அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

445. ஸமீஹநாய நமஹ: (Sameehanaaya namaha)

(திருநாமங்கள் 436 [அநிர்விண்ண:] முதல் 445 [ஸமீஹன:] வரை - திருமாலின் சிம்சுமார வடிவம்)

[விண்வெளியில் உடும்பு போன்ற வடிவில் ஒரு நட்சத்திரக் கூட்டம் உள்ளது. அதற்கு சிம்சுமாரச் சக்கரம் என்று பெயர். இந்த சிம்சுமாரச் சக்கர வடிவில் (galaxy) திருமாலே எழுந்தருளி உள்ளார். திருமாலின் நட்சத்திர மயமான இந்த வடிவின் வால்பகுதியில்தான் துருவ நட்சத்திரம் உள்ளது. இந்த சிம்சுமார வடிவைப் பற்றிய முழு விவரம் விஷ்ணு புராணம் இரண்டாம் அம்சம் ஒன்பதாம் அத்தியாயத்தில் உள்ளது.]குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பூஜிக்கத் தக்கவர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களையும், உறவினர்களான கௌரவர்களையும் எதிர்த்துப் போர் புரியத் தயங்கிய அர்ஜுனன், கலக்கம் அடைந்து காண்டீவத்தை நழுவ விட்டுத் தேரிலே அமர்ந்துவிட்டான். அவனைத் தேற்றுவதற்காக பகவத் கீதையை

உபதேசிக்கத் தொடங்கினான் கண்ணபிரான்.

“அர்ஜுனா! இவர்களின் உடல்களைத் தான் நீ அழிக்கப் போகிறாய், ஜீவாத்மாக்களை நீ அழிக்கப்போவதில்லை. ஜீவாத்மாக்களை ஆயுதங்களால் வெட்டமுடியாது, நெருப்பால் எரிக்க முடியாது, காற்றால் உலர்த்த முடியாது, நீரால் நனைக்க முடியாது. பரமாத்மாவாகிய நான் எப்படி எப்போதும் இருப்பேனோ அதுபோல் ஜீவாத்மாக்களும் நித்தியமாக எப்போதும் இருப்பார்கள். ஜீவாத்மாவின் தன்மையை அறிய வேண்டும் என்றால் உனக்கான கடமையைப் பலனில் பற்று வைக்காமல் செய். அவ்வாறு கடமையைச் செய்து கர்மயோகத்தில் ஈடுபட்டால், அது உன்னை ஞானயோகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். ஞானயோகத்தைப் பயின்று ஜீவாத்மாவைத் தியானித்தால் ஆத்ம சாட்சாத்காரத்தை நீ அடைவாய்!” என்று அறிவுறுத்தினான் கண்ணன்.

இதைக் கேட்ட அர்ஜுனன், “கடமையைச் செய்தலாகிய கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றால் நான் மன்னனாகிய எனக்குரிய கடமையாகிய இந்த கோரமான போரைச் செய்ய நேரிடும். அதற்குப் பதிலாக நான் ஞான யோகத்தைப் பின்பற்றி ஆத்மாவைத் தியானிக்கிறேன்!” என்று கண்ணனிடம் சொன்னான்.அதற்குக் கண்ணன், “கர்மயோகம் தான் செய்வதற்கு எளிதானது. ஞானயோகத்தைச் சிலகாலம் பின்பற்றிய பின் நீ நழுவ வாய்ப்புண்டு. ஆனால் பழகிய கர்மயோகத்தில் இருந்து நழுவுவதற்கு வாய்ப்பில்லை.

செயல் செய்தே பழகிய உன் போன்றவர்களால் செயல்களை நிறுத்தி விட்டு ஞானயோகம் பயில்வது மிகவும் கடினம். இயற்கையின் போக்கோடு இணைந்து செயல்புரிவதே நலம். ஜனகர் போன்றோர் எல்லாம் கர்மயோகத்தைப் பின்பற்றியே ஆத்ம சாட்சாத்காரம் பெற்றார்கள். எனவே உன் கடமையாகிய இந்தப் போரைச் செய். பிறரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் செய்யச் சொல்லவில்லை. அறத்தையும் நாட்டையும் மக்களையும் காக்கும் கடமை மன்னனாகிய உனக்கு உண்டு. அந்தக் கடமையை உணர்ந்து பலனில் பற்று வைக்காமல் போர் புரிக!” என்றான் கண்ணன்.

தனது கூற்றை மேலும் வலியுறுத்துவதற்காக மற்றொரு செய்தியையும் கண்ணன் இங்கே தெரிவித்தான். “ஆதி காலத்தில் இறைவன் (தன்னையே சொல்லிக் கொள்கிறான் கண்ணன்) உலகைப் படைக்கும் போது, வேள்விகளோடு மனிதர்களைப் படைத்தார். மனிதர்களே! வேள்விகளாகிய இந்தக் கடமைகளை நீங்கள் தவறாமல் செய்யுங்கள். இந்த வேள்வியினாலே உலகில் வாழ்வதற்குரிய செழிப்பையும், முக்தி பெறுவதற்குரிய பக்குவத்தையும் நீங்கள் பெறுவீர்கள்!

“ஸஹ யஜ்ஞை: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா

புரோவாச ப்ரஜாபதி:

அனேன ப்ரஸவிஷ்யத்வம் ஏஷ வோஸ்து இஷ்ட காமதுக்”எனவே உலகைப் படைக்கும்போதே இறைவன் அவரவருக்கென்று சில கடமைகளைத் தந்துள்ளார். அவற்றைத் தவறாமல் ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்பதே இறைவனின் ஆணை!  நீயும் உன் கடமையைச் செய்வாயாக!” என்று கூறினான்.

இப்படி ஒவ்வொருவருக்கும் அவரவருக்குரிய கடமைகளைத் தந்து அந்த கடமைகளை நிறைவேற்றும்படி அவர்களைத் தூண்டும் திருமால், ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஸமீஹன:’ என்றால் அனைவரையும் அவரவர் கடமையில் ஈடுபடுத்துபவர் என்று பொருள். சிம்சுமாரச் சக்கர வடிவில் இருந்தபடி நட்சத்திரங்களும் கிரகங்களும் தங்களுக்கு உரிய முறையில் சுழலும்படி அவைகளையும் நிர்வாகிக்கிறார் திருமால். அதனால் ‘ஸமீஹன:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 445-வது திருநாமம். “ஸமீஹனாய நமஹ:”

என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சிறந்த கடமை வீரர்களாக விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.

446. யக்ஞாய நமஹ: (Yagnyaaya namaha)

(திருநாமங்கள் 446 [யக்ஞ:] முதல் 463 [ஜிதக்ரோத:] வரை - வேதச் சடங்குகளால் போற்றப்படுபவர் திருமால்)

ஒரு முறை திருமாலிடம் நாரதர், “இறைவா! உனது பக்தர்களுள் உனக்கு மிகவும் பிடித்தமானவர் யார்?” என்று கேட்டார். திருமால் தனது பெயரைத்தான் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தோடு புருவங்களை உயர்த்தியபடித் திருமாலின் பதிலை எதிர்நோக்கிக் காத்திருந்தார் நாரதர். ஆனால் திருமாலோ, பூமியில் வாழும் ஒரு ஏழை விவசாயியைச் சுட்டிக் காட்டி, “அவர்தான் எனக்கு மிகவும் பிடித்தமான பக்தர்!” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் நாரதர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். “அந்த விவசாயி நாராயண நாராயண என்று உனது நாமங்களை எப்போதும் பாடுகிறாரா? உன்னைக் குறித்து வேள்விகள் ஏதாவது செய்துள்ளாரா? நீ எதை வைத்து அவரை உனக்கு மிகவும் பிடித்தமானவர் என்று சொல்கிறாய்?” என்று திருமாலிடம் கேட்டார் நாரதர்.

அதற்குத் திருமால், “நாரதா! நீ ஒரு நாள் அந்த விவசாயியின் நடவடிக்கைகளைக் கவனித்து விட்டு வா!” என்று சொன்னார். அவ்வாறே விவசாயியின் நடவடிக்கையை ஒருநாள் முழுவதும் கவனித்தார் நாரதர். காலை, மாலை இரு நேரங்களில் மட்டும் அந்த விவசாயி திருமாலை வணங்குவதைக் கவனித்தார். மற்றைய நேரங்களில் அந்த விவசாயி தனது அன்றாடப் பணிகளைச் செய்துவருவதைப் பார்த்தார் நாரதர்.

திருமாலிடம் வந்து, “ஒருநாள் முழுவதும் அந்த விவசாயியைக் கவனித்துவிட்டேன். காலை எழுந்தவுடனேயும், இரவு உறங்கச் செல்லும் முன்பும் அவர் உன்னை வழிபடுகிறார். மற்ற நேரங்களில் அவர் தனது விவசாயத் தொழிலைத்தான் பார்க்கிறார். மற்றபடி அவர் பெரிய வேள்விகளோ மற்ற வழிபாடுகளோ செய்ததாகத் தெரியவில்லை. அவரைப் போய் உனக்குப் பிடித்தமான பக்தர் என்று எதை வைத்துச் சொன்னாய்?” என்று கேட்டார் நாரதர்.

அதற்குத் திருமால், “நாரதா! நான் உனக்கு ஒரு பரிசோதனை வைக்கிறேன். அதன்பின் நீ அந்த விவசாயியின் பெருமையை உணர்வாய்!” என்று சொல்லிவிட்டு நாரதர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்தார். “நாரதா! இந்த விளக்கில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூடக் கீழே வழியாதபடி இந்த விளக்கைக் கையில் ஏந்தியபடி நீ உலகைச் சுற்றி வர வேண்டும்!” என்றார் திருமால்.

“உத்தரவு பகவானே!” என்று சொல்லி விட்டுக் கையில் விளக்கோடு மெதுவாகப் புறப்பட்டார் நாரதர். ஒருதுளி எண்ணெய் கூடக் கீழே சிந்தாமல் அனைத்துலகையும் சுற்றிவிட்டுத் திருமாலிடம் திரும்ப வந்தார். “இறைவா! காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டேன் பார்த்தாயா?” என்று பெருமிதத்துடன் சொன்னார் நாரதர்.

நாரதரைப் பார்த்துச் சிரித்த திருமால், “நாரதா! விளக்கைக் கையில் ஏந்தியபடி உலகைச் சுற்றும் போது நீ எத்தனை முறை எனது நாராயண நாமத்தைச் சொன்னாய்?” என்று கேட்டார். திடுக்கிட்டுப் போனார் நாரதர். “இறைவா! விளக்கில் இருந்து எண்ணெய் வழியக் கூடாது என்று நீ சொன்னதாலே அதிலேயே மொத்தக் கவனத்தையும் செலுத்திவிட்டேன். நாராயண நாம உச்சரிப்பையே இன்று மறந்து விட்டேன்!” என்றார் நாரதர்.

திருமால், “நாரதா! ஆனால் அந்த விவசாயி இத்தனை கடின உழைப்புக்கு மத்தியிலும், எப்போதும் என்னை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? அவரது விவசாயத் தொழிலை எனக்குச் செய்யக் கூடிய பூஜையாக எண்ணி, அதனால் கிடைக்கும் உலகியல் பலன்களில் நாட்டம் வைக்காமல், எனது மகிழ்ச்சியே பெரிய பலன் என்ற எண்ணத்துடன் தனது கடமையை ஆற்றுகிறார். காலை மாலை என்னை அவர் தியானிப்பது மட்டும் அவர் செய்யும் பூஜையன்று. அவரது கடமையையும் என்னைத் தியானித்தபடி எனக்குச் செய்யும் பூஜையாகத்தான் செய்துவருகிறார்.

அவர் வேள்வி செய்தாரா என்று கேட்டாயே நாரதா! வேள்வியின் வடிவமே நான்தான். அத்தகைய என்னைத்தானே அவர் தினமும் வழிபடுகிறார்? அனைத்து வேள்விகளுக்கும் ஒரே பலன் என்னை மகிழ்விப்பதுதான். எனக்குப் பூஜையாகத்தான் வேள்விகள் யாவும் செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட என்னைத் தன் கடமைகளுக்கு மத்தியில் இடைவிடாது தியானித்து, கடமையையே எனக்குச் செய்யும் பூஜையாக எண்ணிச் செய்துவரும் இந்த விவசாயி தினந்தோறும் வேள்வி செய்தவரே ஆவார்.

இவர் தான் எனக்குப் பிரியமான பக்தர்!” என்று விளக்கினார்.வேள்வியின் வடிவமாகவும், வேள்விக்கான கருவியாகவும், வேள்வியின் பலனாகவும் திருமாலே இருக்கிறார் என்பதையும், திருமாலைத் தியானித்துப் பூஜிக்கும் அடியார்கள் அத்தகைய வேள்வியின் பலனைப் பெறுவார்கள் என்பதையும் இதன்மூலம் அறிகிறோம் அல்லவா?  வேள்வியின் வடிவமாகத் திருமால் இருப்பதால் அவர் ‘யக்ஞ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 446-வது திருநாமம். ‘யக்ஞ:’ என்றால் வேள்வியின்

வடிவானவர் என்று பொருள்.“யக்ஞாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தனது சிறந்த பக்தர்களாக அங்கீகரித்து அவர்கள் செய்யும் வழிபாடுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றருள்வார்.

447. இஜ்யாய நமஹ: (Ijyaaya namaha)

ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் சீர்காழியை அடுத்த திருநாங்கூரில் பதினொரு கருடசேவை வைபவம் நடைபெறுவது வழக்கம். அந்தக் கருட சேவை வைபவத்தைத் தொடர்ந்து மறுநாள் காலை திருநாங்கூருக்கு அருகிலுள்ள அண்ணன் கோவில் எனப்படும் திருவெள்ளக்குளத்தில் கலியன் ஒலிமாலை என்ற வைணவ மாநாடு நடைபெறுவது வழக்கம். இம்மாநாட்டை அண்ணன் கோவில், .உ.வே. சடகோப கல்யாணராமன் சுவாமிகள் நடத்தி வருகிறார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற அந்தக் கலியன் ஒலிமாலை மாநாட்டில் பேசுவதற்கு அடியேனை அழைத்திருந்தார்கள். திருமங்கை ஆழ்வார் மிகவும் ஈடுபட்ட திவ்ய தேசங்களுள் ஒன்றைப் பற்றிப் பேசுமாறு பெரியோர்கள் அடியேனைப் பணித்தார்கள். பற்பல மகான்கள் அலங்கரித்த அந்தச் சபையில், பொடியனான அடியேன் எங்கள் சொந்த ஊரான நாச்சியார்கோவில் எனப்படும் திருநறையூரில் கோவில் கொண்டுள்ள வஞ்சுளவல்லித் தாயார்-நிவாசப் பெருமாளிடம் திருமங்கை ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாட்டைப்பற்றி உரையாற்றினேன்.

அதன் ஒரு பகுதியாக, திருமங்கை ஆழ்வார் வைணவராக ஆக விரும்பிய போது, நாச்சியார்கோவில் நிவாசப் பெருமாள் தான் ஆசார்ய ஸ்தானத்திலே இருந்து, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, ஐஞ்சீர்ச் சடங்கைச் செய்து வைத்து திருமங்கை ஆழ்வாரை வைணவராக ஆக்கினார் என்பதைக் குறிப்பிட்டேன்.

இவ்வாறு பெருமாள் தனக்குச் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி அருளியமையைத் திருவுள்ளத்தில் கொண்டே திருமங்கை ஆழ்வாரும்,

“வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்

நலங்கொள் வாய்மை அந்தணர் வாழும் நறையூரே!”

என்று பாடியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டேன். அத்தோடு நில்லாமல், இளங்கன்று பயம் அறியாது என்பதற்கேற்ப, திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் பெருமாள் சங்க சக்கரப் பொறிகளை அருளியமையை வேதமும் கொண்டாடுகிறது என்று சொன்னேன்.

“உத்தர்ஷய மகவன் ஆயுதானி உத் ஸத்த்வானாம் மாமகானாம் மஹாம்ஸி”

 - என்ற யஜுர்வேத மந்திரத்தை மேற்கோள் காட்டினேன். அப்ரதிரதம் என்ற யஜுர்வேதப் பகுதியில் வரும் மந்திரம் இது.

“மகவன் - பற்பல மாயங்கள் செய்ய வல்ல நறையூர் நம்பியே! ஆயுதானி உத்தர்ஷய - திருமங்கை ஆழ்வாரின் தோள்களில் சங்க சக்கரப் பொறிகளை ஒற்றி, அதன்மூலம் அந்த திவ்யாயுதங்களுக்கு மகிழ்ச்சி அளித்தவனே!” என்று கூட இந்த வேத வாக்கியத்துக்குப் பொருள் கொள்ள இடமுள்ளது என்று விண்ணப்பித்தேன். திருமங்கை ஆழ்வாரின் தோள்களின் ஸ்பரிசத்தால் பெருமாள் கையிலுள்ள திவ்யாயுதங்கள் மகிழ்ச்சி அடைந்தன என்று இந்த வேத வாக்கியம் குறிப்பிடுவதாக ரசிப்பதற்கு இடமுள்ளது என்றேன்.

ஆனால் பேசிய பின், “பல மகான்கள் நிறைந்த சபையில் வேத மந்திரத்துக்கு நாம் புதிதாக ஏதோ அர்த்தம் சொல்லி விட்டோமே! யாராவது கண்டிப்பார்களோ!” என்ற லேசான அச்சம் மனதில் உண்டானது. அப்போது சபையில் வீற்றிருந்த திருச்சித்திரகூடம் டாக்டர் ஏவி ஆர் சுவாமிகள் சற்று நேரம் மௌனமாகவே இருந்துவிட்டு, அதன்பின், “உன்னைப் பாராட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்தேன். அதனால்தான் எதுவும் பேசவில்லை. உண்மையிலேயே இது மிகவும் பொருத்தமான, ஆழ்ந்த அர்த்தம்!” என்று பாராட்டினார்.

மேலும், “ராமாநுஜர் பாஷ்யத்தில் வைச்வானராதிகரணம் என்னும் பகுதியில், வேதங்களில் உள்ள அனைத்து தேவர்களின் பெயர்களுமே உண்மையில் நேரடியாகத் திருமாலைக் குறிப்பதாகக் கருதித் தியானிக்கலாம் என்ற வழியைக் காட்டி உள்ளாரே. அக்னி என்றால் (இலக்கண ரீதியில்) இருளில் முன்னே வழி நடத்திச் செல்பவர் என்று பொருள்.

ஞானஒளி தந்து அறியாமை இருளைக் கடக்க உதவும் திருமாலையே அக்னி என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இந்திரன் என்றால் அனைத்து உலகங்களுக்கும் தலைவன் என்று பொருள். பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் ஆளும் திருவரங்கநாதனையே இந்திரன் என்று வேதம் சொல்வதாகக் கொள்ளலாமே. இதுபோல் வாயு, வருணன், பிருகஸ்பதி உள்ளிட்ட எல்லாப் பெயர்களும் திருமாலைக் குறிக்கும் தன்மைகொண்டவை என்று ராமாநுஜரே காட்டியுள்ளார். அந்த வழியை அடியொற்றி நீ பேசி இருக்கிறாய்! பாராட்டுகள்!” என்று வாழ்த்தினார்.

எனவே, இந்திரன், சந்திரன், சூரியன், வாயு என எந்தத் தேவதையின் பெயரைச் சொன்னாலும் அது அவர்களுக்குள்ளே உறையும் திருமாலைக் குறிக்கும். அவர்களைக் குறித்துச் செய்யும் வேள்விகளால் உகப்பவரும் திருமாலே. அந்தந்த தேவதைகளுக்குள் திருமால் இருந்துகொண்டு அந்தந்த வேள்விகளுக்கான பலன்களை அவர்கள் மூலம் திருமாலே அருள்கிறார். இப்படி அனைத்துத் தேவதைகளைக் குறித்த வேள்விகளாலும் ஆராதிக்கப்படுபவராகத் திருமால் ‘இஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார். ‘இஜ்ய:’ என்றால் வேள்விகளால் ஆராதிக்கப் படுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 447-வது திருநாமம்.“இஜ்யாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் செய்யும் அனைத்து வழிபாடுகளையும் திருமால் ஏற்று அருள்புரிவார்.

448. மஹேஜ்யாய நமஹ: (Mahejyaaya namaha)

தேவர்களின் பக்திக்கும் ஆழ்வார்களின் பக்திக்கும் என்ன வித்தியாசம்?

இதற்கான விடையை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் தமது

அம்ருத சார்தூலம் என்ற துதியின் ஒரு சுலோகத்தில் வழங்கியுள்ளார்.

“க்ஷீராப்தேரம்ருதம் பபாவிதி பரம் ஜானந்தி மந்தாஸ்ஸுரா:

யத் கிஞ்சித் ததஹோ ததங்க லலித ஸ்வேத த்ரவாணாம் கண

தன்மத்யே பயஸாம்நிதேரபி ததா கும்பகோணே புரே

சேதே மான்யம் இதம் விசித்ரம் அம்ருதம் தத்த்வம் து வித்மோ வயம்”   

 பாற்கடல் கடையப்பட்ட வரலாற்றை நாம் எல்லோரும் அறிவோம். அசுரர்களிடம் தேவர்கள் தோல்வி அடைந்த நிலையில், இழந்த தேவலோக ராஜ்ஜியத்தை மீண்டும் பெற என்ன வழி என்று பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமாலின் உதவியை நாடினார்கள் தேவர்கள். அப்போது திருமால், “நீங்கள் பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அமுதை உண்டால் நீண்ட ஆயுளும் உடல் வலிமையும் பெறலாம். அதன்பின் நீங்கள் எளிதில் அசுரர்களை வீழ்த்த முடியும்!” என்று ஆலோசனை சொன்னார்.

வலிமை இழந்திருந்த தேவர்களுக்கு

உதவியாக அசுரர்களையும் பாற்கடலை

கடைய அழைக்குமாறு தேவர்களிடம் சொன்னார் திருமால். ராஜநீதியின் அடிப்படையில், அமுதம் தருவதாகச் சொல்லி அசுரர்களை அழைத்து விட்டு அதன்பின் அமுதம் தராமல் ஏமாற்றி விடலாம் என்ற ஆலோசனையைத் திருமால் வழங்கினார்.அவ்வாறே மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கித் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள். மந்தர மலை கடலில் மூழ்காமல் காக்கத் திருமாலே ஆமை வடிவில் கூர்மாவதாரம் எடுத்தார். தொடர்ந்து பாற்கடலைக் கடைந்த போது ஐராவதம் யானை, உச்சைசிரவஸ் குதிரை, பாரிஜாத மரம், ஆலகால விஷம் போன்ற பலவும் அதினின்று தோன்றின. அமுதில் வரும் பெண்ணமுதான மகாலட்சுமி தோன்றித் திருமாலை மணந்தது தனி வரலாறு.

திருமால் தன்வந்தரி வடிவம் பூண்டு கையில் அமுதக் கலசத்துடன் பாற்கடலிலிருந்து உதித்தார். அமுதம் கிடைக்கப் போவதை எண்ணித் தேவர்கள் பேருவகை கொண்டார்கள். ஆனால் தங்களுக்கும் அமுதில் பங்கு வேண்டும் என்று அசுரர்கள் வரிசை கட்டி வந்து நின்றார்கள். அப்போது தான் திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை மயக்கித் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும்படிச் செய்துவிட்டார்.

அமுதை உண்டதால் வலிமை பெற்ற தேவர்கள் அடுத்து நடந்த போரில் அசுரர்களை வீழ்த்தினார்கள். அமுதைச் சுவைத்த தேவர்கள், தேவ லோக ராஜ்ஜியத்தை அனுபவிக்கத் தொடங்கிய தேவர்கள், தங்களது வெற்றிக்குக் காரணமான திருமாலை மறந்து விட்டார்கள். அற்ப இன்பம் துய்ப்பதிலேயே காலம் கழிக்கத் தொடங்கி விட்டார்கள்.

“இந்தத் தேவர்கள் பாற்கடலில் இருந்து அமுதம் வந்தது என்பதையே அறிவார்கள். ஆனால் அந்தப் பாற்கடலுக்கு அமுதம் எப்படி வந்தது? அதை நான் சொல்கிறேன்!” என்று இந்த சுலோகத்தில் கூறுகிறார் வில்லூர் சுவாமிகள். பாற்கடலுக்கு எப்படி அமுதம் வந்ததென்றால், பாற்கடலிலும் கும்பகோணத்திலும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறாரே திருமால்! அவரது திருமேனிக்கு வியர்த்தால் அந்த வியர்வைத் துளிகள் எங்கே சிந்தும்? பாற்கடலில்தான் சிந்தும்.

பாற்கடலில் சிந்திய திருமாலின் வியர்வைத் துளிகள் எல்லாம் ஒன்று கூடி அமுதமாக உருவாயின. திருமாலின் வியர்வையே அமுதமாக உருவாகிறது என்றால் திருமால் எவ்வளவு இனியவராக இருப்பார்? அதனால்தான் அவர் ஆராவமுதம் என்று அழைக்கப்படுகிறார். அமுதம், ராஜ்ஜியம் உள்ளிட்ட பலன்களை விரும்பும் தேவர்களைப் போன்றோர், அதை மட்டும் பெற்றுக்கொண்டு திருமாலை மறந்து விடுகிறார்கள்.

ஆனால் ஆழ்வார்களைப் போன்ற மிக உயர்ந்த பக்தர்களோ, அமுதத்துக்கும் காரணமான ஆராவமுதம் திருமாலே என உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மற்ற விஷயங்களில் கண் வையாது திருமாலையே இடைவிடாது வழிபட்டுவருகிறார்கள். அந்தத் திருமாலின் திருவடிகளுக்குத் தொண்டு செய்வதாகிய முக்தியையே பெரும் பேறாகக் கருதுகிறார்கள்.

இவ்வாறு வேறு பலனில் கண்வையாது இறைவனையே விரும்பும் மிக உயர்ந்த பக்திக்கு ‘மஹா இஜ்ய:’ என்று பெயர். இஜ்ய என்றால் வழிபாடு. மஹா என்றால் மிக உயர்ந்த. ‘மஹேஜ்ய:’ (மஹா+இஜ்ய: = மஹேஜ்ய:) என்றால் மிக உயர்ந்த வழிபாட்டுக்கு இலக்காக இருப்பவர் என்று பொருள். உலகியல் பலனில் நாட்டம் வைக்காத ஆழ்வார்கள் போன்றவர்களின் உயர்ந்த பக்திக்கு இலக்காகத் திருமால் இருப்பதால், அவர் ‘மஹேஜ்ய:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 448-வது திருநாமம்.“மஹேஜ்யாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் பக்தியில் விரைந்து முன்னேறும்படி திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: