விருந்தாளியாய் செல்லும்போது...

விருந்தாளியாய் ஒருவருடைய வீட்டிற்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகளை இஸ்லாமிய வாழ்வியல் வலியுறுத்துகிறது.நீங்கள் விருந்துக்குச் செல்லும்போது விருந்தளிப்பவருக்காகவோ அவருடைய குழந்தைகளுக்காகவோ ஏதேனும் அன்பளிப்புகளை வாங்கிச் செல்லுங்கள். ‘வீசிய கையும் வெறுங்கையுமாகச்’ செல்வதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். இவ்வாறு அன்பளிப்புகள் வழங்கு வதன் மூலம் அன்பும் பாசமும் நெருக்கமும் அதிகமாகின்றன.

தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தவிர மூன்று நாள்களுக்கு மேல் விருந்தாளியாகத் தங்காதீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“விருந்து அளிப்பவருக்குச் சிரமம் அளிக்கும் வகையில் விருந்தினர் தங்குவது அனுமதிக்கப்பட்டதல்ல. ”இறைத்தூதர் மேலும் கூறும்போது, “விருந்தளிப்பவரை பாவியாக்கும் அளவுக்கு விருந்தாளி தங்கிவிடுவது ஆகுமானதல்ல” என்று குறிப்பிட்டார்கள். உடனே நபித்தோழர்கள்,“இறைத்தூதர் அவர்களே, விருந்தாளி எப்படிப் பாவி ஆவார்?” என்று கேட்டனர். “விருந்தளிப்பதற்கு எதுவுமே இல்லாத அளவுக்கு அவர் அங்கு தங்கிவிடுவதுதான்” என்று கூறினார்.(ஆதார நூல்: முஸ்லிம்)விருந்தாளியாகச் செல்லும்போது உங்களுக்குத் தேவையான சில அடிப்படைப் பொருள்களை எல்லாம் கையோடு எடுத்துச் செல்லுங்கள். துண்டு, போர்வை, சோப்பு, எண்ணெய் போன்றவற்றைக் கூடவே எடுத்துச் செல்லுங்கள். ஒவ்வொன்றையும் கேட்டுக் கேட்டு விருந்து அளிப்பவருக்குத் தொல்லை தராதீர்கள்.மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்று உள்ளது. விருந்து அளித்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்.

அபூஹுஸைம் என்பவர் நபிகளாரையும் தோழர்களையும் விருந்துக்கு அழைத்தார். அனைவரும் விருந்துண்ட பின் இறைத்தூதர் தம் தோழர்களை நோக்கி, “நீங்கள் உங்கள் தோழருக்கு பதில் மரியாதை செய்யுங்கள்” என்று கூறினார்.“இறைத்தூதர் அவர்களே, நாங்கள் பதில் மரியாதை எப்படிச் செய்வது?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். உடனே நபிகளார், “விருந்து அளித்தவருக்காக அவருடைய வாழ்வில் அருளும் வளமும் பெருக வேண்டும் என்று இறைவனிடம் துஆ - பிரார்த்தனை செய்வதே அவருக்கு அளிக்கும் பதில் மரியாதையாகும்” என்றார்.விருந்தாளியாகச் செல்லும்போது இவற்றைக் கவனத்தில் கொள்வோம். இறையருளைப் பெறுவோம்.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: