பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரங்கள்..

?24 வயதாகும் என் மகள் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஒருவரை காதலிப்பதாக கூறுகிறாள். எங்கள்  விருப்பம் போல் நடந்து நலமாக வாழ என்ன செய்ய வேண்டும்?

- ரேணுகா, வேலூர்.

மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி முடியும் தருவாயில் உள்ளது. திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவக அதிபதி குரு எட்டில் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிப்பதால் இதுபோன்ற மனநிலைக்கு ஆளாகியுள்ளார். என்றாலும் இதிலிருந்து அவரால் மீண்டு வர இயலும். அவரது ஜாதக பலத்தினைப் பொறுத்தவரை காதல் திருமணம் என்பது சந்தோஷமான வாழ்வினை அமைத்துத் தராது. எந்த ஒரு சூழலிலும் அவரது முடிவிற்கு சம்மதம் தெரிவிக்காதீர்கள். திருமணமே செய்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் மகளாகவே காலம் முழுவதும் இருந்துவிடு என்று வலியுறுத்திச் சொல்லுங்கள். 06.11.2021 முதல் உத்யோக ரீதியாக நல்லதொரு முன்னேற்றம் கலந்த இடமாற்றம் என்பது உண்டாகும். அதன்பிறகு அவரது மனநிலையில் மெல்ல மெல்ல மாற்றத்தினைக் காண்பீர்கள். 27.05.2023 வாக்கில் அவரது திருமணம் குல வழக்கத்திற்குத் தக்கவாறு நல்லபடியாக நடந்தேறும். பிரதி வியாழன் தோறும் உங்கள் மகளை விரதம் இருந்து நவகிரஹத்தில் உள்ள குருவினை வழிபட்டு வரச் சொல்லுங்கள். மகளின் மணவாழ்வு நல்லபடியாக அமைய வேண்டி ரத்தினகிரி பாலமுருகனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மகளின் மனநிலையில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள்.

?சூழ்நிலை மற்றும் மனநிலை காரணமாக இந்த 74வது வயதில் ஒரு மேன்ஷனில் தனியாக வாழ்ந்து வருகிறேன். மனைவி இறந்து 16 வருடங்கள் ஆகின்றன. பெற்ற  பிள்ளையும் பெண்ணும் எதற்காக என்னை தவிர்க்கிறார்கள்  நானறியேன்.  இறுதி காலத்தை பிள்ளைகளுடன் அமைதியாக கழித்து மகிழ்ச்சியுடன் இறைவன் திருவடி சேர மனம் விரும்புகிறது. வழிகாட்டுங்கள்.

- ராதாகிருஷ்ணன், சென்னை.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. மனைவியும் இறந்துவிட்ட நிலையில் பெற்ற பிள்ளை, மகள் யாருடனும் இணைந்து வாழ இயலாமல் தனியாக ஒரு விடுதியில் வசித்து வரும் உங்கள் நிலையை கடிதத்தில் விரிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் ஜாதகத்தில் குரு, சனி ஆகிய இரண்டு கிரஹங்களும் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள். அத்துடன் ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளதோடு தற்போது அவரது தசையும் நடந்து வருகிறது. மூத்த பிள்ளையைத் தவிர மற்றவர்களை குறை கூற இயலாது. மூத்த பிள்ளையும் பூர்வ ஜென்ம கர்மாவின் தொடர்ச்சியை அனுபவித்து வருகிறார். உங்கள் ஜாதகப்படி தற்போதைய சூழலில் நீங்கள் பெற்ற பிள்ளைகளை போய் பார்த்துவிட்டு வரலாம். அவர்களோடு சென்று ஒன்றாக வசிப்பது என்பது இரு தரப்பினருக்கும் மன வருத்தத்தைத் தருமே ஒழிய முழுமையான நிம்மதியைத் தராது. இது அவரவர் சூழ்நிலையே தவிர யார் மீதும் குறை காண இயலாது. நீங்கள் இந்த வயதில் குடும்பம், பிள்ளைகள் என்ற பாசவலையில் இருந்து வெளியேறி மாயையைத் துறந்து இறைவனின் பால் மனதினை செலுத்துங்கள். உங்களுடைய கடமையை சரிவர செய்து முடித்துவிட்டீர்கள் என்பதால் குறையொன்றுமில்லை என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் பகவத்கீதையை பொருளுணர்ந்து நிதானமாக படித்து வாருங்கள். கண்ணபிரானை தொடர்ந்து வழிபட்டு வர மனதில் இருந்து வரும் மாயத்திரை விலகி தெளிவு காண்பீர்கள்.

?என் மகன் பிறந்து 2வது வருடத்தில் நடக்க இயலாமல் போனது. மருத்துவர்களின் முயற்சியால் ஒருவழியாக குணமாகி எம்.ஃபில் படித்து முடித்துவிட்டான். 40% ஊனம் இருப்பதால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அடிக்கடி டென்ஷன் ஆகிறான். அவனுக்கு வேலை கிடைப்பதுடன் திருமணம் நடந்து நல்லபடியாக வாழ வழி காட்டுங்கள்.

- புருஷோத்தமன்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் குரு புக்தி துவங்கி உள்ளது. அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி குருவாகவும் ராசி அதிபதி வித்யாகாரகன் ஆன புதன் ஆகவும் அமைந்துள்ளது. அத்துடன் தற்போது துவங்கியுள்ள குரு தசையின் காலம் என்பது அவருடைய எதிர்கால வாழ்விற்கு வழிகாட்டும். உத்யோக ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் வேலை என்பது கிடைத்துவிடும். அதுவும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் சிறப்பாக அமைந்திருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் களத்திர காரகன் சுக்கிரன் அமர்ந்துள்ளார், புதன், சுக்கிரனின் பரிவர்த்தனை யோகமும் இருப்பதால் நிச்சயமாக திருமணம் நடக்கும். நல்ல நேரம் என்பது துவங்கி ஒரு மாத காலமே ஆவதால் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள். புதன்கிழமை தோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 17 முறை சொல்லி நவகிரஹங்களில் உள்ள புதனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். நேரம் கிடைக்கும்போது ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் திருவெண்காடு திருத்தலத்திற்குச் சென்று புதனை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ள வாழ்வு நல்லபடியாக அமையும். வரும் 2022ம்

வருடத்தின் பிற்பாதியிலேயே உத்யோகமும் திருமண யோகமும் ஒன்றாக வந்து சேரக் காண்பீர்கள்.

“ப்ரியங்கு காலிகாஸ்யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம்

 சௌம்யம் சௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்”

?  31 வயதாகும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நிறைய சம்பந்தம் வந்தும் ஏதோ ஒரு காரணத்தால் கடைசியில் அமைவதில்லை. எனக்கு என்ன காரணத்

தினால் திருமணம் தடைபடுகிறது? அதனை சரிசெய்ய நல்லதொரு பரிகாரம் சொல்லுங்கள்.

- இளமுருகன், மதுரை.

கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சுக்ர புக்தி நடந்து வருகிறது. திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் வக்ரம் பெற்ற குருவுடன் கேது இணைந்திருப்பது உங்கள் திருமணத்தை தடை செய்து வருகிறது. எனினும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் ஐந்தில் உச்சம் பெற்றிருப்பதால் மனதிற்குப் பிடித்த பெண்ணாக அமைவார். பொதுவாகவே உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி 12ம் வீட்டில் சூரியன் மற்றும் சுக்கிரனோடு இணைந்திருப்பது பலவீனமான நிலை ஆகும். எல்லா விஷயங்களிலும் அலைச்சல் என்பது அதிகமாக இருக்கும். எந்த ஒரு செயலும் எளிதில் நடக்காது. அதே நேரத்தில் விடாமுயற்சியின் மூலம் நினைத்ததை சாதித்து விடுவீர்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பிரதோஷ நாளில் பிரதோஷ காலமான மாலை நேரத்தில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆதிசொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள். மீனாக்ஷி சுந்தரரேஸ்வரர்

திருக்கல்யாண கோலத்தை மனதில் நினைத்து வணங்கி வாருங்கள். திருமணம் நல்லபடியாக

முடிந்த வுடன் தம்பதியராக வந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வணங்கு வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். பிரதோஷ நாளில் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி பிரார்த்தனை செய்வது நல்லது. 23.07.2022ற்குள் மிகச் சிறந்த பண்புகளை உடைய குணவதியான பெண் மனைவியாக அமைவார். கவலை வேண்டாம்.

“ஹாலாஸ்யநாதாய மஹேச்வராய ஹாலாஹலா அலங்க்ருத கந்தராய

மீனேக்ஷணாயா: பதயே சிவாய நமோ நம: ஸூந்தர தாண்டவாய.”

?40 வயதாகும் என் அண்ணன் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார். தனக்கு ஆண்மை குறைவு  உள்ளதாக நினைத்து பயப்படுவது போல் தோன்றுகிறது. தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவும் மறுக்கிறார். அவருடைய ஜாதகப்படி இந்தப் பிரச்னைக்கு தீர்வு உண்டா? சிகிச்சைஅளித்தால் அவருடைய குறை நீங்குமா? அவரை நினைத்து என் தாயார் தினமும் கண்ணீர் சிந்துகிறார். உரிய வழி சொல்லுங்கள்.

- சொர்ணமாலா, பெங்களூரு.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் சகோதரரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தின்படி சூரியன், புதன், கேது ஆகிய கிரஹங்கள் வீரிய ஸ்தானம் ஆகிய மூன்றில் அமர்ந்து இது போன்ற பயத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. அவருடைய பயம் நியாயமானதே. ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் இரண்டில் அமர்ந்திருப்பதும், லக்னாதிபதி செவ்வாயின் நான்காம் இடத்து அமர்வும், குரு பகவான் 11ல் அமர்ந்திருப்பதும் பலத்தைக் கூட்டுகிறது. உரிய மருத்துவ சிகிச்சை அளித்தால் நிச்சயம் குணமடைவார். மனோகாரகன் சந்திரன் 12ல் அமர்ந்திருப்பதால் மனதளவில் சோர்ந்துள்ளார். மனோதத்துவ ரீதியிலான கவுன்சிலிங் அளித்து அதன் பின்னர் உடல் ரீதியான சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள். தற்போது நடந்து வருகின்ற நேரம் உங்கள் முயற்சிக்குத் துணைபுரியும். பிரதி செவ்வாய் தோறும் அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கு ஏற்றிவைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். அவரது பிரச்னை முடிவிற்கு வருவதோடு 2022ம் ஆண்டின் இறுதிக்குள்

திருமணமும் நல்லபடியாக நடந்தேறும்.

“நம: கேகினே சக்தயேசாபி துப்யம் நமச்சாக துப்யம் நம: குக்குடாய

நம: ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம் புனஸ்ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே.”

Related Stories:

More
>