×

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் அத்திரி முனிவர் - அனசூயை

வன வாசத்திற்காகக் காட்டிற்கு வந்த சீதா - ராமர், லட்சுமணர் ஆகியோர் முனிவர்கள் பலரைத் சந்தித்து, அவர்களின் ஆசிகளைப் பெற்றார்கள். அவர்
களில் முக்கியமானவர்கள் ‘அத்திரி முனிவர் - அனசூயா தேவி’ தம்பதியர். இந்தத் தம்பதியைப்பற்றி மூலநூல்கள் சொல்லும் தகவல்களை மட்டும் பார்க்கலாம்.   பிரம்மனின் மகனாக அவதரித்தவர் - அத்திரி முனிவர். அத்திரி முனிவரின் மனைவி - அனசூயா தேவி. இந்தத்தம்பதியரின் பெயர்களுக்கு வாரியார் ஸ்வாமிகள் அற்புதமாக விளக்கம் சொல்வார்.

திரி - காமம் - கோபம் - மயக்கம் இம்மூன்றும் அனைவரையும் கெடுக்கக்கூடியவை. ஆனால் இந்த மூன்றும் அத்திரி முனிவரிடம் நெருங்கக்கூட முடியவில்லை. அதாவது இந்த மூன்று தீய குணங்களையும் வென்றவர். அதனால் ‘அத்திரி’ முனிவர் எனப்பெயர் பெற்றார். அடுத்து ‘அசூயை’ என்றால் பொறாமை என்பது பொருள். அடுத்தவர் வாழ்ந்தால் ஐந்துநாட்கள் பட்டினி கிடக்கும் குணம். இந்தத்தீய குணம் அதாவது பொறாமை (அசூயை) இல்லாதவள் ‘அனசூயை’ கடுகளவு கூடத்தீயகுணம் இல்லாத உத்தமி அந்தம்மா ‘அனசூயாதேவி’ - என்பார். இவ்வாறு கடுகளவுகூடத் தீயகுணம் இல்லாமல், நற்குணங்களின் இருப்பிடமாகவே திகழ்ந்தவர்கள் - அத்திரி முனிவர் - அனசூயாதேவி. மனம் ஒத்த தம்பதிகள்.

அத்திரி முனிவர் குழந்தைப்பேறு வேண்டி மலைமீது தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய மனம் முழுவதும் பிரம்மரையே நினைத்துக் கொண்டிருந்தது. தவம் நிறைவேறும் காலம் நெருங்கியது. அத்திரி முனிவர் முன்னால்மும்மூர்த்திகளும் காட்சி அளித்தார்கள்.

மேவரு மக்கட் பேறு வேண்டியோர் குன்று நண்ணி
ஆவயின் மலரோற் போற்றி யத்திரி தவஞ் செய்தானால் பூவொடு புணரிவெள்ளிப் பொருப்பெனு மிடங்க ணீங்கி மூவருந் தோன்றினாராம் முழுத்தவன் முன்னர் மாதோ

அவர்களை வணங்கி எழுந்த அத்திரிமுனிவர், ”அடியேன் பிரம்மரைக் குறித்துத்தான் தவம் செய்தேன். ஆனால் மும்மூர்த்திகளும் வந்திருக்கிறீர்களே! ஏன்?” எனக்கேட்டார்.“மா முனியே!நீ நினைத்தது ஒருவரே நாங்கள் மூவரும்தான். எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை. மூவரும் ஒருவரே” எனப் பதில் அளித்தார்கள் மும்மூர்த்திகள்.இவ்வாறு சொன்ன மும்மூர்த்திகள், ‘‘நாங்கள் மூவரும் உமக்கு மகவாக வந்து உதிப்போம்’’ என்று அருளாசி வழங்கினார்கள்.

மும்மூர்த்திகளும் தாங்கள் தந்த அருள் வாக்குப்படி, அத்திரிமுனிவர் -அனசூயாதேவி தம்பதியர்க்கு மூன்று குழந்தைகளாக வந்து அவதரித்தார்கள். சந்திரன், தத்தாத்திரேயர், துர்வாசர் என்பவர்களே அவர்கள்.
அத்திரி யாகந் தோய்ந்த வருளந சூயை யென்பாள்
தத்தொளி திளைக்குந் திங்க டகைகொடத் தாத்தி ரேயன்
தொத்துறு கனலிற் சீற்றந் துறுதுரு வாச னென்னும்
மெய்த்தவர்க் கருவு யிர்த்தாள் விரைமலர் பொழிந்தார்
விண்ணோர் தெய்வங்களே தேடிவந்து அருள்செய்து, குழந்தைகளாக அவதாரம் செய்யக்கூடிய அளவிற்கு உயர்ந்த முனிவரான அத்திரி மகரிஷியையும் அனுசூயாதேவியையும் தேடி சீதா - ராம - லட்சுமண்கள் வந்ததில் வியப்பே இல்லை.

வனவாசம் செய்ய வந்த சீதா, ராம, லட்சுமணர்கள் அத்திரி மகரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார்கள். தேடி வந்தவர்களைத் தானே பூஜைசெய்து, முறைப்படி வரவேற்று உபசரித்தார் அத்திரி முனிவர். கூடவே அனசூயா தேவியிடம்,‘‘சீதையைப் பார்த்துக்கொள்!’’ என்றார். அதன்பின் அத்திரி முனிவர் தன் மனைவியான அனசூயா தேவியைப்பற்றி, ராமரிடம் விரிவாகவே விவரித்தார். அத்தகவல்கள்;மழையின்மையால் கடும்பஞ்சம் உண்டான காலத்தில், தன் தவ மகிமையால் பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றைத் தந்து பஞ்சத்தில் இருந்து காப்பாற்றியவள். கங்கையை வரவழைத்துப் பெருக்கெடுத்து ஓடச்செய்தவள். பதினாயிரம் வருடங்கள் பெருந்தவம் செய்தவள். தவத்தின் இடையூறுகளைப் போக்கியவள். அனைவராலும் வணங்கத் தகுந்தவள். புகழ் பெற்றவள். முதுமையில் இருப்பவள். ஒரு போதும் கோபம் கொள்ளாதவள். தன் நற்குணங்களால் ‘அனசூயை’ எனப்பெயர்பெற்றவள்.

‘‘இப்படிப்பட்ட அனசூயாதேவியை, ராமா! உன் தாய் போல எண்ணிப் பூஜை செய் நீ! சீதை இவளுடன் பேசி, ஆசிகளைப் பெறட்டும்’’ என்றார் அத்திரி முனிவர்.  சீதாதேவி, அனசூயாதேவியை நெருங்கினாள். முதுமை காரணமாக உடம்பெல்லாம் தளர்ந்து, தலைமுடி வெளுத்து, காற்றில் நடுங்கும் வாழை மரத்தைப்போல நடுங்கும் உடல் கொண்ட பதிவிரதையான அனசூயைக்கு நமஸ்காரம் செய்து, தன் பெயர் முதலான விவரங்களைச் சொன்னாள் சீதை. சீதையை நலம் விசாரித்தார் அனசூயாதேவி. அதன் பின் அனசூயாதேவியும் சீதையும் பெண்களின் பதிவிரத தர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது உயர்ந்ததான மாலைகள், ஆடைகள், ஆபரணங்கள், மிகுந்த விலை உயர்ந்ததும் வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்பட்டதுமான சந்தனம் ஆகியவற்றை சீதா தேவிக்கு அளித்தார் அனசூயை.அவற்றை சீதை வாங்கிக்கொண்டதும்அனசூயை தொடர்ந்தார். ‘‘சீதா!  உன் கல்யாண வைபவத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன் நான். இப்போது நீயே அதை விரிவாகச் சொல்!’’ எனக்கேட்க, சீதையும் தன் திருமண வைபவத்தை விரிவாகக் கூறினாள்.

அதன்பின் ராமர் முதலான மூவரும் அங்கேயே தங்கி, மறுநாள் புறப்பட்டார்கள். அடுத்த வரலாறு...ஒரு சமயம்... தேவர்களும் அசுரர்களும் கடுமையாகப் போரிட்டார்கள். அந்த யுத்தத்தில் ‘ஸ்வர்பானு’ என்பவன், சந்திர - சூரியர்களை அம்புகளால் அடித்து மறைத்தான். எங்கும் இருள் சூழ்ந்தது. இருளில் பலம்பெறும் பலசாலிகளான அசுரர்கள், மேலும் பலம்பெற்றுத் தேவர்களைப் பெருத்த பாதிப்பிற்கு உள்ளாக்கினார்கள்.  அந்தநேரம் அத்திரிமுனிவர் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.  நிலைமையைச் சமாளிக்க முடியாத தேவர்கள், தவம் செய்து கொண்டிருந்த அத்திரிமுனிவரைச் சரணடைந்தார்கள்.

‘‘மாமுனிவரே! பொறி புலன்களை வென்றவரே! சூரிய- சந்திரர்கள் இருவரும் அசுரர்களின் அம்புகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். அதன் காரணமாக இருள்மூடப் பட்டதால், நாங்களும் பகைவர்களால் பெருமளவில் தாக்கப்பட்டுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம். இந்தப் பயத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்!’’ என வேண்டினார்கள். ‘‘சரி! உங்களை நான், எந்த விதத்தில் காப்பாற்றட்டும்?’’ எனக் கேட்டார் அத்திரி முனிவர். ‘‘தாங்களே சூரிய - சந்திரர்களாக இருந்து, இருளைப் போக்கி, எங்கள் பகைவர்களைக் கொல்ல வேண்டும்’’ என்றார்கள் தேவர்கள். அத்திரி முனிவர் உடனே, யுத்தகளத்தில் ஔியிழந்து இருந்த சூரிய - சந்திரர்களுக்குத் தன் தவ சக்தியால் ஔியைக் கொடுத்தார். அவரது தவசக்தியால் எங்கும் ஔிமயமாகத் திகழ்ந்தது. அதிவிரைவில் அசுரர்களைக் கொல்லவும் செய்தார் அத்திரி முனிவர். தேவர்கள்காப்பாற்றப்பட்டார்கள்.

 அத்திரி, கச்யபர், வசிஷ்டர், பரத்வாஜர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி ஆகிய ஏழு ரிஷிகளும் அருந்ததி முதலானவர்களும் தவம் செய்தவாறே, பல வனங்களிலும் சுற்றித் திரிந்தார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு மிகுந்த பசி உண்டானபோது, அவர்களை நெருங்கிய விருஷாதர்ப்பி எனும் அரசர்,
‘‘வேதியர்களுக்கு யாசகம் வாங்குவதே சிறந்த வழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் கேளுங்கள்! மன்னனான நான் தருகிறேன். உங்களுக்கு என்ன தேவை? எதுவாக இருந்தாலும் தருகிறேன்’’ என்றார். சொன்னவர் செல்வங்கள் - பொருட்கள் என விரிவாக ஒரு பட்டியலையே சொன்னார்.

மன்னர் தருவதாகச்சொன்ன செல்வங்களில் மனதைச் செலுத்தாத மகரிஷிகள், ஒட்டுமொத்தமாக மறுத்துவிட்டார்கள். அங்கேயே இருந்தால், அரசர் மேலும் நிர்பந்தம் செய்வார் என்று எண்ணிய ரிஷிகள், உணவிற்காக வேறு காட்டிற்குச் சென்றார்கள். அரசர் சும்மாயிருப்பாரா? மந்திரிகளை அழைத்து உத்தரவிட்டார். புரிந்து கொண்டமந்திரிகள் காட்டிற்குப்போய், அத்திப்பழங்களைப் பறித்து, ரிஷிகளுக்குக் கொடுக்கப் போனார்கள்.

மற்ற ரிஷிகள் அவற்றை வாங்குவதற்கு முன்னாலேயே, ‘‘இந்த அத்திப்பழங்கள் மற்ற அத்திப்பழங்களை விடக் கனமாக இருக்கின்றனவே!’’ என்று பார்வையாலேயே தீர்மானித்தார் அத்திரி முனிவர். கூடவே, ‘‘இந்தப்பழங்கள் வாங்கத்தகாதவை’’ என்று வாய்விட்டுச் சொல்லவும் செய்தார். அத்திரி முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு, மற்ற ரிஷிகள் எச்சரிக்கை அடைந்தார்கள். அத்திரி தொடர்ந்தார்.

‘‘அமைச்சர்களே! நாங்கள் அறிவில்லாதவர்கள் அல்ல; சாதாரண மனிதர்களும் அல்ல! இந்த அத்திப்பழங்களுக்குள் தங்கம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் விழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்; ஏமாறவில்லை. இந்த உலகத்தில் இது லாபத்தைத் தருவதாக இருந்தாலும், மறுமையில் கொடுமையான பலன்களைத் தரும். இம்மையிலும் மறுமையிலும் சுகத்தை விரும்புபவன், இந்தப் பழங்களை வாங்கவே கூடாது’’ என்று மறுத்தார் அத்திரி முனிவர்.

தங்கள் எண்ணம் பலிக்காதது கண்டமந்திரிகள் அனைவரும் மன்னரிடம் சென்று,‘‘மன்னா! உங்கள் எண்ணம் பலிக்கவில்லை. அந்த ரிஷிகள் உண்மையை உணர்ந்து, எங்களை அவமானப்படுத்தி, வேறு காட்டிற்குச்சென்று விட்டார்கள்’’ என்று நடந்ததை விவரித்தார்கள். மன்னருக்குக் கோபம் தாங்கவில்லை. தான் கொடுத்ததை வாங்க மறுத்த அந்த ரிஷிகளை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், யாகம் செய்தார். ஆகவனீயம் எனும் அந்த யாக அக்கினியில் இருந்து, பார்த்தாலே பயத்தை உண்டாக்கும் ஒரு பேய் வெளிப்பட்டது. கைகளைக் கூப்பியபடி, ‘‘மன்னா! என்ன செய்ய வேண்டும்? சொல்!’’ என்றது.

அந்தப் பேய்க்கு ‘யாதுதானி’ எனப் பெயரிட்ட மன்னர், ‘‘நீ.போய், காட்டில் இருக்கும் அந்த ஏழு ரிஷிகளையும், கூட இருப்பவர்களையும் கொன்று விடு! அதற்கு முன் அவர்களின் பெயர்களை மனதில் பதிய வைத்துக்கொள்! அதன்பின் அவர்களைக் கொன்றுவிட்டு, உன் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்!’’ என உத்தரவிட்டார்.‘‘அப்படியே செய்கிறேன்’’ என்ற பேய், கோரமான வடிவத்தோடு, அங்கிருந்து ரிஷிகள் இருக்கும் காட்டிற்குச்சென்றது.

அப்போது அத்திரி முதலான அந்த ரிஷிகள்,  கிடைத்த கிழங்குகளையும் கனிகளையும் உண்டபடிக் காட்டில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அக்காட்டில், பெருத்த உடம்பு கொண்ட சுனஸ்ஸகன் எனும் துறவி ஒருவரைக் கண்டார்கள். ரிஷிகளையும் கூட வந்தவர்களையும் கண்ட அத்துறவி, தன் பெயரைச் சொல்லி அவர்களுக்கு முறைப்படி உபசாரம் செய்து, அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். அத்துறவியின் பணிவிடையை ஏற்ற அத்திரி முதலானோர், துறவியுடன் காடுகளில் திரிந்தார்கள்.

பார்த்தாலே கண்ணைக் கவரும்படியான தாமரைக்குளம் ஒன்று எதிர்ப்பட்டது. தாமரை மலர்களின் நறுமணம் ரிஷிகளின் மனதை சாந்தப் படுத்தியது. குளத்தை நெருங்கினார்கள்.அக்குளத்தை, மன்னரால் அனுப்பப்பட்ட பேய் காவல் காத்துக் கொண்டிருந்தது. அதைக்கண்ட ரிஷிகள், ‘‘நாங்கள் பசியால் வருந்துகிறோம். இக்குளத்தில் உள்ள தாமரைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ளலாமா?’’ எனக்கேட்டார்கள்.‘‘எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் ஒவ்வொரு வரும் அவரவர் பெயரை, காரணத்துடன் விளக்கிச்சொல்லிவிட்டுக் குளத்தில் இறங்குங்கள்!’’ என்றது பேய்.

ஒரு சில விநாடிகள், பேயின் வார்த்தைகளை மனதில் ஓட்டிப்பார்த்த அத்திரி முனிவருக்கு உண்மை புரிந்தது. ‘இது சாதாரண ஜீவன் அல்ல; நம்மைக் கொல்வதற்காக மன்னனால் யாகம் செய்து உருவாக்கப்பட்டது இது’ என்பதை அத்திரி முனிவர் புரிந்துகொண்டார். தன் பெயரைக் காரணத்துடன் சொன்னார். ‘‘என் பெயர் அத்திரி. நான் மூன்றுமுறை அத்யயனம்(வேதம் ஓதுவது)செய்யாத ராத்திரி இல்லை என்பதால், எனக்கு ‘அராத்திரி’ எனும் பெயர், ‘அத்திரி’ என ஆயிற்று. தெரிந்துகொள்!’’ என்றார்.

அதைக்கேட்ட பேய், ‘‘மாமுனிவரே! உங்கள் பெயரைச் சரியாகத்தான் சொன்னீர்கள் நீங்கள். ஆனால் என்னால்தான் உங்கள் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. நீங்கள் போய்க் குளத்தில் இறங்குங்கள்!’’ என அத்திரி முனிவருக்கு அனுமதி கொடுத்தது.இதைத்தொடர்ந்து, அவரவரும் தங்கள் பெயர்க் காரணங்களைச் சொல்லிப் பெயர்களையும் சொன்னார்கள். அப்பெயர்களைப் பேயால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு வழியின்றி அவர்களையும் குளத்தில் இறங்க அனுமதி கொடுத்தது பேய்.

கடைசியில், அவர்களுக்கெல்லாம் துணையாக வந்த ‘சுனஸ்ஸகன்’ எனும் துறவி, பேயிடம் தன்பெயரைக் கூறி, பெயருக்கான காரணத்தையும் சொன்னார். வழக்கப்படிப் பேயால், அப்பெயரை உச்சரிக்கவோ - நினைவில் வைத்துக் கொள்ளவோ முடியவில்லை.அதனால் பேய் ஒரு புது முயற்சியில் இறங்கியது; ‘‘ஸ்வாமி! ரிஷி புங்கவரே! உங்கள் பெயரை இன்னும் ஒருமுறை சொல்லுங்கள்!’’ என்றது.

அதைக் கேட்ட சுனஸ்ஸகன்,‘‘என்ன இது? என்பெயரை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல், மறுபடியும் சொல் என்கிறாயே! நீ உடனே சாம்பலாகப் போ’’ என்று கூறி, தன் கையில் இருந்த திரிதண்டத்தால் பேயின்தலையில் அடித்தார்.அதே விநாடியில் பேய் சாம்பலாய்ப் போனது. மன்னர் பேச்சைக் கேட்டு, அத்திரி முதலான நல்லவர்களைக் கொல்ல வந்த பேய், ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பதற்கு இணங்கச் சாம்பலானது. பார்த்த ரிஷிகள் வியந்தார்கள். அந்தவியப்பைக் கவனிக்காதவரைப் போல சுனஸ்ஸகன் பேசத் தொடங்கினார்;

‘‘முனிவர்களே! உங்களைக் கொல்வதற்காக விருஷாதர்ப்பி எனும் மன்னன், யாதுதானி எனும் இந்தப் பேயை, யாக அக்கினி மூலம் உருவாக்கி அனுப்பினான். இந்தப் பேயிடம் இருந்து உங்களைக் காப்பதற்காகவே வந்தேன். வந்த வேலையும் முடிந்தது. நான் தேவேந்திரன். ஆசையை விட்டவர்களான உங்களுக்கு, அழியாத உலகங்கள் கிடைத்துள்ளன. உத்தமமான அந்த உலகங்களை அடையுங்கள்!’’ என்று கூறி, தன் தேவேந்திர வடிவத்தைக் காண்பித்தார். அத்திரி முதலான ரிஷிகள் அனைவரும் தேவேந்திரனுடன் சொர்க்க உலகத்தை அடைந்தார்கள். அத்திரி முனிவரும் அனசூயாதேவியும் பெரும் சக்திகள் பல பெற்றிருந்தும், அவற்றைத் தங்கள் சொந்த நலனுக்காக உபயோகிக்காமல், பொது நலனுக்காகவே - நல்லவர்களின் நலனுக்காகவே பயன்படுத்தினார்கள்.

(தொடரும்)

தொகுப்பு: பி .என். பரசுராமன்

Tags : Epic Characters Athiri Sage - Anasuya ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?