சென்னை: மாஸ் ரவி, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, ஆதித்யா கதிர், ‘கல்லூரி’ வினோத், ஆறு பாலா, தங்கதுரை, பிரியதர்ஷினி ராஜ்குமார், சந்தீப் குமார், ‘கபாலி’ விஷ்வந்த், மஞ்சுளா, மொசக்குட்டி, மிப்பு, மேனக்ஷா, பத்மன், சத்யா, பிரியங்கா நடித்துள்ள படம், ‘காத்துவாக்குல ஒரு காதல்’. சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.எழில் இனியன், ச.ராசாத்தி எழில் இனியன் இணைந்து தயாரித்துள்ளனர். மாஸ் ரவி எழுதி இயக்கியுள்ளார். சுபாஷ் மணியன், ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
ஜீ.கே.வி, மிக்கின் அருள்தேவ் இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் நிகழ்ச்சியில் ஆ.ராசா எம்.பி பங்கேற்றார். அப்போது படம் குறித்து மாஸ் ரவி கூறுகையில், ‘இப்படத்தின் தயாரிப்பாளர் எழில் இனியன், சினிமாவை மிகவும் நேசித்துவருபவர். என்னை கீழே தள்ளிவிட ஆயிரம் பேர் இருந்தாலும், மேலே தூக்கிவிட வந்தவர் அவர். கடந்த 15 வருடங்களாக பயணிக்கக்கூடிய எனது குரு, இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவுக்கு நன்றி. ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன், என்னை தனது மகன் போல் அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். வடசென்னை பின்னணியில் காதலைப் பற்றி புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகியுள்ள இது விரைவில் வருகிறது’ என்றார்.