திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது ஜீயர்புரம். இந்த ஊரில் ஸ்ரீ ரங்கநாதரே எல்லாமும் என்று நினைத்து வாழ்ந்து வந்தாள் ஒரு பாட்டி. மகனைப் பெற்ற மறுமாதமே இளமையிலேயே கணவனை இழந்த அந்த பாட்டிக்கு சொந்தமென்று இருந்தது இருவர்தான். ஒருவர் மகன் வழிப்பேரன் ரங்கன். மற்றொருவர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள். அந்த பாட்டி, தும்மினால் ரங்கா, இருமினால் ரங்கா. உட்கார்ந்தால் ‘ரங்கா’ எழுந்தால் ‘ரங்கா’ என்றே வாழ்ந்துவந்தாள். ஒருநாள் பாட்டியின் பேரன் ரங்கன், பாட்டி, நான் முகம் சவரம் பண்ணிவிட்டு, அப்படியே ஆத்துல போய் குளிச்சிட்டு வாரேன் என்று கூறிக்கொண்டு காலையில் வீட்டை விட்டு சென்றவன் மாலை ஆகியும் வரவில்லை. காலையில் முகம் சவரம் செய்துவிட்டு காவிரியில் இறங்கி குளித்தபோது அவனை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்றது. பொழுது புலர்ந்து போன பேரன், பொழுது சாய்ந்தும் திரும்பாததால் பேரனை எண்ணி கவலைப்பட்டாள் பாட்டி. ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள்.
போன பேரன் மீண்டும் வருவானா? இல்லையேல் மாண்டு போனானா என அச்சத்தோடு ஸ்ரீ ரங்க நாதனை நினைத்து உள்ளம் உருகினாள். அதே வேளையில் காவிரி ஆற்றில் வெள்ளத்தால் இழுத்துச் சென்ற ரங்கன், ஸ்ரீ ரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீ ரங்கப்பெருமானை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளே என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பேரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார். பக்தரை காக்கும் பரந்தாமன் பாட்டியின் துயர் துடைக்க எண்ணினார்? பேரனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லை, அவன் ஸ்ரீ ரங்கத்தில் இருக்கிறான்.
நாளை வருவான் என்பதை எப்படி பாட்டிக்கு தெரிவிப்பது என்று நினைத்த ஸ்ரீ ரங்கநாதர், பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகச்சவரம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பேரன் ரங்கனாகவே வந்தார் ஸ்ரீ ரங்க நாதப்பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்து வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். பசியோடு இருக்கும் பேரனுக்கு மோர் ஊற்றி பழைய சோறும், மாவடுவும் கொடுத்து சாப்பிட சொன்னாள். பேரன் உருவில் வந்த ஸ்ரீ ரங்க நாதப்பெருமாளும் அதை உண்டார்.பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் பாட்டியின் பேரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே அவ்விடம் விட்டு மறைந்தார். பாட்டியும் பேரனும், ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி வியந்து வணங்கினார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ஸ்ரீ ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் இந்த வைபவம் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. அன்றைய நாள் ஸ்ரீ ரங்கநாத பெருமாள், ஸ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி நடைபெறுகிறது. அந்த விழாவில் சவரம் செய்யும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு சவரம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பிறகு முகம் அந்த சவரத் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது.