மகாவிஷ்ணு தான் தோன்றியருளிய எட்டு திருக்கோயில்களில் பெரும்புகழ்பெற்ற முதன்மைக் கோயில் ஸ்ரீ ரங்கம் ஆகும். ஸ்ரீ பிரம்மனின் கடுந்தவத்தின் பயனால் ஸ்ரீ மகாவிஷ்ணு அருளால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்துவந்தார். ஸ்ரீ ரங்க விமானம் (சயன கோல ரங்கநாதர் விக்ரஹம் உள்ளடங்கியது) விமானத்தினுள் ஸ்ரீ வைகுண்டமே அடங்கியிருந்தது. பலகாலம் பூஜித்த பிரம்மா, ஸ்ரீ ரங்க விமானத்தை இந்திரனுக்கு வழங்கினார். இந்திரனும் பலகாலம் பூஜித்து அதை சூரியதேவனுக்கு வழங்கினார். சூரிய தேவனும் பலகாலம் பூஜித்து சூரிய குலமான இஷ்வாகு மன்னனுக்கு அளித்தார்.
இஷ்வாகு மன்னனும் அவரது குலத்தோன்றல்களும், இவ்விமானத்தை பூஜித்து வந்தனர். இக்குலத்தில் தோன்றிய தசரத மன்னனின் புதல்வனான ஸ்ரீ ராமபிரானும் பூஜித்து வந்தார். ராவணனின் வதம் முடிந்த பிறகு அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமபிரானின் பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்த, ஸ்ரீ விபீஷ்ணனுக்கு இவ்விமானத்தை பரிசாக அளித்து பூஜிக்க கூறினார் ஸ்ரீ ராமர். விபீஷ்ணனும் மிக்க மகிழ்ச்சியோடு இவ்விமானத்தை தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையில் சந்திர புஷ்கரணிக்கருகில் வந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்கக்கூடாது என்று எண்ணினான். அங்கே ஒரு இடைக்குலச் சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்துவிட்டு கீழே வைக்கக்
கூடாது என்று சொல்லிவிட்டு விபீஷ்ணன் மாலைவேளை சந்தி கடன்களை செய்ய சென்றார். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்துவிட்டான், பின்னர் விபீஷ்ணன் மீண்டும் புறப்பட தயாராகியபோது, சிறுவன் சிலையை கீழே வைத்ததைக் கண்டு, தம்பி, நீ என்ன காரியம் செய்தாய் என்று கூறி விபீஷ்ணன் சிலையை எடுத்தார். எடுக்க முடியவில்லை. அப்போது சிறுவனாக வந்தது. சிலையை கீழே வைத்தது நான்தான் எனக்கூறி விட்டு தனது ரூபத்தை காட்டிய விநாயக பெருமான் அவ்விடம் விட்டு அகன்றார். விபீஷ்ணன் மீண்டும் வந்து விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்ல தூக்க முயன்ற போது, அவரால் அசைக்க முடியவில்லை. விபீஷ்ணன் மிகவும் மனம் வருந்தி ஸ்ரீரங்கநாதரை வேண்டினார்.ரங்கநாதரோ அசரீரியாக ‘‘யாம் காவேரி கரையிலேயே தங்க விரும்புவதாக கூறினார். யாம் எப்போதும் உனது இலங்கை நோக்கியே காட்சி தருவோம்’’ என்று கூறினார். அதன்படியே அன்றிலிருந்து ஸ்ரீரங்கநாதர் தெற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார். அப்போது சோழ நாட்டை ஆண்டு வந்த தர்மவர்மசோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோயில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழமன்னர் ஒருவர் மணலால் மூடிய கோயிலை ஒரு கிளியின் உதவியுடன் கண்டுபிடித்ததால் கிளிசோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார். அக்கோயிலை புனரமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோயிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோயிலாக உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் இக்கோயில் “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படுகிறது. லட்சுமி தேவி தினமும் வந்து பூஜிக்கும் ஸ்தலமாகும். கவிசக்கரவர்த்தி கம்பர், ராமாயணத்தை இத்தலத்தில்தான் அரங்கேற்றினார் (தாயார் சந்நதிக்கு அருகில்). இக்கோயில் வளாகத்தின் பரப்பளவு 156 ஏக்கர் ஆகும். இதில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. இந்தத் திருக்கோயில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரட்டை ஆறுகள் சுற்றியமைந்த தீவில் அமைந்திருக்கிறது.
தொகுப்பு: சு.இளம் கலைமாறன்