தெற்கே ஒரு காசி

தை அமாவாசை 24:01:2020

ராமேஸ்வரம்

ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தர இயலாதவர்கள், தை அமாவாசை அன்று ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ராமேஸ்வரம், திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் இத்தர்ப்பணத்தை அளிக்க மக்கள் கூடுவார்கள். தை அமாவாசையன்று விமரிசையாக பூஜைகள் நடக்கும் சில தலங்களை தரிசிப்போம்.

பாரெங்கும் ஈசன் 12 ஜோதிர்லிங்க மூர்த்திகளாய் அருள்கிறார். ராமேஸ்வரத்தில் அருளும் ராமநாதேஸ்வரர் ஈசனின் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்தியாவிலேயே மிகப்பெரிய பிராகாரம் உள்ள கோயில் இது. 4 ஆயிரம் அடி நீளம். கருவறையில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்படிகலிங்கமும், பர்வதவர்த்தினி சந்நதியில் ஸ்ரீசக்ரமும் இன்றும் தம் தண்ணொளியை பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஈசன் ராமநாதர் என்றும் ராமேஸ்வரர் என்றும், அம்பிகை பர்வதவர்த்தினி என்றும் மலைவளர்க்காதலி என்றும் வணங்கப்படுகிறார்கள்.

ராமபிரானால் தனக்கு தரப்பட்ட ரங்கநாதர் திருஉருவை ஸ்ரீரங்கத்தில் வைத்த ஏக்கம் தீர, இலங்கை செல்லும் வழியில் இத்தலம் வந்த விபீஷணன், அம்பாள் சந்நதி பிராகாரத்தில் பிரதிஷ்டை செய்த ரங்கநாதப் பெருமாள், கையில் தண்டத்தோடு அருள்கிறார். ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் இங்கு பூஜை செய்ய எண்ணி, அனுமனை காசியிலிருந்து லிங்கம் எடுத்து வரப் பணித்தார். அனுமன் வரத் தாமதமாகவே சீதையும் ராமனும் மண்ணினால் லிங்கம் அமைத்து பூஜித்தனர். ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால், இந்த ஈசன் ராமேஸ்வரர் ஆனார். காசியிலிருந்து அனுமன் எடுத்து வந்த லிங்கம் காசிவிஸ்வநாதராக இன்றும் இத்தலத்தில் அருள்கிறார். பக்தர்களின் பாவங்களை பாதாளத்தில் தள்ளி விட்டு அவர்களைக் காப்பாற்றுவதால் இங்குள்ள பைரவர் பாதாள பைரவராக, கோடி தீர்த்தம் அருகில் அருள்கிறார்.

ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இத்தல நடராஜர் சந்நதியில் இருக்கும் பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் நிரந்தரமாக எரியும் விளக்கில் நெய் ஊற்றி வழிபட, அவை நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை.  இக்கோயிலில் வைணவ ஆலயங்களைப் போல தீர்த்தம் பிரசாதமாகத் தரப்படுகிறது. ஆலயத்திற்கு ஒரு லட்சம் ருத்ராட்சங்களால் ஆன ருத்ராட்சப்பந்தல் ஒன்று நேபாள நாட்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகத் தரப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் சிவனை வழிபடுவது போல் உள்ள சிற்பங்கள் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. சகல தோஷங்களையும், பாவங்களையும் இக்கோயில் வழிபாடு அழித்திடும் என்கிறார்கள். தெற்கே இருப்பவர்கள் காசிக்குப் புனிதப் பயணம் போவதுபோல காசியில் இருப்பவர்கள் இங்கு புனிதப் பயணம் வருகிறார்கள்.

இத்தலத்தில் திருமகளை மணந்த திருமால், சேதுமாதவராக தனி சந்நதியில் அருள்கிறார். இத்தல நந்தியம்பெருமான் பன்னிரெண்டு அடி நீளமும் ஒன்பதடி உயரமும் கொண்டவராய் சுதை வடிவில் அருள்கிறார்.  இத்தலத்தில் உள்ள 32 தீர்த்தங்களில் 14 தீர்த்தங்கள் திருக்கோயிலின் உள்ளேயே உள்ளன. அதில் கற்புக்கரசியான சீதாதேவியை சோதித்த பாவம் நீங்க அக்னிதேவன் நீராடிய அக்னிதீர்த்தக் கட்டம் புகழ்பெற்றது. ராமர் தன் தனுசினால் உண்டாக்கிய கோடி தீர்த்தமும், தனுஷ்கோடி தீர்த்தமும் இத்தலத்தில் ராமன் பெருமையைப் பறைசாற்றுகின்றன. மாசி மாத பிரம்மோற்சவமும், ஆடி மாத அம்மன் உற்சவமும் சிறப்பானவை.

இத்தலத்தில் அருட்பாலிக்கும் ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், தை அமாவாசையன்று அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். இதே நாளில் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். அப்போது ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மதுரைக்குத் தென்கிழக்கே சுமார் 125 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.

Related Stories: