இந்த வார விசேஷங்கள்

4-7-2022 - திங்கள்  ஸ்கந்த பஞ்சமி

இன்று பஞ்சமி திதி. மஹாலட்சுமிக்குரிய பூர நட்சத்திரம். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை. பஞ்சமி திதியும் சஷ்டி திதியும் இணைந்திருக்கும். சஷ்டி திதி முருகனுக்கு உரியது. எனவே அந்த சஷ்டியை முருகன் பெயரோடு இணைத்து ‘‘ஸ்கந்த சஷ்டி” என்று சொல்லுவார்கள். அதைப்போல, சாந்தி ரமான முறைப்படி, கடக மாசமாகிய ஆடி மாதத்தில், வளர்பிறையில் வருகின்ற பஞ்சமி திதியை ‘‘ஸ்கந்த பஞ்சமி” என்று முருகனுக்குரிய நாளாகக் கொண்டாடுகின்றனர். ஒரு நாளில் சூரிய உதயம் தொடங்கி, சூரிய அஸ்தமனத்திற்குள் பஞ்சமி திதி முடிந்து, சஷ்டி திதி ஆரம்பித்துவிட்டால், பஞ்சமியிலேயே சஷ்டி விரதத்தைத் தொடங்கி விடுவார்கள். முருகனை எண்ணி பஞ்சமி விரதத்தையும் தொடர்ந்து சஷ்டி விரதத்தையும் மேற்கொள்பவர்களுக்கு இகபர சுகங்களும், இல்வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் கிடைக்கும். பஞ்சமி திதியில் தொடங்கி சஷ்டி திதியிலும் முருகனை நினைந்து, அவன் பெயரை உச்சரித்து திரும்பத் திரும்ப ஜபம் செய்பவர்களுக்கு மரண பயமே வராது. அதற்கு இந்த பஞ்சமி விரதம் உதவும்.

4-7-2022 - திங்கள்  அமர்நீதியார் குரு பூஜை

அமர்நீதி நாயனார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டிலே பழையாறை என்னும் பகுதியிலே பிறந்தார். 7ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர். வணிகத்தால் பெரும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பொருளைக் கொண்டு சிவனடியார்க்குப் பணிசெய்வதையே, தனது ஆத்மா கடைத்தேறும் வழியாகக் கொண்டிருந்தார். சிவனடியார்க்கு உணவு அளித்தல், ஆடை அளித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார். அமர்நீதியாருக்குச் சிவபெருமான் அருள்புரியத் திருவுளங்கொண்டார்.  அமர்நீதியார் மடத்தை அடைந்தார்.

‘‘மழை வரும் போல இருக்கிறது. நீராடி விட்டு வருவதற்குள் மழை பிடித்துக்கொண்டால், கட்டுவதற்கு மாற்றுக் கோவணம் அடியேனிடத்தில் இல்லை. இதோ இந்தத் தண்டத்தில் கட்டியுள்ள கோவணத்தை உம்மிடம் தருகின்றோம். நீர் இதைப் பாதுகாத்து, நீராடி விட்டு வந்தவுடன் தரவேண்டும்.” ‘‘அதற்கென்ன தாருங்கள். பாதுகாத்து உங்கள் விருப்பப்படி தருகின்றேன்” அமர்நீதியார் அதனைத் தனியாக ஓர் இடத்தில் வைத்தார். சிவனடியாருக்காகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் சிவனடியார் மழையில் நனைந்தவராய் வந்தார். அவர் வருவதற்குள் தயாராய் வைத்துக்கொள்வோம் என்று தேடிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவணம் வைத்த இடத்தில் இல்லை.

சிவனடியாரின் அதே கோவணம் கேட்க, திகைத்தார். அவரைத் திரும்பத் திரும்ப விழுந்து வணங்கினார். ‘‘இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமானாலும் செய்கிறேன்” என்று கூறினார். சற்று நேரம் அவரை நடுங்க வைத்த சிவனடியார்,” சரி, போனது போயிற்று. அதைப் போன்ற இன்னொரு கோவணம் இந்தத் தண்டில் சுற்றி வைத்திருக்கிறேன். இதற்கு இணையான ஒரு கோவணம் உம்மிடம் இருந்தால் தரலாம்’’ அமர்நீதியாருக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. சிவனடியார் தராசில் தண்டில் கட்டியிருந்த நனைந்த கோவணத்தை வைத்தார்.

வைத்த தட்டு இறங்கியது. தம்மிடம் இருந்த விலை உயர்ந்த அழகான கோவணத்தை அடுத்த தட்டில் வைத்தார். ஆனால், என்ன வியப்பு! அந்தத் தட்டு இறங்கவே இல்லை.

சிவனடியார் சிரித்தார். ‘‘நான்தான் இதற்கு இணையான கோவணமில்லை என்று சொல்கிறேனே” என்று சொன்னவுடன், ‘‘ஐயனே! சற்று பொறுக்க வேண்டும்” என்று சொல்லி, தம்மிடமிருந்த பலப்பல ஆடைகளையும் ஆபரணங் களையும், வைர வைடூரியங்களையும் வைத்தார். தம்முடைய எல்லா செல்வங்களையும் தராசுத் தட்டில் வைத்தார். ஆனால், ஒரு அங்குலம் கூட தட்டு இறங்காமல் அப்படியே நின்றது.

 இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை! இனி எதை வைத்து அந்த கோவணத்திற்கு இணை செய்வது? திகைத்துப்போன அமர்நீதி நாயனார், “ஐயனே! இனி என்னிடம் வைப்பதற்கு எதுவும் இல்லை.” என்று சொல்லி தன்னுடைய மனைவியையும், மகனையும் அந்தத் தராசின் மீது ஏறி நிற்கச் சொல்லி, சிவாய நமஹ என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தானும் ஏறி நின்றார். நாயனார் ஏறியவுடன் தராசுத் தட்டு கீழே இறங்கி கோவணத்திற்குச் சமமாக நின்றது. ‘‘ஐயா திருப்திதானே?” என்று கேட்டார் அமர்நீதி நாயனார்.

‘‘திருப்தி.. திருப்தி” என்று சொல்லிக்கொண்டே மறைந்துபோனார் சிவனடியார். அடுத்த நொடி அடியாராக வந்த இறைவர், திருநல்லூரிற் பொருந்திய அம்மையப்பராகிய திருக்கோலத்தை அமர்நீதியாருக்குக் காட்டியருளினார். தலை சிறந்த சிவனடியார்களில் ஒருவரான அமர்நீதியார் குரு பூசைநாள் இன்று, ஆனி பூரம்.

8.7.2022 - வெள்ளி  

பெரியாழ்வார் ஜெயந்தி

பெரியாழ்வார் பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவர். வில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர். எப்பொழுதும் பகவானையே நினைப்பதால், `விஷ்ணு சித்தர்’ என்பது பெயர். வில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு பாமாலையும் பூமாலையும் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார். அவர் இரண்டு பிரபந்தங்களை இயற்றினார். 1. திருப்பல்லாண்டு,

2. பெரியாழ்வார் திருமொழி. அவருடைய அவதார வைபவம் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் இன்று நடைபெறும்.

Related Stories: