திருப்புகழில் தேவாரம்

திருவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள்மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ்பாடும்  அருளினைப்பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ்பாடி முருக பக்தியினை பரவச் செய்தார். பழநிக்குச்சென்று முருகன்மீது  திருப்புகழ்பாடி முருகப் பெருமான் திருக்கரங்களால் உத்திராட்சை மாலையைப் பெற்றார். திருச்செந்தூர் சென்று முருகனைப்பாடி திருநடனக் காட்சியை  கண்டு இன்பமுற்றார், சுவாமி மலைக்குச் சென்று பாததரிசனம் பெற்றார்! இப்படி பல திருத்தலங்களுக்குச்சென்று திருப்புகழினைப்பாடி  முருகப்பெருமானுடைய அருளைப்பெற்றார். சுவாமிகள் வெள்ளங்கிரி மலைக்குச்சென்று பலநூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்து சைவசமயத்தை நிலை  நாட்டி திருக்கைலாயம் சென்று திருஞானசம்பந்தரை நினைத்து அவரைப்போல் நாமும் அமிர்தகவி பாடவேண்டும் என நினைத்து முருகப்பெருமான்  திருவருளால் கீழ்கண்ட திருப்புகழை பாடினார்.
Advertising
Advertising

             

புமியதனிற் ......ப்ரபுவான

புகலியில்வித் ...... தகர்போல

அமிர்தகவித் ...... தொடைபாட

அடிமைதனக் ...... கருள்வாயே

சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்

தனியயில்விட் ...... டருள்வோனே

நமசிவயப் ...... பொருளானே

ரசதகிரிப் ...... பெருமாளே.

புமியதனிற் பிரபு : பூமி என்பது புமி எனக் குறுகி நின்றது. பூவுலகிற்கு ஸ்ரீஞானசம்பந்தரே தலைவர். அவரே பெருந்தலைவர். பெருந்தலைவர்  என்பதற்கு அடையாளம் சிவிகை, சின்னம், விருது இவை இருத்தல் வேண்டும் ஏனைய தலைவர்கள் இவற்றைத் தாமே தயார் செய்து கொள்வார்கள்.  நம் சம்பந்தத் தலைவருக்குச் சிவபெருமானே முத்துச்சிவிகை சின்னம் முதலியவற்றை தந்தருளினார்.

புகலி : புகலி என்பது சீர்காழிக்குரிய பன்னிரண்டு பேர்களில் ஒன்று. ‘ஊழிபெயரினும் உலகம் அழியினும் அழியாத அத்தோணி புரமே தங்கட்குத்  தஞ்சமாகத் தேவரும் மற்று யாவரும் புகுவதால் அப்பகுதிக்கு புகலி’ என்ற திருப்பெயர் உண்டாயிற்று.

வித்தகர் : ஞானம், ஞானமுடையோர் வித்தகர்

அமிர்தகவி : திருஞானசம்பந்தருடைய தேவாரம் அமிர்தகவி. அமிர்தம் இறப்பை நீக்கும் சம்பந்தமூர்த்தியின் தேவாரமும் இறப்பை நீக்கும் என்றார்,  அருணகிரி சுவாமிகள்.

சான்று பின்வருமாறு காண்க :

திருஞானசம்பந்தப் பெருமான் திருருமருகலை அடைந்து இறைவனை வணங்கி அங்கிருக்கும் நாளில் ஒருவணிகன் வழிப்போக்கனாய் ஒரு கன்னியை  அழைத்துக்கொண்டு கோயிலின் அருகாமையிலுள்ள ஒரு மடத்தில் தங்கினான். இரவில் கண்துயிலும்போது அந்த வணிகனை பாம்பு தீண்டி இறந்தான்.  அக்கன்னி அவனை பாம்பு தீண்டியுந் தான் தீண்டாமலிருந்து வருந்தி புரண்டு அழுதால், பற்பலமுயற்சிகள் செய்தும் அவன் பிழைத்தானில்லை,  அதனைக் கண்ட அப்பெண் பெரிதும் வருந்தி விடியற்காலையில் அழுது புரண்டு அன்னையையும் அத்தனையும் விட்டுப்பிரிந்து உன்னைத்  துணைபற்றித் தொடர்ந்து வந்தேன் நீ பாம்பின் வாய்பட்டு மாண்டனை, என்னை தனியளாக்கிச் சென்றனை என் துன்பத்தை அகற்றி என்னை காக்க  வல்லார் யாவர், என் துன்பத் தீயை அணைக்கும் கருணை மேகத்தை எங்கு சென்று தேடுவேன். வணிககுல மாமணியே! யாம் இறந்து உன்னுடன்  வருவேன் என்று வாய் விட்டுப் புலம்பி திருக்கோயிலுக்குச் சென்று ஆலமுண்ட நீலகண்ட நின்மலனே! மாலயன் காணாத மணிவிளக்கே இரதிதேவி  வேண்ட உய்வித்து உதவிய கருணைக் குன்றமே இந்தக் கொடுமை நீங்குமாறும், ஏழையேன் உய்யுமாறும் இன்னருள் புரிவாய் மருகற் பெருமானே!  என்று கூவி முறையிட்டாள். இத்துதி சம்பந்தர் திருச்செவியில் விழுந்தது. அக்கருணைக் கடலின் உள்ளம் உருகியது ஒடினார், அந்தப் பெண்மணியை  கண்டார். அம்மா! அஞ்சாதே நின்துயரை அடியேன் இறைவன் கருணையால் போக்குவேன் எனக்கூறி கீழ்வரும் தேவாரப்பாடலை பாடினார்.

சடையா யெனுமால் சரணீயெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவளுண் மெலிவே

                                (தேவாரம்)

என்ற அமிர்தகவித் தொடையைப் பாடி முடித்தார். உடனே, வணிகன் உயிர் பெற்றெழுந்தான். எழுந்து சம்பந்தபெருமான் சரணமலரில் விழுந்தான்.  அம்மடமங்கையும் விழுந்தாள் இருவரும் இன்பக்கடில் ஆழ்ந்தனர். புகலியில் வித்தகர்போலே அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே  என்றதன் குறிப்பு ஞானசம்பந்தர் பதினாறாயிரம் பதிகம் பாடி யருளினார் அதுபோல தாமும் பதினாராயிரம் திருப்புகழ் பாடுவது மட்டுமல்லாது  அவையாவும் மரணமில்லா பெருவாழ்வு வாழக்கூடிய அமிர்தகவியாக இருத்தல்வேண்டுமென முருகப்பெருமானை வேண்டினார். தேவாரம் அமிர்தகவி யானார்போல் திருப்புகழும் அமிர்தகரியாயிற்று.

எம் அருணகிரிநாதன் ஓதும்

பதினாறாயிரந் திருப்புகழுமுதமே

(வரகவி மார்கத் சகாயதேவர்)

சமரிலெதிர்த்தகர் மாள : சமரில் எதிர்த சுர்மாள எனப் பதம் பிரிக்க சூர் என்றது சுர் எனக் குறுகி நின்றது. சூர் சூரபன்மன்

(சூர்மா மடியத் தொடு வேலவனே)

அநுபூதி

நமசிவய : உயிரைத் திரோத சக்தியால் மலத்தைக் கெடுத்து அருளைக் கொடுத்து சிவம் தன்னோடு அத்துவிதமாக்கிக் கொள்ளும் என்பது  அம்மந்திரத்தின் திரண்ட கருத்து.

ரசதகிரி : அருணகிரிநாத சுவாமிகள் வெள்ளி மலையில் சம்பந்தருடைய கவித்திறனை முருகப் பெருமான் எதிரிலே பாடி அவர்பாடியதைப்போல்  எனக்கும் அமிர்தகவி தொடைபாட அருள்கொடு என்று வேண்டுகிறார்.

வாழ்க திருப்புகழ் ! வளர்க தமிழ் !

திருப்புகழ்ச் செல்வர் முருகனடிமை

டாக்டர். எஸ். வைத்தியநாதசுவாமி ஜோதிடர்

Related Stories: