பொழுது கண்டிரங்கல்...

குறளின் குரல்-118

வள்ளுவர் இன்பத்துப் பாலில் தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரால் வருந்துவதாக ‘பொழுது கண்டிரங்கல்’ என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.  சம்ஸ்க்ருத இலக்கியம் பிரிவுத் துயரை ‘விப்ரலம்பம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. பிரிவுத் துயரத்தைப் பற்றி எல்லா மொழி இலக்கியங்களும்  பேசுகின்றன. வள்ளுவர் பிரிவுத் துயரைச் சித்திரிக்கும் ‘பொழுது கண்டிரங்கல்’ என்ற அதிகாரத்தில் சொல்லும் ‘பொழுது’, மாலைப் பொழுது. (அதாவது  மாலை ஆறு மணிமுதல் பத்து மணிவரையுள்ள காலம்.) தலைவனைப் பற்றிய நினைவுகள் தலைவியை வாட்டுவதால், அவள் பத்துக் குறட்பாக்களில் தன் மன  வேதனையைத் தெரிவிக்கிறாள். இந்த அதிகாரத்தின் சிறப்பு இதில் உள்ள பத்துக் குறள்களிலும் ‘மாலை’ என்ற பொழுதைக் குறிக்கும் சொல்  இடம்பெறுவதுதான்.

‘மாலைபோல் அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலை நீ வாழி பொழுது’

(குறள் எண் - 1221)

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல. காதலரோடு கூடி வாழ்ந்து பிறகு இப்போது பிரிந்து வாழும் மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக்காலமாக நீ இருக்கிறாய்!

‘புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை’

(குறள் எண் - 1222)

மயங்கிய மாலைப் பொழுதே! என்னைப் போலவே நீயும் துன்பப்படுகிறாயே? உன் துணையும் என் தலைவர் போல் இரக்கமில்லாததா?

‘பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனி அரும்பித்துன்பம் வளர வரும்.’

(குறள் எண் - 1223)

பனிதோன்றிப் பசந்த நிறம் கொண்ட இந்த மாலைப் பொழுது எனது துன்பம் மேலும் மேலும் வளரும்படியாக நாள்தோறும் வருகின்றதே!

‘காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

ஏதிலர் போல வரும்.’

(குறள் எண் - 1224)

அவர் என்னுடன் இருக்கும்போதெல்லாம் என் உயிர் வளரும் வகையில் வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்திருக்கும் நேரத்தில் கொலை  செய்யும் இடத்தில் பகைவர் வருவதுபோல கருணையில்லாமல் வருகிறது.

‘காலைக்குச் செய்த நன்றென்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை.’

(குறள் எண் - 1225)

நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? என்னைத் துன்புறுத்துகின்ற இந்த மாலைப் பொழுதிற்குச் செய்த தீமைதான் என்ன?

‘மாலை நோய் செய்தல் மணந்தார்

அகலாத காலை அறிந்த திலேன்.’

(குறள் எண் - 1226)

என்னை மணந்த காதலர் என்னை விட்டுப் பிரிவதற்கு முன்பாக மாலைப் பொழுது இத்தனை துன்பம் தரக் கூடியது என்று நான் அறிந்ததுகூட இல்லை.

‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும் இந்நோய்.’

(குறள் எண் - 1227)

காதல் துன்பமாகிய இந்தப் பூ காலையில் அரும்புகிறது. பகலில் முதிர்கிறது. மாலைப் பொழுதில் இது முழுமையாக மலர்ந்து விடுகிறது.

‘அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை.’

(குறள் எண் - 1228)

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்குத் தூதானது மட்டுமன்றி என்னைக் கொல்லும் ஆயுதமாகவும்  ஆகிவிட்டது.

‘பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு

மாலை படர்தரும் போழ்து.’

(குறள் எண் - 1229)

அறிவு மயங்கும்படியாக மாலைப் பொழுது வந்து படரும்போது இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

‘பொருள் மாலையாளரை உள்ளி மருள்மாலை

மாயும் என் மாயா உயிர்.’

(குறள் எண் - 1230)

பிரிவைத் தாங்கிக் கொண்டு இதுவரை இறவாமல் இருந்த என் உயிர், பொருள் தேடுதலையே இயல்பாக உடைய துணைவரை நினைத்து இந்த மயங்கும் மாலைப்  பொழுதில் அழிகின்றது.....

*முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனத் தமிழிலக்கணம்

பழைய செய்யுள்களில் தென்படும் மூன்று தன்மைகளைப் பகுத்துச் சொல்லி அவை பற்றிப் பேசுகிறது. இந்த மூன்றில் முதற்பொருள் என்பது நிலத்தையும்   காலத்தையும் குறிக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பன ஐவகை நிலங்கள். மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி என்றும், காடும்  காடுசார்ந்த நிலமும் முல்லை என்றும், வயலும் வயல்சார்ந்த நிலமும் மருதம் என்றும், கடலும் கடல்சார்ந்த நிலமும் நெய்தல் என்றும் மணலும் மணல்சார்ந்த  நிலமும் பாலை என்றும் சொல்லப்பட்டன.

முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் வறட்சி அடையும்போது திரிந்து பாலை நிலமாக மாறும் எனவும் சொல்கிறது தொல்காப்பியம். இந்த ஐவகை நிலங்களில்  வாழும் மக்களின் வாழ்வைப் பாடும்போது எந்தெந்தக் காலம் சார்ந்து பாட வேண்டும் எனவும் இலக்கணம் தெரிவிக்கிறது. காலத்தைச் சிறுபொழுது என்றும் பெரும்  பொழுது என்றும் இரண்டு பிரிவுகளாகப் பகுத்தார்கள். பெரும்பொழுது என்பது ஆண்டின் கூறுபாடு. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என  அது அறுவகைப்படும்.

சிறுபொழுது என்பது ஒரு நாளின் கூறுபாடு. மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு (பிற்பகல்) என அதுவும் ஆறு வகையாகப் பகுக்கப்பட்டுள்ளது.  மாலை என்பது கதிரவன் மறைந்த இரவுப் பொழுதின் முற்பகுதி. (மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை.). யாமம் என்பது நள்ளிரவு, அதாவது இரவுப்  பொழுதின் நடுப்பகுதி. (இரவு பத்துமணி முதல் இரண்டு மணி வரை). வைகறை என்பது கதிரவன் உதிப்பதற்கு முன் இரவுப் பொழுதின் இறுதிப் பகுதி. (இரவு  இரண்டு மணி முதல் காலை ஆறு மணி வரை.).

காலை என்பது சூரியன் உதயமானதன் பின் உள்ள பகற்பொழுதின் முற்பகுதி. (காலை ஆறுமணி முதல் பத்து மணிவரை). நண்பகல் என்பது பகற்பொழுதின்  நடுப்பகுதி. (காலை பத்து மணி முதல் இரண்டு மணி வரை.) எற்பாடு என்பது பகல் இரண்டு மணிமுதல் மாலை ஆறுமணி வரை. மாலை ஆறுமணி தொடங்கி  பிரிந்த காதலர்கள் பிரிவுத் துயரால் பெரும் வேதனை அடைவார்கள் என்று சித்திரிப்பது இலக்கிய மரபு.

*இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது. சில பூக்கள் பகலில் மலர்கின்றன. வேறு சில பூக்கள் இரவில் மலர்கின்றன. மல்லிகை, முல்லை, அல்லி என  இருட்டில் மலரும் மலர்கள் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகளுக்கு இரவிலும் தாங்கள் தெரியவேண்டும் என்பதற்காக வெள்ளை நிறம் கொண்டவையாய்த்  திகழ்கின்றன. நீர்ப் பூக்களில் அல்லி மாலையில் மலரும். நிலப் பூக்களில் முல்லை, மல்லிகை போன்றவை மாலையில் மலரும். புறநானூற்றில் மாலையில்  மலரும் முல்லை மலரைப் பற்றிக் கையறு நிலையில் பாடப்பட்ட ஒரு பாடல் வருகிறது. ஒல்லையூர்க் கிழான் மகன் பெருஞ்சாத்தன் காலமாகிவிட்டான்.

ஊரே கடுந்துயரில் மூழ்கியிருக்கிறது. குடவாயில் கீரத்தனார் என்ற புலவர் ஒரு முல்லைக் கொடியைப் பார்க்கிறார். அது பூப் பூத்திருக்கிறது. அந்த முல்லைப்  பூவைப் பார்த்து ‘முல்லையும் பூத்தியோ?’ என்று மனம் வருந்திக் கேட்கிறார் அவர். அந்த முல்லைப் பூ இப்போது பூத்து ஆவதென்ன? சாத்தன் இறந்ததால்  அனைவரும் கடும் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே முல்லைப் பூவை இளையவர்கள் சூட மாட்டார்கள். வளையணிந்த பெண்கள் கொய்ய மாட்டார்கள்.  யாழிசைக்கும் பாணனோ பாடினியோ அதைப் பறித்துச் சூடும் மனநிலையில் இல்லை. அப்படியிருக்க எதற்குப் பூக்கிறது இந்த முல்லை எனக் கழிவிரக்கத்துடன்  வினா எழுப்புகிறார் கவிஞர்.

‘இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேற்  சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!’

(புறநானூறு பாடல் எண் 242.)

மாலை நேரத்தில் முல்லை மலர் பூக்கும் ஒரே ஒரு நிகழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள இந்தப் பாடல் காலத்தை வென்று, படிப்பவர்களின் உள்ளங்களை  எல்லாம் உருக்குகிறது. இந்தப் பாடலைப் படிக்கும்போது முல்லை மணமும் இலக்கிய மணமும் ஒருசேர வாசகர் மனத்தில் எழுகின்றன. கம்பராமாயணம்  இலங்கையின் இரவுப் பொழுதைச் சித்திரமாகத் தீட்டுகிறது. அனுமன் இடது காலை முன்வைத்து இலங்கையில் நுழைகிறான். அப்போது அவன் காணும்  காட்சியை இலக்கிய ஓவியமாக்குகிறார்

கவிச்சக்கரவர்த்தி கம்பர்:

‘பளிக்கு மாளிகைத் தலந்தொறும் இடந்தொ றும் பசுந்தேன் துளிக்கும் கற்பகத் தண்ணறுஞ் சோலைகள் தோறும் அளிக்கும் தேறல் உண்டு ஆடுநர் பாடுநர் ஆகி  களிக்கின்றார் அலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்.’

பளிங்கால் ஆன மாளிகைகள். பசுந்தேன் துளிக்கும் கற்பகச் சோலைகள். எல்லா இடங்களிலும் மது அருந்தி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறார்கள்  மக்கள்.

‘கவலைப்படும் ஒருவரைக் கூட நான் காணவில்லை’ என அனுமன் கூற்றாகச் சொல்லி, இலங்கையின் செல்வ வளத்தையும் அங்கு வாழும் மக்களின் மன  மகிழ்ச்சியையும் இரவு நேரக் காட்சியாக்கி நமக்குக் காட்டுகிறார் கம்பர்...

சூரியன் அஸ்தமனம் ஆகிவிட்டால் போர் செய்யக் கூடாது என்ற மரபு முற்காலங்களில் அனுசரிக்கப்பட்டது. ராமாயண, மகாபாரதப் போர்கள் பகலில்  நடைபெற்றவையே. அக்காலப் போர்களால் பொதுமக்கள் எந்தத் தொந்தரவும் அடையவில்லை. தனியே இருந்த போர்க்களங்களில் படைவீரர்கள் போரிட்டார்களே  அன்றி மக்கள் வாழும் இடங்களில் குண்டுவைத்துத் தகர்த்து அப்பாவி மக்களைக் கொல்லும் இப்போதைய அநாகரிகம் அன்று இருந்ததில்லை.

மாலை நேரமும், மாலை தொட்டு வருகிற இரவு நேரமும் பிரிவுத் துயரால் வருந்தும் தலைவியை மட்டுமல்ல, அதே பிரிவுத் துயரால் வருந்தும் தலைவனையும்  வருத்தக் கூடியவைதான். தலைவி இருந்தும் தலைவியைச் சேர இயலாமலிருக்கும் தலைவன் இரவு நேரத்தில் பெரிதும் துயரடைவதாக ‘படித்தால் மட்டும்  போதுமா?’ திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடல் எழுதியுள்ளார். ‘நான் கவிஞனுமில்லை‘  என்று தொடங்கும் அந்தப் பாடலில் வரும் வரிகள்:

‘இரவு நேரம் பிறரைப் போலே என்னையும் கொல்லும் - துணை இருந்தும் இல்லை என்று ஆனால் ஊரென்ன சொல்லும்?’

‘பாசம்’ என்ற திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் ‘பி.பி.நிவாஸ், எஸ். ஜானகி’ பாடிய ஒரு பாடல் மாலை, இரவு இரண்டும்  இணைகின்ற பொழுதைப் பற்றிப் பேசுகிறது:

‘மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் மயங்கிய ஒளியினைப் போலே மன மயக்கத் தைத் தந்தவள் நீயே! வழியில் வந்தவள் நீயே!’

‘தேன்நிலவு’ படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் ஏ.எம். ராஜா பாடிய கண்ணதாசன் பாடல், காலையாகவும் மாலையாகவும் காதலியைப் பார்க்கிறது.

‘காலையும் நீயே மாலையும் நீயே

காற்றும் நீயே கடலும் நீயே!‘

என வளர்கிறது அந்தப் பாடல்.

‘நிழல்கள்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தன் இனிய குரலில் பாடிய ‘இது ஒரு  பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலிலும் மாலை நேரம் கொண்டாடப் பட்டுள்ளது.

‘இது ஒரு பொன்மாலைப் பொழுது வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்... ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம்  இரவுக்குப் பாலமிடும்

பாடும் பறவைகள் தாளமிடும்...’

- என மாலைப் பொழுதின் அத்தனை கோலாகலங்களும் இந்தப் பாடலில் பேசப்பட்டுள்ளன.

ஓர் ஊரில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு அதிகாலையில் போய் ரயிலிலிருந்து இறங்கினார் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன். கூட்ட அமைப்பாளர்கள் கையில்  பூமாலையோடு ரயில் நிலையத்திற்கே வந்து கி.வா.ஜ. கழுத்தில் மாலையணிவித்து அவரை வரவேற்றார்கள். அப்போது கி.வா.ஜ. உதிர்த்த சிலேடை இது:  ‘அடாடா! என்ன அதிசயம்! இந்த ஊரில் காலையிலேயே மாலை வந்துவிட்டதே!’

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: