ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற ஐராவதேஸ்வரர் கோயில்.  மூலவர் ஐராவதேஸ்வரர். தாயார்  வேத நாயகி. சிற்பங்கள் நிறைந்த இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

கோயில் வரலாறு    

இந்திரனின் பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது.  துர்வாச மாமுனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர். அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம்‘ பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டு யானையாக அலைய வேண்டி வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை  வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்பட்டார்.

இதேபோல் எமன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டதாக வரலாறு கூறுகிறது.

இக்கோயிலை இரண்டாம் ராஜராஜன் எடுப்பித்த காரணத்தால் ராசராசேச்சுரம் என்றும் தாரன் என்பவன் வழிபட்டதால் தாராசுரம் என்றும், ஐராவதம் என்னும் வெள்ளை யானை வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலமாதலால்  ஐராவதேச்சுரம் என்றும் பெயர் பெற்று விளங்குகிறது. இந்திய சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாகத் தாராசுரம் திகழ்கிறது. கோயிலின் கட்டுமானமும், கம்பீரமும் இன்னமும் இரண்டாம் ராஜராஜ சோழச் சக்கரவர்த்தியின் ராஜகலையை பிரதிபலிக்கிறது.  தாராசுரம் கோயிலின் உள்ளே நுழைந்ததும் ராஜ கம்பீரன் திருமண்டபம் உள்ளது.

இங்குள்ள தூண்களில் அதிஉன்னதமான,  கலை நயமிக்க சிற்பங்கள் உள்ளது. இம்மண்டபம் குதிரைகள் பூட்டிய சக்கரமுள்ள தேர் போன்ற அமைப்பைக் கொண்டதாகும். இம்மண்டபத்தில் பதினாறு கல் தூண்கள் இருக்கின்றன. அனைத்தும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மிக அழகாகத் திகழ்கின்றன. இக்கோயிலில் தாராசுரம் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், சரபமூர்த்தி, நரசிங்கமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேசுவரர், கண்ணகி, நர்த்தன விநாயகர் சுவாமி சன்னதிகள் உள்ளன. பவுர்ணமி, பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி பெருவிழா விமர்சையாக நடைபெறும். ஐராவதேஸ்வரரை வணங்கினால் சாபம் விமோசனம் கிடைக்கும், சகல ஐஸ்வர்யங்களும் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

Related Stories:

>