ராமபிரான் பூலோகத்தில் அவதரித்த நாளான ராம நவமி-யின் வரலாறு

ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளைதான் ராம நவமி என்று நாம் எல்லோரும் கொண்டாடுகின்றோம். அயோத்தியை ஆண்ட மன்னர் தான் தசரத சக்கரவர்த்தி. இந்த மன்னருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் வெற்றிக் கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. என்ன செய்வது? ராஜாக்களின் ஆட்சிக்காலத்தில் அவரவர் ராஜ்யத்திற்கு என்று ஒரு குலகுரு இருப்பார்கள். தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்றார் தசரத சக்கரவர்த்தி.

Advertising
Advertising

முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ யாகத்தை நடத்த முடிவு செய்தார் மன்னர். யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயாசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார்.

அந்தக் குடுவையில் இருக்கும் பாயாசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் வைத்தார் யக்னேஸ்வரர். மனைவிகளும் பாயாசத்தை அருந்தினார்கள். அதன்பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தார்கள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.

ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தார். ராம பானத்திற்கு இணை வேறு எது!

மிதிலை அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரரின்வில் உடைந்தது. சீதையை மணம் முடித்துக் கொண்டார் ராமர். கூனியின் சூழ்ச்சியால், கைகேயி பெற்ற வரத்தால் வனவாசம் சென்றார் ராமர். வனவாசம் சென்ற இடத்தில், ராவணன் என்ற அரக்கனால் சிறைபிடிக்கப்பட்டாள் தேவி சீதை.

சீதையைத் தேடிச் சென்ற வழியில் சுக்ரீவருக்காக, வாலியை வதம் செய்தார் ராமர். அதன்பின்பு அனுமனின் உதவியோடு கடல் மார்க்கமாக பாலம் அமைத்து, இலங்கை சென்று, ராவணனிடம் போர்தொடுத்து, வென்று, சீதையை மீட்டு, நாடு திரும்பி, அதன்பின்பு ஆட்சி அமைத்தார் ராமபிரான். வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர் ராமபிரான். ராமரின் தேஜஸை பற்றியும் அழகைப் பற்றியும் நம் வாய்மொழியால் சொல்லிவிட முடியாது அவ்வளவு அழகான தோற்றம் கொண்டவர் தான் ராமபிரான். இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான்.

ராமர் பூமியில் அவதரித்த நேரத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்ததால், ராமரின் ஜாதகத்தை எழுதி நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்தால், நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களால் நமக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறையும் என்றும், வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம் என்றும் நம் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோய்கள் கூட தீரும் என்பதும், ஐஸ்வரியத்தோடு வாழலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரி. ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா? பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் வருத்தப்பட்டு மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள்.

‘நவமி திதி அன்றும், அஷ்டமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முன்வர பயப்படுகிறார்கள். எங்கள் இருவரையும் ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது’.(அஷ்டமி நவமி திதியில் பொதுவாக எந்த ஒரு நல்ல காரியத்தையும் துவங்க மாட்டார்கள் அல்லவா?) என்றபடி தங்களது கஷ்டத்தை விஷ்ணு பகவானிடம் 2 திதிகளும் முறையிட்டுள்ளது.’ கஷ்டத்தோடு வந்த அஷ்டமி, நவமி க்கும் விஷ்ணுபகவான் ஆறுதல் அளித்தார். ‘உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும். அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்றவாறு கூறினார்.’ இதன் படியே அஷ்டமி திதி அன்று எம்பெருமான், கிருஷ்ணர் அவதாரத்தையும், நவமி திதி அன்று ராமர் அவதாரத்தையும் எடுத்தார். இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியும், ராம நவமியும், அஷ்டமி திதியில் நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம் என்பதுதான் உண்மை.

Related Stories: