ஆனந்தம் அள்ளித்தரும் ஆஞ்சநேயன்

உலகத்திலேயே ராம பக்தியையும்,ராம நாமத்தையும்  விஞ்சியது இல்லை.ராம பக்தர்களிலேயே அனுமனுக்கு ஒப்பானவர்கள்  இல்லை. ஆஞ்சநேய ஸ்வாமியின்  தியாகம், திறமை, தைரியம், அறிவு போன்றவை ஒப்பிட முடியாத அளவுக்கு தனித்துவ மானவை. ஞானம், பலம், வீரம், பக்தி, சேவை, பிரம்மச்சரியம் என்ற எல்லா நிலையிலும் உச்ச நிலையில் இருப்பவர் ஆஞ்ச

நேயர்.

அனுமனுடைய அவதாரம்

அனுமனுடைய அவதாரம் பல வகையிலும் சிறப்புடையது. அவர் அவதரித்தது மூல நட்சத்திரத்தில். அந்த மூல நட்சத்திரம் அமைந்த ராசி தனுசு . குருவுக்குரிய ராசி .எனவே அவன் ஞானகுருவாக ராமாயணத்தில் செயல்பட்டார். சகல ஞானங்களையும் தரக் கூடிய வராக அனுமன் விளங்குகின்றார். அவர் அவதரித்த மூல நட்சத்திரம் கேதுவுக்கு உரிய நட்சத்திரம். கேது ஞானகாரகன் என்று பெயர் பெற்றவர். எனவே அனுமனை வணங்குவதன் மூலமாக மெய்ஞ்ஞானத்தை பெறலாம். அவர் அவதரித்த மாதம் மார்கழி மாதம். திருப்பாவை மாதம். கண்ணன் விரும்பிய மாதம். கீதையில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று சொன்ன மாதம். அந்த மாதத்தில் அனுமன் அவதாரம் நிகழ்ந்தது.

மூன்றாவது சிறப்பு அவர் அவதரித்த நாள் அமாவாசை. சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைகின்ற நாள். முன்னோர்களுக்கு உரிய நாள். இப்பொழுதும் ராமேஸ்வரத்தில் அமாவாசையன்று முன்னோர்களுக்கான முறையான கடன்களைச் செய்துவிட்டு முகப்பில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்து பின்னால் தான் நாம் ராமநாதசுவாமியை  தரிசிக்கச் செல்ல வேண்டும் .அதைப் போலவே சேதுக்கரையில்  நீர் கடன்களை ஆற்றிவிட்டு, கடலை நோக்கி வணங் குகின்ற அனுமனை தரிசித்து விட்டுத்தான், நாம் மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும்.

அனுமத் காண்டம்

வால்மீகி பகவான்  ராமாயணத்தை எழுதுகின்ற பொழுது ஐந்தாவது கண்டத்திற்கு  அனுமத் காண்டம் என்று தான் பெயர் வைத்தார். அனுமத் காண்டத்தில் உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும், அனுமனின் பிரபாவத்தை  சொல்வதாகவேஅமைந்திருக்கும். கடல் கடந்து சென்றது, அங்கே பிராட்டியைத் தேடிக்கண்டது, அவருடைய உயிரைக் காப்பாற்றியது, அவரால் சிரஞ்சீவி பட்டம் பெற்றது, அசோக வனத்தை அழித்தது, ராவணனைச்  சந்தித்தது, ராவணனுக்கு ஹிதம் உரைத்தது, இலங்கையை சுட்டது, திரும்பிவந்து  “கண்டேன் சீதையை” என்று ராமன் மனதைக்  குளிரச்  செய்தது என அத்தனை நிகழ்வுகளும், அனுமனின் பிரபாவத்தை  ஒட்டியே நடப்பதால், இந்த காண்டத்துக்கு அனுமத்  காண்டம் என்று தான் பெயர் வைத்தார்.

ஆனால், ஆஞ்சநேயருக்கு அப்படிப் பெயர் வைப்பது பிடிக்கவில்லை.

“என்னுடைய பெயரை ஏன் வைக்க வேண்டும்?நான் எளியவன். ராம காரியத்தில் சாதாரணமான தொண்டன்..எம் பெயர் வேண்டாம்” என்று வாதாடினார்.

வால்மீகி எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் “சரி, பெயரை மாற்றி விடுகிறேன்” என்று அந்த காண்டத்திற்கு  சுந்தரகாண்டம் என்று பெயர் வைத்தார். அனுமனுக்கு ஏக சந்தோஷம்.

இராமாயணத்தைக் கேட்டு முடித்துவிட்டு தன்னுடைய தாய் அஞ்சனா தேவியை  பார்க்கப் போகின்றார். அஞ்சனாதேவி அனுமனை ‘‘வா, சுந்தரா” என்று அழைக்க அனுமன் திடுக்கிடுகிறார்.

‘‘என்னம்மா சொன்னீர்கள்? என்னுடைய பெயர் என்ன சுந்தரனா? என்று கேட்கிறார்.‘‘ஆம். பிறக்கும் போது நீ அவ்வளவு அழகு.துடிப்பு.உன் முகத்தில் பிரகாசம்.எனவே சுந்தரன் என்று பெயர் வைத்தோம். அது இப்போது நினைவுக்கு வந்தது.அழைத்தேன்”. தன்னுடைய இன்னொரு பெயரான சுந்தரன் என்பதைத் தெரிந்து கொண்டு தான் சுந்தர காண்டம் என்று வான்மீகி பெயர் வைத்திருக்கிறார் என நினைத்து அமைதி ஆனாராம்.வெள்ளைப் பூக்களா? சிவப்புப் பூக்களா?

கபீர்தாசர் ராமாயணத்தை எழுத, அதை ஒரு வயதானவர் உருவத்தில் வந்து அனுமன் அங்கீகரிப்பாராம்.அசோகவனத்தை வருணிக்கும் கட்டம் வந்தது. கபீர்தாசர் அங்கே இருக்கிற பூக்களெல்லாம் வெண்மையான பூக்களாக இருந்தன என்று வர்ணித்தார்.உடனே ஆஞ்சநேயருக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘உண்மைக்கு மாறாக எழுதுகிறீர்களே” என்று கேட்டாராம். ‘‘என்ன உண்மைக்கு மாறாக எழுதிவிட்டேன்? என் உள்ளுணர்வில் பகவானே காட்சியை காட்ட நான் எழுதுகிறேன்” என்று  சொல்ல, ‘‘இல்லை. இது தவறு. அசோகவனத்தில் நான் இருந்ததனால் சொல்கிறேன்.சிவப்பான பூக்கள் தான் இருந்தன. வெண்மை யான பூக்களை நான் அங்கே பார்க்கவில்லை” என்று சொல்ல விவாதம் வந்து விட்டது.

ராமாயணம் நின்று விட்டது.இந்த விஷயம் ராமர் இடத்திலேயே சென்றதாம். ராமர் சொன்னாராம். ‘‘கபீர்தாசர் சொன்னதுதான் சரி. அசோகவனத்தில் வெண்மையான பூக்கள் தான் இருந்தன.” என்று சொல்ல, அனுமன், ‘‘என்ன பிரபு! நீங்களும் அவரோடு சேர்ந்து விட்டீர்கள். பார்த்த நான் இருக்கிறேன். அப்படியானால் நான் பார்த்தது தவறா? நான் பொய்  சொல்கிறேனா?” என்று அனுமன் கேட்க, ராமர் சமாதானப்படுத்தினார்.

‘‘அப்பா, அனுமனே. உன் வாக்கு பொய்யாகுமா? உன்னிடத்தில் ஒரு குறையும் இல்லை. ஆனால் அங்கே இருந்தது வெண்மையான பூக்கள் தான். ஆனால் உன்னுடைய கண்களுக்கு அது சிவப்பாகத் தான் தெரிந்திருந்தன. காரணம் என்ன என்று சொன்னால், “சீதையை அபகரித்து இப்படி பாபம் செய்தானே ராவணன்” என்ற கோபம் உனக்கு வந்தது. அந்த கோபத்தினால் உன்னுடைய விழிகள் சிவந்தன. உன்னுடைய சிவந்த விழிகள் மூலமாக, வெண்பூக்களை பார்த்தபோது உனக்கு சிவப்பாகத்  தெரிந்ததே தவிர, உண்மையில் அவை வெள்ளைப் பூக்களே” என்று சொல்ல அனுமன் சமாதானம் அடைந்தார்.

சொல்லின் செல்வன்

முதன் முதலாக அவர் சுக்ரீவனின் சார்பாக ராமரிடத்திலே ஒரு சன்னியாசியின் வேஷத்தில் சென்று மிக நைச்சியமாக பேசி தன்னுடைய தலைவனாகிய சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் நட்புறவை ஏற்படுத்துகிறார். அனுமன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் அழகு அருமையிலும் அருமை. எதிரில் உள்ளவர்களை முதலில் புகழ்ந்து தன்னை  எளியவனாக அறிமுகம் செய்துகொள்ள வேண்டும்.

மஞ்சு எனத் திரண்ட கோல

மேனிய! மகளிர்க்கு எல்லாம்

நஞ்சு எனத் தகைய ஆகி,

நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்

கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண!

யான் காற்றின் வேந்தற்கு

அஞ்சனை வயிற்றில் வந்தேன்;

நாமமும் அனுமன் என்பேன்;  

ஒரு குரு என்கிற நிலையில் அங்கே அவர் செயல்படுகிறார். இதனால் சுக்ரீவனுடைய அச்சம் நீங்குகிறது. ராமருக்கும் துணை கிடைத்த மகிழ்ச்சி உண்டாகிறது. சுக்ரீவனுடைய பட்டாபிஷேகமும் உறுதியாகிறது. ஒரே சந்திப்பில் இத்தனை காரியமும் செய்கிறார் அனுமன். அனுமனுக்கு “சொல்லின் செல்வன்” என்கின்ற விருது உண்டு. இந்த விருதை அளித்தவர் சாட்சாத் ராமபிரானே. அதற்கு முன் அவர் அனு மனைப் பார்த்தது கிடையாது. அவருடைய பிரபாவங்கள் எதுவுமே ராமருக்கு தெரியாது. ஆனால், அனுமன் முதன் முதலாக ராமரையும் லட்சுமணனையும் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சில வார்த்தைகளிலேயே, இவன் சகல வேதங்களும் படித்தவன்.சர்வ  வியாகரண பண்டிதன். மிகச் சிறந்த அறிவாளி என்பதை புரிந்து கொண்டார்.

தம்பியான இலக்குவனிடம் கேட்கிறார்.

இல்லாத உலகத்து எங்கும்

ஈங்கு இவன் இசைகள் கூரக்

கல்லாத கலையும், வேதக்

கடலுமே என்னும் காட்சி

சொல்லாலே தோன்றிற்று அன்றே?

யார்கொல் இச்சொல்லின் செல்வன்?

வில் ஆர் தோள் இளைய! வீர! -

விரிஞ்சனோ? விடை வலான் ஓ?

ஒருவர் எப்படி பேச வேண்டும், எந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும், எப்படி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் ,எப்படி பேசினால் நாம் காரிய சித்தி  பெற்று விடலாம் என்பதற்கு உதாரணம் தான் அவருடைய பேச்சு.

வைகுண்டம் வேண்டாம்

பகவானின் பக்தர்களில்  மிகுந்த உயர்ந்த நிலையில் ராம நாமத்தையே தியானித்துக் கொண்டு இருப்பவர்  ஹனுமான். ‘‘புற்பா முதல் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே'' என்று சொல்லும்படியாக சர அசரங் களோடு  தன்னுடைய திருவடி ஜோதியான வைகுண்டத்திற்கு, ராம அவதாரத்தை முடித்துக் கொண்டு போகும்போது

அனுமனை அழைத்தாராம்.

அவரிடம் அனுமன் ஒரு கேள்வி கேட்டாராம்.

‘‘பிரபு, நீங்கள் அங்கே எப்படி இருப்பீர்கள்? இதே ராமனாகத்  தான் இருப்பீர்களா?””அதெப்படி முடியும்?இந்த அவதாரம் முடிந்து விட்டது.அங்கே வைகுண்டபதியாக, “திருமகளும் மண்மகளும் இருபாலும் திகழ, நலம் அந்தம் இல்லதோர் நாட்டில் இருப்பேன்” என்று சொல்ல,” அப்படியானால் அந்த இடம் எனக்குத்  தேவையில்லை. நான் என்னுடைய ராமனையெண்ணி  ராம நாமம்ஜெபித்துக் கொண்டு இங்கேயே இருக்கிறேன்” என்று சொன்னாராம்.இன்றைக்கும் ராம நாம ஜெபமோ, ராமாயண பாராயணமோ நடைபெறும் இடத்தில் ஏதோ ஒரு விதத்தில் ஆஞ்ச

நேயர் வந்து அமர்வார் .எனவே ராமாயணம் சொல்பவர்கள் அவருக்கு ஒரு ஆசனமிட்டு மரியாதையைச் செய்வார்கள். இது மரபு.

அனுமன் சாலிசாதுளசி ராமாயணம்  அநுமனுடைய பெருமையை கூறுகிறது. துளசி தாஸரின் அனுமன் சாலிசாவை  இந்தியா முழுவதும் பக்தர்கள் பாராயணம் செய்து அளவற்ற பலனை அடைகிறார்கள். அனுமனை போற்றும் வகையில் பக்தி பரவசத்தோடு அவருக்காக பாடப்பட்ட 40 பாடல்களையே நாம் அனுமன் சாலிசா என்கிறோம். இந்த பாடல்கள் அனைத்தும் அவாதி

என்னும் மொழியில் துளசிதாசரால் பாடப்பட்டவை ஆகும். ராம சரிதமனசாவை விட இந்த பாடல்கள் சிறப்பானவை என்று கூறப்படுகிறது.அனுமன் சாலிசா பாடல்கள் உருவானதற்கு அற்புதமான வரலாறும் உள்ளது. டெல்லியை முகலாயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஒரு முறை துளசிதாசர் ராமாயண கதையை மன்னரிடம் கூறினார்.

கதையில் உருகிய  மன்னன்  ராம தரிசனம் கிடைக்க வழி செய்யும்படிகேட்டார். அதற்கு துளசிதாசர், உண்மையான பக்தியை வெளிப்படுத்தினால் ராமதரிசனம் கிடைக்கும் என்று கூறினார்.  மன்னன் துளசிதாசரை எப்படியாவது ஏற்பாடு செய் என  வற்புறுத்தினான்.மன்னரின் கோரிக்கையை நிறைவேற்றாத துளசிதாசரை சிறையில் இட்டான். சிறையில் இருந்தபடியே துளிசிதாசர் அனுமன் சாலிசா என்னும் இந்த 40 பாடலையும் எழுதி அதை ஜபிக்க துவங்கினார். உடனே டெல்லி நகரம் முழுக்க குரங்குகள் சூழ்ந்தன. மக்களாலும் மன்னனாலும் குரங்குகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறையில் இருக்கும் துளசிதாசரிடம் இது குறித்து தெரிவிக்க, துளசிதாசர் சொன்னார். இது வானரப் படைகளின் ஒரு சிறு பகுதிதான். படை முழுவதும் வந்த பிறகு ராமன் வருவார் உமக்கு தரிசனம் தருவார் என்றார். இதை கேட்டு அதிர்ந்த மன்னன் தன் தவறினை உணர்ந்து துளசிதாசரை விடுவித்தான். உடனே குரங்குகள் அனைத்தும்

அங்கிருந்து சென்றன.

இந்த அனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் நீராடி, தூய ஆடையை உடுத்திக் கொண்டு  மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும். பின்னர் நெய் விளக்கேற்றி  நிதானமாக படித்து  அனுமன் பாதங்களில் மலர்களை சமர்ப்பிக்க வேண்டும். ஹனுமான் துதிகள் பல இருக்கின்றன.  ஹனுமத் புஜங்கம் என்பது மிகுந்த பிரபலம் உடையது.யாரெல்லாம் எதையெல்லாம் கேட்கிறார்களோ அவற்றை எல்லாம் உடனடியாக தருவது. ஆதிசங்கரர்அனுமனைக் குறித்து அருளிய ஹனுமத் பஞ்சரத்னம் அற்புதமானது.

விபத்திலிருந்து காத்த ஆஞ்சநேயர்

1960ஆம் ஆண்டு. சென்னை செங்கோட்டை வழியாகச் செல்லும் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது. விபத்து நடைபெற்ற இடம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் என்கின்ற ஊர். இரண்டு பெட்டிகள் ஒன்றை ஒன்று இடித்துக்கொண்டு நின்றன. விபத்தின் தன்மையை பார்த்து  ஏராளமானவர்கள் இறந்திருப்பார்கள் என்று அச்சத்தோடு ஓடினார்கள் ஸ்டேஷன் மாஸ்டரும் அதிகாரிகளும். ஆனால், ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அந்தப் பெட்டிகள் இரண்டு மேலே ஒன்றோடு ஒன்று இணைந்து கைகூப்புவது போல இருந்தன. உயிரிழப்பு ஏதுமில்லை. ஒரு சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களை மட்டும் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆச்சரியத்தோடு, இப்படி ஒரு விபத்து நடந்ததும் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லையே என்ன காரணம் என்று அந்தப் பெட்டி அருகே நின்று யோசிக்கும் பொழுது கவனித்தார்.

கைகூப்பியதுபோல மேலே இடித்து நின்ற பெட்டியின் அருகே ஒரு கோயில் இருந்தது. தெய்வத்தினுடைய பலம் தான் இப்படி இந்த உயிர்களை காப்பாற்றியது என்று நினைத்துக் கொண்டு ஓடினார்கள். அங்கே அனுமன் அபயக் கரங்களோடு காட்சி அளித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கிருஷ்ணாபுரம் ஜெயவீர ஆஞ்சநேயர் என்று பெயர். ஆபத்தில் காப்பவர் ஆஞ்ச

நேயர். இதற்கு ராமாயணத்தில் சான்று உண்டு.

உயிர் காத்த உத்தமன்

முதலில் அவர் காப்பாற்றியது அவருடைய தலைவனான சுக்ரீவன் உயிரை. வாலியால் சுக்ரீவன் கொல்லப்பட்டு விடுவான் என்று அஞ்சி, அவனை அழைத்துக்கொண்டு ,வாலியினால் வரமுடியாத ரிஷ்ய முக பர்வதம் என்ற இடத்திற்கு சென்று அவனை காப்பாற்றினார். அவன் உயிர் அச்சமடைந்த போது ஆறுதல் சொன்னார். ராமரோடு அறிமுகம் செய்து வைத்து

பட்டாபிஷேகமும் செய்து வைத்தார்.

இரண்டாவதாக சீதையைக் காணாமல் வானரங்கள் சோர்ந்து, ‘‘இனி கிஷ்கிந்தை திரும்புவதால் பயனில்லை. நம்மை எப்படியும் சுக்ரீவன் கொன்று விடுவான். நம்மால் ராமருடைய பணியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. எனவே, நாம் உயிர் வாழ்வதைவிட இறந்து விடுவது நல்லது” என்று நினைத்த பொழுது, ‘‘நான் இலங்கைக்கு சென்று வெற்றியோடு வருகின்றேன்” என்று சொல்லி, பல சங்கடங்களைக் கடந்து சீதையை கண்டுபிடித்து, ஆரவாரம் செய்து கொண்டு வந்தார். அதனால் அவர்களுடைய உயிர் பிழைத்தது.

 இலங்கையில் சீதை, ‘‘ராமன்  இனி வரமாட்டான். இந்த அரக்கனுடைய அசோக வனத்தில் நம்மால் உயிர் வாழ முடியாது. அரக்கியரின் அட்டகாசமும், ராவணன் பேசும் கேடுகெட்ட சொற்களும் என தினம் நரக வேதனை அனுபவிப்பதை விட,உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என முயன்ற போது   ராமநாமம் சொல்லி சீதையின் உயிரைக் காப்பாற்றினான்.

அரக்கனே ஆக : வேறு ஓர் அமரனே ஆக : அன்றிக்

குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக : கொடுமை ஆக :

இரக்கமே ஆக : வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி

உருக்கினன் உணர்வைத், தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ? என்று அனுமன் உதவியை எண்ணி சீதை உருகுகிறாள்.அடுத்து,ராம லக்ஷ்மணர்கள் யுத்தகளத்தில் மயக்கமுற்று கீழே விழுந்ததும் வானர சேனை மூச்சற்று கிடக்கிறது. அனுமன் பிழைத்தால் நாம் பிழைத்ததுபோல என அனுமனை தேடுகிறார், ஜாம்பவான்.

அனுமன் அவர்களை எல்லாம் குணப்படுத்த மூலிகைகளைத் தேடிச் செல்லுகின்றார். சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வருகிறார். அப்போது சில மூலிகைகளை பற்றிய குறிப்புகளை வான்மீகி கொடுத்திருக்கிறார். அந்த மூலிகைகள் மிருதசஞ்சீவினி, சந்தான கரணி, சல்லிய கரணி, சாதாரண கரணி. எல்லோரும் மூச்சு பெற்று எழுகிறார்கள். மருத்துவனான மாமணி வண்ணனுக்கு மருந்துமலை கொண்டு வந்தவர் அனுமன்.

அனுமனின் வால்

அவருடைய வால்  சிறப்பு அளவிட முடியாதது. ராவணன் ஒரு மிகப்பெரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, தூதனாக வந்த அனுமனுக்கு மரியாதை செய்யாமல் இருந்த பொழுது, தன்னுடைய ஆசனமாக தன் வாலை சுருட்டி  வைத்துக்கொண்டு, ராவணனை விட உயர்ந்த நிலையில் அமர்ந்து அவனோடு தைரியமாக உரையாடினார். அனுமன் அவனுடைய வாலில் அகப்பட்டு விட்டால் யாராலும் தப்பிக்க முடியாது. நவகிரகங்களும் அதில் அடக்கம். வால் நுனியில் காணப்படும் சிறு மணி ஒரு அரிய காட்சி. கிரக தோஷங்களை போக்கும். பஞ்ச பூதங்களின் வலிமையைப் பெற்றவர் அனுமன். அவரைப்பற்றிய ஒரு அழகான பாடல் உண்டு.

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களையும் கடந்தவர் அனுமன். ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன். ஐம்பூதங்களில் ஒன்றான நீர் நிறைந்த கடலை,  ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாய வழியாகக்  கடந்தார். ஐம்பூதங்களில் ஒன்றான நிலம் பெற்றெடுத்த அன்னை சீதாபிராட்டியைக்  கண்டார். ராவணனோடு பேசிவிட்டு ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தார்.இப்பாடலை தினம் பாராயணம் செய்ய வேண்டும்.

சீதை அபயம் தந்தாள்

ராவண வதம் முடிந்தது. அனுமன் சீதையை சந்திக்க அசோகவனம் ஓடினார். ஏற்கனவே அனுமனுடைய பிரபாவத்தைப்  பார்த்த காவலர்கள் பயந்தனர். தங்களுடைய உயிருக்கு ஆபத்து நேரும் என்று அஞ்சினர். அவர்கள் அனைவரும் சீதா தேவியிடம் அடைக்கலம் ஆனார்கள். சீதை அவர்களுக்கு அபயம் தந்தாள்.  அனுமன் சீதையிடம், ‘‘தங்களை ஈவு இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்திய இந்த அரக்கிகளை தண்டிப்பதற்கு எனக்கு அனுமதி தரவேண்டும்” என்று விண்ணப்பிக்க, சீதை,” அப்பனே! இவர்கள் தவறு இதில் என்ன இருக்கிறது? எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? உன் தலைவருடைய ஆணைக்கு நீ கட்டுப்பட்டு இருப்பதை போல, இவர்கள் தங்கள் தலைவனான ராவணனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு ராஜவிசுவாசத்தோடு நடந்து கொண்டார்கள். இதில் அவர்கள் தவறு என்ன இருக்கிறது? அப்படி தவறு செய்தவர்களை எல்லாம் தண்டிக்க வேண்டும் என்று சொன்னால், யாரை விட்டு வைப்பது?  நீயும் தவறு செய்து இருக்கிறாய். நானும் தவறு செய்திருக்கிறேன். உலகத்தில்  தவறு செய்யாதவர்களே இருக்கமாட்டார்கள்” என்று சொல்லி அனுமனுடைய கோபத்தைச் சமாதானப்படுத்துகிறாள் சீதை.

அனுமத் வாகன சேவை

பிரம்மோற்சவத்தில் இறைவனுக்கு கஜ வாகனம், கருட வாகனம் என்று பல வாகனங்களில் சேவை உண்டு. ராமாயணத்தில் ராவணனுக்கும் ராமருக்கும் யுத்தம் நடந்த நேரம். ராவணன் மிகப் பெரிய தேரில் சகலவிதமான ஆயுதங்களோடு வந்து நின்றான். ராமன் தரையில் நின்று கொண்டிருந்தான். இதைக் கண்ட அனுமனுக்கு பொறுக்கவில்லை. அப்பொழுதுராமரிடம் அனுமன் வேண்டிக்கொண்டார். ‘‘பிரபு! அவன் ஆயுதங்களோடும் தேரோடும் நிற்கிறான். என்னுடைய பிரபுவாகிய தங்களுக்கு தேரும் இல்லை. எனவே என் தோள் மீது ஏறிக் கொள்ளுங்கள். அந்தத் தேரின் வேலையை இந்த தோள் செய்யும்” என்று சொல்ல, அன்று பெருமாள் அனுமத் வாகனமேறி ராவணனை எதிர்த்து வெற்றி கொண்டார். அன்றிலிருந்து பிரம்மோற்சவத்தில் எல்லா பெருமாள் கோயில்களிலும் அனுமத்  வாகன சேவையும் ஏற்பட்டது.

 ஆஞ்சநேய உபாசனை

ராவணனுடைய வதத்திற்கு பிறகு வேறு இரண்டு அசுரர்கள் தொல்லை செய்து கொண்டிருந்தார்கள். அவர்களை அழிப்பதற்காக தேவர்கள் அனுமனை அனுப்பினார்கள். அப்பொழுது எல்லாம் தேவதைகளும் அவருக்கு ஆயுதங்களையும் ஆசீர்வாதத்தையும் கொடுத்து அனுப்பி னார்கள்.  கண்ணபிரான் அவரிடத்தில் வெண்ணெய்யைத்  தந்தாராம். அந்த வெண்ணெய் உருகுவதற்கு முன் அனுமன் அந்த அசுரர்களை வதம் செய்தார். எனவே ஆஞ்சனேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் நாம் சாத்திய வெண்ணெய் உருகுவதற்கு முன் நாம் நினைத்த காரியங்களை நிறைவேற்றி கொடுப்பார். இந்த தத்துவத்தை உணர்த்து வதற்காகவே வெண்ணெய் சாற்றி வழிபாடு செய்கிறார்கள்.

சீதாபிராட்டியை அனுமார் அசோகவனத்தில் ராமனுடைய தூதனாக சந்தித்தபொழுது வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்து கொடுத்தாராம்.வெற்றி தரும் இலையாக அந்த இலை இருந்ததால் அதற்கு வெற்றிலை என்று பெயர். அதை வெற்றிலையை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட நமக்கு வெற்றிகள் கிடைக்கும். உளுந்து தானியத்தில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் வைட்டமின்கள் அதிகம் உண்டு. இந்த உளுந்தினால் ஆன வடை அனுமனுக்கு மிகவும் பிடித்ததாம். அவருடைய உடல் வலிமைக்கு இது ஒரு காரணம். உளுந்து ராகுவுக்கு உரிய ஒரு தானியம். ராகு கேது போன்ற வலிமையான சர்ப்ப  கிரகங்களால் பாதிக்கப்படுகின்ற பொழுது அனுமனுக்கு உளுந்து வடை மாலை சமர்ப்பிப்பது அந்த ராகு கேது தோஷங்களிலிருந்து விடுபட உதவும். வட நாட்டிலே இதே உளுந்து  மாவினால் செய்யப்படுகின்ற இனிப்பு பண்டமாகிய ஜாங்கிரியை மாலையாகப் போடுகின்றார்கள்.

 ஆஞ்சநேயரை உபாசனை செய்ய வேண்டும் என்று சொன்னால், ராமரை உபாசனை செய்ய வேண்டும்.  ராம நாம ஜெபம்தான் ஆஞ்சநேயர் அருளைப் பெற்றுத் தருவதற்கு ஒரே வழி.

அசாத்ய சாதக ஸ்வாமின்  அஸாத்யம் தவ கிம் வத ராமதூத கிருபா சிந்தோ  மத் காரியம் சாதய ப்ரபோ என்கின்ற மந்திரத்தைச் சொல்லி அவரை வணங்குவதன் மூலமாக, இந்த கலியுகத்தில் எல்லா விதமான நலன்களும் பெறலாம்.  

எந்தக்  கோயிலாக இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு  மூலையில் ஆஞ்சநேயர் ராம தியானத்தில் ஆழ்ந்திருப்பார். பஜனை செய்து கொண்டே இருப்பார். குறைந்தபட்சம் ஒரு தூணில் அது அவருடைய திரு உருவம் இருக்கும்.கலியுக உபாதையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இங்கே சிரஞ்சீவியாக அருள் செய்து  கொண்டிருக்கிறார்.

அவரை நினைத்து வழிபட்டால் புத்தியும் உடல் வலிமையும் புகழும் தைரியமும் நோயற்ற வாழ்வும் சொல் வன்மையும் கிடைக்கும்.

செய்தி: முனைவர் புவனை ஸ்ரீராம்

Related Stories: