ஊத்துக்கோட்டை அருகே ரூ.40 லட்சம் காப்பர் வயர் திருடிய 9 பேர் கைது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்களை திருடிய வழக்கில் நேற்று 9 பேரை போலீசார் கைது செய்தனர்.ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி அடுத்த குஞ்சலம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இங்கு கடந்த மாதம் 25ம் தேதி டிரான்ஸ்பார்மருக்கு பயன்படுத்தக்கூடிய ரூ.40 லட்சம் மதிப்பிலான 4.5 டன் எடை கொண்ட காப்பர் வயர் மற்றும் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.  இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசில் கடந்த 30ம் தேதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்ஐ மாதவன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் தனிப்படை அமைத்து, மினி லாரியில் காப்பர் வயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.இந்நிலையில், பென்னலூர்பேட்டை அருகே ராமலிங்கபுரம் சோதனைசாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் விற்பனைக்கு 2 டன் காப்பர் வயர்களை கடத்தி சென்ற மினி லாரியை மடக்கி பிடித்து விசாரித்தனர். பின்னர் வேனில் இருந்த 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருத்தணியை சேர்ந்த இரும்பு கடை வியாபாரிகள் பெரியசாமி (35), ரத்தினசாமி (40) எனத் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அரக்கோணம், காவனூர் காலனி பகுதியை சேர்ந்த சசி (எ) மணவாளன் (43), வினோத்குமார் (32), சாம் ஜெபதுரை (32), வின்பிரைட் (34), திருமலை (25), செய்யூர் காலனியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25), திருத்தணி, இருளர் காலனி, வியாசபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி (18), மோகன் (21), ராசு (17) ஆகிய 9 பேரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.இரும்பு வியாபாரிகள் 2 பேரின் ஆலோசனைபேரில், அவர்களின் கூட்டாளிகள் 9 பேர் துணை மின்நிலைய கட்டுமானப் பணிகளில் டிரான்ஸ்பார்மருக்கு வைத்திருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் மற்றும் உதிரிபாகங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மீதமுள்ள 2.5 டன் காப்பர் வயர் மற்றும் உதிரிபாகங்கள், மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஊத்துக்கோட்டை அருகே ரூ.40 லட்சம் காப்பர் வயர் திருடிய 9 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: