‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்திற்கு வடமேற்கே 20 கி.மீ. தொலைவிலுள்ள மருதூரில் கி.பி. 1823-ல் ராமையா பிள்ளை - சின்னம்மையார் தம்பதிக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தவர். அவர் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோதே சிதம்பரம் நடராஜரை தரிசிக்க அவரது பெற்றோர் சென்றபோது தீட்சிதர் திரையைத் தூக்க சிதம்பர ரகசியம் தரிசனமாயிற்று. அனைவரும் தரிசிக்க, பெருமானாரும் அதனை தரிசித்தார். அனைவருக்கும் ரகசியமாக இருந்த சிதம்பர ரகசியம் பெருமானாருக்கு வெட்ட வெளிச்சமாக புலப்பட்டது! கைக்குழந்தையாக இருந்தபோதே சிதம்பர ரகசியத்தை கண்டறிந்த பெருமானார், தனது நாற்பத்தொன்பதாம் வயதில் உத்தரஞான சிதம்பரமான வடலூர் சத்தியஞானசபையில்
ஏழு திரை நீக்கி ஒளியாக காட்டியருளினார்.
சிறு வயதிலேயே தந்தை இறந்ததால் தாயாருடன் அவரது ஊரான பொன்னேரிக்குச் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தனர். தன் அண்ணன் சபாபதி பிள்ளையிடம் கல்வி பயின்றார் பெருமானார். பின்னர் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்றார். ஆனால், அவரது அறிவுத்தரத்துக்கு ஆசிரியரால் ஈடுகொடுக்க முடியாததால் பெருமானார் கந்தக்கோட்டம் சென்று கவிபாடினார். எந்தப் பள்ளியிலும் பயிலாத பெருமானார் இறைவனிடமே கேட்க வேண்டியவற்றைக் கேட்டார். தம்பியின் போக்கு பிடிக்காததால் அவரை அண்ணன் சபாபதி வெளியேற்றினார். இதனால் சிறுவர்களை சேர்த்துக்கொண்டு கோயில் குளங்களுக்குச் சென்று வந்தார். பின்னர் அண்ணியார் அன்புக்கிணங்கி மீண்டும் வீட்டுக்கு வந்து தனி அறையில் வசித்தார்.
தனது 9ம் வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்றார். 12ம் வயதில் இறைவனால் முறையான அருளியல் வாழ்க்கையை தொடங்கினார். திருவொற்றியூர் சென்று தியாகராஜப் பெருமானையும், வடிவுடை அம்மனையும் வழிபடத் தொடங்கினார். 1850ம் ஆண்டு 25 வயதில் தனது தமக்கை மகள் தனம்மாளை மணமுடித்தார். ஆனால் தாலி கட்டியதோடு சரி, இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அவரது மனமெல்லாம் இறை சிந்தனையிலேயே இருந்தது. 1858ம் ஆண்டு சென்னை வாழ்வை துறந்து தல யாத்திரையாக சிதம்பரம் வந்தடைந்தார். தில்லை அம்பலத்தானை தரிசித்தபின் அங்கு வந்த கருங்குழி மணியக்காரர் வேங்கடரெட்டியார் அவரை கருங்குழிக்கு அழைத்துச் சென்றார். அவரது இல்லத்திலேயே தங்கினார் பெருமானார். அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபட்டு வந்தார். திருமுதுகுன்றம், திருவதிகை, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.கி.பி.1865ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை இந்த இல்லத்தில் ஏற்படுத்தினார். கடவுள் ஒருவரே, அவரை உண்மை என்ற அன்பால் ஒளிவடிவில் (ஜோதி) வழிபட வேண்டுமென்பதும், சிறுதெய்வ வழிபாடு கூடாதென்பதும், அத்தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாதென்பதும், புலால் உண்ணக்கூடாது என்றும் எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ண வேண்டுமென்றும் வலியுறுத்தினார். 1867ல் வடலூரில் தருமச்சாலையை தொடங்கினார். பின்னர் தனிமையை விரும்பி 1870ல் மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகம் என்ற வீட்டில் தங்கினார். 30-1-1874ல் நள்ளிரவு 12 மணிஅளவில் சித்திவளாக திருமாளிகையில் அவர் ஜோதி வடிவானார்.
தொகுப்பு: R.அபிநயா