அன்பில் ஒன்றித்தல் கடவுளிடம் அன்புகூறுங்கள்

கடவுளிடம் அன்புகூர்வது அடிப்படையானது ஆகும். அதுவே கடவுள் மனித உறவுக்கு அடித்தளமாகும். ஒரு கட்டடத்திற்கு அடித்தளம் முக்கியமானது. அடித்தளம் எப்படியோ அதைச் சார்ந்து தான் மேல் கட்டுமானத்தின் உறுதி மற்றும் வடிவம் அமைந்திருக்கும்.

சாதாரண மனித உறவுகள் பல்வேறு அடித்தளங்கள் மீது உருவாக்கப்படுகிறது. இந்த உறவுகள் நிலையற்றவை அல்லது மாறக்கூடியவை. உதாரணமாக ஆசிரியர்-மாணவர் உறவை எடுத்துக்கொண்டால் அது நிலையற்றதும் மாறக்கூடியதுமாக உள்ளது. ஒருவர் ஆசிரியராகவும் மற்றவர் மாணவராகவும் நீடிக்கும் வரை தான் அது நிலைத்திருக்கும்.

அந்த ஆசிரியர் வேறு பணிக்கு மாறிவிட்டாலோ அல்லது மாணவர் பள்ளியைவிட்டு நீங்கிவிட்டாலோ இவ்வுறவு நீடிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் அந்த மாணவர் ஒரு உயர் அதிகாரியாகி அந்த ஆசிரியர் மீதே அதிகாரம் செலுத்தவும் தண்டனை வழங்கவும் கூடும். அதே சமயம் அன்பினால் அடித்தளமிட்ட உறவு எக்காலத்தும் நீடிக்கக்கூடியது. அது அடிக்கடி சந்தித்தாலும் சந்திக்க இயலாமல் போனாலும் தொடரக்கூடியது.

கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் உறவு அன்பினால் அடித்தளமிட்டு கட்டப்பட்டதாக இருத்தல் நலம். கடவுளும் அதைத்தான் விரும்புகிறார். ஆனால் பெரும்பாலும் கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவு அச்சத்தைஅடிப்படையாகக் கொண்டுள்ளது. அச்சத்தை அடிப்படையாகக் கொண்ட உறவு மீறுதலுக்கு இட்டுச்செல்லும்; மீறுதலை மறைப்பதற்கு உந்தித்தள்ளும்; அச்சம் தவறுக்கு மேல் தவறிழைக்கத் தூண்டும்.

அன்புறவோ இதற்கு நேர் மாறாக இயங்கும். அது புரிதல் மற்றும் உடன்பாட்டின்படி அடிப்படையில் இயங்கும். தவறிழைத்தாலும் தவறுக்கு வருந்த உந்தும். மன்னிப்பிற்கு வழிகாட்டும். அன்புறவில் இயங்குபர்கள் எப்போதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பார்கள். கடவுள் மனித உறவுக்கு திருமறை இதைத்தான் வலியுறுத்துகிறது. ‘‘ஆகையால் நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் மீது அன்புகூறுங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நேரமும் கடைப்பிடியுங்கள்’’. (இணைச்சட்டம் 11:1).

கடவுளிடம் அன்புகூர்வது சக மனிதரிடம் அன்புகூர்வது ஆகும். கடவுள் மனுக்குலத்தின் மீது எவ்வளவு அன்புள்ளவர் என்பதை யோவான் நற்செய்தியாளர் இவ்வாறு கூறுகிறார். ‘‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெரும் பொருட்டு  அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்’’ (யோவான் 3:16). மனுக்குலத்தின் மீது அன்புகொள்வதில் கடவுள் முந்திக்கொள்கிறார். (1யோவான் 4:19).

கடவுள் மனுக்குலத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற, நிபந்தனையற்ற மற்றும் எல்லையில்லாத அன்பை நமது அருள்நாதர் இயேசு கிறிஸ்து தமது வாழ்வு மற்றும் கற்பித்தல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகூறவேண்டும் என்பதே என் கட்டளை’’ என்றார். (யோவான் 15:17). மேலும் கடவுளிடம் முழு மனதோடு அன்புகூறவேண்டும் என்றும், ‘‘உன் மீது அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’’ என்பதைக் கட்டளையாகவும் கூறியுள்ளார். (மாற்கு 12:28-31).

மேற்கூறப்பட்டுள்ள கருத்தை வலியுறுத்தி யோவான் திருமுகத்தில் அன்பைப் பற்றி சிறந்த கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அதாவது, ‘‘நேர்மையாய்ச் செயல்படாதவரும்,அன்பு செலுத்தாதவரும் கடவுளிடமிருந்து வந்தவர்களல்ல’’ (1 யோவான் 3:10)என்றும்,‘ ‘அன்பில்லாதோர் கடவுளை அறிந்துகொள்ளவில்லை; ஏனெனில் கடவுள் அன்பாயிருக்கிறார்’’  ( 1 யோவான் 4:8 )என்றும், ‘‘ தம் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர்,கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம்அன்பு செலுத்த முடியாது.  

கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதரர் சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். இதுவே நாம் அவரிடமிருந்து பெற்ற கட்டளை’’.(1 யோவான் 4:20). என்றும் கடவுள் அன்புமயமானவர் நம்மையும் பிறரிடம் அன்புகூற அழைக்கிறார் என்பதையும்  இப்பகுதிகள் வலியுறுத்துகின்றன.

நமது அருள்நாதர் இயேசு கிறிஸ்து கடவுளிடமும்,அயலாரிடமும், மற்றும்  காணும் மனிதர் யாவரிடமும் அன்பு செலுத்துவதைக் கடந்து புரட்சிகரமான அன்பாக ‘‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்’’ ( மத்தேயு 6:44) என்று அன்பின் உச்சத்தை நமக்குக் கற்பித்துத்தோடு அதைத்  தம் வாழ்வில் நடைமுறைப் படுத்தியும் காட்டியுள்ளார். கடளிடமும் மனிதரிடமும் கொள்ளும் உறவுக்கு  அன்பை அடித்தளமாக்குவோம். எவ்விதப் பாகுபாடு இன்றி அனைவரிடமும் அன்புகூர்வோம்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Related Stories: