அமர்ந்தவள். அதனால் கலைமகளுக்கு நா மகள் என்றும் பெயர். சகல கலைகளும், கல்வியும், ஞானமும் அருளும் தெய்வமானதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள். வித்யா தேவதை என்று சொல்வார்கள். யாரை உபாசித்தால் கலைகளெல்லாம் ஒருவருக்கு வசப்படுமோ அந்த கலைகளுக்கு அதிதேவதை என்பதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள்.

4. சரஸ்வதி

நிறைந்தகல்வியின் அடையாளங்களை நிரல்பட தொகுத்தால் தேவியின் திருவுருவம் நம் மனதை கொள்ளை கொள்ளும். வெள்ளைத்தாமரையில், வெண் பட்டாடை அணிந்து, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள். அதாவது ஒரு திருவடி மடக்கியும், ஒரு திருவடி தொங்கவிட்டபடியும் அமர்ந் திருப்பாள். நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், தலையில் சடா மகுடமும் தரித்திருப்பாள். அனைத்து விதமான அணிகலன்களும் அணிந்திருப்பாள்.

5. நதியாக விளங்கும் நாயகி

வேத காலம் தொட்டு சரஸ்வதிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வீணையை வைத்திருப்பதால் வீணாவாதினி என்றும், நாடிச் சுவடிகளை வைத்திருப்பதால் புஸ்தக வாணி  என்றும் வழங்கப்படுகிறாள். வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. சரஸ்வதி என்னும் சமஸ்கிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ரிக் வேதம் சரஸ்வதியை எதையும் தூய்மைப்படுத்துபவளாகக் கருதுகிறது. மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

6. வேத உபநிடதங்களில் சரஸ்வதி

ரிக் வேதத்தின் 2.41.16-ஆம் பாடல் ‘அம்பிதமே நதீதமே தேவிதமே சரஸ்வதி அப்ரசஸ்தா இவ ஸ்மஸி ப்ரசஸ்திம் அம்ப நஸ் க்ருதி’ என்று சரஸ்வதியை இருகரம் கூப்பித் தொழுதழைக்கிறது. பேச்சாற்றலைத் தரும்படி வேண்டுகிறது. ரிக் வேதத்தில் தான் சரஸ்வதி ஸூக்தம் எனும் பிரத்தியேகமான மந்திரங்கள் உள்ளன. அதில் நல்ல எண்ணங்கள் தேவர்களாகவும் கெட்ட எண்ணங்கள் அசுரர்களாகவும் உருவகப் படுத்தப்பட்டிருக்கின்றன.

கெட்ட எண்ணங்களை அழிக்க வேண்டும். நல்ல எண்ணங்கள் வளர வேண்டும் என்று சொன்னால் முதலில் எது நல்ல எண்ணம் எது கெட்ட எண்ணம் என்று பகுத்தறியும் அறிவு வேண்டுமல்லவா அந்த அறிவைத் தர வேண்டும் என்று சரஸ்வதி தேவியை இந்த சூக்தம் வேண்டுகிறது. ரிக்வேதம் தவிர மற்ற மூன்று வேதங்களிலும் தைத்திரீய உபநிஷத் போன்ற உபநிடதங்களிலும் சரஸ்வதிதேவியைப் பற்றிய மந்திரங்கள் உள்ளன.

7. புராணங்களில் கலைமகள்

சரஸ்வதி தேவியை நதியாக ஆவாஹணம் செய்கின்றனர். சரஸ்வதிநதியைத் நினைத்து வணங்குவதே சரஸ்வதி பூஜையாகின்றது. ஒரு முறை உலகத்தில் பெரும் போர் நடைபெற்றது. அப்பொழுது பல கடுமையான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன. அதிலிருந்து வெளிப்பட்ட பயங்கரமான வெப்பம் உலகத்தைச் சுட்டெரித்தது. இப்பொழுது நாம் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என்று நவீனகாலத்தில் சொல்லுகின்றோமே, அதைப் போலவே பழங்காலத்தில் கடுமையான வெப்பத்தைத் தரக்கூடிய ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன என்பதை இந்த புராண நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். அந்த கடுமையான அக்கினியை தணிக்கும் பொறுப்பு சரஸ்வதி தேவிக்கு வழங்கப்பட்டது.

அவள், பெரிய நதியாக வடிவெடுத்து, இந்த அக்கினியை கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிட்டாள் என்று புராணம் கூறுகிறது. சரஸ்வதிதேவி நதி தேவதையாக வழிபடப்பட்ட செய்திக்கு இந்த புராணநிகழ்வு ஆதாரமாக விளங்குகிறது. கலைமகளே நாற்பத்தி ஒன்பது புலவர்களாக தமிழ்ச்சங்கத்தில் வீற்றிருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம்.

8. கலைமகளின் வெவ்வேறு பெயர்கள்

ஓங்காரஒலியில் உறைந்திருப்பவளும், நாத மயமான இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறைவிடமாகவும், நினைவின் நிறைவிடமாகவும், சகல மொழிகள் மற்றும் எழுத்தின் வடிவமானவளும், அறிவியல், ஜோதிடம் போன்ற அனைத்துக் கலைகளின் ஒருமித்த முழு வடிவமாகவும் விளங்கும் கலைமகளுக்கு பற்பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில நாமங்கள்: பத்மாக்ஷி,விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, சௌதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப் பல பெயர்கள் உள்ளன. கிளத்தி, நாமகள், நாமடந்தை, நாமாது, வாணி, திருமகள், கல்யாணி, கானமனோகரி, சரஸ்வதி, பாரதி, மாதவி, மாலினி, வாணி.

9. கலைமகள் குடியிருக்கும் இடங்கள்

தேவிபாகவதம், கல்வி நிலையங்கள், நூலகங்களை கலைமகள் குடியிருக்கும் இடங்களாகச் சுட்டிக் காட்டுகிறது. அறிவும் ஆற்றலும் நிறைந்த இடத்தில் கலைமகள் வீற்றிருப்பாள். எண்ணும் எழுத்தும் அறிந்தவர் இதயத்தில் கலைமகள் எழுந்தருளி இருப்பாள். குருவாய்த் திகழ்பவர்கள், குருவின் நல்ல சீடர்கள், நல்லவற்றையே பேசும் “நா”  உடையவர்களிடத்தில் சரஸ்வதி வீற்றிருப்பாள். வேதம் பயிலும் இடம், நாதம் ஒலிக்கும் இடம், நடனக் கலைகள் சிறக்கும் இடம், கீதம் இசைக்கும் இடம், போன்ற இடங்கள்  எல்லாம் கலைமகள் விரும்பி குடியிருக்கும் இடங்களாகும். நான்கு நல்ல புத்தகங்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் கலைமகளின் சாந்நித்தியம் இருப்பதாகவே பொருள்.

10. வசந்த பஞ்சமி

சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம். ஞான காரகனாகிய கேதுவின் நட்சத்திரம். பரம பண்டிதனும் சொல்லின் செல்வனும் ஆன அனுமனின் நட்சத்திரமும் மூலம். சரஸ்வதிக்குரிய திதி நவமி. ஆனால் அவளுடைய அவதாரம் வசந்த பஞ்சமியில் நிகழ்ந்ததாகக் கருதுவது உண்டு. அதனால் வடக்கே உள்ளவர்கள் வசந்த பஞ்சமியை சரஸ்வதி பூஜை தினமாகக் கொண்டாடுகின்றனர்.

11. சரஸ்வதி சப்தமி

சப்தமி திதி கல்விக்கும் சரஸ்வதிக்கு உரிய நாள். நவராத்திரியில் சப்தமி நாளில் இருந்து சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதியை ஆவாகணம் செய்யும் அந்த நாளை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அதாவது சப்தமி, அஷ்டமி, நவமி கலைமகளுக்கு உரிய நாள்கள்.

12. சாரதா நவராத்திரி

சாக்த ஆகமங்கள், பிரதி மாதமும் வளர்பிறை பிரதமையில் தொடங்கி நவராத்திரி உற்சவத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொல்வதாக பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். ஆயினும் அதில் நான்கு நவராத்திரிகள் மிக முக்கியமாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு நவராத்திரிக்கும் பிரதான தேவதைகள் உண்டு.

1. ஆஷாட நவராத்திரி - வாராகி தேவி,

2. சாரதா நவராத்திரி - துர்கா, லட்சுமி, சரஸ்வதி,

3. சியாமளா நவராத்திரி - இராஜ மாதங்கி தேவி,

4. வசந்த நவராத்திரி - லலிதா திரிபுரசுந்தரி

வஸந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது, ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) தை மாதத்தில் கொண்டாடப்படுவது, சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). சரத் ருது வான புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது, சாரதா நவராத்திரி. சாரதா என்பது கலைமகளின் பெயர். முப்பெரும் தேவியருக்கும் இந்த நவராத்திரியில் சிறப்பு உண்டு என்றாலும், தென்னகத்தில் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை பிரதானமாகக் கொண்டாடுவது இந்த நவராத்திரியில் தான்.

13. கலைமகளின் ஆலயங்கள்

தமிழ்நாடு தவிர, உலகெங்கிலும் வெவ்வேறு பெயர்களில் கல்விக்கடவுளான சரஸ்வதி தேவிக்கு ஆலயங்கள் உண்டு. இந்த ஆலயங்கள் தனிக் கோயிலாகவும் இருக்கலாம். தனிச்சந்நதிகளாகவும் இருக்கலாம். அல்லது கோஷ்ட தெய்வங்களாகவும் இருக்கலாம். சரஸ்வதி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தமிழ்நாடு கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயம். இது தவிர கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.

ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது. காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் `சர்வஜ்ன பீத’ என்ற ழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது. திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு `பென்சய்-டென்’ எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.

திருவீழிமிழலை திருத்தலத்தில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி ஆகிய மூன்று தேவியரும் தனித்தனியே சிவலிங்கம் ஸ்தாபித்து சிவபூஜை செய்தனர். இவர்கள் வழிபட்ட லிங்கத் திருமேனிகள் முறையே சரஸ்வதீஸ் வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என வழங்கப்படுகின்றன.

திருமயிலை கபாலீச்சரம், அம்பிகை மயிலாக வந்து இறைவனை வழிபட்ட தலம் என்பது தெரியும். இதே தலத்தில் சரஸ்வதிதேவியும் இந்திராணியும் சிவவழிபாடு செய்துள்ளார்கள். அவர்கள் வழிபட்ட லிங்கத்திருமேனி அருளும் கோயில் காரணீசுவரம். இன்னும் நூற்றுக்கணக்கான சரஸ்வதி தேவியின் ஆலயங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

14. வைணவத்தில் கலைமகள்

 

வைணவக்கோயில்களில் சரஸ்வதி பூஜை உட்பட நவராத்ரி உற்சவம் தாயார் சிறப்பு உற்சவமாக நடைபெறும். “மகா நவமி உற்சவம்” என்று இந்த உற்சவ முறை அனந்தாக்கிய சம்ஹிதையில் விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது. புரட்டாசி (பாத்ரபத மாதம்) மாதத்தில் வளர்பிறை பிரதமை திதி முதல் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் இவ்வுற்சவத்தை, பிரம்ம உற்சவம் போலவே கொண்டாட வேண்டும் என்று வைணவ ஆகம நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது நாட்களும் தாயார் புறப்பாடு நடக்கும். கொலு மண்டபத்தில் உற்சவ வைபவங்கள் நடைபெறும். பெருமாள் விஜய தசமி அன்று குதிரையில் ஏறி, பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆன பிறகு, வேட்டை உற்சவம் தொடங்குகிறது. விஜயதசமி அன்று வன்னிமரத்தை பூஜிக்க வேண்டும். அன்று வன்னி மரத்தில் அம்பு போட வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

வைணவத்தில் சரஸ்வதி தேவி பெருமாளின் உந்திக்கமலத்தில் உதித்த நான்முகனின் துணைவியாகக் கருதப்படுவதால் (நாராயணன் நான் முகனைப் படைத்தான் என்பது நான்முகன் திருவந்தாதி) பெருமாளின் மருமகள் ஆகிறாள். நவராத்திரி உற்சவங்களில் ஒரு நாள் பெருமாள், வெண்பட்டாடை உடுத்தி, கையில் வீணையை வைத்துக் கொண்டு, கலைமகளின் கோலத்தில் காட்சி தருகின்றார். இது தவிர காஞ்சிபுரத்து திவ்ய தேசங்களில் சரஸ்வதிதேவி குறித்து பல செய்திகள் தல புராணங்களில் இருக்கின்றன.

15. அத்வைதத்தில் கலைமகள்

வட தேசத்திலும் தென் தேசத்திலும், வேதாந்த விஷயத்திலும், கலைகளிலும், ஆன்மீக விஷயத்திலும் பல ஒற்றுமைகள் உண்டு. வடக்கே காசி என்ற திருத்தலம் இருப்பதுபோலவே தெற்கே தமிழ்நாட்டில் தென்காசி என்று ஒரு திருத்தலம் உண்டு. வடக்கே பாடலிபுத்திரம். தெற்கே கடலூர் திருப்பாதிரிப்புலியூர் (பாடலிபுத்திரம்). வடக்கே வடமதுரை இருப்பது போலவே தெற்கே தென்மதுரை இருக்கிறது. வடக்கே காஷ்மீரம். தெற்கே தட்க்ஷிண காஷ்மீரம் எனப்படும் காஞ்சி மாநகரம்.

அத்வைத ஆச்சாரியரான ஆதிசங்கரர், கலைமகளைப் போற்றி வணங்குபவர். சாரதா பீடத்தை (காமகோடி) ஏற்படுத்தியவர். அதனால் அத்வைத ஆச்சாரியார்களுக்கு சரஸ்வதி என்ற பட்டப்பெயர் இணைந்தே வரும். கலைமகளுக்கு சரஸ்வதி என்ற திருநாமம் இருப்பது போலவே பாரதி என்ற திருநாமமும் உண்டு. சிருங்கேரி சாரதாபீடம் அத்வைத ஆசாரியர்களுக்கு பாரதி என்ற கலைமகளின் பெயர் இணைந்து வரும்.

16. கம்பனும் கலைமகளும்

குமரிமாவட்டம், பத்மநாபபுரத்தில் தனிக்கோயிலில் அருள்புரியும் சரஸ்வதி தேவியை கவிச்சக்ரவர்த்தி கம்பர் வழிபட்டார் என்கிறது வரலாறு. கவிச் சக்கரவர்த்தி கம்பர் ராமாயணத்தை எழுதி பெரும்புகழ் பெற்றவர் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இதைத் தவிர அவர் பல தமிழ் நூல்களையும், தனிபாடல்களையும் இயற்றி இருக்கின்றார். அவர் இயற்றிய இரண்டு

அந்தாதி நூல்கள் உண்டு. ஒன்று தன்னுடைய குருவாகக் கருதிய நம்மாழ்வார் மீது இயற்றிய சடகோபர் அந்தாதி. அடுத்து கலைவாணி சரஸ்வதி தேவியின் மீது இயற்றிய சரஸ்வதி அந்தாதி. சரஸ்வதி அந்தாதியில் உள்ள செய்யுள்கள் அதி அற்புதமாக இருக்கும். சரஸ்வதிதேவியின் வணங்கத்தக்க திருவுருவை வர்ணிக்கும் வார்த்தைகள் நம் எண்ணத்தைக் கொள்ளைகொள்ளும்.

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை-தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின்

உள்ளே

இருப்பளிங்கு வாரா(து) இடர்.

படிகநிறமும் பவளச் செவ் வாயும்

கடி கமழ்பூந் தாமரைபோற் கையும் -

துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும்சொல் லாதோ கவி.

இதில் கலைமகளைப் பற்றிச் சொல்லும் செய்திகள் அதிகம். அறுபத்தி நான்கு கலைகளுக்கும் அவள்தான் அன்னை. அவள் அறிவு மயமாக உள்ளத்தில் இருந்தால் துன்பம் என்னும் இருள்மயம் விலகும். இடர்கள் வராது. அதுமட்டுமல்ல அவளுடைய அற்புதமான திருவுருவத்தை மனதில் இருத்தி வணங்கினால், அசையாத கல்கூட, எல்லோரையும் இசைவிக்கும் கவிபாடும். எனவே ஒருவன் கல்வியில் வல்லவனாக வேண்டும் என்று சொன்னால், நாமகளின் நல்லருள் வேண்டும் என்பது கம்பர் வாக்கு.

17. காளிதாசனும் கலைமகளும்

கல்வியையும், கவி பாடும் திறனையும், அறிவையும், ஞானத்தையும் வழங்கும்வடிவத்திற்கு சரஸ்வதி தேவி என்ற பெயர். கலைவாணி என்றும்பெயர். அதை மகாலட்சுமி வழங்கும் பொழுது அவளை ஸ்ரீவித்யா லட்சுமி என்று வணங்குகிறோம். பராசக்தி அல்லது மகாகாளி வழங்குகின்ற போது அவளை சியாமளா என்று வணங்குகின்றோம். காளிதாசனுக்கு வாக்கு வன்மையைத் தந்தவள் சியாமளா தேவி. அவள் மேல் பாடிய முதல் துதி ஸ்ரீ சியாமளா தண்டகம். இருபத்தாறுக்கும் மேலான எழுத்துக்களைக் கொண்ட பத்திகளை உடைய கவிதை “தண்டகம்” எனப்படுகிறது. அதிலேயே காளிதாசர் கல்விக் கடவுளான சியாமளா தேவியை கலைமகளின் இடத்தில் வைத்து வருணிக்கிறார்.

மாணிக்ய வீணாம் முபலாலயந்தீம்

மதாலஸாம் மஞ்சுளவாக் விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமளாங்கீம்

மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி

மாணிக்கக்கற்கள் இழைத்த அருமையான

வீணையை மடியில் வைத் திருப்பவளே.!

தெளிவும் சுறுசுறுப்பும் நிறைந்தவளே!

இனிய சொற்களைப்பேசும் குரல் அழகு உடையவளே அற்புதமான நீலமணியின் ஒளி வாய்ந்த மெல்லிய மேனி உடையவளே! மதங்க முனிவரின் திருமகளே! உன்னை நான் வணங்குகின்றேன் என்பது முதல் ஸ்லோகத்தின் பொருள்.இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் லயிக்கச் செய்து வெற்றி பெற முடியும். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற சியாமளா தண்டகத்தின் இந்த ஒரு ஸ்லோகத்தைத் தினசரி பூஜை அறையில் பாட வேண்டும்.

18. ஹயக்ரீவரும் கலைமகளும்

கல்விக்குத் தேவதை சரஸ்வதி. சரஸ்வதிக்கு, குரு யார் தெரியுமா? ஹயக்ரீவர். ஹயக்ரீவர் அவதாரம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும். முன்பு ஒரு நாள் வேதங்களின் துணைகொண்டு, பிரம்மா தனது படைப்புத் தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களை பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேதங்களைப்பெண்குதிரை வடிவில் உருமாற்றி பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். வேதங்கள் இல்லாமல் உலகம் இருள் சூழ்ந்தது. பிரம்மா திகைத்தார். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார்.

மஹாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அற்புதமான வடிவம் எடுத்தார். அந்த வடிவம்தான் ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

மத்வ ஸம்ப்ராயதத்தில் ஸ்ரீவாதிராஜ

ஸ்வாமிகள் ஹயக்ரீவ உபாசகராக விளங்கி புகழ் பெற்றார்.  

அவருடைய ஸ்லோகம் இது. நாளும் சொல்ல வேண்டும்.

``ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படி

காக்ருதம்

ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம்

உபாஸ்மஹே’’

ஹயக்ரீவருக்கும் சரஸ்வதிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தையும் உடையவர்கள். சகல கல்விக் கலைகளுக்கும் ஆதாரமுமானவர்கள். சரஸ்வதி பூஜையன்று அவர் குருவான ஹயக்ரீவரையும் வணங்க வேண்டும்.

19. தட்சிணாமூர்த்தியும் கலைமகளும்

 சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சரஸ்வதி ஞானமூர்த்தி. தட்சிணாமூர்த்தியும் ஞான வித்தையை அருள்பவர். சர்வ கலைகளுக்கும் பிரபு அவர். மேதா தட்சிணாமூர்த்தி அறிவு வெளிச்சத்தையும் வாக்கு வன்மையையும் அருளும் தெய்வமாக இருக்கிறார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி என இருவருமே அட்ச மாலை, சுவடி இவற்றோடு சந்திரகலையைத் தலையில் தரித்து காட்சி தருகிறார்கள். சரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்தியைப்போல நெற்றிக்கண் உண்டு.

அது காமத்தை எரித்து ஞானத்தை உணர்த்தும். இரண்டு தெய்வங்களுக்கும் ஜடாமகுடம் உண்டு. இருவருமே சுத்தமான வெண்மையை விரும்புபவர்கள். அதனால்தான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கும் ஸ்படிக மாலையை இருவரும் கையில் வைத்திருக்கிறார்கள். இரண்டு தெய்வங்களையும் வணங்கினால் ஞானம் தானே வந்தடையும். ஞானம் வந்தால் உள்ளம் நிறைவுபெற்று, அடங்கி, சாந்தி பெறும்.

20. ராமாயணத்தில் நவராத்திரி

இராமாயணத்திற்கும் நவராத்திரிக்கும் தொடர்பு உண்டு. ராம்லீலா என்பது துளசி தாசர் எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள இராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும். தொடர்ந்து 31 நாட்களுக்கு மாலைநேரத்தில் நடைபெறும், விழாவின் இறுதிநாளில் சூர சம்ஹாரம் போல ராவண சம்ஹாரம் நடைபெறும். ராவண உருவத்தை பெரிய பொம்மையாகச்செய்து அதனை தீயிட்டு அழிப்பார்கள். வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெறும். இந்த விழா நவராத்திரியில் நடை பெறும். இது ஒரு கலை விழாவாக நடப்பதால் கலை தேவதையான கலைமகளுக்கும் இடமுண்டு. தற்போது மேற்குலக நாடுகளிலும் இராம லீலை வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

21. வியாசரும் சரஸ்வதியும்

மகாபாரதத்தை வியாசர், சரஸ்வதியின் அருளால் எழுதினார். அதற்காக அவர் வடக்கே என்ற குகையில் தங்கி இருந்து எழுதினார் என்பார்கள். ஒன்றின் பின் ஒன்றாக எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே இந்த மலை அடுக்குகளாக இருக்கும். எனவே இந்த மலைக் குகைக்கு வியாச புஸ்தக் (புத்தகம்) என்று பெயர்.

22. மகாபாரதத்தில் ஆயுதபூஜை

மகாபாரதத்தில் ஆயுத பூஜை குறித்து இன்னொரு செய்தியும் உண்டு. மகாபாரதத்தில் பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து வாழும் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் விராடதேசத்தில் வேலைக்காரர்களாக இருந்தனர். அவர்களை எப்படியாவது கண்டு பிடித்து மறுபடியும் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று துரியோதனன் மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

அப்போது, ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் விராட தேசத்தில் மறைந்து இருக்கிறார்கள் என்பதை ஊகித்து, அந்த நாட்டின்மீது படையெடுத்தான். அங்கு பெண் வேடம் பூண்டு இருந்த அர்ஜுனன் விராடனின் மகனான உத்தரனை முன்னிறுத்தி தேரில் வருகின்றான். அந்த ஊர் மயானத்தில் உள்ள வன்னிமரத்துப் பக்கம் தேரைச் செலுத்தி, அம்மரத்தின் மீது மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை எடுக்கின்றான். அப்பொழுது அந்த ஆயுதங்களுக்கு, ஒரு படையல் போட்டு விட்டு, போர் செய்யத் தொடங்குகிறான். இது மகாபாரதத்தில் நாம் காணும் ஆயுத பூஜை விழா.

23. குமரகுருபரரும் கலைமகளும்

குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். கலைமகளின் அருளைப்பூரணமாகப் பெற்றவர். வாய் பேச முடியாத குறையுடன் பிறந்த இவர் திருச்செந்தூர் முருகன் அருளால் அக்குறை நீங்கப் பெற்று பாடல் புனையும் வல்லமையைப் பெற்றவர். அவர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அங்கே தமிழ் வளர்க்க ஒரு திருமடம் கட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்பொழுது அரசாண்டு கொண்டிருந்த டெல்லி பாதுஷாவின் ஆளுநரை சந்திக்கச் சென்றார். தமிழைத் தவிர வேறு அறியாத குமரகுருபரருக்கு, அரச பிரதிநிதிகளோடு பேசும் பன்மொழி ஆற்றல் அருள வேண்டும் என்று பாடிய நூலே சகலகலாவல்லிமாலை. இதன் மூலம் பல மொழிகளிலும் பேசும் ஆற்றல் ஏற்பட்டது. இந்த சகலகலாவல்லி மாலையைப் படித்தால் குழந்தைகளுக்கு பன்முக ஆற்றலும், பன்மொழித்திறமையும் ஏற்படும் என்பது கண்கூடு.

24. பன்மொழி ஆற்றலைத் தருவாள் சரஸ்வதி

 

சகலகலாவல்லி மாலையில் ஒரு அற்புதமான பாடல் இது. இதில் குமரகுருபரர் சரஸ்வதியை எப்படிப் போற்றுகின்றார் பாருங்கள்.

அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமுது

ஆர்ந்து உன் அருள் கடலில்

குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?

உளம் கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர்

கவிமழை சிந்தக் கண்டு

களிக்கும் கலாப மயிலே!

சகல கலாவல்லியே!

மழை பொழிகிறது. அந்த நேரத்தில் மயில் தோகை விரித்து மகிழ்ந்து ஆடுகிறது. அதைப் போல கற்றுத்தேர்ந்த புலவர்கள் கவிதைகளை மழையாகப் பொழியும்பொழுது  சரஸ்வதிதேவி களிப்படைகிறாள். அப்படிப்பட்ட கலைவாணியே! நீ எளியேனுக்கு உன் அருட் கடல் எனும் ஆன்மிக அனுபவத்தைப் பெற்று அதில் மூழ்கும் அனுபவத்தை எனக்குத் தரலாகாதா?

இந்தப் பாடலை தினமும் ஒரு முறை மனமுருகிப் பாடினாலே கலைமகளின் அருள் கிடைக்கும். மொழித் திறமை சிறக்கும்.

25. ராகங்களில் கலைமகள்

இசைக்கு அதிபதி சரஸ்வதிதான். வாக்கு, குரல் முதலியவற்றை ஆளும் தெய்வமும் அவள்தான். எனவே சரஸ்வதியின் பெயரிலேயே ஒரு ராகம் உண்டு. அதற்கு சரஸ்வதி ராகம் என்று பெயர். இந்த ராகத்தை ஸ்ரீகல்யாணி என்று ஹிந்துஸ்தானியில் அழைப்பார்கள். முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற மகான்கள் சரஸ்வதி மீது பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இந்த ராகத்தில் பாபநாசம் சிவன் இயற்றிய பாடல் சரஸ்வதி தேவியின் சகல குணங்களையும் நமக்குக் கண்ணாடி போல் காட்டுகிறது.

சரஸ்வதி தயைநிதி! நீ கதி!

தண்ணருள் தந்தருள்வாய் பாரதி! (சரஸ்வதி)

கரமலர் மிளிர் மணி மாலையும் வீணையும்

கருணை பொழியும் கடைக் கண்ணழகும் வளர் (சரஸ்வதி)

நின்னருள் ஒளி இல்லையானால்-மன இருள்

நீங்குமோ! சகல கலை மாதே-வெள்

ளன்ன வாஹனி வெண் கமல மலர் வளரும்

வாணி வெள்ளைக் கலையணி புராணி! (சரஸ்வதி)

இது தவிர வாகதீஸ்வரி என்ற ராகமும் அவளைக் குறிப்பிடுகிறது. வீணா வாதினி என்றொரு ராகமும் கலைமகளின் பெயரில் அமைந்திருக்கிறது. எனவே சரஸ்வதி தேவியை வணங்கி இசைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

 

26. எப்படி வழிபட வேண்டும்?

சரஸ்வதியை வெண்ணிற மலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். கல்விக்குரிய பொருட்களையும் பூஜையில் வைப்பர். முடிந்தவர்கள் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம் மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றை சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதம் செய்து வழிபட்டால், கலைமகளின் திருவருள்

சித்திக்கும்.

27. ஆயுதபூஜையும் சரஸ்வதி பூஜையும்

ஆயுதபூஜை அன்று வீட்டிலுள்ள அருவாள் மனை, சுத்தி, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு வழிபடுவர். ஒவ்வொரு கருவியும் கலைமகளின் வடிவம்தான் காரணம். அதைக் கொண்டுதானே பல விஷயங்களைப்படைக்கிறோம். “செய்யும் தொழில் தான் தெய்வம்” என்பதற்காகவே, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜையை ஆயுத பூஜை தினமாகவும் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு தொழிலும் ஒவ்வொரு கலைதான். ஆய கலைகள் அறுபத்து நான்கும், அந்த 64 கலைகளுக்கு துணையாகத் தோன்றியிருக்கும் ஆயிரக்கணக்கான கலைகளுக்கும் அதிபதி கலைமகள் அல்லவா. எனவே ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்கின்ற வேலையில் திறன் பெறவும், புகழ் பெறவும் சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். அடுத்த நாளான விஜயதசமியன்று புனர்பூஜை செய்து இவற்றை எடுத்து பணிகளில்ஈடுபட்டால் தொழில்வளம் பெருகும்.

28. சரஸ்வதி பூஜையும் பொரிகடலையும்

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை அன்று அவசியம் பொரிகடலை வைத்துப் படைக்க வேண்டும். பொரி என்பது தேவர்களுக்கு முக்கியமான உணவு. ஹோமங்களில் பொரி இட்டுச் செய்வதை லாஜ ஹோமம் என்பார்கள். திருமணத்தில் தீர்க்காயுள் கிடைக்க இந்த ஹோமத்தைச் செய்வார்கள். சரஸ்வதி பூஜை என்பதும் ஒரு ஞான வேள்விதான். எனவே அன்றைக்கும் பொரியை அவசியம் படைக்க வேண்டும். அதைப் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதமாகச் சாப்பிடுவதன் மூலம் பாவங்கள் போகும் என்று பெரியவர்கள் சொல்லி யிருக்கிறார்கள். அதோடு இந்த அவல் பொரியை வெல்லம் கலந்து குழந்தைகளுக்கும் பசுக்களுக்கும் பறவைகளுக்கும் தரவேண்டும்.

29. சௌந்தரிய லஹரி

சரஸ்வதி அன்னையை வழிபடும் போது ஞாபக சக்தி பெற சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபடவும்.

அவிச்ராந்தம் பத்யுர் - குணகண - ககதாம்ரேடன

ஜபாஜபாபுஷபச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி

ஸாயதக்ராஸீநாயா; ஸ்படிகத்ருஷ தச்சச்சவி -

மயீஸரஸ்வத்ய மூர்த்தி; பரிணமதி மாணிக்யவபுஷா

அம்பிகையின் நாக்கு சதா சத் விஷயங்களை பேசி சிவந்திருக்கிறது.

(நல்ல விஷயங்களை சதா பேச வேண்டும் என்று பொருள்) அந்த சிவந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வீற்றிருக்கிறாள். அம்பிகையின் அம்சமான சரஸ்வதி தேவியை வணங்குகின்றேன் என்பது ஸ்லோகத்தின் பொருள்.

30. வீணை இல்லாத சரஸ்வதி

பொதுவாக வீணையுடன்தான் கலைமகள் காட்சி தருவாள். ஆனால், வேதாரண்யம் திருத்தலத்தில் அருளும் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சிதருகிறாள். இந்த தேவியை, `ஆதி சரஸ்வதி’ எனப் போற்று கின்றன சிற்ப நூல்கள். இக்கோயிலின்பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதை குறிக்கும் வகையில் சரஸ்வதிக்கு வீணை இல்லை என்பது ஐதீகம்.இன்னும் பலப்பல செய்திகள் கலைமகளைப் பற்றிக் கொட்டிக் கிடக்கின்றன. இப்போதைக்கு இந்த முப்பது முத்துக்களோடு நிறைவு செய்வோம்.

தொகுப்பு: எஸ்.கோகுலாச்சாரி

Related Stories: