படைத்தவனையே வணங்குவோம்! : அனைவருக்கும் இதயம் நிறைந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்...!

‘பக்ரீத்’ என்று பொதுவாக அழைக்கப்படும் தியாகத் திருநாள் பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது? மாபெரும் இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவுகூர்ந்து அவர் அடிச்சுவட்டில் நம் வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே. இறைத்தூதர் இப்ராஹீம் அவர்கள் செய்த தியாகங்கள் என்ன? ஒன்றா இரண்டா சொல்வதற்கு? இறைவனுக்காகவே முழுமையாக அர்ப்பணித்துவிட்ட வாழ்க்கை அவருடையது. இப்ராஹீமின் தந்தை ஆஸர் ராஜகுருவாகவும் தலைமைப் பூசாரியாகவும் இருந்தார். காணிக்கைகள் வந்து குவிந்தன. வசதி வாய்ப்புகளுக்கும் செல்வத்திற்கும் வீட்டில் பஞ்சமே இல்லை. இப்ராஹீம் நினைத்திருந்தால் தந்தையின் வழியைப் பின்பற்றி ஓர் இளவரசரைப் போல் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவருடைய மனம் சத்தியத்தைத் தேடியது. தம் தந்தை தம் கைகளாலேயே உருவாக்கும் சிலைகளும் படங்களும் ஒருபோதும் கடவுளாய் இருக்கமுடியாது என்று அவருடைய  உள்மனம் கூறியது. படைப்புகளை உற்றுநோக்கத் தொடங்கினார். சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எல்லாம் கடவுளாக இருக்கமுடியுமா என்று யோசித்தார். தீவிர ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டார். இறுதியாக வெளிப்படையாக அறிவித்தார்.

“வானங்களையும் பூமியையும் எந்த இறைவன் படைத்துள்ளானோ அந்த மகத்தான ஏக இறைவனின் பக்கம் நான் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் இணைவைப்பவர்களில் ஒருவனல்லன்.”

எந்த வினாடி இதை வெளிப்படையாக அறிவித்தாரோ அந்த வினாடியிலிருந்து தொடங்கின சோதனைகள். ராஜகுருவான தந்தை வெகுண்டெழுந்தார்.“என் வழிக்கு வருகிறாயா? இல்லை கல்லால் அடித்துக் கொல்லட்டுமா?” என்று ஆவேசத்துடன் கேட்டார் தந்தை.இது முதல் சோதனை. ஒரு புறம் பெற்றெடுத்த தந்தை, மறுபுறம் தம்முடைய ஏக இறைக்கொள்கை. தந்தையா? இறைவனா? இப்ராஹீம் தீர்மானித்துவிட்டார். தந்தைக்கு அமைதியாக ஸலாம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். தாம் உணர்ந்த ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். சமுதாயம் கொந்தளித்து எழுந்தது. அந்நாட்டு மன்னன் நம்ரூத்

ஆத்திரத்துடன் ஆர்த்தெழுந்தான்.

“யார் அந்த இப்ராஹீம்?

கடவுளாக நான் இங்கே வீற்றிருக்க, வேறு ஓர் இறைவனை வணங்கும்படி அவர் எப்படி மக்களிடம் போதிக்கலாம்? இழுத்து வாருங்கள் அவரை.” அரச கட்டளை பிறந்தது. இப்ராஹீம் இழுத்து வரப்பட்டார். மன்னரைத் தெய்வம் என்று ஏற்க மறுத்துவிட்டார். “மனிதனாகிய உன்னை வழிபடமுடியாது” என்று உறுதிபட மறுத்தார். மன்னன் நம்ரூத் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். சபை கூடியது. மாபெரும் நெருப்புக் குண்டத்தை மூட்டி அதில் இப்ராஹீமை வீசுவது என்று முடிவாயிற்று. நெருப்புக் குண்டமும் தயார். கடுமையான சோதனை. கலங்கவில்லை இப்ராஹீம். நெருப்புக் குண்டத்தில் தூக்கிவீசப்பட்டார். இறையருளால் காப்பாற்றப்பட்டார். பிறகு நாட்டைவிட்டு வெளியேறினார். நாடு நகரங்கள் எல்லாம் சுற்றி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையைப் போதித்து வந்தார். இதற்கிடையில் திருமணம் முடிந்தது. ஆனால் இப்ராஹீமுக்குக் குழந்தை இல்லை. குழந்தைப் பேறுக்காக இறைவனிடம் இறைஞ்சிய

படியே இருந்தார். இறைப்பணியில் காலங்கள் ஓடின.முதிய வயதில் இப்ராஹீமுக்கு ஒரு குழந்தை பிறந்தது. ‘இஸ்மாயீல்’ என்று பெயரிட்டு உயிருக்கு உயிராக வளர்த்தார். குழந்தை ஓடி ஆடும் பருவத்தை அடைந்த நிலையில்தான் அந்த மகத்தான சோதனை ஏற்பட்டது. தம் அருமை மகனை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது போல் கனவு கண்டார். வெறும் கனவுதானே என்று அவர் அலட்சியப்படுத்தவில்லை. மகனை இறைவனுக்காக பலியிடவும் துணிந்தார். கழுத்தில் கத்தியை வைக்கும் போது இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்டார்.

“இப்ராஹீமே..மகனைப் பலியிடவேண்டாம். உன்னுடைய இறைப்பற்றை, உன்னுடைய அர்ப்பணிக்கும் உணர்வை உலகிற்கு உணர்த்தவே நாம் சோதித்தோம். நம் சோதனைகள் அனைத்திலும் நீ வெற்றிபெற்றுவிட்டாய். இதோ, நிற்கிறது சுவனத்து ஆடு. அதைப் பலியிடு. இன்றுமுதல் உலக மக்கள் அனைவருக்கும் உன்னைத் தலைவராக்கியிருக்கிறோம். ”அசரீரி முழங்கியது. இறையருளால் உயிர் பிழைத்த மகன் இஸ்மாயீலையும் மனைவி ஹாஜிராவையும் அழைத்துக்கொண்டு மக்கா நகர் வந்தார். கஅபா எனும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார். அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அதுதான் ஹஜ் எனப்படுகிறது.

ஹஜ் வழிபாட்டுக் கிரியைகள் அனைத்தும் இப்ராஹீம் அவர்களின் தியாக வாழ்வை நினைவுகூரும் வகையிலேயே அமைந்துள்ளன. அந்த மாபெரும் இறைத்தூதரின் தியாக வாழ்வை அறிந்துகொள்வோம். நாமும் நம் வாழ்வை இறைவனுக்காகவே அர்ப்பணிப்போம்.

அனைவருக்கும் இதயம் நிறைந்த தியாகத் திருநாள்

நல்வாழ்த்துகள்...!

- சிராஜுல்ஹஸன்

Related Stories: