? கண்திருஷ்டி விலக என்ன பரிகாரம் செய்தால் நல்லது?

– த.நேரு,வெண்கரும்பூர்.

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். கல்லடி படுவதால் உண்டாகும் காயம் இரண்டொரு நாளில் ஆறிவிடும். அதே நேரத்தில் கண்ணடி பட்டால் (திருஷ்டி) நேரும் துன்பம் அத்தனை சுலபமாக நம்மை விட்டு அகலாது என்பதால் திருஷ்டி சுற்றிப் போடும் பழக்கத்தினை நம் முன்னோர்கள் கடைப் பிடித்து வந்தார்கள். “இவன் இத்தனை சுகமாய் வாழ்கிறானே..” என்று அருகில் உள்ளோரின் உள்ளத்தில் தோன்றும் பொறாமை உணர்வினையே திருஷ்டி என்று அழைக்கிறோம். இந்த பொறாமை என்பது பொதுவாக மனிதனின் இயற்கை குணங்களில் ஒன்று. சாதாரண மனிதர்கள் ஆகிய நம் எல்லோருக்குள்ளும் இந்த மாதிரியான எண்ணம் தோன்றுவது இயற்கை. பெண்களுக்கு இடையே அழகு, செல்வம் ஆகியவற்றிலும், ஆண்களுக்கு பதவி, பட்டம், புகழ், வசதிவாய்ப்பு ஆகியவற்றிலும், மாணவர்களுக்கு இடையே பரிசுகள் பெறுவதிலும் இம்மாதிரியான குணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க இயலாது. இந்த திருஷ்டி தோஷத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பூசணிக்காய் சுற்றி உடைத்தல், எலுமிச்சம்பழம் நறுக்கி பிழிதல், சிதறு தேங்காய் உடைத்தல், ஹாரத்தி சுற்றுதல், உப்புச்சுற்றி போடுதல், மிளகாய் சுற்றி போடுதல், வலது காலில் கறுப்புக் கயிறு கட்டிக் கொள்ளுதல் என்று பல்வேறு சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிறார்கள். இதனை மூட நம்பிக்கை என்று சொல்லி முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியாது. பிரதி சனிக்கிழமை தோறும் ஸ்ரீ சுதர்ஸனரை (சக்கரத்தாழ்வார்) வழிபட்டு வருவதால் திருஷ்டி தோஷத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

? சகடை யோகம் பற்றி விளக்கவும்?

– என்.செயக்குமரன்,திருநெல்வேலி.

ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திலிருந்து 6,8,12ல் சந்திரன் நின்றால் அதனை “சகடையோகம்’’ என்று சொல்வார்கள். சகடை என்றால் சக்கரம் என்று பொருள். இதுபோன்ற அமைப்பினை உடைய ஜாதகர் வாழ்வினில் சக்கரம் போல் ஓய்வின்றி சுழன்று கொண்டே இருப்பார். ஒரு சிலருக்கு இந்த அமைப்பு நிம்மதியற்ற வாழ்வினையும், குரு சந்திரன் வீட்டில் உச்சம் பெற்று சந்திரன் தனுசு ராசியில் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்தால், இதே அமைப்பு திடீர் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியதாகவும் இருக்கும். பொதுவாக, சகடையோகம் என்பதை ஜோதிடர்கள் தோஷமாகவே பார்க்கிறார்கள். மற்ற பாவகங்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில், புதன் மற்றும் சுக்கிரனின் அமர்வு நிலை சாதகமாக இருந்தால், ஜாதகர் ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருந்தாலும், அதற்குரிய பலனையும் சம்பாத்யத்தையும் அடைவார் என்றே பலன் சொல்ல வேண்டும்.

? மாடிப் படிக்கு என்று தனியாக வாஸ்து உள்ளதா?

– டி.வேந்தன், குமாரமங்களம்.

இதனை வாஸ்து என்று சொல்வதைவிட மாடிப்படி அமைய வேண்டிய இடம் மற்றும் அதன் அமைப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவான விதி என்று பார்க்கும்போது, மாடிப்படிகள் தெற்கு நோக்கி ஏறுவது போல் அமைக்கக் கூடாது. நம்முடைய இந்திய தேசத்து புவியியல் அமைப்பின்படி, பெரும்பாலும் வடக்கு அல்லது மேற்கு நோக்கி ஏறுவது போல மாடிப் படிகளை அமைக்க வேண்டும். அதற்குரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் கிழக்கு நோக்கி ஏறுவது போல அமைக்கலாம். அதேபோல, வீட்டின் வடகிழக்கு மூலையில் பாரம் ஏறக்கூடாது என்பதால் அந்த மூலையிலும் மாடிப்படிகளை அமைப்பது கூடாது. இவை அனைத்தும் பொதுவான விதிகளே. அந்தந்த மனையின் அமைப்பு மற்றும் வீட்டின் அளவுகளுக்கு ஏற்றவாறு இந்த விதிகளில் மாற்றம் என்பது உண்டாகும். பெரும்பாலும் வீடுகளில் சுழற்படிகள் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது.

? பொதுவாக கழிவறை வீட்டின் உள்ளே இருக்கக்கூடாது, கொல்லைப்பகுதியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்றுள்ள ஃப்ளாட் சிஸ்டத்தில் இது சாத்தியமா?

– வி.பிரியகுமாரி, திண்டுக்கல்.

ஃப்ளாட் சிஸ்டத்தில் சாத்தியம் இல்லை என்றாலும், கழிப்பறைகளைத் தனியாக அமைக்கலாமே. அட்டாச்டு பாத்ரூம் டாய்லெட் அமைப்பதைத் தவிர்த்து, குளியல் அறை மற்றும் கழிவறைகளைத் தனித் தனியே அமைக்க வேண்டும். அடிப் படையான ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். குளியல் என்பது உடலைச் சுத்தம் செய்வது. அவ்வாறு ஸ்நானம் செய்யும்போது, இறைனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கழிவறை என்றால், என்ன என்பது எல்லோரும் அறிந்ததே. சுத்தமாக இருக்க வேண்டிய இடத்தில், அதுவும் இறைசிந்தனையோடு ஸ்நானம் செய்ய வேண்டிய இடத்தில், அசுத்தத்தையும் ஒன்றாகக் கொண்டு வந்து வைத்தால் எப்படி? அதேபோல, நாம் உறங்கும் படுக்கை அறையோடு இந்த இரண்டையும் இணைத்திருப்பதும் தவறுதான். ஃப்ளாட் சிஸ்டமாக இருந்தாலும், படுக்கை அறைகள் தனியாகவும், குளியல் அறை என்பது தனியாகவும், கழிப்பறை என்பது தனியாகவும் இருப்பதே சாலச் சிறந்தது.

? வீட்டினுள் வாஸ்துப்படிதான் இன்ன பூக்கள், பழ வகைகளைத் தரும் செடி, கொடிகளைத்தான் வளர்க்க வேண்டும் என்கிறார்களே, உண்மையா?

– கோவை ஸ்ரீ தரன்.

வீட்டுத் தோட்டத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பூக்கள், பழ வகைகள் மற்றும் காய்கறிகளைத் தரும் செடி கொடிகளை தாராளமாக வளர்க்கலாம். இவற்றில் முருங்கை மரத்தை வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் வைக்கக் கூடாது. நாம் உணவாக உட்கொள்ளும் காய்கறிகள் மற்றும் பழங்களைத் தரும் தாவரங்களையும், இறைவனுக்கு அர்ச்சிக்கும் மலர்களைத் தரும் செடிகளையும் தாராளமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கலாம்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ? கண்திருஷ்டி விலக என்ன பரிகாரம் செய்தால் நல்லது? appeared first on Dinakaran.

Related Stories: