ஆம்பூர் அருகே வடச்சேரியில் திருமண தடை நீக்கும் சென்னகேசவ பெருமாள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர்-வாணியம்பாடி நகரங்களுக்கு இடையில் உள்ள வடசேரி கிராமத்தில் பாலாற்றின் வடகரையில் பழமை வாய்ந்த தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கஜினி முஹமதுவின் தொடர்படையெடுப்பு காரணமாக இடம் பெயர்ந்த துளுவ நாட்டினர் பலர் தற்போது வடசேரி என அழைக்கப்படும் வடபுரியில் குடியேறினர். மதுரையில் இருந்து வந்த அந்த மக்கள் மதுரை மீனாட்சியை தொடர்ந்து வழிபட எண்ணி மதுரை மீனாட்சி சமேத சோம சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டினர். மேலும், தங்களது வாழ்வில் வளம் பல தந்தருளும் சென்னகேசவ பெருமாளையும் நினைவில் கொண்டு தேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோயிலை எழுப்பினர். பாண்டிய மன்னனின் வழித்தோன்றல்களாக வந்த அவர்கள், புலம் பெயர்ந்ததை பறை சாற்றும் வண்ணம் கோயில் கருங்கற்களில் மீன் சின்னங்கள் பொறித்து வைத்திருப்பதை இன்றும் காணலாம்.

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்த பல திருக்கோயில்கள் உள்ளன. அதில் இந்த சென்னகேசவ பெருமாள் திருக்கோயிலுக்கும் இடமுண்டு.  இன்று தமிழக அரசின் இந்து சமய அற நிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலில் அப்பாவு பெருமா முதலியார் என்பவரின் குடும்பத்தினர் தொடர்ந்து எட்டு தலைமுறைகளாக பரம்பரை அறங்காவலர்களாக சேவை செய்து வருகின்றனர். சென்னகேசவ பெருமாள் லட்சுமியை தனது மார்பில் தாங்கி திருவுள்ளம் கொண்டு அருள் பாலிக்கும் தலமாக விளங்குகிறது. அர்த்த மண்டபம், வெளி மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் கருவறை விமானம் எழிலுடன் காட்சி தருகிறது. மூலவரான சென்னகேசவருக்கு நேர்கோட்டில் கருடாழ்வார், அவரை அடுத்து 27 அடி உயர கொடி மரம் காட்சியளிக்கிறது.  அங்குள்ள  அனுமன் உருவம் பதித்த  கல்தூணில் விசேஷ காலங்களில் விஷ்ணுதீபம் ஏற்றப்படுகிறது.

மகிமை வாய்ந்த இந்த தலத்தில் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கருடசேவை உற்சவமும், வார சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் சிறப்பாக நடந்து வருகிறது. வைகாசி மாதம் கோலாகலாமாக நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்தினரும் நல்லிணக்கத்துடன் உற்சவம் நடத்துவது இன்றளவும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமண தடை நீங்க, பிள்ளைபேறு பெற  இந்த தலத்தில் வேண்டுதல் மேற்கொண்டு அது நிறைவேறியவுடன் எடைக்கு எடை  நாணயங்கள் மற்றும் இதர பொருட்கள் அளிப்பது பக்தர்களின் வழக்கம். தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்கள் முடி காணிக்கை செலுத்தி தங்களது இன்னல்களில் இருந்து சென்ன கேசவ பெருமாள் அருளால் விடுபடுகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆம்பூர், வாணியம்பாடி, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் வசித்து வரும் திரளான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி செல்கின்றனர். இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சனிக்கிழமை தோறும் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Related Stories: