?என் மகனுக்கு விவாகரத்து ஆகி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. மறுமணத்திற்கு முயற்சித்தும் தள்ளிக்கொண்டே போகிறது. மேலும் ஒரே இடத்தில் அவருக்கு வேலை அமைவதில்லை. நல்ல வரன் அமையவும் நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்கவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- மணி, கோபிசெட்டிபாளையம்.
பரணி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீடு பலமாக உள்ளது. பத்தாம் வீட்டில் செவ்வாய், குரு, ராகு ஆகியோரின் இணைவு நிச்சயமாக ஒரு நல்ல வேலையை உருவாக்கித் தரும். அவருடைய படிப்பிற்கு ஏற்ற வேலைதான் வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்காமல் வேறு துறைகளிலும் முயற்சிக்கச் சொல்லுங்கள். குறிப்பாக வண்டி வாகனங்கள் சார்ந்த துறை அவருக்கு கைகொடுக்கும். தற்போது நடந்து வரும் நேரமே நிரந்தர உத்யோகத்தைத் தருவதற்கு சாதகமாக உள்ளதால் முழுமுயற்சியுடன் வேலை தேடச் சொல்லுங்கள். திருமணத்தைப் பொறுத்தவரை ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றில் உள்ளதால் களத்ர தோஷம் என்பது உண்டாகி அதன் பலனாக விவாகரத்தும் ஏற்பட்டுவிட்டது. விவாகரத்து ஆனதே பரிகாரம்தான். தனியாக வேறு பரிகாரம் தேவையில்லை. நிரந்தர வேலை அமைய வேண்டி தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் முருகப்பெருமானை வேண்டி நின்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை ஆறுமுறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். 06.06.2021க்குள் நிரந்தர உத்யோகமும் அதனைத் தொடர்ந்து மறுமணமும் நடந்துவிடும்.
“யோகீச்வரோ மஹாஸேன: கார்த்திகேயோ அக்னி நந்தன:ஸ்கந்த: குமார: ஸேனானீ: ஸ்வாமீ சங்கர ஸம்பவ:.”
?விமான நிறுவனம் மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களில் நானும் ஒருவன். வெளியில் வந்து சுயமாக சுற்றுலா சேவை மையம் தொடங்கி ஓரளவு தேவைகளை சமாளித்து வந்தேன். தற்போதுள்ள கொரோனா சூழலில் சுற்றுலா தொழில் படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. நான் எந்த தொழிலைச் செய்தால் சரியாக அமையும்? உரிய வழி காட்டுங்கள்.- வில்லாளன், மதுரை.ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் (கும்ப லக்னம் என்று நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது) உங்கள்ஜாதகப்படி தற்போது சனி தசையில் சூரிய புக்தி நடந்துவருகிறது. உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் இணைவு சிறப்பான பலனைத் தரும். தற்போதைய கொரோனா பாதிப்பு என்பது உலகளவில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை தற்காலிகமாக சிரமமான சூழலை சந்தித்து வருகிறீர்கள். 13.03.2021 முதல் சிரமமான நிலை மறைந்து உங்கள் சம்பாத்யம் என்பது மீண்டும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். சுற்றுலாத்துறை என்பது உங்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தைத் தரும். அதோடு டிராவல்ஸ் மற்றும் தற்காலிகமாக ரியல் எஸ்டேட் துறையிலும் இறங்கலாம். ரியல் எஸ்டேட் துறை என்பது அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் கைகொடுக்கும். டிராவல்ஸ் என்பது நிரந்தரமாக பயனைத் தரும். உங்கள் ஜாதகப்படி உங்கள் இரட்டைப் பெண் குழந்தைகளை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வீர்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 9 முறை சொல்லி வழிபட்டு வாருங்கள். மனக்கவலை தீருவதோடு வருமானமும் கூடும். “ஜ்வாலாதேவ்யைச வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹிதந்நோ மஹாமாரி ப்ரசோதயாத்.”
?24 வயதாகும் என் மகளுக்கு இன்னும் திருமணம் கூடவில்லை. செவ்வாய்க்கிழமையில் பிறந்ததால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள். ஒரு சிலர் ஏழரைச் சனியால் கல்யாண முகூர்த்தம் கூடவில்லை என்கிறார்கள். என் மகளுக்கு எப்போது திருமணம் கைகூடும்? உரிய பரிகாரம் கூறுங்கள்.- லட்சுமி, கிருஷ்ணகிரி.திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை பிறந்ததால் செவ்வாய் தோஷம் என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. இவரது ஜாதகத்தைப் பொறுத்த வரை செவ்வாய் தோஷம் என்பது கிடையாது. மேலும் ஏழரைச் சனியின் காலம் எந்த வகையிலும் திருமணத்தடையை உண்டாக்காது. அவரவர் ஜாதகத்தில் நடந்துவரும் தசாபுக்திக்கு தகுந்தாற்போல் திருமண யோகம் என்பது கூடி வரும். உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் குரு ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் நல்ல குணம் கொண்ட மாப்பிள்ளை அமைவார். தற்போது நடந்து வரும் ராகு தசையின் காலம் என்பது அத்தனை உசிதமாக இல்லாததால் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டு இருக்கிறது. திருமண விஷயத்தில் அவசரப்படாதீர்கள். நிதானமாகப் பார்த்து முடிவெடுங்கள். இவரது ஜாதகப்படி 23.04.2022 வாக்கில் திருமணம் என்பது நடக்கும். அதுவரை சற்று பொறுமையுடன் இருப்பது அவரது மணவாழ்விற்கு நல்லது. ஜாதகத்தில் தோஷம் ஏதும் இல்லாததால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை. மனதிற்குப் பிடித்த மணவாழ்வு என்பது உங்கள் மகளுக்கு அமைந்துவிடும்.
?இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துவிட்டு தற்போது தமிழக வருவாய்த்துறையில் பணியாற்றி வருகிறேன். இன்னும் மூன்று வருடத்தில் ஓய்வு பெற உள்ளேன். மனநிம்மதியுடன் ஓய்வு பெறுவதற்கும் பணி ஓய்விற்குப் பின் என்னமாதிரியான தொழிலைச் செய்யலாம் என்பதற்கும் வழிகாட்டுங்கள்.- ரமேஷ், தஞ்சாவூர்.ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்ர புக்தி முடியும் தருவாயில் உள்ளது. ஓய்வு பெற்ற பிறகும் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. மூன்று வருடங்களுக்குப் பிறகு செய்யவேண்டியதை இப்போதிருந்தே திட்டமிடத் துவங்கியுள்ளீர்கள். வீணான மனக்கவலையை விடுத்து உங்கள் உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். 16.09.2021 வாக்கில் பணி உயர்விற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. பணி உயர்வோடு இடமாற்றமும் உண்டாகலாம். அதனைத் தொடர்ந்து உங்களுடைய பணிச்சுமையும் பொறுப்புகளும் சற்று கூடும். ஓய்வின்றி உழைப்பதோடு சற்று போராட்டமான சூழலையும் சந்திப்பீர்கள். 16.04.2023 முதல் உயர்ந்த பதவியில் அமர்வதோடு மனநிறைவோடு பணியில் இருந்து ஓய்வினையும் பெறுவீர்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு நீங்கள் கேட்டிருப்பது போல வேறு எங்கும் வேலை தேட வேண்டிய அவசியம் இல்லை. வெளிநாடு செல்வது அல்லது ஏற்றுமதி - இறக்குமதி சார்ந்த தொழில்களும் இல்லை. பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்வது என்பதும் உங்களுக்கு பயன் தரும் வகையில் அமையாது. நண்பர்களுடன் சேர்ந்து தொழில் தொடங்கலாம். குறிப்பாக அரசுத்துறை அலுவலகங்களில் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற துணையாக இருக்கும் பணிகளைச் செய்து வரலாம். ஓய்வூதியர்களுக்கு உதவுவது, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சான்றிதழ் களை அரசுத் தரப்பிலிருந்து பெற்றுத் தருவது, ஈ-சேவை மையம் முதலான பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமான தொழில் என்பது உங்களுக்கு மன நிம்மதியைத் தருவதோடு சம்பாத்யத்தையும் தரும். உத்யோகத்தின் வாயிலாக ஒரு சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்போது தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வாராஹி அம்மனை தரிசித்து யாருக்கும் அஞ்சாமல் உங்கள் பணியைத் தொடருங்கள். வாராஹி அம்மன் வழிபாடு என்பது உங்கள் மகனுக்கு மட்டுமல்லாது குடும்பத்தினர் அனைவருக்கும் அளப்பறிய நன்மையைத் தரும்.