சித்தர்கள் போற்றும் சின்னக்குழந்தையே பாலாம்பிகை. இந்த பாலாம்பிகையை சித்தர்கள் வாலைக்குமரி என்றும் வாலைத் தேவி என்றும் அழைப்பர். கொங்கண சித்தர்! பெயரை கேட்டாலே ‘‘கொக்கு என்று நினைத்தாயோ கொங்கனவா’’ என்று வள்ளுவர் மனைவி வாசுகி அம்மையார் கேட்டவுடன், அவர் ஆணவம் ஒழித்து ஞானம் அடைந்த சம்பவம்தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். பதினெண் சித்தர்களுள் முக்கியமான இடம் வகிக்கும் மாபெரும் யோகி இவர். இவர் பல எண்ணற்ற நூல்களை நமக்கு தந்துள்ளார்.
அவற்றுள் முக்கியமான ஒன்று ‘‘வாலை கும்மி’’ என்னும் கும்மிப் பாடல். தனது இதய தெய்வமான பாலாம்பிகையை போற்றி அவர் பாடிய அற்புத பாடல்கள் இவை. இதன் பாடல்கள் ஒவ்வொன்றிலும் யோகசாஸ்திரம் மறைந்து இருக்கிறது என்று பாடல் படிக்கும் போது நமக்கே விளங்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால், யோக சாஸ்திரத்தை தெருவில் கும்மி விளையாடும் பெண்களுக்கு உபதேசிப்பது போல, பாடலை அமைத்திருக்கிறார். இதனால், பெண்களுக்கும் யோகத்திலும், ஆன்மிகத்திலும் சம அங்கீகாரம் உண்டு என்று சொல்லாமல் சொல்கிறார்.
இந்தப் பாடலை, எங்கு தொட்டாலும் சொற்சுவையும் பொருட்சுவையும் கசிகிறது. பாலா திரிபுர சுந்தரியின் புகழை பாடும் இந்த கும்மியின் சில பாடல்களை பார்ப்போமா? உலகின் தொடக்கம்மாதா பிதா கூட இல்லாம லேவெளி மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று பேதை பெண் ணாமுதல் வாலைப்பெண் ணாளென்று புகுந்தா ளிந்தப் புவியடக்கம். - 9ஸ்ரீ மாதாவாக அதாவது, மேன்மை பொருந்திய உலகிற்கு எல்லாம் அவள் தாயான போதும் அம்பிகைக்கு தாய் தந்தையர் என்று யாருமில்லை. ஒன்பதே வயது குழந்தையை போல இருக்கும் தேவி இந்த உலகை தன்னுள் உடையவள்.அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசிபரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம். - 12திருமாலுக்கும் முந்தியது ஐந்தெழுத்து, பின்னர் அந்த திருமாலாகவே ஆனது அஞ்செழுத்து. மகிமை மிக்க இந்த ஐந்தெழுத்தே உடலும் உயிரும் ஆனது.ஆதியி லைந்தெழுத் தாயினாள் வாலைபெண்ஐந்தெழுத் துமென்று பேரானாள்;நாதியி னூமை யெழுத்தியவள் தானல்லஞான வகையிவள் தானானாள். - 13அஞ்செழுத் தானதும் எட்டெழுத்தாம் பின்னும்ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சுநெஞ்செழுத் தாலே நிலையா மலந்தநிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே! - 19முதலில் ஐந்தெழுத்தாகிய பாலாம்பிகை, தானே அந்த ஐந்தெழுத்துக்களையும் தாங்கினாள். பிறகு, நமசிவாய மந்திர உருவமான அம்பிகை நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரமாக விரிந்தாளாம். அதாவது ஆதி முதலாக இருந்த அம்பிகை ஈசனையும் திருமாலையும் படைத்தாள் என்று கொள்ளலாம். மும்மூர்த்திகளையும் முதலில் படைத்த அம்பிகை, ஐம்பத்தி ஓரு எழுத்துக்களையும் படைத்தாளாம்.வடமொழியில் எழுத்துக்கள் ஐம்பத்தி ஒன்று என்பது, இங்கு குறிப்பிடத்தக்கது. ஐம்பத்தி ஓரு எழுத்துக்களான அம்பிகை வேதங்களையும் சாஸ்திரங்களையும் படைத்து, அதை உலகிற்கு தந்தாள் என்பது கருத்து. ‘‘வேத ஜனனி’’ என்று லலிதா ஸஹஸ்ர நாமம் இதைத்தான் சொல்கிறது.யோக ரகசியங்கள்ஊத்தைச் சடலமென் றெண்ணாதே இதைஉப்பிட்ட பாண்டமென் றெண்ணாதேபார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே. - 24உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல்நிதம்வைத்த விளக்கும் எரியுதடிஅச்சுள்ள விளக்கு வாலையடி அவியாம லெரியுது வாலைப்பெண்ணே! - 25எரியு தேஅறு வீட்டினி லேயதில்எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லைதெரியுது போக வழியுமில்லை பாதைசிக்குது சிக்குது வாலைப்பெண்ணே. - 26‘‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா!’’ என்று விஷயம் தெரியாதவர்கள் அளந்து விடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த உடல் ஒரு பொக்கிஷம். இந்த உடலிலே, தலை உச்சிக்கு கீழே நாக்கிற்கு மேலே ஒரு ஜோதி இருக்கிறதாம். அந்த ஜோதி எரிவதர்க்கு எண்ணெய்யும் தேவையில்லை. அது அமிழ்ந்து போக அங்கு தண்ணீரும் இல்லை. கண்ணுக்கு அது அப்பட்டமாக தெரிந்தும் அங்கு போக வழி இல்லை என்பது மேலோட்டமான அர்த்தம். உற்று கவனிப்பவர்களுக்கு உச்சியில் இருக்கும் விளக்கு ஸஹஸ்ரார சக்கரம் என்றும் அதில் இருக்கும் ஜோதி, சாட்சாத் அந்த அம்பிகை தான் என்பதும் விளங்கும்.நெற்றியின் நடுவில் இருக்கும் ஸஹஸ்ரார சக்கரத்தில், ஆயிரம் இதழ் தாமரையில் அமர்ந்த படி, ஜோதி மயமாக, அம்பிகை அமுதத்தை பொழிவதாக லலிதா ஸஹஸ்ர நாமமும் யோக சாஸ்திரங்களும் கூறும். அதை அழகான பாடல்களாக நமக்கு தந்துள்ளார் கொங்கணர்.அஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்கொஞ்சி விளையாடும் வஞ்சியரேநெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பா னவன்நேருட னாமடி வாலைப்பெண்ணே! - 34தொந்தியி லேநடு பந்தியிலே திடச்சிந்தையி லேமுந்தி உன்றனுடன்உந்தியில் விட்ணுவுந் தாமிருப் பாரிதைஉண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே! - 35ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்காலத்தி லேயனு கூலத்திலேமுலத்திலே பிரமன் தானிருந் துவாசிமுடிக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே. - 36உடலில் முதுகெலும்பின் அடியில் மூலாதாரம் என்று ஒரு சக்கரம் உண்டு. அதில் தான் குண்டலினி சக்தி ஒரு பாம்பின் வடிவில் இருக்கிறது. இந்த மூலாதாரத்திற்கு தலைவனாக கருதப் படுபவர் பிரம்மா. அதே போல, ஒரு மனிதனின் நாபியின் அருகில் ஒரு பத்து இதழ் தாமரையை கொண்ட ஒரு சக்கரம் இருக்கும். இந்த சக்கரத்திற்கு பெயர் மணிபூரகம். இந்த சக்கரத்தின் தலைவனாக கருதப்படுபவர் திருமால். நாபிக்கு மேலே புருவத்துக்கு மத்தியில் இரண்டு இதழ் தாமரை மலர் ஒன்று உள்ளது. அதற்கு ஆக்ஞா சக்ரம் என்று பெயர். இந்த சக்கரத்தில் ருத்திரன் இருப்பதாக யோகசூத்திரங்கள் கூறுகிறது. இப்படி மும்மூர்த்திகளும் உனக்குள்ளேயே இருப்பதை உணர்ந்து கொள் என்று நமக்கு அன்புக் கட்டளை விதிக்கிறார் கொங்கணர்.மூலாதாரைக நிலையா......ருத்ரக் கிரந்தி விபேதினி என்ற லலிதா ஸஹஸ்ர நாம வரிகள், மேலே சொன்ன சக்கரத்தின் வடிவிலும் அதன் தேவதைகளின் வடிவிலும் அம்பிகையே இருப்பதாக சொல்லும்.இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்இருக்கையில் புத்திக் கறிக்கையினால்சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்சாகிற தேதடி வாலைப்பெண்ணே! - 39இந்த விதத்தில் உடலுக்குள்ளேயே ஆதி சக்தி இருக்க அவளது பாதத்தை பிடித்து நல்ல கதிக்கு சேராமல், உலகில் இன்னல்படும் மனிதரை எண்ணி வருத்தப்படுகிறார் கொங்கணர். அந்தர்முக சமாராத்யா என்று அம்பிகையை லலிதா ஸஹஸ்ர நாமம் கூறும். அதாவது ஆசை அடக்கி உள்ளொளி பெருக்கி செய்யும் மன பூஜையால் அடையப்படுபவள் என்று அந்த நாமத்திற்கு பொருள். மொத்தத்தில், பாலையை உனக்குள்ளேயே வணங்கு என்கிறார்.பாலையின் பெருமைக்கு நிகர் ஏது?காலனைக் காலால் உதைத்தவளாம் வாலைஆலகா லவிட முண்டவளாம்மாளாச் செகத்தைப் படைத்த வளாமிந்தமானுடன் கோட்டை இடித்தவளாம். - 64ஈசன் இடது காலால் தானே காலனை உதைத்தார்? ஈசனின் இடது பாகம் முழுக்க அம்பிகையாக இருக்க, காலனை இடது காலால் உதைத்ததும் அவள் தானே? போதாத குறைக்கு ஈசன் உண்ட விஷத்தின் வீரியத்தை அற்றுப்போக வைத்தவளும் அவள் தானே? அப்படி இருக்க ஆலகால விஷம் உண்டதும் அவள் தானே? கொங்கணர் இப்படி சக்தியையும் சிவத்தையும் ஒன்றாக காண்பதைப் போலவே அருணகிரிநாதர் கூட காண்கிறார். அதற்கு ‘‘காலன் விழ மோது சாமுண்டி’’ என்ற அவரது திருப்புகழ் வரியே சாட்சி வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங் காப்பது சேலைக்கு மேலுமில்லை இப்படி நமக்குள்ளேயே இருந்து உலக நாடகத்தை நடத்தும் பாலாம்பிகைக்கு, மிஞ்சிய தெய்வம் இல்லையாம். தேவர்களுக்கு எல்லாம் அவளை, தலைவி என்கிறார் கொங்கணர். லலிதா ஸஹஸ்ர நாமம் இதையே ‘‘ஸ்ரீமஹாராஜ்ஞீ ’’ என்ற நாமமாக கூறும். அனைத்து பெண்களும் அம்பிகையே!மாதாவாய் வந்தே அமுதந்தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகங்கொடுத்தாள்ஆதரவாகிய தங்கையானாள் நமக்காசைக் கொழுந்தியு மாமியானாள். - 65தாயாகாவும் மனைவியாகவும் தங்கையாகவும், மகளாகவும், மாமியாகவும், கொழுந்தியாகவும் இருக்கும் அனைத்துப் பெண்களையும் அம்பிகையின் ஒரு வடிவமாகவே கருத வேண்டும் என்கிறார் கொங்கணர். இப்படி பெண்மையை தெய்வமாக போற்றி வழிபடுவது அம்பிகைக்கு மிகவும் பிடிக்குமாம். ஏனெனில் அவளே ஒரு பெண் தானே? இதற்கு ‘‘சுவாசின் யர்ச்சனப்பிரீதா’’ பெண்களை பூஜிப்பதால் மகிழ்ச்சி அடைபவள் என்ற அவளது நாமமே சாட்சி.அஷ்டமா சித்திகள் அடைய எளிய வழி ‘‘வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக் கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்’’ பாலாம்பிகையை ஊன் உருக உயிர் உருக பூஜிப்பவர் என்னைப் போல சித்தனாகவே ஆகிவிடலாம் என்கிறார் கொங்கணர். சித்தமாதா என்ற அம்பிகையின் நாமமும் இதே கருத்தை உடையது தான். தனக்குத் தானே செய்து கொள்ளும் உதவிபெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்றபிள்ளை மசானக் கரையின் மட்டும்தொண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்துசேர்ந்து பரகதி தான்கொடுக்கும். 82பெண்டாட்டி வீட்டின் வாசல் வரை வருவாள். மகன் இடுகாடு வரை தான்வருவான். ஆனால் நாம் செய்த நல்ல செயல்கள் மரணத்திற்கு அப்பாலும் வந்து நன்மை பயக்கும். அதனால், காசு பணம் பதவி போன்றவை வந்தால், அதை தான் மட்டும் அனுபவிக்கமால் பிறருக்கு உதவி, அவர் மகிழ நாம் மகிழ வேண்டும். அதையும் சீக்கிரமே செய்ய வேண்டும் என்பதை பின்வருமாறு சொல்கிறார்.(இந்தச் செய்யுளை அடிப்படையாகக் கொண்டு தான் கவிஞர் கண்ணதாசன் வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று பாடல் எழுதினார்.)சீக்கிரந் தருமஞ் செய்யவேண்டும் கொஞ்சந்திருப்ப ணிகள்மு டிக்கவேண்டும்.....மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்மெல்லிய ரோடு சிரிக்கும்போதுயுத்தகாலன் வந்துதான் பிடித்தால் நாமும்செத்த சவமடி வாலைப்பெண்ணே! - 85ஏழை பனாதிக னில்லையென்றால் அவர்க்குஇருத்தால் அன்னங் கொடுக்க வேண்டும்நாளையென்று சொல்ல லாகாதே என்றுநான்மறை வேத முழங்குதடி. - 86மெத்தை தனிலே உல்லாசமாக படுத்திருந்தாலும் காலன் வந்து பிடித்தால் இந்த உடல் ஒரு பிணம்தான். ஆகவே ஏழை எளியவர்கள் உதவி கேட்டு வந்தால் இன்று நாளை என்று அலைக் கழிக்காமல் உடனே உதவ வேண்டும் என்கிறார்.எல்லாம் பாலாம்பிகையே.சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்தானென் றொருவுடல் பேதமுண்டோ ?ஓதிய பாலதி லொன்றாகி யதிலேஉற்பத்தி நெய்தயிர் மோராச்சு. 95சாதி பேதம் என்று நியாயம் பேசுகிறார்கள். ஆனால், அவ்வளவு பெரிய யானை முதல் சிறிய எறும்பு வரை அனைத்தையும் ஈன்றது பாலை பெண்தான் (ஆப்பிரம்ம கீட ஜனனி - ஸஹஸ்ர நாமம்) எனும் போது நமக்குள் பேதம் ஏது? பால் ஒன்றில் இருந்து தானே மோர், தயிர், வெண்ணெய், நெய் போன்றவை வருகிறது. இவற்றில் பேதம் என்பதே இல்லையே, என்கிறார் கொங்கணர். இந்த வரிகள் ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! என்ற திருமூலரின் வாக்கோடு ஒத்திருக்கிறது.குருவை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கைபூரணம் நிற்கும் நிலையறியான் வெகுபொய்சொல்வான் கோடி மந்திரஞ்சொல்வான்காரணகுரு அவனு மல்ல இவன்காரியகுரு பொருள் பறிப்பான். - 102எல்லா மறிந்தவ ரென்றுசொல்லி இந்தப்பூமியி லேமுழு ஞானியென்றேஉல்லாச மாக வயிறு பிழைக்கவேஓடித் திரிகிறார் வாலைப்பெண்ணே! - 103அம்பிகையின் இருப்பை உள்ளபடி உணராதவன், பொய்கள் பல பேசி, ஊரை மயக்கி ஏமாற்றுவான். மந்திரம் கோடி ஜெபித்து விட்டதாக பிதற்றுவான். பொருள் பிடுங்கப் பார்ப்பான். தான் எல்லாம் அறிந்தவன் என்று பீத்திக் கொள்வான். அவனது வலையில் விழுந்து விடாதே! உண்மையான யோகியை தேடி, அவரை அண்டி, ஞானத்தை அடையச் சொல்கிறார். இந்தக் கலியில் போலிகள் பெருகி விடுவார்கள் என்பதை எவ்வளவு அழகாக கணிக்கிறார் பாருங்கள்.பாலா என்னும் நாமமே மந்திரம்ஆயுசு கொடுப்பாள் நீரிழி வுமுதல்அண்டாது மற்ற வியாதியெல்லாம்பேயும் பறந்திடும் பில்லிவி னாடியில் பத்தினி வாலைப்பெண் பேரைச்சொன்னால். - 105பாலா என்று ஒருமுறை சொன்னாலும், நீண்ட ஆயுள், நோயில்லா பெரு வாழ்வு தருவாள். பில்லி சூனியம் பெரும் பகை போன்றவற்றை விரட்டுவாள்.நித்திரை தன்னிலும் வீற்றிருப்பா ளெந்தநேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்சத்துரு வந்தாலும் தள்ளிவைப்பாள் வாலைஉற்றகா லனையும் தானுதைப்பாள். 106பாலையை நீ சரணடைந்தால் நீ உறங்கும் போதும் விழித்திருந்து உன்னை அவள் காப்பாள். உன்னுடைய எதிரியை தள்ளி வைப்பாள். காலனையும் உதைத்திடுவாள்.பல்லாயி ரங்கோடி யண்டமுதல் பதினாங்கு புவனமும் மூர்த்திமுதல்எல்லாந் தானாய்ப் படைத்தவளாம் வாலைஎள்ளுக்கு ளெண்ணைய்போல நின்றவளாம்பல்லாயிரக் கணக்கான அண்டங்களை படைத்த பாலாம்பிகை, எள்ளுக்குள் எண்ணெய் போல மறைந்து இருக்கிறாள் அவளை தேடிப் பிடிப்பதே யோக ரகசியம் என்று ஒரே வரியில் முடித்து விட்டார்.
தொகுப்பு: ஜி.மகேஷ்