ஜோதிடத்தில் சரஸ்வதி பூஜை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சரஸ்வதி பூஜை என்பது கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு, புரட்டாசி மாதம் வளர்பிறை நவமி அன்று செய்யக்கூடிய பூஜை. நான்கு நவராத்திரிகளில் ஒன்றான சாரதா நவராத்திரியில் வருவது சரஸ்வதி பூஜை. சரஸ்வதி பூஜை தினத்தை ஆயுத பூஜை என்றும், கோயில்களில் மகா நவமி என்றும் கொண்டாடுகின்றோம். இதற்குப் பின்னணியில் உள்ள ஜோதிட ரீதியிலான சுவாரஸ்யமான சில காரணங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

சரஸ்வதியை ‘‘வாக்தேவி” என்று அழைப்பார்கள். கிராமத்தில் பேச்சாயி அம்மன் என்று அழைப்பார்கள். பேசாத ஊமையையும் பேச வைப்பவள் சரஸ்வதி தேவி. ஆன்றோர்கள் நாவில் குடியிருப்பவள் என்று சரஸ்வதி தேவியின் இடத்தைச் சொல்வார்கள். முதன் முதலில், கல்வியை தொடங்கும் நாள் (அட்சராப்பியாசம்) தொடங்குகின்ற போது, சரஸ்வதி தேவியை வணங்கித் தொடங்குவது மரபு.சரஸ்வதி பூஜையன்று, கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் ஏராளமான மாணவச் செல்வங்கள் வந்து கூடுவதையும், அம்பாள் சந்நதிகளில், தங்கள் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்ய சரஸ்வதியை வணங்குவதையும் நாம் பார்க்கலாம்.

 இரண்டாம் இடமும் சரஸ்வதி தேவியும்

சரஸ்வதியைக் குறிப்பிடுகையில் இனிமையான பேச்சு, மகிழ்ச்சியின் விளிம்பு, உயர்வான சிந்தனைகள் உள்ள இடங்களில் உறைபவள் என்கிறது சாஸ்திரம். ஜோதிடத்தில் இரண்டாவது இடம் என்பதை வாக்கு ஸ்தானம் என்பார்கள். ஒருவருடைய பேச்சு எப்படி அமைந்திருக்கும் என்பதை காட்டும் இடம் இது. இரண்டாம் இடம்தான் ஆரம்ப கல்விக்கும் உரிய இடம். ஒருவருடைய ஜாதகத்தில் இரண்டாமிடம் பலமாக அமைந்துவிட்டால், அவருடைய தொடக்கக் கல்வியில் எந்தத் தடையும் இருக்காது. தொடக்கக்கல்வி என்று சொன்னாலும், அதுதானே உயர்கல்விக்கும் அஸ்திவாரம்.

எனவே, உயர்கல்வி ஸ்தானம் வலுவாக இருந்தாலும், ஆரம்பக்கல்வி ஸ்தானமும் வலுவாக இருந்தால்தான் ஒருவன் கல்வியறிவில் சிறக்கமுடியும். ஒருவன் வாக்கு சாதுரியம் பெறவும், கல்வியில் திறம்படவும் சரஸ்வதிதேவியை வணங்க வேண்டும். வாக்கு ஸ்தானத்தில் அல்லது தொடக்கக் கல்வியில், ஜாதக ரீதியாக ஏற்படும் குறைகளை அவர் போக்குவார் என்பதற்காகத்தான், சரஸ்வதி பூஜையில் நாம் கல்வியையும் கலையையும் வாக்கு வன்மையையும் வேண்டுகின்றோம். இதைத்தான் கம்பனும், காளிதாசனும், பாரதியும் தங்கள் கவிதைகளை இயற்ற கலைமகள் துணை நின்ற விஷயத்தைப் பாடினார்கள்.

மூல நட்சத்திரம்

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது சரஸ்வதிதேவி அவதரித்த நட்சத்திரம். மூலநட்சத்திரத்தில் சரஸ்வதி தேவியின் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. ‘‘ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்றெல்லாம் எதுகை மோனையோடு சில பழமொழிகளை, எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் சொல்லி, மூல நட்சத்திரப் பெண்களை, கடுமையாக பாதிப்பு அடையும்படியாகச் செய்தார்கள், செய்தும் வருகிறார்கள்.

உண்மையில் ஜோதிட சாஸ்திரம் அப்படி கூறவில்லை. ஜோதிடத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் கூட ஒரு நட்சத்திரத்தில் பிறந்ததால், அந்த நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே முழு வாழ்க்கையும் அமைந்துவிடாது என்பதை உணர்வார்கள். உண்மையில், மூலநட்சத்திரத்தில் பிறந்தபெண்கள் கல்வியிலும், நுண்ணறிவுச் சிந்தனையிலும், தெய்வபக்தியிலும், ஞான விஷயங்களிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

 எத்தகைய பகை உணர்வுகளையும், எதிர்மறைச் சிந்தனைகளையும் அவர்கள் நிர்மூலம் செய்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். காரணம், சாட்சாத் கலைமகளே அவதரித்த நட்சத்திரம், குறை உடையதாகவா இருக்கும்? கல்வியின் உச்சம் ஞானம். அந்த ஞானத்தை தருகின்றவர் கேது. கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்றுதான் மூலம். மூல நட்சத்திரம் முதல் நட்சத்திரம் என்று கூடச் சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் மூலம் என்று சொல்லுகிறோம் அல்லவா. அட்சரங்களுக்கு எல்லாம் மூலம் அகாரம்.

அதனால்தான், அட்சர மாலையை கையில் வைத்துக்கொண்டு ஆதிமூல நட்சத்திரத்தில் அவதரித்தாள். மூல நட்சத்திரம், குருபகவானின் தனுர் ராசியில் அமர்ந்திருப்பதால், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும், (மற்ற கிரகங்கள் தடை செய்யாத பொழுது) நல்ல கல்வியாளர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில், எத்தனையோ மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். “எல்லா வேதங்களையும் குறைவின்றி கற்றவர் என்று சொல்லும்படி மிக இனிமையாகப் பேசும் இந்தச்  சொல்லின் செல்வன் யார்?” என்று சாட்சாத் ஸ்ரீராமபிரானால், பாராட்டப்பட்ட ஸ்ரீஆஞ்சநேயரின் ஜென்ம நட்சத்திரமும் மூலநட்சத்திரம்தான். ஸ்ரீராமானுஜரின் புனர் அவதாரமாகக் கருதப்பட்ட, சிறந்த ஞானாசிரியரான, மணவாளமாமுனிகள் அவதரித்த நட்சத்திரம் மூலநட்சத்திரம்தான்.

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநீலகண்டர், திருநீலநக்கர், முருகனார், ஐயடிகள் காடவர்கோன், குங்கிலியக் கலயனார் போன்ற நாயன்மார்களின் குரு பூஜை தினங்களும் மூலம்தான். அதனால்தான், திருமூலம் என்று இந்த நட்சத்திரத்தை திரு சேர்த்து அழைக்கிறார்கள்.

நவமி திதி ஏன்?

கல்வி என்றால் கலைகள். சந்திரன் கலைகள் உள்ளவன். நவகலைகள் எனும்படி ஒன்பதாம் கலைக்குரிய நவமியை சரஸ்வதி பூஜை தினமாக வைத்தார்கள். நவமி என்பது ஒன்பதாவது திதி அல்லவா.ராசிகளில் ஒன்பதாவது ராசி தனுசு. அந்த ராசியில்தான், சரஸ்வதியின் அவதார நட்சத்திரமான மூலம் இருக்கிறது. ஒன்பதாவது ராசியான தனுசு ராசி, உயர்கல்வியைக் குறிப்பது. அந்த ராசிக்கு உரியவர் குரு பகவான்.

அதிதேவதை தட்சிணாமூர்த்தி. எனவே வித்தையில் சிறக்க குருவினுடைய அருள் தேவை. மூல நட்சத்திர கிரகமான கேது மூர்த்தியும், நவமி அன்று சரஸ்வதி நதி பூரிக்கும் சங்கமத் துறைகளில் நீராடி, அந்தர்யாமியாகிய சரஸ்வதி நதியைத் தரிசித்துப் பூஜிக்கிறார். எனவே சரஸ்வதி ஆவாஹண நாள் முதல் நவமி திதியிலான சரஸ்வதி பூஜை நாள் வரைத் தினமும் கேது மூர்த்தி வழிபாடு, ஞான சரஸ்வதி, மேதா தட்சிணாமூர்த்தி, ஞானேஸ்வரர், ஞானாம்பிகை போன்ற ஞானசக்தி மூர்த்திகளை வழிபடும் வழக்கமும் உள்ளது.

புரட்டாசி ஏன்?

நவக்கிரகங்களில் மனிதர்களின் புத்தியை இயக்கும் முக்கிய கிரகம் புதன். வித்தைக்கு அதிபதி புதன். அவனைத் தானே வித்யாகாரகன் என்று சொல்லுகின்றோம். ஜாதக ரீதியாக புதன் அமைந்திருப் பதைப் பொறுத்தே கல்வி மற்றும் ஞாபக சக்தி மற்றும் கற்பனை வளம் ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. அவனுடைய ராசிகளில் ஒன்று கன்னி ராசி. அந்த கன்னிராசியில் ஆன்மவித்தைக்கு அதிபதியான சூரியன் பிரவேசிக்கும் மாதமாகிய புரட்டாசி மாதத்தில், சாரதா நவராத்திரியில் சரஸ்வதி பூஜையும் விஜயதசமியும் கொண்டாடுகின்றோம்.

இந்த நவராத்திரி ஆரம்ப நாளில், கலைகளுக்கு உரிய இரண்டு கிரகங்களான சூரியனும் சந்திரனும் கன்னிராசியில் இருப்பார்கள். சந்திரன் ஒவ்வொரு கலையாக நகர்ந்து ஒன்பதாவது கலையான நவமி திதியை அடைகின்றபொழுது, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

சுக்கிரனும் சந்திரனும்

சுக்கிரனும் சந்திரனும் கலைகளுக்கு உரியவர்கள். அதிலும், சுக்கிரன் லலித கலைகளான இசை, நடனம் முதலிய கலைகளைச் சுட்டிக்காட்டுவார். மனோகரன் சந்திரன் கற்பனைவளத்தையும், படைப்பாற்றலையும் கொடுப்பவர். காலச்சக்கரத்தின் இரண்டாவது ராசி சுக்கிரனுடைய ராசி. (ரிஷபம்) நான்காவது ராசி கடகம் சந்திரனுடைய ராசி. நான்காவது வீட்டுக்கு உரிய சந்திரன், சுக்கிரனுடைய ரிஷப ராசியில்தான் உச்சம் பெறுகிறார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஜோதிடத்தில், இரண்டாம் இடம் என்பது ஆரம்பக்கல்வியைக் குறிப்பிடும் சுக்கிர ராசிக்கு உரியது.

எனவே கலைமகளின் அருள் பெற்று கலைகளில் புகழ் பெற சுக்கிரனை வணங்கவேண்டும். நான்காவது ராசியும், உயர் கல்விக்கு உரியது. கல்வி என்பது மனம் தெளிவடைவது. கற்ற கல்வி, மனதில் நிற்க வேண்டும். எனவே இங்கே சந்திரன் அருள் தேவை. அடுத்து, 5 ஆம் இடமும் கல்விக்கு உரியதுதான். அது, சூரியனுக்கு உரிய ராசி. சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன். சர்வவியாகரண பண்டிதன். அவரிடமிருந்துதான், அனுமன் சகல கலைகளையும் கற்றார்.

சப்தமி என்பது, சூரியனுக்கு உரிய நாள். அவரும் கலைக்கு உரியவர் என்பதால், சப்தமி தினத்தில் சரஸ்வதியை ஆவாகணம் செய்கிறோம். இதனை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள். சுக்கிரனையும், சந்திரனையும் சரஸ்வதியோடு தொடர்புபடுத்த இன்னும் சில விஷயங்கள் உண்டு. சரஸ்வதிதேவி, வெண்மை நிறத்தை விரும்புபவள். சந்திரன், சுக்கிரன் இரண்டு பேருமே வெண்மை நிறத்தைப் பிரதிபலிப்பவர்கள்.

சந்திரனுடைய வாகனம், வெண்மையான முத்து விமானம். சுக்கிரனுடைய வாகனம் கருடன். கருடன் வேதக் கல்வியைக்  குறிப்பவர். சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆடைகள் வெண்பட்டாடைகள். சரஸ்வதி தேவியின் ஆடையும் வெண்பட்டாடை. சரஸ்வதி தேவி, வெள்ளைத் தாமரையில் அமர்ந்து இருப்பவள். சுக்கிரனுடைய மலரும் வெள்ளைத் தாமரைதான்.

கல்வியைத் தொடங்கும் நாள் பற்றிய ஜோதிடக் குறிப்புகள்

கலைகள் அல்லது கல்வியைத் தொடங்குவதை வித்யாரம்பம் என்பார்கள். வித்தைகளுக்கு அதிபதியான கலைமகளை வழிபட்டு, அட்சராப்பியாசம் தொடங்க வேண்டும். கலைமகள் சந்நதிகளிலோ, தட்சிணாமூர்த்தி சந்நதிகளிலோ, ஹயக்ரீவர் சந்நதிகளிலோ, அல்லது அம்பாள் சந்நதிகளிலோ விஜயதசமியன்று இதைத் தொடங்குவது வழக்கம். விஜயதசமி அன்று இந்த வித்தைகளைத் தொடங்கவேண்டும். அது பெரும் வெற்றியைத் தரும்.

அசுவினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் கல்வியைத் தொடங்கலாம். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, முதலிய திதிகளில் வித்யாரம்பம் செய்யலாம். மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் முதலிய லக்னங்கள் இருக்கும் நேரத்தில் தொடங்கலாம். லக்னத்திற்கு நான்காம் வீடும், எட்டாம் வீடும் சுத்தமாக இருக்கவேண்டும்.

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை தினம் (4.10.22)

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை தினம் அற்புதமான கிரக அமைப்புகளோடு இருக்கிறது. சுக்கிரன், சந்திரன், புதன், சூரியன், குரு, கேது ஆகிய கிரகங்கள் நல்ல அமைப்பில் வலுவாக இருக்கக்கூடிய நாளாக சரஸ்வதி பூஜை நாள் அமைந்திருக்கிறது. அதனால் இந்த ஆண்டு சரஸ்வதி பூஜையில், சரஸ்வதியை வணங்கி, விஜயதசமியில் கல்வியைத்  துவங்குபவர்கள் கல்வி

யிலும், கலைகளிலும் மிக உயர்ந்த நிலையை அடைவார்கள்.

புதனுடைய கன்னிராசியில், சூரியனும் புதனும் சுக்கிரனும் இருக்க, மீன ராசியிலிருந்து குரு பார்க்கிறார். அதே நாளில் மனோகாரகனான, கலைகளின் அதிபதி சந்திரன், சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் குருபகவானின் தனுசுராசியில் இருக்கிறார். அந்த வீட்டில் சந்திரன் இருக்கும் பொழுது, வீட்டுக்குரிய குரு ஆட்சிப் பலம் பெற்று, சந்திரனுக்கு கால் கொடுத்த சூரியனையும் பார்ப்பது கலைகளின் விருத்தியைக்  குறிக்கிறது என்பதால் இவ்வாண்டு, சரஸ்வதி பூஜையும் விஜய தசமியும் கல்வி வளர்ச்சியையும், தொழில் வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்தும் அமைப்பில் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

தொகுப்பு: சங்கர்

Related Stories: