தெளிவு பெறுஓம்

?வீட்டில் பூஜையின்போது பயன்படுத்தும் மணியின் கைப்பிடியில் சக்கரம், அனுமன், நந்தி என வடிவங்கள் உள்ளன. இவையும் தெய்வங்கள்தானே? இவற்றிற்கும் அபிஷேக ஆராதனை செய்யலாமா?

- சு. கௌரிபாய், பொன்னேரி.

செய்ய வேண்டும். தினமும் வீட்டில் உள்ள தெய்வ விக்கிரகங்களுக்கு அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்யம், தீபாராதனை ஆகியவற்றை செய்து முடித்தபிறகு இனிமேல் அன்றைய தினம் மணி அடிப்பதற்கான வேலை இல்லை என்றானவுடன் மணியின் மேல் உள்ள தெய்வ வடிவத்திற்கு சுத்தமான ஜலம் விட்டு அபிஷேகம் செய்து சந்தனம், குங்குமம், புஷ்பம் வைத்து சிறிதளவு அன்னமும், பருப்பும் நைவேத்யம் செய்து அதனைக் கொண்டுபோய் காகத்திற்கு வைக்க வேண்டும். ஆனால் இந்த மணிக்குத் தனியாக தீபாராதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

?அமாவாசை நாளில் விரதம் மேற்கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும் என்று சொல்கிறார்கள். அமாவாசை நாளில் முன்னோர் வழிபாடு தவிர வேறு விரதம் உண்டா? குடும்ப ஒற்றுமைக்கு எந்த விரதம் மேற்கொண்டால் நல்லது?

- ஆர்.செல்வம், பரப்பனங்காடி, கேரளா.

கேதார கௌரீ விரதம் - தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் மேற்கொள்ளப்படும் விரதம். சில குடும்பங்களில் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முன்னிட்டு சதுர்த்தசியிலேயே அதாவது தீபாவளி அன்றே இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இந்த விரதத்தை மேற்கொண்டு பார்வதிதேவி, சிவபெருமானின் உடலில் சரிபாகத்தினைப் பெற்றாள் என்று புராணங்கள் சொல்கின்றன. தம்பதியருக்குள் உண்டாகும் கருத்து வேற்றுமைகள் காணாமல் போய், என்றென்றும் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகை நமக்கு அருளியதுதான் இந்த கேதார கௌரீ விரதம்.

ஐப்பசி மாத (தீபாவளி) அமாவாசைக்கு 21 நாட்கள் முன்னதாக இந்த விரதத்தைத் துவங்கி சரியாக 21வது நாளாக அமாவாசை அன்று முடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பதால் இறுதி நாளான தீபாவளி - அமாவாசை நாளன்று 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கொம்பு, சந்தனவில்லை, விபூதி உருண்டை, அதிரசம், வடை ஆகியவற்றை நோன்புசட்டியில் வைத்து நோன்பு எடுக்கும் பழக்கம் உருவாயிற்று. ஆண்களும், பெண்களும் ஒன்றாக இணைந்து இந்த நோன்பு மேற்கொள்ள ஆலயத்திற்குச் செல்வதைக் காணலாம். கௌரீ சமேத கேதாரீஸ்வரராக விளங்கும் அர்த்தநாரீஸ்வரரை நோக்கி மனமுருகி பிரார்த்தனை செய்வதே இந்த கேதார கௌரீ விரதத்தின் நோக்கம். இந்த விரதத்தினை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை நிச்சயம் கூடும்.?சிவாலயங்களில் நவகிரஹங்கள் உள்ளன. அதுபோல பெருமாள் கோயில்களில் நவகிரஹங்கள் இல்லையே, அது ஏன்?

- பாஸ்கரன், பெருமாள்பட்டு.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சந்நதியோ, தனியாக உருவ வழிபாடோ செய்யப்படவில்லை. தனிமனிதருக்கு ஜாதகம் எழுதும் பழக்கம் தோன்றிய பின்னர் பரிகார பூஜைகள் செய்வதற்காகவும், விளக்கேற்றி வழிபடுவதற்காகவும் உருவாக்கப்பட்டதே நவக்கிரக சந்நதி. சைவ சமயத்தைப் பொறுத்தவரை இறைசக்தியின் பல்வேறு வடிவங்களான விநாயகர், முருகன், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள் என கடவுளர்கள் மட்டுமல்லாது இறைவனுக்கு தொண்டாற்றிய நாயன்மார்களைக்கூட தெய்வங்களாக வணங்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.

ஆனால் வைணவ சமயம் அனைத்தும் நாராயணனே என்பதை அறுதியிட்டு சொல்கிறது. உலகத்தில் நிகழும் அத்தனை நிகழ்வுகளுக்கும் காரணம் பெருமாளே என்று உறுதியாக உரைக்கிறது. ஆதலால் பழமை வாய்ந்த பெருமாள் கோயில்களில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. எனினும் தற்காலத்தில் புதிதாக உருவாகும் பெருமாள் கோயில்களில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவதைக் காண முடிகிறது.? ஆலயத்தில் உள்ள சிற்பங்கள் ஆபாசமாகவும், பாலியல் உணர்வினைத் தூண்டுவதாகவும் இருப்பதாக என் நண்பன் குற்றம் சாட்டுகிறான். அவனது குற்றச்சாட்டு சரிதானா?

- வேத. நாராயணன், கும்பகோணம்.

உங்கள் நண்பரின் கண்ணோட்டத்தில்தான் தவறு இருக்கிறது. ஆண்-பெண் சேர்க்கை என்பது இயற்கையின் நியதி. தாம்பத்யம் என்பது மிகவும் புனிதமானது. மிகவும் புனிதமான ஒரு விஷயத்தை பொதுமக்கள் கூடுகின்ற ஆலயத்தில் சிற்பங்களாக செதுக்கி வைத்திருக்கிறார்கள். பக்தி சிரத்தையோடு இறைவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இந்த சிற்பங்கள் பாடத்தினைப் போதிப்பவையாகத்தான் அமையுமே தவிர, பாலியல் உணர்வினை நிச்சயம் தூண்டாது. நவீன யுகத்தில் கலவியை கல்வியின் மூலம் போதிக்கிறார்கள். அந்நாட்களில் பாடசாலைக்குப் பிள்ளைகள் வருவதே அபூர்வம்.

 குறிப்பிட்ட குடிகளில் பிறந்தவர்கள் மட்டுமே பாடம் படித்தார்கள். மற்றவர்கள் எவ்வாறு புரிந்துகொள்வார்கள்? ஆலயம் தவிர பிற இடங்களில் வைத்து கற்றுத் தந்தால் கல்லாத மூடர்களின் உணர்வினைக் கட்டுப்படுத்த இயலாது. இதனை உணர்ந்துதான் கற்றவர், கல்லாதவர் என்ற பேதம் ஏதுமின்றி எல்லோரும் புனிதமான தாம்பத்ய உறவினைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற சிற்பங்களை ஆலயத்தின் சுற்றுப் பிராகாரத்தில் வடிவமைத்தார்கள். இறைவனின் சந்நதியில் அறிவுதான் வளருமே தவிர, உணர்வு தூண்டப்படாது என்பதே நிஜம். உச்சந்தலையில் ஓங்கிக் குட்டி உங்கள் நண்பருக்கு

உண்மையை உணர்த்துங்கள்.

திருக்கோவிலூர்

K.B.  ஹரிபிரசாத் சர்மா

Related Stories: