×

பாதுகாவலனாய் வருவார் பாடிகாட் முனீஸ்வரர்

தமிழகத்தின் காவல் தெய்வங்களில் ஈஸ்வரன் பட்டத்தோடு இருப்பவர் முனீஸ்வரர். அந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் பயத்தை போக்கும் சக்தியும், தீமைகளை அகற்றும் ஆற்றலும் படைத்த, முனி, முனியாண்டி, முனியன், முனியப்பர் என பல பெயர்களாலும் அழைத்து வழிபடுவர் முனீஸ்வரர் ஆவார்.தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களின் எல்லைத்தெய்வமாக முனீஸ்வரர் உள்ளார். சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குபவர் பாடிகாட் முனீஸ்வரர் ஆவார்.1860ம் ஆண்டு தமிழகத்தில் சென்னையில் தற்போதைய தலைமை செயலக இடத்தில், கோட்டை சாமியாக அருட்பாலித்து வந்தார் பாடிகாட் முனீஸ்வரர்.வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் குல தெய்வமான முனீஸ்வரர் சிலையை தங்களுடன் கொண்டுவந்து இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளனர். அதன்பின் சில காரணங்களால் 85 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவன் பணிமனையின் முன்பக்கம் சென்ட்ரல் ரயில்நிலையத்தின் எதிரில் உள்ள பாலத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

அந்த காலகட்டத்தில், பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு ‘பாடி கட்டும்’ வேலைகள் நடந்தன. அதே போல், ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்து வந்தது. இரண்டு இயந்திர வாகனங்களுக்கும், பாடி கட்டும் இடத்தில் இருந்ததால் இந்த முனீஸ்வரன், பாடிகாட் முனீஸ்வரன் என்ற பெயருடன் வணங்கப்பட்டு வருகிறார்.முனீஸ்வரர்களில் பாண்டி முனீஸ்வரர் தென் மாவட்டங்களிலும் பால்முனி மேற்கு மாவட்டங்களிலும் காவல் தெய்வமாக உள்ளனர்.வாகனங்களில் செல்லும்போது வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பாக இருப்பவர் என்பதால் இப்போதைய தலைமுறையினர் இவரை வழிபடும் தெய்வமாக மட்டுமல்ல, தம்மை அனுதினமும் பாதுகாக்கும் பாதுகாவலர் என்பதால் பாடி கார்டாக அவரை கருதி, பாடிகாட் முனீஸ்வரன் என்று பெயர்க்காரணத்தை எடுத்துக் கூறுகின்றனர். சென்னையில், புது வாகனம் வாங்கியோர், ஆர்.டி.ஓ., அலுவலகம் போவதற்கு முன்பாக, சென்னை, பல்லவன் இல்லத்தின் அருகில் உள்ள, பாடிகாட் முனீஸ்வரன் கோயிலுக்குச் செல்கிறார்கள்.
புது வாகனம் வாங்கிய பின், இங்கு பூஜை செய்தால், வாகனம் தம்மிடம் நிலையாக இருக்கும் என்றும், இந்த வாகனத்தில் பயணித்தால்
விபத்துகள்  ஏற்படாது என்றும் சென்னை வாசிகளின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த பாடிகாட் முனீஸ்வரரை குலதெய்வமாக வழிபடும் நபர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துவதும், நம்பிக்கை வெற்றி பெற்றதும் முனீஸ்வரருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பொங்கல் வைத்து வழிபடுதும் உண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளின் முதல் அழைப்பிதழை முனீஸ்வரர் பாதத்தில் வைத்து பூஜித்த பின்னரே மற்றவர்களுக்கு கொடுக்கின்றனர். அந்தளவு நம்புவர்களுக்கு நலனை வழங்குகிறார் பாடிகாட் முனீஸ்வரர்.பூஜையின் போது வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, சுருட்டு இவருக்கு உகந்ததாகும். ஒருசிலர் வேண்டுதல்களுக்கு ஏற்ப மதுபானங்களும் படைத்து வணங்குகின்றனர். வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி, பூமுனி போன்ற ஐந்து முனிகளை பஞ்ச முனி என்கிறார்கள். இவர்கள் பச்சையம்மனுக்கு துணையாக இருந்தவர்கள். வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, ஜடாமுனி, பாலக்காட்டு முனி, வேதமுனி, இலாடமுனி ஆகிய ஏழு முனிகளையும் வணங்குகின்றனர்.

சென்னையில் பிரபலமாக உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயில், பல்லவன் சாலையில், ராணுவ வீரர்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது.  முனீஸ்வரர், சிவபெருமானின் வடிவமாவார். வீரமும், ஆவேசமும் நிறைந்த தெய்வமான இவர் அந்தகாசுரனை அழித்தவராகக் கருதப்படுகிறார்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்
சு.இளம் கலைமாறன்

Tags : bodyguard ,Badikat Muniswara ,
× RELATED நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதி