கி.பி. 1323-ல் பராக்கிரமதேவ பாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார். அந்த காலக்கட்டத்தில் டெல்லியை ஆண்ட பாதுஷா தமிழகத்திலும் தனது ஆளுகையை விரிவுபடுத்த எண்ணினார். அப்போது சிற்றரசர் மாலிக் முகமது செய்சி திருச்சி ரங்கம் அரங்கநாதர் கோயிலில் படைவீரர்களுடன் நுழைய முற்பட்டார். இதையறிந்து வேதாந்த தேசிகர் உள்ளிட்ட ஆச்சாரியர்கள், மூலவர் விக்ரஹத்தை மதுரை கொடிக்குளம் ஜோதிஷ்குடி வேதநாராயணப் பெருமாள் கோயிலில் மறைத்து வைத்தனர். தாயார் விக்ரகத்தை ரங்கம் கோயிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் அகலமாக ஆழமாக குழி தோண்டி மறைத்து வைத்தனர். மாலிக்காபூர், கருவூலத்தை தாக்கி ஆபரணங்கள், தங்க நாணயங்கள் ஆகியவற்றோடு உற்சவர் விக்ரகத்தையும் கவர்ந்து சென்றான். அவற்றை டெல்லி பாதுஷாவிடம் ஒப்படைத்தான். அவற்றை தனது மகள் சுரதாணியிடம் காட்டிப் பூரித்த பாதுஷா, ‘இவற்றில் எது வேண்டுமோ எடுத்துக்கொள்’ என்றார்.
தங்கம், வைரம் முதலான ஆபரணங்கள், தங்க நாணயங்கள் முதலானவற்றை புறம் தள்ளிய சுரதாணி ரங்கநாதரின் உற்சவரான அழகிய மணவாளன் விக்ரகத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு இது மட்டும் எனக்கு போதும், ‘இதற்கு ஒப்பாக வேறெதுவும் இல்லை’ என்று கூறி அகமகிழ்ந்தார். அன்றைய தினத்திலிருந்து அந்த விக்ரகத்தின் மீது காதல் கொண்டாள், சுரதாணி. டெல்லி பாதுஷா ஆடல், பாடல்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதனை அறிந்த கரம்பனூர் அம்மையார் என்ற பெண்மணி, ஸ்ரீரங்கத்திலிருந்து நடனமாடுவோர் மற்றும் பாடுவோருடன் டெல்லி பாதுஷாவிடம் செல்கின்றனர். பாடுவோரின் இசைதனில் பெரிதும் மயங்கிய பாதுஷா தங்கம், வைர நகைகளையும், பட்டாடைகளையும் பரிசாக கொடுத்தார். அவற்றை வாங்க மறுத்ததால் திகைத்த பாதுஷா, ‘பரிசுகள் போதாதா அல்லது வேறேதும் வேண்டுமா?’ என கேட்கிறார். அதற்கு அவர்கள் எதுவும் வேண்டாம். மகள் விளையாடும் அழகிய மணவாளன் விக்ரகம் மட்டுமே வேண்டும் என்றனர். அவர் குறித்து பாடுங்கள், அவர் வந்தால் எடுத்துச் செல்லலாம் என்று பாதுஷா கூறினார்.
பாடலைத் துவங்கிய சிறிது நேரத்தில் ஆடுவார் மற்றும் பாடுவாரின் கண்களுக்கு அழகிய மணவாளன் காட்சி தருகிறார். சுரதாணிடத்தும் காட்சி தருகிறார். அதைக்கண்ட சுரதாணி மயக்க நிலை அடைகிறாள். அத்தருணத்தில் பாடுவோர்கள் கையில் அழகிய மணவாளன் ஐக்கியமாகிறார். சற்று நேரம் கழித்து கண்விழித்த சுரதாணிக்கு, நடந்தவை யாவும் கனவில் நடந்ததுபோல் தெரிய, அழகிய மணவாளனைத் தேடி அங்கும், இங்கும் ஓடுகிறாள். கண்ணீரும், கம்பலையுமாக முகமெல்லாம் வாடி உடல் சோர்ந்து நிற்கும் மகளின் நிலையைக் கண்டு திகைத்த பாதுஷா, உடனடியாகப் படை வீரர்களை அனுப்பி அழகிய மணவாளனின் விக்ரகத்தை மீட்டு வருமாறு உத்தரவிட்டார். இதற்கிடையில் பெருமாளின் விக்ரகத்தை எடுத்துச் சென்றவர்கள் திருமலையில் அடர் காட்டுப்பகுதியில் ஒரு மலைச்சரிவில் இலை, தழைகளில் மறைத்து வைத்தனர். இதனிடையே பாதுஷாவின் படைகளுடன் சுரதாணி ஸ்ரீரங்கம் வந்து அழகிய மணவாளனைக் காணாது, கோயில் வாசல் பூட்டியிருப்பது கண்டு பூட்டிய கதவில் தலையால் முட்டினாள். மயங்கி விழுந்தாள். உயிரும் துறந்தாள். அப்போது, பெருமாளின் பேருரு தோன்றியது. சுரதாணியின் உடலினின்றும் ஒரு ஒளி கிளம்பி அழகிய மணவாளனின் திருமேனியில் ஐக்கியமாகிறது. திருமலையிலேயே பல ஆண்டுகள் இருந்த அழகிய மணவாளப் பெருமாள் மீண்டும் ரங்கம் கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படுகிறார். அப்போது நாட்டை ஆண்ட சோழன் இந்தக் கைங்கர்யத்தை நிறைவேற்றுகிறான். அன்று சோழ மன்னன் கனவில் பெருமாள் தோன்றி சுரதாணியின் வரலாற்றைச் சொல்லி, அவளுக்கு சந்நதி அமைக்குமாறு சொல்கிறார். அதன்படி, சோழன் பெருமாள் கருவறையின் வடகிழக்கு மூலையில் சுரதாணிக்கு ஒரு சந்நதி அமைத்து அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவத்தைத் தீட்ட செய்கிறார். அன்று தொட்டு பெருமாளுக்கு முஸ்லீம்கள் வழக்கப்படி நித்தியப்படி காலையில் ரொட்டி, வெண்ணெய், இரவில் பால் முதலியன அமுது செய்யப்படுகின்றன. திருமஞ்சன காலத்தில் கைலி (லுங்கி) சாற்றும் வழக்கமும் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் பகல்பத்து திருவிழாவின்போது, சுரதாணி கோயில் கொண்டுள்ள சந்நதியின் முன் அழகிய மணவாளன் எழுந்தருளும் படியேற்ற சேவை சாதிப்பதும் இன்றும் வழக்கமாக இருந்து வருகிறது.