பிதுர் தோஷம் நீங்கினால் பெருமையோடு வாழலாம்!

இதம் சொல்லும் ஜோதிட அனுபவங்கள் - 8

நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

சில ஜாதகங்களில் துன்பங்கள் எப்படித்  தொடர்கதையாக வரும் என்பதை பழைய பாடல் ஒன்று தெரிவிக்கிறது. இராமச்சந்திர கவிராயர் என்றொரு கவிஞர் பாடிய பாடல் இது.

இப்படியும் துன்பம் வருமா?

பழுது பார்க்க வேண்டிய பழைய வீடு. ஒரு பக்கம்  சாய்ந்து விழுந்து விடலாம் போல் கிடக்கிறது. வீட்டில் உள்ள பசுமாடு  கன்றை ஈன்றது. இந்தச் சிறு மகிழ்ச்சியில் ஆரம்பித்தது  தொல்லைகள். இங்கே ஒரு சிறு ஜாதக ரகசியம். எந்தத் திசையும் சுய புத்தியில் நற்பலனைச் செய்யாது. அப்படிச் செய்தால் அது ஒரு ஆபத்தான திசையாகவே இருக்கும். மோசமான திசையின் சுய புத்தி போல் ஒரு சிறு மகிழ்ச்சி. வெளுத்த வானம் நன்றாக இருண்டது .

மழை என்றால் ஒரே நாளில் பேய் மழை.  ஆவேசப் பெருமழை. பசுவுக்கும் கன்றுக்கும் வைத்தியம் செய்ய வேண்டும். கன்றுக்குட்டியை குளிப்பாட்ட

வேண்டும். வானம் பொத்துக் கொண்டு பெய்கிறது. இப்படி மழை பெய்தால் எப்படி கன்று பிழைக்கும்? யோசித்துக் கொண்டிருக்கும் போது, மழை ஈரத்தினால், மடமடவென்று ஒரு பக்கம் வீடு கூரையோடு சரிகிறது.

ஓலையில் வந்த செய்தி

யாருக்கோ என்னமோ ஆகி இருக்கும் என்று நினைத்து உள்ளே ஓடுகின்றார்.  அந்த வீட்டின் ஒரு சிறு உத்தரம் மனைவியின் காலில் விழுந்து, அவள், “ஐயோ அம்மா என்று கதறிக் கொண்டு இருக்கிறாள்.  வலியால் துடித்துக் கொண்டுருக்கின்றவளுக்கு உடனடியாக வைத்தியம் பார்க்க வேண்டும்.உதவிக்கு தன் வீட்டில் வேலை செய்கின்ற ஆளை கூப்பிட்டார்.  பொதுவாக எதிர்  குரலில், “ஐயா இதோ வந்து விடுகிறேன்” என்று சொல்லுகின்ற ஆள், எதிர் குரல் கொடுக்கவில்லை.

“இங்கே தான் இருந்தான், எங்கே போய்விட்டான்?”என்று பார்க்கின்ற பொழுது, வீட்டின் இன்னொரு பக்கத்திலே சுவர் சாய்ந்து, வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆள் இறந்து கிடக்கின்றான். இனி பஞ்சாயத்து தான். கவலை வாட்டுகிறது. கொஞ்சம் மழை விட்டது போல் தெரிந்தது . அந்த நேரத்திலும் அவருடைய விவசாய புத்தி வேலை செய்கின்றது. வேலை செய்து கொண்டிருந்த  ஆள் இறந்துவிட்டான். மனைவிக்கு காயம் ஏற்பட்டு விட்டது.

ஈரம் பட்டநிலத்தில் விதையை விதைத்து விட்டு ஓடி வந்து விடலாம்.

அங்கு யாரையாவது துணைக்கு அழைத்துக் கொள்ளலாம் என்று வீதியில் இறங்கி ஓடுகின்றார். அப்பொழுது இவருக்கு கடன் தந்தவன், ‘‘ஏய், நில்லு, நில்லு'',  உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைக்கு அகப்பட்டாய், அல்லவா?  என்னுடைய கடனுக்கு பதில் சொல்லி விட்டுப் போ” என்று சொல்லி  விதை நெல்லை மறித்துக் கொண்டு சென்று விட்டான். “என்ன இது சோதனை” என்று இருந்த பொழுது, ஒரு உறவினன் வந்து ஓலையைக்  காட்டினான்.

அப்போதெல்லாம், ஒருவர் வீட்டில் இறப்பு ஏற்பட்டு விட்டால், ‘‘இன்னார் வீட்டில் இன்னார் இறந்துவிட்டார்'' “என்பதை விபரமாக எழுதி, கையெழுத்திட்டு, ஓலையை, உறவினர்களிடம் காட்டி வரச் சொல்வார்கள். அதற்கு “சாவோலை” என்று பெயர்.  சரியாக எழுதப்  படிக்கத்  தெரியாத ஒருவன், கையிலே ஓலை கொண்டு வந்துவிட்டான்  என்றாலே, இறப்புச்செய்திதான் கொண்டு வருகிறான் என்று புரிந்து கொள்வார்கள். அந்த காலத்தில் தந்தி என்று ஒன்று வரும். அந்த தந்தி எப்பொழுது பயன்படுத்துவார்கள்.

நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம், அவசரச் செய்தி அல்லது இறப்பு செய்திக்குப் பயன்படுத்துவார்கள். அதுபோல் ஓலை கொடுத்து விட்டு அவன் சென்றுவிட்டான்.

பாம்பு கடித்தது, விருந்தினர் வந்தனர்

சோதனை மேல் சோதனை என்று நினைக்கின்ற பொழுது, தூரத்தில் வேறு ஒரு ஊரிலிருந்து, இவரைத் தேடி, சில உறவுக்காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.”

“ஐயா, உங்கள் வீட்டில் தான் எங்களுக்கு இன்று விருந்து. நீங்கள்தான் நெடு நாட்களாக அழைத்துக்கொண்டு இருந்தீர்களே. அதனால் இன்று நாங்கள் நான் கைந்து பேர் வந்து இருக்கிறோம். வாருங்கள் செல்லலாம்” என்று அழைத்தார்கள். அப்பொழுது ஒரு பாம்பு இவர் காலை பதம் பார்த்து விடுகிறது.  

கையில் இருக்கிற சுண்ணாம்பைக்கடி வாயில்  தடவிக் கொண்டு, “ஐயா, நீங்கள் வீட்டில் இருங்கள். நான் வைத்தியரை பார்த்துவிட்டு வந்து விடு கிறேன்” என்று சொல்ல, அப்பொழுது நிலவரி வசூலிக்க, ஒரு அரசாங்க ஊழியன் வருகின்றார். “ஐயா இந்த ஆண்டு நீங்கள் கட்ட வேண்டிய வரி கட்டவில்லை. இது தான் கடைசி நாள். இல்லாவிட்டால்  ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மிரட்ட, அவருக்கு எதோ ஒரு சமாதானம் கூறிவிட்டுத் திரும்புகின்றபோது, அந்த ஊர் கோயில் குருக்கள், “ஐயா, இந்த ஆண்டுக்கு தரவேண்டிய என்னுடைய தட்சணையை நீங்கள் தரவில்லையே, உங்களைப்போன்ற குடி யானவர்கள் தராவிட்டால் நான் எப்படி குடும்பம் நடத்துவது?”என்று பரிதாபமாகக் கேட்டாராம்.

அக்காலத்தில் ஒவ்வொரு ஊரிலும் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்குத்  தேவையான செலவுகளை அந்தக் கோயிலைப் பயன்படுத்து கின்ற பக்தர்கள், அவரவர் தகுதிக்கு ஏற்ப, ஆண்டுக்கு ஒரு முறை நெல் அரிசி, தானியம் என்று காணிக்கையாகக் கொடுக்கக்கூடிய வழக்கமுண்டு. இவ்வளவு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடப்பதை, இராமச்சந்திர கவிராயர் அற்புதமாகப்  பாடுகின்றார். “ஆவீன, மழைபொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய்நோக, அடிமை சாக, மாவீரம் போகுதென்று விதைகொண் டோட, வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள, சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற, தள்ளொண்ணா விருந்துவர, சர்ப்பம் தீண்ட, கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க, குருக்கள் வந்து தட்சணைதான் கொடு என்றாரே''

இப்படியெல்லாம் ஒருவர் வாழ்வில் நடக்குமா என்று நீங்கள் நினைக்கலாம். இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அடுத் தடுத்து பலவிதமான தொல்லைகளைச் சந்தித்து, அதையே வாழ்க்கையாகக் கொண்ட பலரை, நீங்கள் நிச்சயம் பார்த்திருக்கலாம்.

ஜாதக தோஷங்கள்

அதற்குக்  காரணம், அவருடைய ஜாதகத்தில் எல்லாப் பக்கங்களிலும்  அவரை நெருங்குகின்ற கோள்களின் நிலைகள். இதில் ஆயுள் ஸ்தானம் உயர்வாக இருப்பதால், உயிர் மட்டும் போகாது. காரணம் உயிர் போய்விட்டால் எப்படித்  துன்பங்களை அனுபவிப்பது? அப்படி அமைந்த ஜாதகங்கள் உண்டு.இந்த தோஷங்களில் பித்ரு தோஷம் என்று  ஒரு தோஷம் சொல்கிறார்கள். அது ராகு  கேது, குரு தோஷம் என்று பெயர் வைத்து கொண்டாலும் சரி.இங்கே விளைவு, அதற்கான கிரக நிலை பற்றிய பேச்சு மட்டுமே.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம். அதை ஜாதகத்தில் கண்டறிவதற்கு சில விதிகள் சொல்கிறார்கள்.

பித்ரு தோஷம்

சுருக்கமாக  ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு.ஆனால் அவைகள் முழுமையானவை அல்ல. அப்படிப்பட்ட குறைபாடுகள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய பலர் நன்றாகவே இருக்கிறார்கள். சிலர் பிதுர் தோஷம் என்று ஒன்று இல்லை என்கிறார்கள். தோஷங்களின் பெயர்கள் நாமாக வைத்துக்கொள்வது  தானே! இனம் புரியாத சில தடங்கல்களால், குடும்பம் துன்பப்படும்போது, ஏதோ ஒன்று காலை இடற விட்டுத்  தடுக்கிறது.

பெரியோர்கள் ஆசி இல்லை. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடன்கள் விட்டு போயிருக்கிறது. அதற்கு சில சடங்குகளையும் பரிகாரங்களையும் காலம் காலமாக சொல்லி வந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இப்பிரச்சினையை அணுகுகிறோம். அதே நேரம், சில கிரக நிலைகளை வைத்து மட்டுமே முழுமையான முடிவுக்கு வந்துவிட முடியாது. பிதுர்தோஷம் வாழ்வில் செயல்படுவதை நாம் ஒரு சில நடைமுறை பலன்களைக் கொண்டும், ஜாதக நிலை, தசாபுத்தி நிலைகளை ஒப்பிட்டுப்  பார்த்தும் தான் முடிவுக்கு வரமுடியும்

தோஷ அளவு வேறுபடும்

பிதுர் கடன் இயற்ற மறுத்தவன், மறந்தவன் (இருவருக்குமே தோஷ அளவு வேறுபடும். ‘‘மறந்தவனுக்கு  மஹாளயம்” என்ற சொலவடையே உண்டு. பிடிவாதமாக மறுத்தவனுக்கு என்ன செய்ய முடியும்?)

1. பிதுர் கடன் செய்யாமல் அவதிப்படும்,

2. முன்னோர் வழிப்பாடு செய்யாது துன்பப்படும் ஜாதகங்களை இனம் காண.  ஜாதக கணித அறிவும், நிபுணத்துவமும் ஓரளவுக்குத்தான் உதவி செய்யும்.

ஆனால், தெய்வீக தூண்டுதல் உணர்வு களைப் பெற்ற சிலர், எளிதாகச் சொல்லிவிடுவார்கள். இப்போது ஒரு ஜாதகம் பார்வைக்குத்  தந்திருக்கிறேன்.

விருச்சிக லக்கினம். கன்னி ராசி. பெரும்பாலான கிரகங்கள் விரய பாவத்தில் இணைந்து கிரக யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

புரட்டி எடுத்த  ராகு திசை

ஜென்மத்தில் இவருக்கு சந்திர திசை ஆரம்பித்தது. பிறகு செவ்வாய் திசை வரை, எந்தப்  பிரச்சனையும் இல்லை. அடுத்து ராகு திசை ஆரம்பித்தது. அதன் மத்திமப் பகுதியிலிருந்து, ராகு திசை  ஜாதகரைப்  புரட்டி எடுக்க ஆரம்பித்தது கடுமையான களத்திர தோஷம் தாறுமாறாக வேலை செய்தது.  மித மிஞ்சிய உடல் உழைப்பும், மிக அதிகமான குடும்ப பொறுப்பும், மேலே விழுந்தன. வருமானமின்மை ஒரு பக்கம், ஏற்ற வேலையோ, நிலையான வேலையோ இல்லாத நிலை ஒரு பக்கம்.

வேலை இழப்பு, விவாகரத்து, மறுமணம், குழந்தைகள் பிறப்பு, அயராத உழைப்பு இப்படி கால திசையானது ஜாதகரைக் கசக்கிப் பிழிந்தது. பிள்ளைகளில் மூத்த மகனுக்கு குழந்தை இல்லாத குறையும் இருந்தது. இப்படிப்  போராட்ட வாழ்க்கையின் பல சிக்கல்கள், “துன்பம் எப்போதும் தொடர் கதைதான்” என்று சொல்வது போல வந்து கொண்டே இருந்தது. இடையில் பல ஜோதிடர்கள் ஜாதகங்களைப்  பார்த்து, பல தீர்வுகளைச்  சொன்னார்கள். பரிகாரங்களைச் சொன்னார்கள். அதைச் செய்யும்போது சிறிய மாற்றங்கள் தெரியும். ஆனால், துன்பங்கள் மறுபடி, ‘‘உன்னை விட்டால் யாருமில்லை'' என்று தொடரும்.

பழகிவிட்ட கஷ்டங்கள்

ராகு திசை முடிவில் அலைக்கழிப்பு அதிகமானது. அடுத்து குரு திசை. ராகு திசை அளவுக்கு இது துன்பம் தரவில்லை.இது பற்றி ஜாதகரிடம் கேட்ட போது  அவர் சொன்னார். “குரு தசை வந்தபோது கஷ்டங்கள் பழகிவிட்டன.”குரு தசையில்  முழுமையான விடிவு பிறக்கவில்லை. போராடுவது என்பது வழக்கமாகி விட்டதால், சற்று எளிமையானது.வாழ்க்கை மெல்ல திசை திருப்பியது. மனம் முழுக்க தெய்வீக செயல்களில் நாட்டம் கொண்டது. அதனால் சற்று ஆறுதல் கிடைத்தது. தினம் பூஜை, வழிபாடுகள், பாசுரங்கள், இசை, என வாழ்க்கையின் தடத்தை சற்று மாற்றிக் கொண்டார்.

பிறருக்கு உதவி செய்வதை ஒரு உன்னதமான பணியாக  மேற்கொண்டார். ஆனால், அப்பொழுதும் இவருடைய ஜாதக ராசி வேறு விதமாக வேலை செய்தது. உதவி பெற்றவர்கள் முதுகுக்குப் பின்னால் தவறாகப்  பேச ஆரம்பித்தனர். காலுக்குக் கீழே பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர்.“கொடுத்த கை  மீளுமுன்னே  வெடுக்கென கடிக்கும் மாந்தர்”  என்று கண்ணதாசன் பாடியது போல, இவரால்  நன்மை பெற்றவரும் இவரை உபத்திரவம் செய்யும்படி ஆனது. அப்பொழுதுதான் ஒரு சந்தேகம் வந்தது.

இந்த ஜாதகத்தில் ஏதேனும் குறைகள், கடுமையான தோஷங்கள் இருக்குமோ என்று ஆராய்ந்த போதுதான், “பிதுர் தோஷம் இருப்பின் இப்படி அலைக்கழித்துப் பாடாய்ப்படுத்தும்” என்று ஒருவர் சொன்னார்.

திலஹோமம்

எப்படியிருந்தாலும் பரிகாரம் செய்து விடுவோம் என்று, உடனே, சில புரோகிதர்களை அழைத்துக்கொண்டு, ராமேஸ்வரம் சென்றார். இரண்டு நாள் தங்கி, முறையாக சமுத்திர நீராடல், திலஹோமம், போன்ற பரிகாரங்களையும் செய்துவிட்டு, மகனுக்கு புத்திரகாமேஷ்டி மற்றும் சந்தான கோபால ஹோமங்களையும் செய்தார். அதற்குப் பிறகு மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. ஜாதக தோஷம் முழு வேகத்தை தணித்துக் கொள்ள வில்லை. 80% தணிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது ஓரளவு சௌக்யமாக இருக்கிறார்.

சுற்றி வளைத்து நிற்கும் தோஷங்கள்

இனி, இவர் ஜாதகத்தை ஆராய்வோம் விருச்சிக லக்னம். லக்னத்தில் கேது. 7,12 ஆம் ஆதி சுக்கிரனுடன் இணைவு. ஏழாமிடத்தில் ராகு. ஆக இங்கே ராகுவும் கேதுவும் என்கின்ற வட்டத்துக்குள் மற்ற கிரகங்கள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. ஏழில் உள்ள ராகு சந்திரனுடைய ஹஸ்த நட்சத்திரம் இருக்கின்றார். நட்சத்திர அதிபதி சந்திரன் 9-க்கு உரியவர். ஒன்பதாமிடத்தில் கர்ம வினையைக் காட்டும் கிரகமான சனி அமர்ந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். பொதுவாகவே ஒன்பதாம் இடத்தில் சனி அல்லது மற்ற பாபக்  கிரகங்கள் அமைந்திருந்தால் அது முன்னோர்கள் திருப்தி அடையாத ஒரு நிலையைக் காட்டுகிறது என்பார்கள்.

சந்திர ராசிக்கு ஒன்பதாமிடத்தில் (பிதுர் ஸ்தானம்) ராகு அமைந்திருக்கிறது. பிதுர் ஸ்தானா திபதியான சூரியனோடு குரு இணைந்து பன்னிரண்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார். பிதுர் ஸ்தானாதிபதியான சூரியன் நீச்சம் அடைந்து அஷ்டமாதிபதி புதனுடனும், லக்னாதிபதி செவ்வாயுடனும் விரய ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். பிதுர் காரகன் சூரியன் நின்ற நட்சத்திரம் சுவாதி நட்சத்திரம். அந்த நட்சத்திரம் ராகுவுக்கு உரிய நட்சத்திரம். அதற்கு எட்டாம் இடத்தில் ராகு நின்று கொண்டிருக்கிறார்.

பன்னிரண்டாம் இடத்தில், குலதெய்வம் முன்னோர் ஆசிகள், குருவின் ஆசிகள் போன்ற நிலைகளைக் காட்டும் சுபக்கிரகமான குருவும், ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நின்று பன்னிரண்டில் மறைகிறார். இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும், இந்த ஜாதகத்தின்  அமைப்பு  பல கடுமையான தோஷங்களின் தொகுப்பாகவே இருப்பதை கவனிக்க முடியும். அவருடைய ஐம்பது ஆண்டுகால வாழ்க்கையை உற்று கவனித்து பதிவு செய்ததோடு, ஜாதகத்தோடு பொருத்திப் பார்க்கும் பொழுது, இந்த தோஷமானது எந்த அளவுக்கு வேலை செய்தது, எப்பொழுது நீங்கியது என்பதைக்  காண முடிகிறது.

கஷ்டத்திலும் காப்பாற்றியது எது?

ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். லக்னத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சனி நின்றாலும், சனிக்கு வீடு கொடுத்த சந்திரன், லாபஸ்தானத்தில் சுய சாரம் பெற்று நிற்பதும், லக்னத்திற்கு ஐந்தாம் இடத்தைப் பார்த்ததும், மிக முக்கியமான பரிகாரங்களாக அமைந்து, பூர்வபுண்ணியம்ஓரளவுக்கு பயன்படுவதைக்  காட்டுகிறது. ஐந்தாம் இடத்தை சனியோ செவ்வாயோ பார்க்கவில்லை, ஆனால் குரு பார்த்தது என்பதால் ஐந்தாமிடம் பலப்பட்டு, இவருக்குக்  குழந்தைச்  செல்வத்தையும் தந்தது.

ஒவ்வொரு முறையும் கடுமையான கால கட்டம் நடந்து, உச்சக்கட்டத்தை அடையும் பொழுது இந்த பூர்வ புண்ணிய ஸ்தான பலனும்,இவருடைய நேர்மையான வாழ்வும், பிறருக்குச் செய்த உதவிகளும், தெய்வவழிபாட்டின் மூலம் கணக்கில் ஏறிய தெய்வ பலமும் காப்பாற்றியிருக்கிறது.இவர் ஜாதகம் சொல்லும் செய்தி இது தான்.

தீர்வுகள் நோக்கிச் செல்லுங்கள்

உங்கள் வாழ்க்கையில் கண்டுபிடிக்க முடியாத பல பிரச்சனைகள் இருந்தால், அதை ஜோதிடரிடம் சொல்லி பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதைக்  கவனத்தில் கொண்டு தீர்வுகள் நோக்கிச் செல்லுங்கள்.

இந்த தோஷத்தை  சிலவழிகளில்  தீர்த்துக் கொள்ளலாம்

1. ராமேஸ்வரம் அல்லது திருப்புல்லாணி சென்று பரிகாரம் செய்து, சமுத்திர ஸ்நானம் செய்துவரலாம்.

2. வீட்டிலேயே முறையாக, சரியான தினத்தில், நல்ல தேர்ந்த புரோகிதரைக் கொண்டு, “திலஹோமம்” (தேவைப்பட்டால்) செய்யலாம்.

3. அமாவாசையும் மறக்காமல் முன்னோர்களுக்கான நீர் கடனை எளிமையாக தவறாமல் செய்யலாம். “மகாளயம்” போன்ற நீத்தார் கடனுக்காக ஒதுக்கப்பட்ட நாளில் முறையான நீத்தார் வழிபாடுகளை நடத்தலாம். இவற்றைச்  செய்வதன் மூலமாக, சிக்கல்கள் இல்லாத., சீரான வாழ்க்கையை அடையலாம்.

Related Stories:

>