தசமி ஜய தசமி விஜய தசமி

நவராத்திரியை ஒட்டி வரக்கூடிய ‘விஜயதசமி’ எனும் அற்புதமான நிகழ்வின் சில துளிகள், காரணங்களுடன். தொடக்கம் - தேவி மகாத்மியத்தில் இருந்து... மன்னர் ஒருவரும், வியாபாரி ஒருவரும், தங்களைச் சுற்றி இருந்தவர்களால் பக்குவமாக ஏமாற்றப்பட்டு, ஒதுக்கப்பட்டார்கள். இருவருமாக, மேதஸ் எனும் முனிவரைச் சந்தித்து, தங்கள் நிலைமையை விவரித்தார்கள்.

அத்துடன், ‘‘முனிவரே! வேண்டாம் என்று எங்களை ஒதுக்கிய அந்த உறவினர்களை மறக்கவும் முடியவில்லை, ஒதுக்கவும் முடியவில்லை. தவியாய் தவிக்கிறோம். இந்நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியை அடைய என்ன வழி?’’ எனக் கேட்டார்கள். அப்போது அங்கிருந்த மரத்தின் மேலே, ஒரு தாய்ப்பறவை தன் குஞ்சுகளைச் சிறகுகளால் அணைத்து, மிகவும் ஆர்வமாய் இரை ஊட்டிக் கொண்டிருந்தது.

வியாபாரிக்கும் அரசருக்கும் அதைச் சுட்டிக் காட்டிய முனிவர், ‘‘மோகத்தினால் தன் குஞ்சுகளின் வாயில் இரை ஊட்டும், இப்பறவையைப் பாருங்கள்! காமம், பசி, இன்பம், துன்பம்’’ என்று இவைகளுக்கு உண்டானவை அனைத்தும் மனிதர்களுக்கும் உள்ளன.

மனைவி, மக்கள், உறவினர்கள் என அனைவருக்கும், ‘‘இவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு உதவுவார்கள்’’ என்ற எதிர் பார்ப்பிலேயே, ஆணவத்தோடும் மோகத்தோடும் மனிதர்கள் செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே, துயரங்கள் பெருகுகின்றன. அதிலிருந்து தப்பி, அமைதி காண வேண்டுமானால், அம்பிகையை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்று சொல்லி, அதற்கான வழியையும் உபதேசித்தார்.

அதன் படியே செயல்பட்டு, அரசரும் வியாபாரியும் நன்னிலை பெற்று அமைதி அடைந்தார்கள். இக்கதையில் வரும் அரசரும் வியாபாரியும், வேறு யாரோ அல்ல; நாம் தான். ஒன்று, அரசரைப்போல உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, அடுத்தவர்களை ஆட்டிப்படைக்கிறோம். நம்முடன் இருப்பவர்கள், நம்மை ஆட்டிப் படைக்கிறார்கள். துன்பம் பெருகுகிறது.

அடுத்தது, வியாபாரி! நாம் அனைவருமே வியாபாரிகள்தான். வியாபாரிகள் பொருளை விற்பார்கள். நாம், நம் உழைப்பை விற்கிறோம்; பணம் பெறுகிறோம். அறிவை விற்கிறோம்; பணம் பெறுகிறோம். அவ்வளவுதான்! அரசரைப் போல உயர் பதவியில் இருந்தாலும் சரி, வியாபாரி போல விற்பனையாளராக இருந்தாலும் சரி! சுற்றி இருப்பவர்களால், செயல்களால், துன்பம் விளைகிறது. அனைவருக்கும் பொதுவானது இது.

இதில் இருந்து தப்பி, அமைதி காண வேண்டுமானால், அம்பாளை வழிபட வேண்டும். இதற்கு அடிப்படையாகவே, மூன்று அம்பிகைகளைப் பற்றி, 3 அசுர சம்காரங்களைச் சொல்லி, வழி காட்டுகிறது தேவி மகாத்மியம்.

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள்

1) துர்கா வழிபாடு

படைக்கும் கடவுளான பிரம்மதேவரை, மது - கைடபர் எனும் இரு அசுரர் கொல்ல முயற்சி செய்தார்கள். அவர்களைக் கொன்று பிரம்மதேவரைக் காத்தாள் அம்பிகை. இந்த அம்பிகையை ‘மதுகைடப சம்ஹாரிணி’ எனப்போற்றித் துதித்து வழிபடுகிறோம்.

2) இரண்டாவது மூன்று நாட்கள்

மகாலட்சுமி என்ற பெயரில், ‘மகிஷாசுரமர்தனி’ வழிபாடு. மகிஷன் எனும் அசுரனை மாய்த்ததால், மகிஷாசுரமர்தனி எனப்படுகிறாள். மகிஷன் எனும் அசுரன் பெருத்த-கொழுத்த எருமை வடிவு கொண்டவன். பலப்பல வடிவங்கள் எடுக்கும் சக்தி படைத்தவன்.

இப்படிப்பட்ட மகிஷனால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் வேண்ட, அம்பிகை மகிஷனை மாய்த்தாள். (மகிஷன் கதைச்சுருக்கம்) பெருத்த - கொழுத்த எருமை வடிவம் என்பது, அறியாமையின் ஒட்டு மொத்த வடிவத்தைக் குறிக்கும்.

அதை ஏன் எருமை எனக் குறிப்பிட வேண்டும்? உதாரணமாக, சென்னை அண்ணாசாலை போன்ற சாலை நடுவில், எருமை படுத்துக் கிடக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அது எதுவும் செய்யாவிட்டாலும், செயல்படாமல் இருந்தாலும், அந்த எருமை அங்கே பெரும் இடையூறாகத்தான் இருக்கும். அதைக் கிளப்ப முயற்சி செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்! விருட்டென்று எழுந்து, வாலை உயரே தூக்கி, நான்கு கால்களையும் பரப்பி, கொம்புகளை நிமிர்த்தி ஓடத் தொடங்கினால் என்ன ஆகும்? சுற்றி இருப்பவர்கள் சிதறி ஓட மாட்டார்களா? அந்த எருமை செயல்படாவிட்டாலும் பிரச்னை.

செயல்பட்டாலும் பிரச்னை. இதன் காரணமாகவே அறியாமையை அசுரனாகச்சொல்லி, எருமையாகச் சொல்லப்பட்டது. அறியாமை நீக்கம் வேண்டுமானால், அம்பிகையை வழிபட வேண்டும்.

(3) மூன்றாவது மூன்று நாட்கள்

மகா சரஸ்வதி எனும் பெயரில், சும்ப - நிசும்பர்களைச் சங்காரம் செய்த அம்பாளை வழிபடுகிறோம். சும்ப - நிசும்பர்களில், சும்பன் என்பவன் வெறும் உடல் பலம் மட்டுமே மிகுந்தவன். அறிவின் செயல்பாடு - அணு அளவும் இல்லாதவன்.

நிசும்பன் என்பவன் வெறும் அறிவு பலம் மட்டுமே மிகுந்தவன். உடல் பலம் என்பது அணு அளவும் இல்லாதவன். இந்த இருவரும் சேர்ந்து நல்லவர்களுக்குத் துன்பம் உண்டாக்க, இவர்களை சங்காரம் செய்து நல்லோரைக் காத்தாள் அம்பிகை.

இவ்வளவு நேரம் பார்த்த, தீமைகளில் இருந்து விடுதலை அளித்து, கட்டிக் காப்பாற்றுபவள் அம்பிகை என்பதைத் தெளிவாக உணர்வதே - உணர்ந்து செயல்படுவதே விஜயதசமி.

தசமி என்பது 10-ஐக் குறிக்கும். நாம் அனைவரும் அந்த 10-க்கு அடிமைப்பட்டவர்கள்தான். அந்த 10-என்பது, ஞான இந்திரியங்கள் 5; கர்ம இந்திரியங்கள் 5 - என்பவை.

அறிவுடன் செயல்படுபவை, செயல்பட வேண்டியவை ஞான இந்திரியங்கள். கண், காது, மூக்கு, நாக்கு, உடம்பு என்பவையே அவை. அறிவற்ற நிலையில் செயல்படுபவை, கை, கால், மலவழி, ஜல வழி, வாய் என்பவை கர்ம இந்திரியங்கள்.

நம்மை ஆட்டிப்படைக்கும் இந்தப் பத்தையும் வென்றால் ஒழிய, அமைதி - நிம்மதி என்பது இருக்காது. அவ்வாறு வெல்வதே, ஜய தசமி. அவை மறுபடியும் தலையெடுத்து நம்மைத் தாக்காமல் இருப்பதே, விஜய தசமி. அதை அருள்பவள் அம்பிகை.

இதைக் குறிக்குமுகமாகவே, நம் ஆலயங்களில் விஜய தசமி அன்று, அம்பிகை திருவீதி உலா வந்து, ஊர் எல்லை செல்வாள். அங்கே ‘அம்பு போடுதல்’ எனும் நிகழ்ச்சி நடைபெறும்.

அம்பிகையைப் பூஜிக்கும் குருக்கள், அம்பாள் திருக்கரத்தில் இருந்து வில்லை எடுத்து, திசைகள் எட்டிலும் அம்பு போட்டு, மேல் - கீழ் என (2) அம்பு போட்டு,

‘‘அம்மா! எல்லோரையும் காப்பாற்று!’’ என வேண்டுவார். அதாவது பத்துத் திசைகளிலும் இருந்து விளையும் தீமைகளில் இருந்து காப்பாற்ற வேண்டுவதாக ஐதீகம்.

இதை, திருச்சி அருகே உள்ள கம்பரசன்பேட்டை எனும் கிராமத்தில், அம்பு போடுவதைப் பல ஆண்டுகள் அடியேன் பார்த்து இருக்கிறேன். அம்பிகை நமக்கு ‘ஜய தசமி’ அளித்து, ‘விஜய தசமி’ யாகவும் அருளுமாறு  வேண்டுவோம்!

தொகுப்பு: P.N.பரசுராமன்

Related Stories: