சுந்தரமூர்த்தியாரின் சுவடுகளைப் போற்றுவாம்!

ஆடி சுவாதி (5.8.2022) சுந்தரமூர்த்தி நாயனாரின் குருபூஜை

கயிலாய மலையில் வீற்றிக்கும் சிவபெருமான் ஒருமுறை கண்ணாடியில் தன்னைப் பார்த்தார். தன் அழியா அழகைக் கண்டு “சுந்தரா வா” என்று அழைக்க, அப்போது வந்தவர்தான் சுந்தரர். அவரைத் தனக்குத் திருநீற்றுப் பேழை தாங்கும் தோழனாக்கிக் கொண்டார் சிவபெருமான். அவ்வகையில், உளியால் செதுக்கப்படாத திருமேனியைக் கொண்டு அமைந்த விடங்கத் தலங்களில் தியாகேசருக்கு நேர்எதிரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மஞ்சத்தில் எழுந்தருளி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தரர் ஒரு முறை அம்பிகையின் சேடிப் பெண்களாகிய கமலினி மற்றும் அநிந்திதையைப் பார்த்தார். இதையறிந்த சிவபெருமான், ‘இது காமதகனம் நடந்த இடம். இங்கு சிற்றின்பத்திற்கு சிறிதும் இடமில்லை. நீ பூமிக்குச் சென்று அப்பெண்களை மணமுடித்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து என்னை வந்தடைவாயாக’ என்று சுந்தரரை பூமிக்கு அனுப்பினார்.

இதனால் சுந்தரர் பூமிக்கு வந்தாலும், அவர் பூமிக்கு வர மற்றுமொரு காரணமுண்டு ‘‘அடியார்களெல்லாம் என்னைப் பாடிக்கொண்டே இருக்கிறார்கள். கைம்மாறாகக் அந்த அடியார்களை நான் பாட வேண்டும்’’ என்று கருதியே சிவபெருமான், தன் பிம்பமாகிய சுந்தரரை பூமிக்கு அனுப்பிவைத்தார். அவ்வகையில், மாதவம் செய்த தென்திசையில் திருமுனைப்பாடி நாட்டுத் திருநாவலூரில் சடையனாருக்கும், இசைஞானியாருக்கும் திருமகனாகப் பிறந்தார். இதன் அடையாளமாக இவ்வூரிலுள்ள பக்தஜனேஸ்வரர் திருக்கோயிலில் சுந்தரருக்கு சிற்றாலயம் காணப்படுகிறது.

தக்க திருமண வயதை அடைந்து திருமணமாகும் தறுவாயில், சிவபெருமான் இவரை ஓலைகாட்டித் தடுத்தாட் கொண்டார். இறைவனைப் `பித்தா’ எனத் திட்டினார் சுந்தரர். முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முக்கட் பரம்பொருள், ‘‘அர்ச்சனைப் பாட்டே ஆகும். ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடுக’’ என்று கூறி அர்ச்சனை என்பது இன்னிசைத் தமிழால் பாடுவதுதான். நீ பாடு என்று கேட்டு, ‘‘பித்தா என்று திட்டிய சொல்லையே முதலாகக் கொண்டு பாடு’’ என அருள, சுந்தரர் பாடிய முதல் திருப்பாட்டுதான் ‘‘பித்தா பிறைசூடி’’ எனத் தொடங்கும் ஞானப்பனுவலாகும். இதை நினைவூட்டும் வகையில் இப்பதிகம் பாடப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருட்துறை நாதர் திருக்கோயில் உள்கோபுரத்தின்முன், சுந்தரரின் திருவுருவம் தாளத்துடன் அருள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இவர், தலங்கள்தோறும் சென்று இசைத்தமிழால் இறைவனைப் பரவி மகிழ்ந்தார். பரவைநாச்சியாரை மணந்து திருவாரூரில் இவர் வாழும்போது, நாள்தோறும் தியாகராசனாரைச் சென்று வழிபடுவது இவரின் வழக்கம். அப்படி ஒருநாள் வழிபடச் செல்லும்போது தேவாசிரியன் மண்டபத்துள் அமர்ந்திருந்த அடியார்களை வணங்காமல் போனார் என்று தவறாகக் கருதிய விறன்மிண்ட நாயனார், சுந்தரரையும் அவரை ஆட்கொண்ட ஆண்டவனையும், சமயத்திற்குப் புறம்பானவர் என்று தள்ளி வைத்தார்.

அப்போது, ஆண்டவன் ‘‘தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன்” என அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் அடியார் பெருமை கூறும் அற்புதத் திருத்தொண்டத் தொகையைப் பாடியருளினார்.

இந்த திருத்தொண்டத் தொகைதான், ``திருத்தொண்டர் திரு அந்தாதி’’ எழுவதற்கும், அடியார்களின் அருள் வரலாற்றைச் சொல்லும் பெரியபுராணம் எழுவதற்கும் அடித்தளமாக அமைந்தது. இப்பேர்ப்பட்ட பனுவலைத் தந்து, சுந்தரமூர்த்தி நாயனார் வையத்தை வாழ வைத்த சுந்தரருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்! என்பதை திருக்குறளுடன் இணைத்து;

‘‘தூய திருத்தொண்டத் தொகைதந்து

சுந்தர்தா

மாயிரு ஞாலத்தோரை வாழ்வித்தா -

ராயதெவன்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்

டென்னாற்றுங் கொல்லோ உலகு’’

- என்கிறது திருத்தொண்டர் வெண்பா.

ஆண்டவன் இருக்கும் பதிகள் தோறும் சென்று பதிகங்கள் பாடிய சுந்தரர், திருவொற்றியூருக்குச் சென்று அங்கு சங்கிலி நாச்சியாரை மணம்செய்தார். அதன்பின், ‘‘இவ்வூரைவிட்டு வெளியே செல்ல மாட்டேன்’’ என்று சத்தியம் செய்தார். ஆனால், சத்தியத்தை மீறினார். உடனே இரு கண்களிலும் பார்வை பறிபோய்விட்டது. தனக்குத் தோழனாகவே விளங்கினாலும், சத்தியத்தை மீறினால் தண்டனையுண்டு என்பதை இறைவன் காட்டினார். சத்தியத்தை மீறிக் காலடியெடுத்து வைத்ததும் சுந்தரருக்குக் கண்பார்வை போன இடம் தற்போதும் `காலடிப்பேட்டை’ என்ற பெயரில் விளக்குகிறது. வரும் வழியில் காஞ்சியில் ‘‘ஆலந்தான் உகந்து’’ என்று தொடங்கும் பதிகம்பாடி இடக்கண் பெற்றார்.

இடக்கண்ணில் பார்வையோடு திருவரத்துறை வழியாக வரும்போது, அவரை புரைநோய் பற்றிக்கொண்டது. திருவாவடுதுறை அரனார் கோயிலுக்கு வந்து,‘‘கண் இலேன் உடம்பில் அடுநோயால் கருத்து அழிந்து உனக்கே பொறையானேன்’’ என்று வேண்ட, இறைவன் திருத்துருத்திக் கோயிலின் வடமேற்கில் அமைந்துள்ள குளத்தில் நீராடுமாறு பணித்தார். சுந்தரரும் அவ்வண்ணமே செய்ய, அவரைப்பற்றி யிருந்த புரைநோய் நீங்கியது. நோய் தீர்த்த அத்திருக்குளம் திருத்துருத்தி (குத்தாலம்) மகாதேவர் கோயில் வளாகத்தின் வடமேற்குத் திசையில் `சுந்தரர் தீர்த்தம்’ என்ற திருப்பெயருடன் இன்னும் திகழ்கிறது.

‘‘மீளா அடிமை’’ எனத் தொடங்கும் பதிகம் பாடி மற்றொரு கண்ணையும் பெற்றார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்ட செய்தியை அறிந்த பரவை நாச்சியார், சுந்தரர் மீது ஊடல் கொண்டார். அந்த ஊடலைத் தீர்க்கப் பெரியவர்களால் முடியாத காரணத்தால், சிவபெருமானிடத்திலேயே, ‘‘நான் என் நீரே நான் உனக்கிங்கு அடியேனாகில் நீர் எனக்கு தாயின் நல்ல தோழரும் ஆம் தம்பிரானார் ஆகிய அறிவும் இறந்து அறிவேன் அயர்வு நோக்கி அவ்வளவு ஏன் இரவே தீர்த்து தாரும்’’ என்று தூது செல்லுமாறு வேண்டினார்.

அவ்வகையில், சிவபெருமானே சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவைநாச்சியாரிடம் தூது சென்றார். மற்ற சமயங்கள் எல்லாம் இறைத் தூதுவர்களை அனுப்பிக் கொண்டிருக்க, அந்த இறைவனையே தூதுவனாக அனுப்பிய பெருமை சைவ சமயத்தையே சாரும். குறிப்பாக, அது சுந்தரமூர்த்தி நாயனாரையே சாரும். அதை அகச்சான்றாக சுந்தரரே, ‘‘ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி’’ என்று பாடியுள்ளார்.

இந்நிகழ்வை சற்று வேடிக்கையாக ஒரு புலவர், பிரம்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் அடியையும் முடியையும் காண ஏன் அலைந்திருக்க வேண்டும்? இந்தப் பரவை நாச்சியாரின் வீட்டு வாசலுக்கு வந்திருந்தாலேயே போதும். சுந்தரரின் பொருட்டு தூது வரும்போது சிவபெருமானின் முடியையும் அடியையும் அருமையாகவும் மிக எளிமையாகவும் கண்டிருக்கலாம் என்று பாடினார்.

பின்னர், பரவை நாச்சியாரின் ஊடல் முடிந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பரவையார் அடியார்களைப் பேண எண்ணினார். அப்போது, சுந்தரர் பூம்புகலூர் இறைவனை;

‘‘தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்

பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!

இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;

அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.’’

- என்று தொடங்கும் பதிகம்பாடி பொற்காசுகள் பெற்றுத் தந்தார்.

பின், குவலயத்தின் பசிபோக்கும் குண்டையூர்க் கிழார்க்கு இறைவனிடம் வேண்டி நெல் பெற்ற சுந்தரர், அதை அளக்க ஆள்வேண்டும் என்பதற்காக, ‘‘ஆளில்லை எம்பெருமான் அவை அட்டித் தரப் பணியே’’ என இறைவனிடம் வேண்ட, திருவாரூர் வீதிகள் முழுவதுமாக பூதங்கள் நெல்லைக் கொட்டிவிட்டுச் சென்றன. அப்போது அதை அகற்ற, `அவரவர் வீட்டு வாயிலில் உள்ள நெல்லை, அவரவர்களே எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார், சுந்தரர்.

சுந்தரரின் இச்செயலை பின்னாளில் ஒரு சொற்பொழிவில் கேட்டார் கர்மவீரர் காமராசர். அவரது ஆட்சியில் ஒருமுறை மதுரையில் வெள்ளம் வந்தபோது, வீதிகள் தோறும் விழுந்து கிடந்த மரங்களை அகற்ற பல நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் சொல்ல காமராஜர், சுந்தரரின் பாணியில் ‘‘அவரவர் வீட்டு வாசலில் இருக்கும் மரங்களை அவரவர் எடுத்துக்கொள்ளலாம்’’ என்று வானொலியில் ஒலிபரப்பினார்கள். உடனே மரங்களெல்லாம் அகற்றப்பட்டன என்பது வரலாறு. இப்படி பேரிடர்க் காலத்திலும்கூட சுந்தரரின் செய்கை நமக்கு உதவுகிறது என்றால் அது மிகையாகாது.

Related Stories: